Community Development

November 22, 2019

எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து

Filed under: Uncategorized — Tags: , , , , — cdmiss @ 12:24 pm

பத்து வருடங்களுக்கு முன் (29.4.2009) ஆவணப்பகிர்வு தளங்களில் (document sharing sites) பதிவேற்றப்பட்ட “Introduction to Professional Social Work” என்ற என் பாடக்குறிப்புகளடங்கிய ஆவணத்தை, வடிவ மாற்றம் (layout improvement) செய்ய நினைத்த நண்பர் தயாளன், அதைப் பதிவிறக்கம் செய்ய முற்பட, பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகவே, அந்த ஆவணத்தின் பிரதியை அனுப்புமாறு கேட்டிருந்தார். இலவசமாகப் பயன்படுத்தப் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை, அதிக வாசகர்கள் பார்வையிடுவதையும், பதிவிறக்கம் செய்வதையும் பார்க்கும் ஆவணப் பகிர்வு (Document Sharing) இணைய தளங்கள் அதற்குக் கட்டணம் வசூலிக்கும் தவறான நடைமுறை ஒரு புறம். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள பதிவேற்றம் செய்யப்பட்டதை, சந்தா செலுத்துபவர்கள் (membership) மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம், மற்றவர்கள் பார்க்க, படிக்க  மட்டும் செய்யலாம் என்று மறைமுகக் கட்டுப்பாடுகளை விதிப்பது மறுபுறம். இந்த  நிலையில் தான் கற்பனைக்கெட்டாத அறிவுப் புரட்சியை உண்டாக்கிய விக்கிபீடியா தளத்தையும், அதன் நிறுவனர்களான Jimmy Wales மற்றும் Larry Sanger க்கும் மானுட சமுதாயம் எவ்வளவு தூரம் கடமைப்பட்டது என்பதை உணரவேண்டும். விக்கி என்ற ஒரு மென்பொருளை, அவர்கள் காப்புரிமை செய்து, வணிகரீதியாகப் பயன்படுத்த நினைத்திருந்தால், இன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவேளை அவர்களும் இணைந்திருப்பார்கள். வணிகம் கடந்த ஒருநிலை இணையத்திலிருப்பதால்தான் அது வளர்கிறது. நாமெல்லோரும் இணையத்தை நமக்கானாதாக உணரமுடிகிறது. இந்த நன்றியால்தான், என் வாழ்நாள் முடிவதற்குள் ஒரு பத்துக் கட்டுரைகளாவது தமிழ் விக்கிபீடியாவில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. பார்க்கலாம்.
நண்பர் தயாளன் கேட்ட ஆவணத்தை அனுப்பிவிட்டு, அதில் அவர் மாறுதல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்ததால், அந்த ஆவணத்தின் word file அவருக்கு அனுப்பினால் மேலும் உபயோகமாக இருக்குமே என்று என் கணனியில் தேடினால், அது கிடைக்கவில்லை. தான் பணியில் சேர்ந்த காலம் முதல் அந்த பாடத்தைக் (Introduction to Professional Social Work) கையாண்டு வந்த பேரா. JCD ஓய்வு பெற்றபின், அந்தப் பாடத்தை நான் கையாள ஆரம்பித்தேன். Introduction to Professional Social Work தான் MSW பாடத்திட்டத்தின் அஸ்திவாரம். எனக்கென்னவோ மாணவர்கள் உள்வாங்கும் முகமாக அது கையாளப்பட்டதில்லை. மற்ற பாடங்களில் காண்பிக்கப்பட்ட அக்கறை அதில் காட்டப்படவில்லை என்ற எண்ணத்தால், என் திறமைக்கெட்டியவரை தயாரித்த பாடக்குறிப்புகள். அந்தப் பாடத்தில் எனக்குத் தொடர் வாசிப்பு இருந்ததில்லையாதலால், நான் வாசித்தறிந்தவரை, எனக்குப் புரிந்தவரை தயார் செய்த குறிப்புகள். Building is strong but Basement is weak என்ற வடிவேலுவின் நகைச்சுவை,  நம் செயல்களுக்கும் பொருந்தும்தானே. அந்த ஆவணத்தை இற்றைப்படுத்தி (update) மேலும், மேலும் செழுமையாக்க, எளிமையாக்க நினைத்ததுண்டு. அது MSW முதல் பருவத்தில் தொடங்கும் முதல் பாடம். அது சமூகப்பணியின் பாயிரம் போன்றது. சரியான பாயிரமின்றி கற்கத் தொடங்குபபவர்கள், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப்படுவார் என்பது தமிழ் இலக்கிய விதி. அந்த ஆவணத்தில் பல இடங்களில் மேலதிக விளக்கங்களும் படங்களும், அடைப்புக் குறிகளுக்குள் கலைச் சொற்களுக்கான தமிழ் பொருளும் இருந்தால் நன்றாக இருக்குமென்று பணியிலிருக்கும்போதே விரும்பினாலும், அதை நான் செய்யவில்லை. ஆனால் இன்று அதன் உள்ளடக்கத்தில் அல்ல, வடிவமைப்பில் மாறுதல் செய்தால் இன்னும் படிக்க இலகுவாக இருக்குமே என்று நண்பர் தயாளன் முன்வந்தது என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்னுடைய ஆர்வத்தைவிட, என்னுடைய மாணவர்களின் இப்படிப்பட்ட ஆர்வமே என்னைத் தேங்கவிடாமல் இன்றளவும் ஓடவைத்திருக்கிறது.

நண்பர் தயாளனுக்காக Introduction to Professional Social Work – word file ஐ என் கணனியில் தேடும் போது, அது கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, நண்பர் வினோத் அம்பேத்கார், தான் படித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களின் கோப்பைப் பார்க்கநேர்ந்தது. சில பாடங்கள், சில வகுப்புகள், சில மாணவர்களை ஆகர்ஷிக்கும் என்பதற்கு, MSW பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த Introduction to Livelihood Promotion என்ற பாடமே சான்று. எளிய மக்களின் ஜீவனோபாய முறைகளை அறிந்துகொள்ள வினோத் அம்பேத்கார் பலரையும் சந்திப்பார். உரையாடுவார். அந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதைப் புகைப்படங்களாகவும் எடுத்துவந்து என்னிடம் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலோர் கையிலிருக்கும் கேமிராக்கள் அழகானவற்றை நோக்கியே திரும்பும். ஆனால் எளிய மக்களை நோக்கி கேமிராவைத் திருப்புவதற்கு உள்ளார்ந்த சமூக அக்கறை வேண்டும். அது வினோத்திடம் அப்பொழுதே இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.

