Community Development

November 22, 2019

எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து

Filed under: Uncategorized — Tags: , , , , — cdmiss @ 12:24 pm

பத்து வருடங்களுக்கு முன் (29.4.2009) ஆவணப்பகிர்வு தளங்களில் (document sharing sites) பதிவேற்றப்பட்ட “Introduction to Professional Social Work” என்ற என் பாடக்குறிப்புகளடங்கிய ஆவணத்தை, வடிவ மாற்றம் (layout improvement) செய்ய நினைத்த நண்பர் தயாளன், அதைப் பதிவிறக்கம் செய்ய முற்பட, பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகவே, அந்த ஆவணத்தின் பிரதியை அனுப்புமாறு கேட்டிருந்தார். இலவசமாகப் பயன்படுத்தப் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை, அதிக வாசகர்கள் பார்வையிடுவதையும், பதிவிறக்கம் செய்வதையும் பார்க்கும் ஆவணப் பகிர்வு (Document Sharing) இணைய தளங்கள் அதற்குக் கட்டணம் வசூலிக்கும் தவறான நடைமுறை ஒரு புறம். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள பதிவேற்றம் செய்யப்பட்டதை, சந்தா செலுத்துபவர்கள் (membership) மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம், மற்றவர்கள் பார்க்க, படிக்க  மட்டும் செய்யலாம் என்று மறைமுகக் கட்டுப்பாடுகளை விதிப்பது மறுபுறம். இந்த  நிலையில் தான் கற்பனைக்கெட்டாத அறிவுப் புரட்சியை உண்டாக்கிய விக்கிபீடியா தளத்தையும், அதன் நிறுவனர்களான Jimmy Wales மற்றும் Larry Sanger க்கும் மானுட சமுதாயம் எவ்வளவு தூரம் கடமைப்பட்டது என்பதை உணரவேண்டும். விக்கி என்ற ஒரு மென்பொருளை, அவர்கள் காப்புரிமை செய்து, வணிகரீதியாகப் பயன்படுத்த நினைத்திருந்தால், இன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவேளை அவர்களும் இணைந்திருப்பார்கள். வணிகம் கடந்த ஒருநிலை இணையத்திலிருப்பதால்தான் அது வளர்கிறது. நாமெல்லோரும் இணையத்தை நமக்கானாதாக உணரமுடிகிறது. இந்த நன்றியால்தான், என் வாழ்நாள் முடிவதற்குள் ஒரு பத்துக் கட்டுரைகளாவது தமிழ் விக்கிபீடியாவில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. பார்க்கலாம்.
நண்பர் தயாளன் கேட்ட ஆவணத்தை அனுப்பிவிட்டு, அதில் அவர் மாறுதல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்ததால், அந்த ஆவணத்தின் word file அவருக்கு அனுப்பினால் மேலும் உபயோகமாக இருக்குமே என்று என் கணனியில் தேடினால், அது கிடைக்கவில்லை. தான் பணியில் சேர்ந்த காலம் முதல் அந்த பாடத்தைக் (Introduction to Professional Social Work) கையாண்டு வந்த பேரா. JCD ஓய்வு பெற்றபின், அந்தப் பாடத்தை நான் கையாள ஆரம்பித்தேன். Introduction to Professional Social Work தான் MSW பாடத்திட்டத்தின் அஸ்திவாரம். எனக்கென்னவோ மாணவர்கள் உள்வாங்கும் முகமாக அது கையாளப்பட்டதில்லை. மற்ற பாடங்களில் காண்பிக்கப்பட்ட அக்கறை அதில் காட்டப்படவில்லை என்ற எண்ணத்தால், என் திறமைக்கெட்டியவரை தயாரித்த பாடக்குறிப்புகள். அந்தப் பாடத்தில் எனக்குத் தொடர் வாசிப்பு இருந்ததில்லையாதலால், நான் வாசித்தறிந்தவரை, எனக்குப் புரிந்தவரை தயார் செய்த குறிப்புகள். Building is strong but Basement is weak என்ற வடிவேலுவின் நகைச்சுவை,  நம் செயல்களுக்கும் பொருந்தும்தானே. அந்த ஆவணத்தை இற்றைப்படுத்தி (update) மேலும், மேலும் செழுமையாக்க, எளிமையாக்க நினைத்ததுண்டு. அது MSW முதல் பருவத்தில் தொடங்கும் முதல் பாடம். அது சமூகப்பணியின் பாயிரம் போன்றது. சரியான பாயிரமின்றி கற்கத் தொடங்குபபவர்கள், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப்படுவார் என்பது தமிழ் இலக்கிய விதி. அந்த ஆவணத்தில் பல இடங்களில் மேலதிக விளக்கங்களும் படங்களும், அடைப்புக் குறிகளுக்குள் கலைச் சொற்களுக்கான தமிழ் பொருளும் இருந்தால் நன்றாக இருக்குமென்று பணியிலிருக்கும்போதே விரும்பினாலும், அதை நான் செய்யவில்லை. ஆனால் இன்று அதன் உள்ளடக்கத்தில் அல்ல, வடிவமைப்பில் மாறுதல் செய்தால் இன்னும் படிக்க இலகுவாக இருக்குமே என்று நண்பர் தயாளன் முன்வந்தது என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்னுடைய ஆர்வத்தைவிட, என்னுடைய மாணவர்களின் இப்படிப்பட்ட ஆர்வமே என்னைத் தேங்கவிடாமல் இன்றளவும் ஓடவைத்திருக்கிறது.

நண்பர் தயாளனுக்காக Introduction to Professional Social Work – word file ஐ என் கணனியில் தேடும் போது, அது கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, நண்பர் வினோத் அம்பேத்கார், தான் படித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களின் கோப்பைப் பார்க்கநேர்ந்தது. சில பாடங்கள், சில வகுப்புகள், சில மாணவர்களை ஆகர்ஷிக்கும் என்பதற்கு, MSW பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த Introduction to Livelihood Promotion என்ற பாடமே சான்று. எளிய மக்களின் ஜீவனோபாய முறைகளை அறிந்துகொள்ள வினோத் அம்பேத்கார் பலரையும் சந்திப்பார். உரையாடுவார். அந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதைப் புகைப்படங்களாகவும் எடுத்துவந்து என்னிடம் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலோர் கையிலிருக்கும் கேமிராக்கள் அழகானவற்றை நோக்கியே திரும்பும். ஆனால் எளிய மக்களை நோக்கி கேமிராவைத் திருப்புவதற்கு உள்ளார்ந்த சமூக அக்கறை வேண்டும். அது வினோத்திடம் அப்பொழுதே இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.