வினோத் என்னுடன் பகிர்ந்திருந்த 150 படங்களுக்கு மேல் என் கணனியில் இருந்தது. எல்லாமே எளிய மக்கள் தாங்கள் ஜீவிப்பதன் பொருட்டு செய்யும் பல்வேறு செயல்கள். அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் விளக்க முற்பட்டாலே அது ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுமளவு நீளும்தான். எளிய மக்கள் செய்யும் வேலை, விற்கும் பொருள்கள், அந்த பொருட்களின் நுகர்வோர் என்பதிலிருக்கும் value chain, sector analysis, யோசித்தாலே, விளங்கிக் கொண்டாலே பிரமிப்பே மிஞ்சும். அப்படி பிரமித்து, அதைப்பற்றி சிந்தித்த ஒரு மாணவரும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் பின்னாளில் தெரிய வந்தது. படித்து முடித்து விட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்த மகேஷ் கார்த்திக் என்ற மாணவர், ஒரு கட்டத்தில் பல போட்டித்தேர்வு ஆயத்த மையங்களுக்கு, அதுவும் economics subject கற்பிக்கும் resource person ஆக சென்று வருவதாகச் சொன்னார். “என்னங்க நீங்கள் இளங்கலை வகுப்பில் கூட economics படித்ததில்லையே, economics பாடத்திற்கு எப்படி resource person ஆகப் போகிறீர்கள்” என்று அதிர்ச்சியடைந்து கேட்டபொழுது, “Economics படித்ததில்லைதான். ஆனால் livelihood படித்திருக்கிறேனே. அதைப் பின்னணியில் வைத்துதான் எல்லாப் பொருளாதாரக் கோட்பாடுகளையும் விளக்குகிறேன். என்னுடைய இந்த அணுகுமுறையால், பல போட்டிதேர்வு ஆயத்த மையங்கள் இதற்காகவே என்னை விரும்பி அழைக்கிறார்கள்” என்றும் சொன்னார். ஒரு கருத்தாக்கத்தை ஒவ்வொரு மாணவரும் அவர்களவில் புரிந்துகொண்டு அதை எப்படி மலரச் செய்கிறார்கள் என்பதை அறியும் போது பெருமையாக இருந்தது. நான் கற்றுத்தந்த பாடங்களில் எனக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம், நம்பிக்கைகளை உயிர்பித்து என்னை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொண்ட மாணவர்கள் பலர்.

எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேரா. கண்ணன் அவர்களின் மகன், விபத்திற்குள்ளாகி, நினைவு திரும்பாமால், ஏறக்குறைய 4 மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதையும், அதனால் பேரா. கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஉளைச்சல் மற்றும் தாங்கொணா சிகிச்சைச் செலவுகளையும் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் பேரா.NNR அவர்கள், பேராசிரியரின் மகன் குணமடைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு முதலில் MISS CD என்ற வாட்சப் குழுவில் வேண்டியிருந்தார். அந்தச் செய்தியைப் பார்த்த நண்பர் தயாளன், “சார்! ஒரு நேரம் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்குமே” என்று எடுத்துக்கொடுக்க, “அந்த நேரத்தை நீங்களே குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுங்கள் என்று பேரா.NNR சொல்ல, அதன்படி பார்ப்பவர்கள் எல்லாம் பிரார்த்திக்கத் தூண்டும்படியான ஒரு flyer தயாரித்து தயாளன் பகிர, அது மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்களின் வாட்சப் குழுக்களில் பகிரப்பட, நூற்றுக்கணக்காண மாணவர்களை உள்ளன்போடு அப்பிரார்த்தனையில் ஈடுபட வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த (flyer) சுற்றறிக்கையால்தான் என்பதை என்னால் உணரமுடிந்தது.


Livelihood Photos Vinod Ambedkar’s Collection from Srinivasan Rengasamy மக்கள் பங்கேற்பைப் பற்றிய பாடத்தை நான் பலவருடங்கள் கையாண்டுள்ளேன். ஆனால் சில விசயங்களில் என் மாணவர்களின் பங்கேற்பைக் கூட பெறமுடியாது தவித்துள்ளேன். ஒரு செயலில் மக்களைப் பங்கெடுக்க வைப்பதென்பது பெருங்கலை. அது மானுட இயல்பு, மானுட எதிர்பார்ப்பு, அதை உணர்ந்து சொல்லப்படும் ஒரு செய்தி, அந்த செய்தி சொல்லப்படும் விதம் என்று பலவற்றின் கூட்டுச்சேர்க்கை. ஆனால் எங்களால் (நண்பர் NNR)  வேண்டிக்கொள்ளத்தான் முடிந்தது. பார்வையிடப்படாமல் பலராலும் கடந்து செல்லப்படும் நிலையிலிருந்த வேண்டுகோளை, அழகாக வடிவமைமைக்கப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பார்க்க வைத்து, பல நாடுகளிலிருக்கும் முன்னாள் மாணவர்களையும் அப்பிரார்த்தனையில் பங்கெடுக்க வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த flyer தான் என்பதை மறுக்கவியலாது. நான்கு மாதங்களாக நினைவு திரும்பாமல் துயரத்திற்குள்ளான நிகழ்ச்சி. பலரும் அறிந்திருந்தாலும் அவர்களவில் வேண்டிக்கொண்டு கடந்த நிலையில் பலரையும் ஒன்றிணைத்தது, பங்கேற்கச் செய்தது பெரிய செயல். ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்படும் விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால் பலரின் பங்கேற்பு சாத்தியமே என்று பங்கேற்பு முறைகளின் மீது (Participatory Methods) எனக்கிருந்த நம்பிக்கையை தயாளன் வலுப்படுத்தினார் என்றால் மிகையாகாது
இங்கிலாந்தைச் சேர்ந்த பேரா. Malcom Payne பிரபலமான சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகங்களை சமூகப்பணித் துறை நூலகங்களில் பார்க்கலாம். புத்தகங்களாக வெளியிடப்படுவதற்கு முன் அதன் வரைவுகள் (drafts) சிலவற்றை Scribd தளத்தில் பகிரும் வழக்கம் அவருக்கிருந்திருக்கிறது. அவரின் ஆவணங்கள் என்னுடைய ஆவணத் தயாரிப்பிற்குப் பெருமளவு உதவியிருந்தது. ஆனால் அவர் பகிர்ந்திருந்த ஆவணங்கள், எந்தவித

ஜோடனையுமற்று தட்டச்சு செய்யப்பட்டதைப் போல காணக்கிடைக்கும். பல ஆண்டுகள் அந்தத் தளத்திலிருந்தாலும் அது வாசகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின. ஆனால் அவர் கருத்துக்களைக்  கடன்வாங்கித் தயாரிகிக்கப்பட்ட எனது ஆவணங்களுக்கு அதிக வாசகர்கள் கிடைத்தது, அதனுடைய மேலான தர்த்திற்காக அல்ல. மாறாக அதை நான் சற்று

சிரமமெடுத்து வடிவமைத்திருந்ததால்தான். Presentation matters என்பார்களே அதுபோல. தயாளன் முயற்சி, Introduction to Professional Social Work  ஆவணத்தை இன்னும் பலர் பார்க்கத் தூண்டலாம். அந்த அஸ்திவாரத்தை மேலும் வலுப்படுத்த சிலரைத் தூண்டலாம்.

பணியாற்றிய காலத்தில் மட்டுமல்ல, இப்பொழுது இக்குழுவில் செயல்படுபோதும் எனக்கு பல நேரங்களில் அலுப்பு தட்டும். எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருவதுண்டு. அஞ்சால் அலுப்பு மருந்து சாதாரண மக்களின் அலுப்பை நீக்குவதுபோல, என்னுடைய மாணவர்களின் சில செயல்கள் என் அலுப்பை நீக்கிவிடும். செய்யணும், இன்னும் அதிகமாகச் செய்யணும் என்ற உற்சாகத்தை தந்துவிடும்.என் சுயநலத்தின் பொருட்டாவது, என் சோர்வைப் போக்கிக்கொள்ளவாவது, இவர்களுடன், இவர்கள் குழுமியிருக்கும் இந்த MISS CD வாட்சப் குழுவுடன் தொடர்ந்து உரையாடவேண்டும். ஏனெனில் எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து என் மாணவர்களிடமே இருக்கிறது.

May 14, 2013

வெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned

வெட்டுப்புலியும் நான் கற்றுக்கொடுத்த பாடமும்.

வெளியில் எங்கும் போக விருப்பமற்றிருந்த சோம்பேறித்தனமான ஒரு நாளில் தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் கையில் கிடைத்தது. என்னுடைய சின்ன மகன் விக்னேஷ் வாங்கி வைத்திருந்தது. புத்தகத்தின் ஆரம்பத்தில் தமிழ்மகனைப் பற்றி எழுதப்பட்டிருந்த அறிமுகக் குறிப்புதான் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. முதல் ஐந்தாறு பக்கங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. ஆனால் ஏழாம் பக்கத்திலிருந்த ஒரு பத்தி என்னை புத்தகத்தோடு கட்டிப்போட்டு, நிமிர்ந்து உட்காரவைத்து, மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்க வைத்தது.

vettupuliவெட்டுப்புலி தீப்பெட்டியோடு சம்பந்தப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு நீளும் சம்பவங்களே நாவலின் கதைக்களம். “ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையிருந்தது. இன்னொரு பத்தாண்டுகளுக்கு பின்னோக்கிப் போகவேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தமிழ்மகன் குறிப்பிடும்போது அந்த வார்த்தைகளிலிருந்த எதார்த்தமும், அனுபவ ஒத்திசைவுமே என்னை நாவலுடன் அன்யோன்யமாக்கியது. பத்தாண்டுகள் கூட வேண்டாம். சிலநேரங்களில் மாதங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் கட்டாயமேற்பட்டு, அது எழுப்பிய சந்தேகங்களை எதிர்கொள்ளமுடியாமல் துவண்டு போன என் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. மனுஷன் ஒரு நூற்றாண்டை பின்னோக்கிப் பார்த்திருக்கின்றார் என்றால், வரலாற்றையல்ல, ஒருவகையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்திருக்கின்றார் என்றால்….அந்த அனுபவத்தை அவர் எப்படி எழுத்தாக்கியிருக்கின்றார் என்பதை நானும் அறிந்துகொள்ள விரும்பினேன்.

பின்னோக்குதல் என்பது சமூக முக்கியத்துவம் வாய்ந்த சொல்லாடல். சமூக முன்னேற்றம் என்பதுகூட ஒருமாதிரியான வில்வித்தைதான் – பின்னோக்குதல்தான். எவ்வளவுக்கெவ்வளவு சாதுர்யமாக நாணை பின்னோக்கி இழுக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அம்பை நாம் நினைத்த தூரத்திற்குச் (குறிக்கோளை நோக்கி) செலுத்தலாம். பின்னோக்குதலென்பது, முன்னோக்குதலைவிட அதிக மதிநுட்பம் தேவைப்படும் செயலென்பது என் அனுபவம். பட்டறிவு. அதனால்தான் நமது கல்விநிலயங்கள், முன்னோக்குதலைப் (Planning) பற்றி பேசுமளவு, பின்னோக்குதலைப் பற்றி பேசுவதில்லை. பின்னோக்குதலுக்கு முறையான பயிற்சி இல்லாததால், ஒன்று நாம் நாணை அளவுக்கதிகமாகவோ, அல்லது அளவு குறைத்தோ பின்னிழுக்கும் போது, அம்பு நம் குறியிலக்கைத் தாண்டியோ, அதற்கு முன்பாகவோ விழுந்து தொலைக்கின்றது.

thamil makan2அடுத்து தமிழ்மகன் எழுதியிருந்தது, சமூக முன்னேற்றத்தைப் (community development) பற்றிய பாடத்தைக் கால்நூற்றாண்டுக்கு மேலாக கற்பித்து வந்த என்னுடைய அனுபவத்தோடு ஒத்திசைந்து சென்றது. சமூக முன்னேற்றப் பணிகளில் (Community Development), பிரச்சனைகளையோ, வாய்ப்புகளையோ கண்டறிந்து அதைச் சரியாகக் கையாள வேண்டுமென்றால் அதைப் பற்றிய தகவல்கள் வேண்டும். சமூக முன்னேற்றப் பணிக்கான திட்டமென்பது அடிப்படையில் தகவல்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒரு எழுத்தாளனும், முன்னேற்றப் பணியாளனும் ஒரு எல்லை வரைக்கும் இணைந்தே பயணிக்கின்றார்கள். தன் பயண அனுபவத்தை எழுத்தாளன் இலக்கியமாக்குகின்றான். முன்னேற்றப் பணியாளன் தன் அனுபவத்தை, சமூக மாற்றுருவாக்கதிற்கான திட்டமாக்குகின்றான். சமூக முன்னேற்றத்திற்கான தகவல் சேகரிப்பு என்பது பெரும்பாலும் நிகழ்காலத்தைப் பற்றிய தகவல் சேகரிப்புதானென்றாலும், நிகழ்காலம் பெரும்பாலும் கடந்த காலத்தின் நீட்சியாக இருப்பதால், எல்லாத் தகவல் சேகரிப்பிலும், அது இலக்கியமோ, முன்னேற்றப் பணியோ, நாம் வகுத்துக்கொண்ட குறிக்கோளிற்கேற்ப சற்று பின்னோக்கி நகரவேண்டியது கட்டாயமாகின்றது.