வினோத் என்னுடன் பகிர்ந்திருந்த 150 படங்களுக்கு மேல் என் கணனியில் இருந்தது. எல்லாமே எளிய மக்கள் தாங்கள் ஜீவிப்பதன் பொருட்டு செய்யும் பல்வேறு செயல்கள். அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் விளக்க முற்பட்டாலே அது ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுமளவு நீளும்தான். எளிய மக்கள் செய்யும் வேலை, விற்கும் பொருள்கள், அந்த பொருட்களின் நுகர்வோர் என்பதிலிருக்கும் value chain, sector analysis, யோசித்தாலே, விளங்கிக் கொண்டாலே பிரமிப்பே மிஞ்சும். அப்படி பிரமித்து, அதைப்பற்றி சிந்தித்த ஒரு மாணவரும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் பின்னாளில் தெரிய வந்தது. படித்து முடித்து விட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்த மகேஷ் கார்த்திக் என்ற மாணவர், ஒரு கட்டத்தில் பல போட்டித்தேர்வு ஆயத்த மையங்களுக்கு, அதுவும் economics subject கற்பிக்கும் resource person ஆக சென்று வருவதாகச் சொன்னார். “என்னங்க நீங்கள் இளங்கலை வகுப்பில் கூட economics படித்ததில்லையே, economics பாடத்திற்கு எப்படி resource person ஆகப் போகிறீர்கள்” என்று அதிர்ச்சியடைந்து கேட்டபொழுது, “Economics படித்ததில்லைதான். ஆனால் livelihood படித்திருக்கிறேனே. அதைப் பின்னணியில் வைத்துதான் எல்லாப் பொருளாதாரக் கோட்பாடுகளையும் விளக்குகிறேன். என்னுடைய இந்த அணுகுமுறையால், பல போட்டிதேர்வு ஆயத்த மையங்கள் இதற்காகவே என்னை விரும்பி அழைக்கிறார்கள்” என்றும் சொன்னார். ஒரு கருத்தாக்கத்தை ஒவ்வொரு மாணவரும் அவர்களவில் புரிந்துகொண்டு அதை எப்படி மலரச் செய்கிறார்கள் என்பதை அறியும் போது பெருமையாக இருந்தது. நான் கற்றுத்தந்த பாடங்களில் எனக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம், நம்பிக்கைகளை உயிர்பித்து என்னை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொண்ட மாணவர்கள் பலர்.

எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேரா. கண்ணன் அவர்களின் மகன், விபத்திற்குள்ளாகி, நினைவு திரும்பாமால், ஏறக்குறைய 4 மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதையும், அதனால் பேரா. கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஉளைச்சல் மற்றும் தாங்கொணா சிகிச்சைச் செலவுகளையும் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் பேரா.NNR அவர்கள், பேராசிரியரின் மகன் குணமடைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு முதலில் MISS CD என்ற வாட்சப் குழுவில் வேண்டியிருந்தார். அந்தச் செய்தியைப் பார்த்த நண்பர் தயாளன், “சார்! ஒரு நேரம் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்குமே” என்று எடுத்துக்கொடுக்க, “அந்த நேரத்தை நீங்களே குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுங்கள் என்று பேரா.NNR சொல்ல, அதன்படி பார்ப்பவர்கள் எல்லாம் பிரார்த்திக்கத் தூண்டும்படியான ஒரு flyer தயாரித்து தயாளன் பகிர, அது மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்களின் வாட்சப் குழுக்களில் பகிரப்பட, நூற்றுக்கணக்காண மாணவர்களை உள்ளன்போடு அப்பிரார்த்தனையில் ஈடுபட வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த (flyer) சுற்றறிக்கையால்தான் என்பதை என்னால் உணரமுடிந்தது.


Livelihood Photos Vinod Ambedkar’s Collection from Srinivasan Rengasamy மக்கள் பங்கேற்பைப் பற்றிய பாடத்தை நான் பலவருடங்கள் கையாண்டுள்ளேன். ஆனால் சில விசயங்களில் என் மாணவர்களின் பங்கேற்பைக் கூட பெறமுடியாது தவித்துள்ளேன். ஒரு செயலில் மக்களைப் பங்கெடுக்க வைப்பதென்பது பெருங்கலை. அது மானுட இயல்பு, மானுட எதிர்பார்ப்பு, அதை உணர்ந்து சொல்லப்படும் ஒரு செய்தி, அந்த செய்தி சொல்லப்படும் விதம் என்று பலவற்றின் கூட்டுச்சேர்க்கை. ஆனால் எங்களால் (நண்பர் NNR)  வேண்டிக்கொள்ளத்தான் முடிந்தது. பார்வையிடப்படாமல் பலராலும் கடந்து செல்லப்படும் நிலையிலிருந்த வேண்டுகோளை, அழகாக வடிவமைமைக்கப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பார்க்க வைத்து, பல நாடுகளிலிருக்கும் முன்னாள் மாணவர்களையும் அப்பிரார்த்தனையில் பங்கெடுக்க வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த flyer தான் என்பதை மறுக்கவியலாது. நான்கு மாதங்களாக நினைவு திரும்பாமல் துயரத்திற்குள்ளான நிகழ்ச்சி. பலரும் அறிந்திருந்தாலும் அவர்களவில் வேண்டிக்கொண்டு கடந்த நிலையில் பலரையும் ஒன்றிணைத்தது, பங்கேற்கச் செய்தது பெரிய செயல். ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்படும் விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால் பலரின் பங்கேற்பு சாத்தியமே என்று பங்கேற்பு முறைகளின் மீது (Participatory Methods) எனக்கிருந்த நம்பிக்கையை தயாளன் வலுப்படுத்தினார் என்றால் மிகையாகாது
இங்கிலாந்தைச் சேர்ந்த பேரா. Malcom Payne பிரபலமான சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகங்களை சமூகப்பணித் துறை நூலகங்களில் பார்க்கலாம். புத்தகங்களாக வெளியிடப்படுவதற்கு முன் அதன் வரைவுகள் (drafts) சிலவற்றை Scribd தளத்தில் பகிரும் வழக்கம் அவருக்கிருந்திருக்கிறது. அவரின் ஆவணங்கள் என்னுடைய ஆவணத் தயாரிப்பிற்குப் பெருமளவு உதவியிருந்தது. ஆனால் அவர் பகிர்ந்திருந்த ஆவணங்கள், எந்தவித

ஜோடனையுமற்று தட்டச்சு செய்யப்பட்டதைப் போல காணக்கிடைக்கும். பல ஆண்டுகள் அந்தத் தளத்திலிருந்தாலும் அது வாசகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின. ஆனால் அவர் கருத்துக்களைக்  கடன்வாங்கித் தயாரிகிக்கப்பட்ட எனது ஆவணங்களுக்கு அதிக வாசகர்கள் கிடைத்தது, அதனுடைய மேலான தர்த்திற்காக அல்ல. மாறாக அதை நான் சற்று

சிரமமெடுத்து வடிவமைத்திருந்ததால்தான். Presentation matters என்பார்களே அதுபோல. தயாளன் முயற்சி, Introduction to Professional Social Work  ஆவணத்தை இன்னும் பலர் பார்க்கத் தூண்டலாம். அந்த அஸ்திவாரத்தை மேலும் வலுப்படுத்த சிலரைத் தூண்டலாம்.

பணியாற்றிய காலத்தில் மட்டுமல்ல, இப்பொழுது இக்குழுவில் செயல்படுபோதும் எனக்கு பல நேரங்களில் அலுப்பு தட்டும். எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருவதுண்டு. அஞ்சால் அலுப்பு மருந்து சாதாரண மக்களின் அலுப்பை நீக்குவதுபோல, என்னுடைய மாணவர்களின் சில செயல்கள் என் அலுப்பை நீக்கிவிடும். செய்யணும், இன்னும் அதிகமாகச் செய்யணும் என்ற உற்சாகத்தை தந்துவிடும்.என் சுயநலத்தின் பொருட்டாவது, என் சோர்வைப் போக்கிக்கொள்ளவாவது, இவர்களுடன், இவர்கள் குழுமியிருக்கும் இந்த MISS CD வாட்சப் குழுவுடன் தொடர்ந்து உரையாடவேண்டும். ஏனெனில் எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து என் மாணவர்களிடமே இருக்கிறது.