பின்னோக்கி நகர்தல் என்பது எளிதானதுமல்ல. தமிழ்மகன் குறிப்பது மாதிரி “இங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர்? எதற்காகச் சென்றனர்? என்ன உடை உடுத்தினர்? எப்படிப் பொருளீட்டினர்? எப்படிச் சேமித்தனர்?… எப்படிப் பேசினர்? யாரை எதிர்த்துப் பேசினர்? யாருடைய பேச்சைக் கேட்டனர்? எப்படி உழைத்தனர்? எப்படி உண்டனர்?…எந்த சாமியைக் கும்பிட்டனர்? எப்படியெல்லாம் வீடு கட்டினார்? எதற்கெல்லாம் சந்தோசப்பட்டனர்? கோபப்பட்டனர்?” என்று ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்பும். இந்த சந்தேகங்கள் கடந்த மாதத்தைப் பற்றியோ, கடந்த ஆண்டைப் பற்றியோ, கடந்த நூறாண்டைப் பற்றியோ இருக்கலாம். ஆனால் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டால்தான், அனைத்தையும், அனைவரையும் அரவணைத்து (integrated & inclusive) முன்னகர முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலக் குறிப்பு, community organization என்ற பாடத்தில், முதல் நிலையான தகவல் சேகரிப்பு முறை பற்றியது. கால்நூற்றாண்டுக்கு மேலாக இதைப் புரிந்துகொள்ள முயற்சித்ததிலும், என் மாணவர்களுக்குப் புரியவைக்க முயற்சித்ததிலும் எனக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டதில்லை. காரணம் நமது கல்விமுறை தகவலென்பதை ஜீவனற்ற புள்ளிவிவரத் தொகுப்பாக்கிவிட்டதால் கூட இருக்கலாம்.

Fact- finding

Fact-finding includes activities designed to aid the Discovery, Ascertainment, Assembling,

Compilation and Recording of Facts.

Most community problems are sustained by a wide variety of factors, and some are more influential than others. The challenge is to locate the major factors that have an effect on the problem requiring correction. To meet this challenge effectively, it is essential to gather relevant facts regarding the background of the problem. In gathering information on the problem, the Community Organizer may be faced with two difficulties: obtaining too much information that may prove to be irrelevant; identifying too little information from normal sources. Good judgment must be used to distinguish noise (meaningless data) from information that helps in analyzing a problem. Similarly when information is not easily available, concerned individuals may be required to use ingenuity, functioning like good investigative reporter by checking out leads.

தகவல் சேகரிப்பில் உள்ள சவால்கள் இதுதான். “Obtaining too much irrelevant information….identifying too little information from normal sources… distinguishing noise (meaningless data) from information” இதைப் பொட்டிலடித்தாற்போல், புரிந்து கொள்ளவும், புரியவைக்கவும் சரியான எடுத்துக்காட்டுகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு, “உதறிய கோணியில் இருந்து உமியும் வந்தது. அரிசியும் வந்தது. கவனமாகத்தான் பிரித்துக் கொள்ளவேண்டியிருந்தது” என்ற தமிழ்மகனின் வார்த்தைகளை என் புரிதலுக்காக எனக்கென்று பிரத்யேகமாக எழுதப்பட்டது மாதிரி உணர்ந்தேன்.

பூண்டி எரிக்கரையில் வைத்து சிறுத்தை சின்னாரெட்டியின் கொள்ளுப் பேரன் ஜானகிராமனுடன் உரையாடியதைச் சொல்லும்போது, ஜானகிராமன் ஜெர்மனியில் ஹிட்லர் தேர்தலில் நின்றதைப் பற்றியெல்லாம் பேசினார் என்று தமிழ்மகன் குறிப்பிடுவார். உண்மைதான். தகவல் என்ற கோணியை உதறும் போது, என்னவெல்லாம் உதிரும் என்று சொல்லமுடியாது. ஒரு கிராமத்தில் நடந்த சாதாரண “தொடுப்பு” (Extra Marital Relationship) விவகாரம். ஜாதிக்கலவரமாக உருவெடுத்து, அக்கிராமத்தையே பல ஆண்டுகள் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை யானதையறிந்து, அதைப் பற்றி அறிய முயன்றபோது, “அன்னைக்கு காவல்காரன் சினிமா ரிலீஸ். காலையிலே போய்ட்டோம். இரண்டாவது ஆட்டத்துக்குத்தான் டிக்கட் கிடச்சது. பாத்துட்டு காலையிலே ஊருக்கு வந்தால், ஊரே காலியாகக் கிடக்குது” என்றார். நாம் ஒன்றைப் புரிந்துகொண்டு செயலாற்றலாம் என்று கேள்விகேட்டால், அதை நாம் எதிர்பார்க்காத வேறு ஒன்றுடன் முடிச்சிட்டுப் பதில் சொல்வார்கள். நாம் ஒன்றை புரிந்துகொள்ள எத்தனிக்கும்போது, “தனுஷ்கோடி புயலில் ஜெமினியும் சாவித்திரியும் இராமேஸ்வரத்தில் மாட்டிக்கொண்ட அன்னைக்கு” என்று அவர்கள் தகவல் கோணிகளை உதறுவார்கள். தகவல்களை அவர்களுக்குத் தோதானவைகளுடன் முடிச்சிட்டே தருவார்கள். இல்லையென்றால், “ரெண்டு நாளா சும்மா சிணுசிணுவென்று வேட்டி நனையிற மாதிரி பேஞ்சிட்டிருந்திச்சி. சரித்தான்னு இருந்தப்போ, ஓக்காளி, மூணா நாள் மழை ஊத்து ஊத்துண்ணு ஊத்தீறிச்சி. கண்மாய் உடைஞ்சு ஒருகிடை ஆடுகளை அடிச்சிட்டுப் போயிருச்சி. நான் பிழச்சது அந்த ஆத்தா புண்ணியம்” என்று தகவல்களை விட்டு வீசும்போது, பொறுமையற்ற முன்னேற்றப் பணியாளர்கள், பொச்சைப் பொத்திக்கொண்டு ஓட்டம் பிடித்து விடுவார்கள். மாறாகக் காவல்காரன் ரிலீஸ் தேதி, தனுஷ்கோடி புயல் வருஷம், வேட்டி நனையிற மாதிரி மழைன்ன அது எத்தனை மி.மீ மழையளவைக் குறிக்ககும், மழை ஊத்துச்சன்ன அது எத்தனை செ.மீ மழையளவைக் குறிக்கும் என்பது நமக்குத் தெரியவரும்போது, தகவல் முடிச்சுகளின் மர்மம் விலகும். இதைப் புரிந்து கொள்ளாமல், எதைக்கேட்டால் “…க்கா எதைச் சொல்றாணுகண்ணு பாருங்க” என்று சலிப்புத் தட்டி பேசும் முன்னேற்றப் பணியாளர்களால் எதையும் புரிந்து கொள்ள இயலாது.

“யுவ வருசமன்னு நினைக்கின்றேன்” என்று ரங்காவரம் ஜானகிராம் தாத்தா வீசிய தகவலின் நூல்பிடிக்க தமிழ்மகன் எப்படியெல்லாம் அல்லாடியிருப்பார் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. தமிழ் வருடங்களை ஆங்கில வருடங்களோடு இணைத்து, யுவ வருடம் எந்த ஆங்கில வருடத்தில் வருகின்றது எனபதைத் தமிழ்மகன் கணக்கிட்டுப் பார்த்திருப்பார். அது ஒரு சுகமான கற்றல். தேடல்.

நாம் ஒன்றைகேட்க இவர்கள் அவர்களுக்கு தெரிந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்களே என்று ஒரு நொடி நினைத்துவிட்டால் கூட கற்றுக்கொள்ளும்/ புரிந்துகொள்ளும் வாய்ப்பை நழுவ விட்டுவிடுவோம். அவர்கள் கோணியை உதறுவதே பெரும் பாக்கியம். பாடம் கற்றுக்கொள்வது அதைப் பார்ப்பதிலிருந்துதான் தொடங்குகின்றது. வெட்டுப்புலியில் தமிழ்மகன் அதைத்தான் செய்திருக்கின்றார். அரிசியை, தவிட்டை தனியாகப் பிரித்து, அரிசியை உலையிலிட்டு சோறாக்கி, தவிட்டை எறிந்துவிடாமல் அதையும் எண்ணையாக்கி, வெட்டுப்புலியை மிக நன்றாகவே சமைத்திருக்கின்றார்.

Development workers may be required to use ingenuity, functioning like a good investigative reporter by checking out leads…..இதைத்தான் “பின்னிய சரடை பிரித்துத் திரிக்க ஆரம்பித்தேன்” என்று தமிழ்மகன் சொல்கின்றார். வெட்டுப்புலி நாவலின் கட்டமைப்பே, உதறிய கோணியிலிருந்து எப்படி அரிசியை, உமியைப் பிரிப்பது, கயிரில் போடப்பட்ட (தகவல்) முடுச்சுகளை கவனமாகப் பிரித்து மீண்டும் எப்படித் திரிப்பது என்பதற்கு நல்ல உதாரணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தகவல் சேகரிப்பில் நாம் எதிர்கொள்ளும் தகவல் இடைவெளிகள் (Information Gaps) நம்மை அலைக்கழிக்கும். அந்த இடைவெளியை இட்டு நிரப்பாதவரை நம்மால் முழுமையைப் புரிந்துகொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்ப முன்னேற்றப் பணியாளர்கள் தங்களின் உள்ளுணர்வை துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தமிழ்மகன் அதை மிக அழகாக, “புனைவின் சொற்கள் கொண்டு பல வெற்றிடங்களை மூட” படைப்புத் தந்திரத்தைக் கையாண்டதாகச் சொல்கின்றார். “பணம், மின்சாரம், சுதந்திரம் எதுவும் இல்லாமலிருந்த அந்தக் காலகட்டத்தை, எல்லாமே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் புரிந்துகொள்ள ஒரு கால எந்திரப் பயணம்” போய் வந்ததாகச் சொல்கின்றார். அதை நாம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள அவர் கையாளும் உதாரணம்தான் அவர் தன்னைப் படைப்பாளியாக வெளிப்படுத்திக் கொள்ளும் அழகு. ”கிழிந்த டவுசரை எங்கள் தெரு டைலர் ரப் அடித்து தைத்துக் கொடுப்பான். கிழிந்த பகுதியை இணைத்து மேலும் கீழும் தைப்பான். டவுசரின் நிறத்திலேயே, அசப்பில் பார்த்தால் தெரியாத மாதிரி தைத்துக் கொடுப்பான். அதை இன்னும் கொஞ்சம் வாகாகச் செய்யமுடிந்தால், டார்னிங் செய்வதுபோல செய்நேர்த்தி இருக்கும்”. தகவல் இடைவெளிகளை இட்டு நிரப்ப, “புனைவுத் திறம்” வேண்டும். “கால எந்திரப் பயணம்” செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக “டார்னிங்” செய்யத் தெரிந்திருக்கவேண்டும். தமிழ்மகன் சொல்வதுபோன்று இவ்வளவு சுவாரஸ்யத்துடன் என்னால் சொல்ல முடிந்திருந்தால் என் மாணவர்கள் வகுப்பறையில் தூங்கியிருக்க மாட்டார்கள் என்று காலம் கடந்த பின்தான் எனக்குப் புரிகின்றது.

கால எந்திரப் பயணம்

ஒரு சின்ன தீப்பெட்டியைக் கருவாக வைத்துக்கொண்டு, ஒரு நூற்றாண்டுச் சரித்திரத்தைச் சுற்றி வருவதென்பது சாமான்யமானதல்ல. பல நூற்றாண்டுகளைச் சுற்றிவந்த கதைகருக்கள் நமக்கு புதியதல்ல. அதுவெல்லாம் அரசர்களைப் பற்றியது. தெய்வாம்சம் நிறைந்த, அமானுஷ்ய சக்தி படைத்தவர்களைப் பற்றியது. அவர்கள் நம்மை பிரமிக்க வைப்பதைவிட, எழுத்தாளன் தன் படைப்புத் திறனால், மொழியாளுமையால் நம்மை மயக்குகின்றான் என்பது புரியவந்ததும், அந்த கதாபாத்திரங்களிலிருந்து நாம் அன்னியப்பட்டுவிடுவோம். ஒரு படைப்பின் வசீகரமே, அதன் கதைக்கரு வாசகனுக்கு நெருக்கமானது என்று உணரவைத்தலில்தான் உள்ளது. அண்டை வீட்டுப்பெண் என்று உணரவைக்கும் தோற்றப் பொலிவே அந்த நடிகையின் வெற்றி இரகசியம் என்று சில நடிகைகளைப் பற்றி குறிப்பிடுவார்கள் வெட்டுப்புலியின் கதைகருவை, கதாபாத்திரங்களை தமிழ்மகன் நமக்கு மிக நெருக்கமாக்கி விடுவதால், அவர் தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு கால எந்திரப் பயணம் செய்யும் போது, நாமும் நமக்குப் பிடித்தமான பொருட்களைத் தூக்கிக் கொண்டு கால எந்திரப் பயணம் செல்ல எத்தனித்துவிடுகின்றோம். தமிழ்மகனுக்கு தீப்பெட்டி என்றால், வாசகர்கள் அவரவர்களுக்குப் பிடித்தமான பொருட்களையும், சம்பவங்களையும் தூக்கிக்கொண்டு பயணிக்க வெட்டுப்புலி நிறைய வாய்ப்புக்களைக் கொடுத்துக்கொண்டே செல்கின்றது.