March 29, 2013

அன்வர் பாலசிங்கத்தின் இருநாவல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings

Filed under: Uncategorized — Tags: , , , , — cdmiss @ 12:55 am

“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” மற்றும் “செந்நீர்” என்ற இரண்டு நாவல்களைப் படிக்குமுன் அன்வர் பாலசிங்கத்தைப் பற்றி நான் ஏதும் அறிந்திருக்கவில்லை. அந்த இரண்டு புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னவர் நண்பரும், மாணவருமான வினோத் அம்பேத்கார். “உங்களை மாதிரி ஆசிரியர்களெல்லாம் நாளொன்றுக்கு குறைந்தது 200 பக்கங்களாவது படிக்கவேண்டும்” என்று குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) சொன்னதை வருடத்திற்கு 200 பக்கங்கள் என்று புரிந்து கொண்டவன்.  ஆனால் வினோத் அம்பேத்காரின் ராசி, அவர் எதைக் கொடுத்தாலும் என்னையறியாமல் படித்துவிடுகின்றேன். அவரே பணம் செலவழித்து, புத்தகங்கள் வாங்கி, சிரமம் பாராமல் என்னிடம் தந்து, படிக்கச் சொல்வதைப் பார்க்கும் போது, குன்றக்குடி அடிகளாரின் அறிவுரையை எப்படியும் என்னை பின்பற்ற வைத்துவிடுவது என்று சபதம் எடுத்திருப்பது மாதிரிதான் தெரிகின்றது.

அன்வரின் புத்தகங்களைப் படித்தபின்பு, அன்வரின் மீதும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்கருவின் மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. விரிவான வாசிப்புப் பழக்கம் எனக்கில்லையாதலால், என்னால் இலக்கிய விமர்சனமெல்லாம் செய்யமுடியாது. நாம் வாசிப்பதெல்லாம் எப்படி சமூகத்தைப் பற்றிய நம் புரிதலை விரிவாக்குக்கின்றது என்பதை வைத்துத்தானே ஒரு புத்தகத்தையும், அதை எழுதிய ஆசிரியரையும் நாம் மதிப்பீடு செய்கின்றோம். அந்த வகையில், சில கோணங்களில் என் பார்வையை விரிவாக்கிய அன்வர் மீதும் அவரின் எழுத்துக்கள் மீதும் எனக்கு மரியாதை ஏற்பட்டது.View album

“கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” மதம் மாறிய இஸ்லாமியர்களைப் பற்றிய கதைக்களம். அது மாதிரியான களத்திற்கு ஏற்கனவே நான் அறிமுகமாகியிருந்தேன். செங்கோட்டைக்கு அருகில், அச்சன்கோயில் செல்லும் வழியில் உள்ள மேக்கரை என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள்தான் மீனாட்சிபுரம், (நாவலில் குறிப்பிடப்படும் காமாட்சிபுரம்/பில்லா நகர்) மதமாற்றத்திற்கு வித்திட்டது என்று சொல்வார்கள். மேக்கரை கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த (நேத்ரா) இராமசந்திரன் அவர்களோடு சில பணிகளை முன்னெடுத்தோம். தன்னுடைய வாழ்வும் வளமும் அச்சன்கோயில் ஐயப்பன் மற்றும் மேக்கரையில் எழுந்தருளியுள்ள கோட்டைவாசல் கருப்பனால் கிடைத்த ஆசீர்வாதம் என்று நம்புகின்றவர் இராமசந்திரன். அச்சன்கோயில் கேரளாவில் உள்ளதால், தமிழக எல்லையிலுள்ள மேக்கரை முன்னேற்றத்திற்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய நினைத்தார். அவருடைய பணிகளில் நான் உடனிருந்தேன். ஏறக்குறைய ஐந்தாறு இலட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு கிராம அறிவு மையம், மேக்கரை பள்ளிக்கு நண்பர் பாலாஜி மூலம் கணனி மற்றும் கணனிப் பயிற்சி, மேக்கரை மாணவர்கள் அரசுப்பேருந்து சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு அரசுப் பேருந்துகளின் நேரத்தை பெருமுயற்சி செய்து மாற்றியமைத்தது, மேக்கரையில் சமூக நலக்கூடம் கட்ட இடம் வாங்குவதற்கு திரு.இராமசந்திரன் அவர்கள் செய்த கணிசமான பொருளுதவி, மேக்கரை மாணவர்களின் கல்வித்தரம் உயர நடத்திய Tution Centre மற்றும் அங்கு பால்வளம் பெருக்க எழெட்டு மாதம் பணியிலமார்த்தப்பட்ட முழுநேரப் பணியாளருக்கான ஊதியம் (மாதம் 10000 ரூபாய்) என்று பல இலட்சங்கள் முதலீடு செய்தும், நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அதிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேக்கரை ஒரு அழகான கிராமம். அந்த அழகிற்கு பின்னே வறுமையும், இயலாமையும் மறைந்திருந்ததை எங்களால் உணரமுடிந்தது. மேக்கரை நிலங்கள் ஒரு பாரம்பரிய சைவ ஆதீனத்திற்குச் சொந்தமானது. நிலவுடமையில் இருந்த கட்டுப்பாடுகளால், அம்மக்களால் விவசாயத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அதில் எங்களால் தலையிடமுடியாதாகையால், வேறு வகைகளில் மக்களின் விருப்பங்களை அறிந்து சில முயற்சிகளை முன்னெடுத்தோம். மேக்கரையில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க, அம்மக்கள் விரும்பியவற்றையே அவர்களுக்குத் தரவேண்டுமெண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தோம். மக்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட விருப்பங்களினடிப்படையில் செயலாற்ற முற்பட்டபோது, அந்த முயற்சிகளில் அம்மக்கள் பாராமுகமாக நடந்துகொண்டார்கள்.

உதாரணமாக மேக்கரை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கலாம் என்று யாரோ சொன்ன வாக்குறுதியை முன்வைத்து, பலபேரிடம் நன்கொடைவாங்கி கணிசமான பொருட்செலவில் விழா எடுத்தவர்கள், மேக்கரை பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எங்கள் முயற்சியில் வழங்கப்பட்ட கணணிகளை பயன்படுத்துவதில் அந்த அளவு ஆர்வம் காட்டவில்லை. எங்களிடம் தொடர்பிலிருந்த சமூகத் தலைவர்களின் பேச்சில் இருந்த ஆர்வத்தை அவர்களின் செயலில் பார்க்கமுடியவில்லை. அவர்களைப் புரிந்துகொள்வது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஜாதியென்று பார்த்தால் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களும், அவர்களிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியர்களும்தாம். பள்ளர் இனமே அங்கு பெரும்பான்ன்மையினம். மதம் மாறியிருந்தாலும் ஜாதி ஒன்றுதானே என்று எண்ணும்படியாகவே அவர்களுக்கிடையேயான உறவுமுறைகளும் இருந்தது. எங்களுடைய புரிதல் தவறு என்று அன்வரைப் படித்தபின்புதான் உணரமுடிந்தது.