மோட்டாருடன் ஒரு கால எந்திரப் பயணம்:

நானும் சில பொருட்களை, சம்பவங்களைத் தூக்கிக் கொண்டு கால எந்திரத்தில் சுகமாகப் பயணித்தேன். வெட்டுப்புலியில் வரும் மோட்டார் சமாச்சாரங்கள் அதில் ஒன்று.

முப்பதுகளில் தசரதரெட்டி டீசல் மோட்டாரை புழக்கத்திற்கு கொண்டுவருகின்றார். “சும்மா ஏரியிலே நாலு கவளை ஒட்டிக்காம, இந்த மோட்டாரை வாங்கியாந்து வெச்சிட்டு, அதுக்கு செவரட்சனை செய்றதுக்கே சரியா போவுது” என்று தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா தன் சகோதரியிடம் புளகாங்கிதத்தோடு புலம்புகின்றாள். ரங்காவரத்திலோ சிறுத்தை சின்னாரெட்டி ”எங்கு பார்த்தாலும் நடவு நட்டு பயிர் செய்வதும், பம்பு வைத்து நீரிறைப்பதும் அதிகமாகிக் கொண்டே வருவதாகச்” சொல்கின்றார். நாப்பதுகளில் ஜெகநாதபுரத்திலிருந்து ரங்காவரம் செல்லும் வழியில் சூரப்பேடு ராகவரெட்டி “காசு கொழுப்பெடுத்தவன் டீசல் மோட்ரு வெச்சிருக்கான். ஒரு பேரலு மூணு ரூபானு ஆயில் வாங்கி ஊத்றான். அத மனுசனுக்கு குடுத்தா ஏத்தம் ஏறச்சிட்டு போறான்” என்று சொன்னதற்கு. “மோட்ரு இருந்தா வேல சுருக்கா முடியுதில்ல” என்று லட்சுமணன் பதில் சொல்கின்றான். ஐம்பதுகளில், பூவேரியில் கிணறுவெட்டி, இருளிப்பட்டியிலிருந்து கரண்ட் இழுக்கும் செலவைக் குறைக்க, லட்சுமணரெட்டி, மணி நாயுடுவைக் கூட்டு சேர்க்க முயல, அவரும் செலம்பத்தானையும் கூட்டு சேர்த்துக் கொண்டு இன்னும் செலவைக் குறைக்கலாம் என்று சொல்கின்றார். அறுபதுகளில், பாட்டியாளுக்கு வாரீசு இல்லாததால் ஜெகநாதபுரத்தில் வந்து தங்கிவிட்ட வேலூர் சுந்தர முதலியார், “சத்தமே இல்லாம, ஒடுதா ஓடலாயான்னு” கண்டுபிடிக்க முடியாதபடி சுகுணா மோட்டார் ஓடுவதாக லட்சுமண ரெட்டியிடம் சிலாகிக்கின்றார. “மோட்டார் சமாச்சாரமன்னா சுப்ரமணிய ஐயருதான்… அவரை வுட்டா வேற ஆளு கிடையாது… நுணுப்பமான வேலக்காரன்” என்று தன் பங்குக்கு லட்சுமணரெட்டி சிலாகித்துச் சொல்கிறார். எழுபதுகளில் புது மோட்டார் போட கரண்ட் கனெக்ஷன் வாங்க லட்சுமணரெட்டி இபி ஆபீஸுக்கு அலைகிறார். மின்சாரமும், மோட்டார்களும், ரோடும், பஸ் வசதியும் நமது கிராமங்களை துயிலெழுப்புகின்றன.

ஒரு கிராமத்தில் ஒரு ஆய்விற்கான தகவல் சேகரிப்பின் போது ஒரு மூதாட்டி சொன்ன வார்த்தைகள், வெட்டுப்புலியில் மோட்டார் பற்றி உரையாடல் வரும்போதெல்லாம் என் கைபிடித்து கால எந்திரப் பயணம் கூட்டிச் சென்றது. “மோட்டார் வந்துச்சி. கமலை இறைக்கிறது நின்னுபோச்சு. தண்ணி கட்ன பொம்பளை தண்ணி கட்டிட்டிருந்தா. ஆனா கமலை இரச்ச ஆம்பளைக்கு ஒய்வு கிடச்சது. நேரம் கிடச்சது. டீக்கடையிலே உட்காந்து பேப்பர் படிச்சிட்டு, கட்சி கருமாதின்னு போனதுக பல. மந்தையிலே உட்கார்ந்து தாயம், சீட்டு விளையாண்டது சில. சிலது மட்டும் வேலை சுலுவாயிருச்சி வெளிவேலைக்கு போகலாமன்னு சுதாரிச்சிச்சு”. மோட்டார் என்பது உயிரற்ற ஒரு எந்திரம்தான். சுவிட்சைப் போட்டால் தண்ணீயைப் பீச்சியடிக்கும். ஆனால் அது கொடுத்த ஓய்வு புதிய பரிமாணங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. தன் கிராமத்தைக் கடந்து நாட்டில் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள, படித்தறிய அந்த ஓய்வு உதவியது. நாலு இடங்களுக்குப் போய்வர கால அவகாசம் ஏற்படுத்தித் தந்தது. இப்படித்தான் காந்தியும் பெரியாரும் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்கள்.