அன்வரவர்களின் “கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” படித்த பின்புதான், மேக்கரை சமூக உறவுகளில் இருந்த உள்விரிவாக்கம் (Complexity) புரியவந்தது. மதம், அதையொட்டி ஏற்படும் நடைமுறை ஆசார நிர்பந்தங்கள், அதனடிப்படையில் கட்டமைக்கப்படும் ஆளுமைகள் இவையெல்லாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய விசயங்கள். இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலுமுள்ள வழிபாட்டுடன் கூடிய பிரசங்கங்கள், அதைப் பின்பற்றுபவர்களின் ஆளுமையை ஓரளவு கட்டுப்படுத்தவும், கட்டமைக்கவும் செய்கின்றது. ஒரே ஜாதிதான் என்றாலும் இருவேறு நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் தரும் உயர்வு தாழ்வு மனப்பானமை – சிக்கலான ஆளுமைகளை உருவாக்குகின்றது. திருமணமாகாதிருக்கும் முதிர்கன்னிகள் பில்லா நகரின் பிரச்சனை. அந்த பிரச்சனையையொட்டி அன்வர் வெளிப்படுத்தும் வலி ஒருபக்கம். அப்பிரச்சனையை புரிந்து கொள்ளவும், தீர்க்கவும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அன்வர் வெளிப்படுத்தும் பார்வை இன்னொரு பக்கம். ஒரு பிரச்சனைக்கான தீர்வு முக்கியமென்றாலும், அந்த பிரச்சனை பற்றிய விவாதங்கள் அப்பிரச்சனையின் பல பரிமாணங்களை புரியவைக்கும். தீர்வு எதையும் அந்தப் புத்தகம் முன்வைக்கவில்லை. பல பிரச்சனைகளுக்கு நம்மிடம் தீர்வில்லை. தீர்வுக்கான நம்முடைய முயற்சிகளே சில நேரங்களில்பிரச்சனைகளாகி விடுகின்றது. இதுதான் எதார்த்தம். இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது.

முன்னேற்ற முயற்சிகளிலும் பல நேரங்களில் நாம் அடைய வேண்டிய இலக்குகளைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கின்றேம். நாம் அடையவேண்டிய இலக்குகளை அடைந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நமக்குக் தெரிந்திருந்தாலும், அந்த இலக்குகளின் மீது நம்மால் செயல்படமுடியவில்லை. பிரச்சனைகளும், முன்னேற்ற முயற்சிகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பில்லா நகரில் பிரச்சனை விவாதிக்கப்பட்டதை அன்வரால் இலக்கியமாக்கமுடிந்தது. மேக்கரையில் நாங்களெடுத்த முன்னேற்ற முயற்சிகளில், மக்களுடைய பாராமுகம் வேறு வகையான உரையாடல்களின் விளைவாய் இருந்திருக்கலாம். அந்த உரையாடல்கள் எங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை என்று சொல்வதைவிட, முன்னேற்றப் பணியாளர்கள் அது மாதிரியான உரையாடல்களைக் கேட்கும் உத்தியைக் கைவரப் பெறவேண்டும் என்றே எனக்குப் படுகின்றது. Development Workers need to have sensitive ears என்று சொல்வது இதனால்தான்.

செந்நீரின் கதைக்களம் சற்று விரிவானது. வலிமிக்கதும் கூட. காணாமல் போன தங்கள் மகனைக் கண்டெடுப்பதில் சுப்பன் தம்பதிகளில் தொடங்கும் ஆதாயநாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து காட்டுராஜா, முனியாண்டி, மூணாறு எம்.எல்.ஏ பூபாலன், தொழிற்சங்கங்கள், காவல்துறை என்று விரிந்துகொண்டே செல்கின்றது. பிரச்சனையைத் தீர்க்க முனையும் ஆதாய நாட்டமுடையவர்களில் சுயநலமற்ற கதாபாத்திரங்களையும், பிரச்சனைக்குக் காரணமான மிக மோசமான சூழ்ச்சியாளர்களையும், பிரச்சனையை வைத்து ஏமாற்றிப் பிழைக்க முயல்பவர்களையும், அரசு மற்றும் எஸ்டேட் நிறுவனம் போன்ற ஆதாயநாட்டமுடைய பாத்திரங்கள் எப்படி பிரச்சனையைக் கையாள்கின்றன என்று வாசகனுக்கு வலிக்கும்படியாகவே கதை சொல்லப்படுகின்றது. வலி, போராட்டங்கள், மரணங்கள், கடைசியில் எம்.எல்.ஏ கொல்லப்படுதல் – எந்த தீர்வுக்காக இதெல்லாம் நடக்கின்றதோ, அதாவது கிட்டுவைக் கண்டடைவது, அது கடைசிவரை சாத்தியமாகவில்லை. இது மாதிரிதானே நம்முடைய முன்னேற்ற முயற்சிகள் அது கண்ணாமூச்சி விளையாட்டாகவே ஆகிவிடுகின்றது. பல முயற்சிகள் முளையிலே கறுக்கப்படுகின்றன. இன்னும் சில நேரங்களில், நம்பிக்கையை வளர்த்து, அதை வளரவிட்டு கிள்ளி எறிந்துவிடுகின்றார்கள்.

முன்னேற்றப் பணிகளில், குறிப்பாக ஜீவனோபாய மேம்பாட்டுப் பணிகளில் ஆதாய நாட்டமுடையவர்கள் (Stake Holders) என்ற கருத்தாக்கம் மிக முக்கியமானது. ஆதாய நாட்டமென்றால் ஒரு முயற்சியில் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும், பாதிப்புகளையும் உணர்ந்து அதற்கேற்ப அந்த முயற்சிகளுக்கு ஆதரவோ, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவது. சிலநேரங்களில் தங்களுக்கு அனுகூலம் என்று அறிந்திருந்தாலும், தன்னுடைய எதிரிக்கு இன்னும் அதிக அனுகூலமாகும் என்று தெரியவரும் போது, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவார்கள். ஆதாய நாட்டம் என்பது கொச்சையான வார்த்தையல்ல. புரிந்து கொண்டு செயல்பாட்டில் கையாளவேண்டிய ஒரு முக்கியமான கருத்தாக்கம்.

இதுவெல்லாம் தெரிந்துதான் மேக்கரை சமூகத்தை அனுகினோம். ஆதாய நாட்டமுடையவர்களை சமநிலைப்படுத்த (Stakeholder Balancing) சில முயற்சிகளைச் செய்தோம். காரணம் மேக்கரையில் செய்யப்பட்ட முதலீடுகளெல்லாம் திரு.இராமச்சந்திரன் அவர்களின் சேமிப்பிலிருந்து செய்யப்பட்டவை. நன்கொடைகள் பெற்றோ, வெளிநாட்டு உதவி பெற்றோ காரியமாற்றியிருந்தால், விளைவுகளைப் (Impact) பற்றி அதிகமாக கவலைப்படத் தோன்றியிருக்காதுதான். ஆகையால் மிக நிதானமாக ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு காரியமாற்ற வேண்டிய கட்டாயம். புரிந்து கொண்டுதான் செயலாற்றுகின்றோம் என்று நாங்கள் நினைத்தாலும், எதிர்பார்த்த குறைந்த பட்ச ஒத்துழைப்புகூட அம்மக்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆகையால் ஒரு நல்ல மனிதரின் சேமிப்பில் கணிசமான தொகை வீணாவதற்கு நாமும் காரணமாயிருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே எனக்கேற்பட்டது.