“வெள்ளைக்காரர்களால் நம் ஊர் ஆளப்பட்டுக்கொண்டிருப்பதால் நமக்கு என்ன பாதகம் வந்துவிட்டது….நாடு எப்படி ஆளப்படவேண்டுமோ அப்படித்தான் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றது….எனவே சுதந்தரம் என்பது அக்கறை கொள்ளத்தக்க விசயமாகப் படவில்லை’ என்று நாவலின் முதலில் குறிக்கப்படும் லட்சுமணனின் மனவோட்டமே மக்களுடையதாகவுமிருந்தது. வெள்ளையனையே பார்த்திராத மக்களுக்கு அவனை வெளியேற்றவேண்டுமென்ற சுதந்தர வேட்கையையும், அக்ஹிரகாரங்களே இல்லாத, பிராமண வாசனையே இல்லாத மக்களைக் கூட பார்ப்பனத் துவேஷம் கொண்டலைய வைத்தது.

இதில் மக்களிடம் சென்று பேசிய காந்தி, பெரியார் பங்கு பெரிதா? இல்லை சுந்தர முதலி சொன்ன மாதிரி “ஒடுற சத்தம் தெரியாமல் ஒடுன மோட்டார்” பங்கு பெரிதா? காங்கிரஸ், சுயமரியாதைக் கழகம் மோட்டாரைக் கொண்டுவந்ததா? இல்லை மோட்டார் காங்கிரஸ், சுயமரியாதைக் கழகத்தை வளர்த்ததா? முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுக்கு ஒன்று அனுசரணை.

எங்க பக்கத்திலே ஐம்பது மற்றும் அறுபதுகளில் பிரபலமாயிருந்த PSG மோட்டாரையும், DPF பம்பையும் தூக்கிக் கொண்டு என்னை ரெம்ப தூரம் பயணப்பட வைத்தது வெட்டுப்புலி. எந்த வேத மந்திரங்களையும் விட தன்னுடைய கிணற்றில் ஓடிய மோட்டார் சத்தத்தை ஒவ்வொரு சம்சாரியும் மெய்மறந்து ரசித்தான். சாமிக்கு கோவில் கட்டுவது மாதிரி மோட்டாருக்கு மோட்டார்ரூம் கட்டினான். அதைத் தன் இன்னொரு இருப்பிடமாகக் கொண்டான். அதில் சந்தோஷமான நேரங்களில் தன் பெண்டாட்டியுடனோ, சில நேரங்களில் தொடுப்புடனோ சல்லாபித்தான். மோட்டார் திருட்டுபோனால் துப்புக்கூலி கொடுத்துமீட்டான். செலவுக்கு காசு இல்லாதபோது மோட்டார் மெக்கானிக்குகள் காயல் கருகுகின்றமாதிரி கள்ளத்தனம் செய்துவிட்டு நழுவ, கடன் வாங்கியோ, கடன்சொல்லியோ அவனிடமே காயில் கட்டினான். கோடையில் நீர் கீழிறங்கும் போது மோட்டாரைக் கீழிறக்கவும், மழைக்காலத்தில் அதை மேலேற்றவும் அல்லாடினான். அது எதுவும் வேண்டாம் தண்ணீருக்குள்ளே ஓடுகின்றமாதிரி சப்மெர்சிபிள் மோட்டார் வரவும், கோயம்புத்தூரை நோக்கி நன்றியுடன் வணங்கிவிட்டு அதை மாட்டிக்கொண்டான். பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஜெயிலுக்குப் போய் இலவச மின்சாரத்தை வாங்கினான். நிலத்தடி நீர் கீழிறங்கவிட போர்போட்டு பூமியைத் துளைத்தான். அதிலும் மோட்டார் மாட்டி அந்த நீரை, வற்றிப்போன கிணற்றில் எடுத்துவிட்டு மறுநாள் நீர்பாய்ச்சினான். இலவச மின்சாரம் இவனுக்கெதுக்கு, அது இருக்கப்போய்த்தானே நிலத்தடி நீரை உறிஞ்சுகிறான் என்று அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மானங்கானியாய் பேசியவர்களைப் பார்த்து விக்கித்து நின்றான். கரண்ட் மோட்டார்களில் இந்த நாட்டை வசப்படுத்திய கோயம்புத்தூர், ஆயில் மோட்டார்களில் சறுக்கியதெப்படி? ஜெட்பம்ப் விஷயத்தில் மதுரை கோயம்புத்தூரைவிட வேகம் காட்டியது எதனால்?. இப்படியாக மோட்டாரைத் தூக்கிக்கொண்டு அலைந்தேன். இன்னும் இறக்கி வைக்க முடியவில்லை. பாவம் தமிழ்மகன். எத்தனை வருஷம் தீப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு அலைந்தாரோ? அவர் படைப்பாளி கடைசியில் அதை இறக்கி வைத்து விட்டார். என்னை மாதிரி ஆட்களுக்கு தூக்கத்தானே தெரிகின்றது. இறக்கி வைக்கைத் தெரியவில்லை. அதனால்தான் இந்த வம்பே வேண்டாமென்று நம்மில் பலபேர் எதையும் தூக்குவதில்லையோ என்னவோ?

குடுமியைப் பிடித்து கால எந்திரப் பயணம்.

வெட்டுப்புலியில் வரும் ஆண்களின் குடுமிகள் என்னை வெகுவாக அலைக்கழித்தது. வெள்ளைக்காரன் மாதிரி கிராப் வெட்டிக்கொள்ளாமல், ஈரோடும், பேனோடும் ஆண்கள் ஏன் அவதிப்படவேண்டும்?. ரங்காவரத்திலிருந்து, ஜெகநாதபுரத்திற்கு உறவாடி வந்திருந்த ருத்ராரெட்டிக்கு சவரம் செய்துவிட அமுட்டமூடு வருகின்றான். அப்பொழுது அக்கா-தங்கையான முத்தம்மாவும் மங்கம்மாவும் பேசிக்கொள்கின்றார்கள்.

“உங்களாவரு நல்ல வாட்டமா மொட்டைமாரி அடிச்சிக்கிறாரு. பேன் தொல்லை இருக்காது”. இது முத்தம்மா – ருத்ராரெட்டியின் பாரியாள்.

“நாத்தாங்கால் வுட்டு நாலு நாள் ஆனாப்ல இதோ இந்த அளவுக்கு வெட்டிப்பாரு” என்று ஒருவிரல் கடை அளவு காட்டினாள் மங்கம்மா, தசரத ரெட்டியின் பாரியாள்.