மேக்கரையினரின் பாராமுகத்திற்கான காரணம் தெரியாமல் நான் பலநாட்கள் குழம்பிப் போயிருக்கின்றேன். அன்வரவர்களின் இரண்டு புத்தகங்களைப் படித்தபின் சில புரிதல்கள் ஏற்பட்டது. ஆதாய நாட்டமுடையவர்கள் (Stakeholders) என்ற கருத்தாக்கத்தின் பன்முகப் பரிமானங்களை அவருடைய புத்தகங்களைப் படித்தபின்பே உணர முடிந்தது. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதிலும், ஒரு புது முயற்சிக்கான ஆதரவிலும், எதிர்ப்பிலும் ஜாதி, மதம், அரசியல் மற்றும் பிற காரணங்கள் கணிசமான பங்கு வகிக்கும் என்பது பொதுவான புரிதல். இந்த பொதுவான புரிதலைத் தாண்டி சில நுட்பமான விசயங்களை அன்வரவர்கள் தன்னுடைய இரண்டு நாவல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார்.

நல்லது என்பதற்காக எந்தவொரு செயல்திட்டத்திற்கும் உடனடி சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. நல்லவைகளையும் புரிந்துகொண்டு செயல்பட செந்நீர் நாவலில் வரும் முனியாண்டி போன்ற கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றார்கள்.

ஜாதி, மதம், அரசியல் சார்ந்த ஆதாய நாட்டம் எப்பொழுதும் ஒருமித்ததாக, தட்டையாக இருப்பதில்லை எனபதை அன்வர் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றார். இது தவிர மொழி, இனம், வரலாற்றுப் புரிதல் போன்ற இன்ன பிற காரணங்களும் ஆதாய நாட்டத்தை (பிரச்சனைகளைக் கையாள்வதில்) எப்படி வழிநடத்துகின்றது என்பதை அன்வர் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றார். நூர்ஜஹானின் மரணம், கல்லூரி மாணவன் கிட்டு காணாமல் போவது -. இந்தப் பிரச்சனைகளை ஒரு சமூகம் எப்படிக் கையாள்கின்றது என்பதை அன்வர் எடுத்துச் சொல்லும் போது ஆதாய நாட்டத்தின் பன்முகப் பரிமாணங்களை கோடிட்டுக் காட்டுகின்றார்.

கருப்பாயீ என்ற நூர்ஜஹானை இஸ்லாத்திற்கு எதிரான குரலாகவும், செந்நீரை தமிழ் தேசிய உணர்வை தூண்டுவதாகவும் எடுத்துக்கொண்டு அன்வருக்கு ஆதரவும் எதிர்ப்பும் விமர்சனங்களில் வெளிப்படுகின்றது. ஆனால் எனக்கென்னவோ இருவேறு பிரச்சனைகளை மாறுபட்ட சூழலில் வாழும் இரு சமூகங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை விளக்கிச் சொல்வதாகவே படுகின்றது. இந்த இரண்டு நாவல்களிலும் வரும் முக்கிய கதாபாத்திரங்களை, பிரச்சனைகளுக்கு உள்ளான, மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கமுயலும் ஆதாய நாட்டமுடையவர்களாக கருதும் பட்சத்தில், பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் கையாளும் அணுகுமுறையை, அவர்கள் சார்ந்த மதம், ஜாதி, மொழி, இனம், வரலாற்றை அவர்கள் புரிந்துகொண்ட பாங்கு போன்ற பல்வேறு காரணங்களும், அந்த காரணங்களில் இருக்கும் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கை சார்ந்த அடர்த்தியுமே தீர்மானிக்கின்றது.

தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக அன்வர் வெளிப்படுத்தும் வலி, ஆதங்கம், கோபம் போன்ற வெளிப்பாடுகளை ஆதாய நாட்டம் என்ற academic கருத்தாக்கத்தை வைத்து நீர்த்துவிட எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் அந்த வலியைத் தாண்டி அன்வரின் எழுத்துக்களை புரிந்து கொள்ள முயலும் போது, ஒரு academic கருத்தாக்கம் பற்றிய புரிதல்கள் சட்டென்று விரிவைடைகின்றது. ஆதாய நாட்டத்தை ஒருசிலரின் உளச்சிக்கல் அல்லது சுயநலம் அல்லது பிறகாரணங்கள் காட்டி குறுக்க முயற்சிக்காமல், எதார்த்தவாழ்வின் உண்மைகள் என்று புரிந்துகொண்டு செயல்படும்போது முன்னேற்றப் பணியாளர்கள் தங்கள் செயல்பாடுகளில் அதை சற்று லாவகத்துடன் கையாளக் கற்றுக்கொண்டால் இன்னும் அதிக உயரத்தை எட்டலாம் என்றே எனக்குப் படுகின்றது. அதற்கு அன்வரின் புத்தகங்கள் உதவும். இந்தப் புரிதல்தான் அன்வரின் மீதும், அவரின் எழுத்துக்கள் மீதும் என்னை அபிமானம் கொள்ள வைத்தது.

March 16, 2013

நம்பிக்கைகளின் மீது ஊற்றப்பட்ட ஆசிட்

Filed under: Uncategorized — Tags: , , , — cdmiss @ 4:52 pm

எண்பதுகளின் (1980) தொடக்கத்தில் வைகையாற்றில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட, மதுரை நகரில் ஆற்றங்கரையோரமிருந்த குடிசைகள் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையானது. இதைத் தவிர்க்க வைகைக் கரையோரமிருந்த குடிசைவாசிகளுக்கு பாதுகாப்பான மாற்றிடக் குடியிருப்புகளைத் (Resettlement) தர அரசு திட்டமிட, அதன்படி 2000 குடியிருப்புகளைக் கட்ட தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவனியாபுரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, சாமநத்தம் கிராமத்தில் கண்மாய் புறம்போக்கு இதற்காக தேர்வு செய்யப்பட்ட்டது. வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, ஏற்கனெவே தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு 1989 ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆரம்பமானது. (ஒரு வீட்டின் மதிப்பு 11500 ரூபாயென்று நினைவு. 500 ரூபாய் முன்பணம் செலுத்தி ஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்துகொண்டு மாதம் 80 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு தவணைமுறையில் பணம் கட்டவேண்டும்) தகவல் தெரிவித்தும், வீடுகளைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலான பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை. அப்பொழுது குடிசைமாற்று வாரியத்தில் களப்பணிக்காகச் சென்றிருந்த மாணவர்களிடம், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை ஏற்கும்படி (Convince) செய்ய வேண்டிக் கொள்ளப்பட்டார்கள்.

clip_image002

பயனாளிகள் வீடற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை ஏற்றுக்கொள்ள முன்வராதாதற்கு பல்வேறு காரணங்கள். புதிய குடியிருப்பு அவர்களின் அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து மிகத் தொலைவில் அமைந்திருந்தது. பெயருக்கென்று அமைக்கப்பட்ட சாலையும், ஓரிரு முறை வந்து செல்லக்கூடிய பஸ் வசதியும் அவர்களுக்கு திருப்தி தருவதாக இல்லை. நிலத்தடி நீர் இருந்தாலும், அதைக் குடிக்க உபயோகிக்க முடியாது. மார்க்கெட், மருத்துவமனை என்று எந்த வசதியும் அருகில் இல்லை. அப்பொழுது நானே மதுரையில் சொந்த வீடில்லாமல்தான் இருந்தேன். ஆகையால் “வசதிகள் இல்லைதான். அங்கு செல்வதில் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். 11500 ரூபாய்தான். மாதம் 80 ரூபாய் தவணை. இருபது வருடங்களுக்கு கட்டலாம். குடியிருக்கக் கூட வேண்டாம். எதிர்காலத்திற்காகும் முதலீடு என்றாவது இந்த அதிர்ஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று ஒரு முப்பது பயனாளிகள் வரை ஓடியாடி கன்வின்ஸ் செய்தோம். சில பயனாளிகளை மாணவர்களும் நானும் சைக்கிளில் அழைத்துச் சென்ற அனுபவமும் உண்டு.

அந்த பருவ (Semester) களப்பணி முடிந்தது. அதன் பிறகு அங்கு செல்ல வாய்ப்பேற்படவில்லை. இருந்தாலும் கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் பளிச்சென்று இருந்த பெரியார் நகர் என் மனதை விட்டு அகல மறுத்தது. 60 அடி அகலமுள்ள பிரதானச் சாலை. 40 அடி அகலமுள்ள துணைச் சாலை. 30 அடி அகல குறுக்குச் சாலை. அசவுரியங்கள் இருந்தாலும், வீடற்றவர்களுக்கு அது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே எண்ணியிருந்தேன். உலக வங்கி கடனல்லவா? தனியார் கட்டுமான நிறுவனங்கள் மாதிரி வண்ண தகவலறிக்கைகள் தயார் செய்திருந்தார்கள். அந்த அறிக்கைகள் சிலவற்றை பத்திரமாக பல ஆண்டுகள் பாதுகாத்தும் வைத்திருந்தேன். பெரியார் நகருக்கு மீண்டும் சென்றுவர நினைத்தாலும் அது சாத்தியமாகவில்லை. என்னுடைய அக்கறையும், சமூகப் பொறுப்பும் ஆசைப்பட்டதோடு நின்றுவிட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளைவிட, ஒரு கல்லூரி ஆசிரியரின் பொறுப்பின்மை குறைந்ததா என்ன?

2000 வீடுகள். அப்பொழுதே நூறு கோடி ரூபாய் முதலீடு. ஆசியாவின் மிகப் பெரிய மாற்றிடக் குடியிருப்பு (resettlement project) என்ற பெருமை. 2000 வீடுகளிலும் மக்கள் குடியேறியிருந்தால், வீட்டிற்கு ஆறு பேர் வீதம் 12000 மக்கள் குடியேறி, அது Township அந்தஸ்தை பெற்றிருக்கும். இன்று சேர்முகத்தாய் வாசன் கல்லூரி அருகில் என்று அடையாளம் சொல்லப்படுவது மாறி, வைக்கம் பெரியார் நகர் அருகிலுள்ள கல்லூரி என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

நகரத்தை விட்டு சற்று தள்ளி, நாற்பது ஐமபது வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் கூட தங்கள் குடியிருப்பை ஜீவனுள்ளதாக்கி, அதைச் சுற்றி மேலும் முன்னேற்றம் ஏற்படும்படியாக மாற்றிக்காட்டி விடும்போது, 2000 வீடுகளைக் கொண்ட மிகப் பெரிய குடியிருப்புத் திட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்ட குடிசைமாற்று வாரிய அதிகாரிகளின் திறமையை என்னவென்று பாராட்ட?

அவனியாபுரம் பெரியார் நகரிலிருந்து வந்த என் மாணவர் வினோத் அம்பேத்காரிடம் “அங்கு ஒருநாள் போய்விட்டு வரவேண்டுமே” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சென்ற 11.3.2013 அன்று, 24 வருடங்களுக்கு பின் வைக்கம் பெரியார் நகருக்குச் சென்றேன். அவனியாபுரத்திலிருந்து பெரியார் நகருக்கு செல்லும் பாதை அப்போது இருந்ததைவிட இப்போது மோசமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. பெரியார் நகர் ஊர்த் தலைவரான முத்துச்சாமி ஐயா அவர்கள், எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆரம்பம் முதல் அங்கு குடியிருப்பவர்.

“கட்டிய ஐந்தாறு மாதத்திலே பாதிவீடுகள் ஈழக்களியான மண்வாகால் கீழிறங்கவும், விரிசல் விடவும் ஆரம்பித்தன. வந்து சென்ற பஸ்களும் பின் முறையாக வரவில்லை. வேறு போக்கிடம் இல்லாமல் அங்கு குடியேறிய சொற்ப குடும்பங்களுக்கும் நரக வேதனைதான். 500 ரூபாய் கட்டி வீட்டைப் பெற்றுக்கொண்டவர்களும், வீடுகளின் விரிசலைப் பார்த்து,தலைக்கு வந்தது தலைப்பாகையோடு முடித்துக் கொள்ளலாமென்று தவணை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளை ஒதுக்கீடு செய்துவிட்டபின், குடிசைமாற்று வாரியமும் அங்கிருந்த அலுவலகத்தை மூடிவிட்டது”.

“உலக வங்கியிடம் வாங்கிய கடனை அடைக்கவேண்டுமே. அப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஆயிரம் குடும்பங்கள் மாதம் 150 ரூபாய் வாடகைக்கு அங்கே பணையம் வைக்கப்பட்டனர். இப்படியாக அரசுப் பணத்தை ஒரு துறையிலிருந்து மறுதுறைக்கு சுழற்சி செய்து விட்டார்கள். அவர்கள் வந்த பிறகு குடியிருப்பு கொஞ்சம் கண்டுகொள்ளப்பட்டது. அகதிகளாக ஒரிரண்டு ஆண்டுகள் அங்கிருந்தவர்களும், இங்கே இருப்பதைவிட சிங்களவன் குண்டுக்கு பலியாவதுமேல் என்று இலங்கைக்கு திரும்பிவிட, பெரியார் நகர் மீண்டும் அரசுப் பார்வையிலிருந்து விலகியது. 2000 வீடுகள் கட்டப்பட்டதில் ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் சிதிலமடைந்து விட்டன. இப்போதுள்ள வீடுகள் எல்லாம் குடியிருப்போர்களால் மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டவையே”.

தரமற்ற வீடுகளைக் கட்டியதாக ஒப்பந்தகாரர் மீது ஒப்புக்காக போடப்பட்ட வழக்கு, ஒரு நபர் கமிஷன், அவ்வப்போது உண்மை அறிய வரும் அரசு அதிகாரிகள்- இதன் வெளிப்பாடு “எங்கோ தவறு நடந்துவிட்டது. பணத்தைக் கட்டுங்கள் என்று உங்களை (குடியிருப்போரை) கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பணத்தைக் கட்டாமல் குடியிருப்பவர்களின் பெயர்களுக்கு மனை உரிமை (வீடுகள் இடிந்துவிட்டதால்) வழங்கவும் முடியாது” என்று யாரும் யாரையும் நிர்பந்திக்கமுடியாத நிர்வாகச் சிக்கல். தாய்க்கிராமமான சாமநத்தம் ஊராட்சியின் வாக்கு வங்கியே பெரியார் நகராதலால், சில வசதிகள் வந்து சேர்ந்துள்ளன.

கண்மாயில் மீன் வளர்க்கின்றோம் என்ற பெயரில் கழிவு நீரைக் கொண்டுவந்து நிரப்பியிருப்பதால் வருடம் பூராவும் கொசுத்தொல்லை. குடிநீர் விலைக்கு வாங்கித்தான் குடிக்க வேண்டியிருக்கின்றது”.

அவர்கள் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் இந்தியாவின் பல குடியிருப்புகளில் உள்ளதுதான் என்று சமாதானமடைய முடியவில்லை. காரணம் பெரியார் நகர் தானாக உருவான குடியிருப்பல்ல. அது நூறு கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட ஒரு மாற்றுக் குடியிருப்பு. சரியாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் நகரமாக, ஒரு sattelite city யாக வளர்ந்து பரிணமித்திருக்கும். அந்த வாய்ப்புக்கள் சுத்தமாக அழித்தொழிக்கப்பட்டு, பார்வைக்கே பரிதாபமாக காட்சியளிக்கின்றது.

பெரியார் நகரின் கட்டுமானப் பணிகளை முன் நின்று கவனித்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒன்றும் ஏப்பை சாப்பைகளல்ல. அப்பொழுது செயற்பொறியாளராக இருந்தவர் பெயருக்குப் பின்னால் BE, ME, MBA பட்டங்களை பார்த்ததாக நினைவு. Civil Engineering படித்த பொறியாளர்கள்தாம் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத என்ன? மண்வாகைப் பொறுத்துதான் அஸ்திவாரம் அமைக்கப்படவேண்டுமென்று. எப்படி ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வீடுகள் பழுதடையும்படியாகவும், கட்டிமுடித்து 20 ஆண்டுகளுக்குள் எல்லா வீடுகளும் இடிந்து மன்னாகப் போகும்படியாகக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. குடிசை மாற்று வாரியத்திலே Community Development க்கு என்று தனிதுறையும் (Department), பணியாளர்களும் இருக்கின்றார்கள். அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து, மக்களை அப்புறப்படுத்தி மாற்றிடம் கொடுக்கும் போது அவர்கள் என்னென்ன சிரமத்திற்கு உள்ளாவார்கள், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதைத் முன்கூட்டியே திட்டமிட்டு, அதை திட்டச் செலவில் சேர்த்திருக்கலாமே? பொறியாளர்களால் வீடுகளைத்தான் கட்டமுடியும். அவர்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதால் தானே, உலக வங்கியின் வற்புறுத்தலின் பேரில் Community Development என்ற துறையே குடிசைமாற்று வாரியத்தில் உருவானது. யோசித்துப் பார்த்தால் எல்லோரும் சேர்ந்துதான் 2000 குடும்பங்களின் நம்பிக்கையைத் தகர்திருக்கின்றார்கள்.

வினோதினி, வித்யா போன்ற இளம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றப்பட்டது அக்கிரமம். ஆசிட் ஊற்றப்படுவதற்கு முன்னாலிருந்த அவர்களின் தோற்றபொலிவுவையும், ஆசிட் ஊற்றியபிறகு அவர்கள் பொலிவிழந்து உருக்குழைந்ததைப் பார்ப்பவர்கள், ஆசிட் ஊற்றியவர்களின் மீது கடுங்கோபம் கொள்வது நியாயமே. நான் பெரியார் நகர் உருவான பொழுது அது பொலிவுடனிருந்ததைப் பார்த்தவன். அந்த திட்டத்தைப் பற்றிய அழகான வண்ணமிகு தகவல் அறிக்கைகளை, ஒரு வளரிலம் பையன் சினிமா நடிகைகளின் படத்தை, தன்னுடைய நோட்டுப்புத்தக பக்கங்களுக்கிடையே மறைத்து வைத்து பார்ப்பதைப்போல பல ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருந்தவன். மீண்டும் பெரியார் நகரைச் சென்று பார்த்த போது எனக்கென்னவோ ஆசிட் ஊற்றப்பட்ட வினோதினி, வித்யாவின் முகங்களே நினைவுக்கு வந்தன.

2000 குடும்பங்களின் நம்பிக்கை மீது ஆசிட் ஊற்றிவிட்டு, அந்த குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல், 40 கோடி ரூபாயில் அங்கே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, மீண்டும் பெரியார் நகரை எடுத்துக் கட்டப் போவதாக குடிசை மாற்று வாரியம் முன்வந்ததாம். “ஐயா! இட நெருக்கடியான இடங்களில் அடுக்கு மாடிகளோ, புடுக்கு மாடிகளோ கட்டிக்கொடுங்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு மனை உரிமை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கோபப்பட, ஆசிட் கேனை தூக்கிக் கொண்டு, குடிசை மாற்று வாரியம் ராஜாக்கூர் சென்று விட்டதாம். ராஜாக்கூரில் எப்படியெல்லாம் ஆசிட் ஊற்றியிருக்கின்றார்கள் என்பதை ஒருநாள் நானும், வினோத்தும் பார்த்துவர நினைத்திருக்கின்றோம்.

December 7, 2009

Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்

தீண்டாத வசந்தம்

Theendaatha vasantham cover Theendatha Vasantham back cover ஆசிரியரென்ற முறையில் சில நல்ல தமிழ்ப் புத்தகங்களைப படிக்க மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதும், மாணவர்களும் தாங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியதும் கடந்த காலக் கனவாகிவிட்ட நிலையில், வினோத் அம்பேத்கர் என்ற முதலாண்டு (MSW) மாணவர், திரு. ஜி. கல்யாணராவ் தெலுங்கில் எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பான “தீண்டாத வசந்தம்” என்ற நாவலை படிக்குமாறு கொடுத்தார். வினோத் தலித் விடுதலையிலும், மேம்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருப்பவர். அவர் படிக்கக் கொடுத்த புத்தகமும் அதையே கருவாகக் கொண்டிருந்தது.

ஆக்க இலக்கியமும்  சமூகப்பணியும் நெருங்கிய தொடர்புடையது.  நான் ஆங்கில இலக்கியங்கள் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும்,  Charles Dickens  தொடங்கி உலக இலக்கிய கர்த்தாக்களில் பலர், அவ்வக் காலத்திற்குரிய சமூக அமைப்பை, அதன் அவலங்களை, அதன் ஆற்றாமையை சமூகப் பணியாளர்கள் உணர்வு பூர்வமாக உள்வாங்க உதவிருக்கின்றார்கள். நானும் கூட சமூகப்பணியின்  பல்வேறு கூறுகளை ஜெயகாந்தனைப படித்தே புரிந்து கொண்டேன். கி.ரா., வைரமுத்து, மேலாண்மை பொன்னுசாமி, நாஞ்சில் நாடான், சுந்தர ராமசாமி ….இப்படி பலரின் எழுத்துக்கள் என்னை எனக்குப் புரியவைத்தது. பாடப் புத்தகங்களை விட, ஆக்க இலக்கியத்தின் மூலமாக சமூகத்தைப் பற்றிய   பல்வேறு பரிமாணங்களை மாணவர்கள், குறிப்பாக சமூகப் பணி மாணவர்கள் எளிதாக உள்வாங்க முடியும் என்ற நம்பிக்கை எனககிருந்தாலும், அந்த நம்பிக்கையை பரவலாக நடைமுறைப்படுத்துமளவு, சுழலோ, அறிவுத்திறனோ, ஆளுமையோ எனக்கு வாய்க்கப் பெறாததால், எனது நம்பிக்கைகளை என்னளவிற்குக குறைத்துக் கொண்டேன். காலப் போக்கில் வாசிப்பு கூட குறைந்து கொண்டு வந்தது.

புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு. பாலாஜி அவர்கள் பதிப்புரையில் சொல்லிய மாதிரி, இலக்கியம் நமது உணர்ச்சிகளை தூண்டச் செய்து, நமது உள்ளுணர்வுகளை பொங்கவைக்கின்றது. தீண்டாத வசந்தம் நாவல் அதை அற்புதமாகச் செய்திருக்கின்றது என்பதில் ஐயமேதுமில்லை.

தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உணர்வு பூர்வமான வரலாற்றை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது. நாவலைப் பற்றி திரு. வே. மீனாட்சி சுந்தரம் எழுதிய மதிப்பீடு, நாவலின் விற்பனையை சற்று பாதிப்படையச் செய்தது (பக்.4) என்பதைப் படித்த போது, பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் என்ற ஜெயகாந்தன் நாவலின் மக்கள் பதிப்பு அறிமுக விழா மதுரையில் நடந்த போது, ஏற்பட்ட சம்பவம் நினைவிற்கு வந்தது.

“ஒவ்வொரு தடவையும் நாவலின் நாயகி, கல்யாணியை வெற்றிலைச் சாறைத் துப்ப முற்றத்திற்கு அனுப்பாமல், பக்கத்தில் எச்சில் பணிக்கத்த்தை வைத்திருந்தால், ரங்கா -கல்யாணி உரையாடல் பல நேரங்களில் தடைபடாமல் தொடர்ந்திருக்கும்” என்ற அர்த்தத்தில் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர். தமிழண்ணல் கருத்துக்  கூற, ஏற்புரை நிகழ்த்திய ஜெயகாந்தன், “அவள் என்னுடைய நாயகி!  அப்படித்தான் எச்சிலைத் துப்புவாள்! அதை விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை” என்று ஆண்மையோடு பொங்கினார். ஜெயகாந்தனின் ஆவேசம் எனக்குப் பிடித்திருந்தது.

தமிழண்ணல் சொன்ன மாதிரியே, வே.மீ யும் ” போராட்டக்காரனான ஜெசி மலைப்பாறையில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? அவன் மக்களோடல்லவா இருந்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார். ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டுமென்றால், “அவன் ஜெசி! அவன் அப்படித்தான் வானத்தைப் பார்ப்பான்” என்றுதான் முடிக்க வேண்டும்.

தலித்துகளுக்கென்று இன்று வலிமையான இயக்கங்களும், தலைவர்களும் உள்ளனர். அரசியல், அரசாங்கம், அறிவியல் (தொழில் நுட்பம்), ஒவ்வொரு ஊரிலுமிருந்த விவரிக்க இயலாத உட்சாதி போட்டிகள், அது உருவாக்கிய உறவு முறைகள்… தலித்துகளின் விடுதலை ஒரு வழிப் பாதையாக இருந்ததில்லை. ஆனால், அந்தத் தடங்களில் நடந்து, நடந்து அதைப் பாதையாக்கிக் காட்டிய பெருமை தலித்துகளுக்கே உண்டு. நம்மில் பலர் மேலிருந்து கைகளைக் கொடுத்து தூக்கிவிட்டிருக்கலாம். அப்படி மேலே இழுக்கும் போது, முழுச் சுமையால் நாம் மூச்சுத் திணராத அளவுக்குக் கிழிருந்து முட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள்தான்.

காலந்தோறுமான தலித் விடுதலையை நான் கூர்ந்து கவனித்தவனில்லை. இருப்பினும் 60 களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தபோது, அரசியல் கட்டாயத்தால் தலித்துகளுடனான சமூக உறவுகள் சற்று மாற்றமடைய ஆரம்பித்ததை நான் கவனித்திருக்கின்றேன். பசுமைப் புரட்சிக்க்குப் பின், அதுகாறும்  சோற்றுக்கும், குறைந்த சம்பளத்திற்கும் “attached labour” ஆக இருந்த தலித்துக்கள், எவரிடமும் வேலைக்குச் செல்லும் சுதந்திரமான தினக் கூலிகளானார்கள்.வெண்மைப் புரட்சி, கால்நடை வளர்ப்பிலிருந்த கண்ணோட்டத்தை மாற்றியதால், பண்ணை மாடுகளைச  சோற்றுக்காக பராமரித்துக் கொண்டிருந்த தலித்துக்கள் அதிலிருந்து விடுதலை பெற்றனர். மின்சாரம், தார்ச்சாலை, பேருந்துகள் அறிமுகம் என்று கட்டமைப்பு வசதிகள் தலித்துகளின் மீதான கட்டுபாடுகளை தளரச் செய்தது. இயந்திரங்கள் நுழைய, நுழைய சமத்துவம் பல வழிகளில் சாத்தியமாயிற்று என்பது என்னுடைய கணிப்பு

அரசியல், அரசாங்கம், அறிவியல் – இவை மூன்றும் வடிவமைத்துக் கொடுக்கும் வழிமுறைகளை, அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு மாதிரியாக உள்வாங்குகிறது. இந்த உள்வாங்கலுக்கு ஏற்ப அபூர்வமாக சில இடங்களில் ஒட்டு மொத்த சமூகமும் மற்றுருவாக்கமடைகிறது. சில இடங்களில், சமூகங்களுக்கிடையில் சமகாலச் சிந்தனைப் போக்கிற்கு ஒத்திசைவற்ற உறவு முறைகளை உருவாக்குகிறது. இந்த ஒத்திசைவற்ற உறவு முறைகளால் எல்லோரும் அலைக்கழிக்கப்படுகிறோம். அவஸ்தைக்கு உள்ளாகிறோம்.தலித் விடுதலையும், தலித் விடுதலையின் மீது அசூயை கொள்ளாத மனப்பாங்கும், அரசியல், சமூக, பொருளாதாரரீதியாக  புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் எழுச்சி கொள்ளும் போது, அவர்களே எழுந்து நிற்கும் போது, நாமும் எழுந்து நிற்கலாம் என்று போட்டியிட அல்ல, மாறாக எல்லோரிடமும்  தன்னம்பிக்கையை வளர்ப்பது நம்முன்னே உள்ள மிகப் பெரிய சவால். இந்தச் சவாலைச் சாத்தியமாக்குமளவு நம்மிடையே ஆக்க இலக்கியங்கள் படைக்கபபடவேண்டும். படைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

சந்தேகத்திற்கிடமில்லாமல்  நேற்றைவிட இன்று நீதிமிக்க  சமூகத்தை நாம் படைத்திருக்கின்றோம். நம்முடைய போராட்டங்கள் எல்லாம் நாம் தோற்றுப் போய்விட்டதற்கான அடையாளங்களல்ல. மாறாக இலட்சிய சமூகம் படைப்பதற்காகத்தான். ஏனனெனில், அங்கு குறைவற்ற, பழுதுபாடாத நீதி இருக்குமென்று நம்புகிறோம்.

Blog at WordPress.com.