“எங்க வூட்லே நாலுபேரும் குடுமிதான். வேப்பெண்ணைய தடவினாலும் பேணு பிடிச்சுப் போவுது. அப்பப்ப ஒழுங்கா கசக்கினாத்தானே? சும்மாவே ஏரியில வுழுந்து எழுந்து வந்தா அப்பிடித்தான். வைத்தியருதான் (சிறுத்தை சின்னா ரெட்டி) கொஞ்சம் சுத்த பத்தமா இருப்பாரு” இது முத்தம்மா ருத்ரா ரெட்டியின் பாரியாள்

இந்தக் குடுமி விவகாரம், நான் எம்.ஏ படிக்கும் வரை உயிருடனிருந்த என் தாத்தாவின் குடுமியைப் பற்றிக்கொண்டு கால எந்திரப் பயணம் செய்ய வைத்தது. என் தாத்தா குடுமி வைத்திருந்தார். செக்கச் செவேலென்று ஆறடிக்கு மேல் கம்பீரமாக இருப்பார். படிக்கத் தெரிந்தவர். நாலு இடத்திற்குப் போய் வந்தவர். தவறான அறுவைச் சிகிச்சையால் கண் பார்வை இழந்தும், எங்களை பேப்பர் படிக்கச் சொல்லி நடப்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கிருந்தது. பார்வை இருந்த போது குமுதம், விகடன் கூட படிப்பார். கணக்குப் பேரேட்டில் அவரின் கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக அவ்வளவு அழகாக இருக்கும். 1976-ல் அவர் இறக்கும் வரை குடுமி வைத்திருந்தார். ஆனால் என் தாய்வழித் தாத்தா இதற்கு நேர்மாறானவர். குள்ள உருவம். ஆனால் கிராப் வைத்திருந்தார். என் தாய் ஊரில் வயதானவர்கள் யாரையும் நான் குடுமியோடு பார்த்ததில்லை. அந்த தாத்தா எதையாவது படித்தோ, எழுதியோ, யாரிடமும் விவாதத்தில் ஈடுபட்டோ பார்த்ததில்லை. விவசாயத்திலும், கால்நடைப் பாராமரிப்பிலும் நுணுக்கமானவர். சம காலத்தில் ஒரு எழுபது மைல் வித்தியாசத்திலிருந்த இருவருக்குள் எவ்வளவு வித்தியாசம்?. எனக்கும்கூட அரிச்சலா, நான் குழந்தையாயிருந்த போது, கொண்டையோடும் நாமத்தோடும் திரிந்தது நினைவுக்கு வருகின்றது. என் குடுமியைக் காலி செய்தது என் தாய்வழி உறவுகள்தான். வெட்டுப்புலியில் குடுமிகளைக் கண்டதும், என் தாத்தாக்களின் தலையில் இருந்த குடுமி/கிராப்புக்கு பின்னாலிருந்த வாழ்க்கை மதிப்பீடுகளை உணரத் தவறிவிட்டோமே என்று தவித்தேன். நம்மைநாமே ஊற்றுக் கவனிக்காமல், எல்லாவற்றையும் விட்டேத்தியாகப் பார்த்துப் பழகிவிட்டதால் ஏற்பட்ட சோகம் மனதைக் கவ்வியது.

ஆல், அரசு. வேம்பு. கருவேல் என்று குச்சி வச்சி பல்துலக்கினால் கல்லைக் கூட கடித்துத் தின்னலாம் என்று பழம் பெருமைப் பேச்சு வந்தபோது, காலத்திற்கேற்றாற்போல் சிந்தித்த உறவினர் ஒருவர், “:அத்தனை குச்சிகளையும் வச்சிக்கிட்டு ஊத்தைவாயோடு திரிஞ்சது எனக்கில்லை தெரியும். வொக்காளி! கோபால் பல்பொடி பொட்டணம் வந்தபிறகுதானே எல்லோரும் ஒழுக்கமா பல்தேய்க்க ஆரம்பிச்சோம். பல்பொடி வாங்கிப் போட்டே நான் நொந்துபோன. சிறுசுக பல்லு விளக்கிச்சா பொடியத் தின்னுச்சான்னு தெரியாம பாக்கட் பாக்கட்டா காலி செஞ்சது. இன்னும்கூட குச்சி கூதியண்ணு பேசிட்டு” அவர் ஆவேசப்பட்டதில் அர்த்தமிருந்தது. நேற்றைவிட இன்று முன்னகர்ந்திருக்கின்றோம் என்று நம்பியவர் அவர். அவரே இன்னொரு தடவை, “பாக்கட்டிலே மட்டும் ஷாம்பு அடைச்சி வராம இருந்திருந்தா, வொக்காளி ஊர்ப்பய தலையெல்லாம் நாறிப்போயிருக்கும்” என்று சிலாகித்தார். இவையெல்லாம் தீப்பெட்டி மாதிரி சின்னச்சின்ன விசயங்கள் தான். “நான் தீப்பெட்டியை மகிமைப்படுத்திவிட்டேன். அதைக் கொண்டாடிவிட்டேன். பல்பொடி, ஷாம்பு மாதிரி எத்தனையோ பொருட்கள் கொண்டாட்டத்துக்குரிய வஸ்துகள் தாம். முடிந்தால் கொண்டாடிப்பாருங்கள்” என்று தமிழ்மகன் வாசகனை உசுப்பேற்றுகின்றார். எத்தனை பேர் உசுப்பேறி அலைகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் நான் சுதாரித்துக்கொண்டேன். அழும் பிள்ளைகளை வண்டியில் வைத்து ஒரு ரவுண்டு காட்டி வருவது போல, ஏங்கிய மனசுக்கு குடுமிகளை ஒரு ரவுண்டு காண்பித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது. தமிழ்மகன் மாதிரி இலக்கியமா படைக்கமுடியும்?

முதலியாரின் வியர்வை

வெட்டுப்புலியில் வரும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியார் சுய முயற்சியில் முன்னேறியவர். முப்பதுகாணி பட்டா நிலம். அதற்கு சமமாகச் சேர்த்துக்கொண்ட நிலம் வேறு. எண்ணை மண்டி, நெல், கொள் வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதே கையில் முப்பதாயிரம் வரைக்கும் ரொக்கம், சினிமா எடுக்க உத்தேசிக்கின்றார். சுயசம்பாத்தியம் தான். அவர் இஷ்டத்திற்கு எதையும் செய்யமுடியும்தான். இருப்பினும் மனைவி சுந்தராம்பாள் அனுமதித்தால்தான் செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். மனைவியை மதிக்கவேண்டும், அவளின் ஆலோசனையைப் பெறவேண்டுமென்று பிறர் சொல்லக் கேட்டு அப்படியெல்லாம் அவர் செய்யவில்லை. பொறுப்பான ஆண்களுக்கே இருக்கும் இயல்பூக்கம்.

ஒரு பகல் பொழுதில் தன் மனைவியுடன் சல்லாபிக்கின்றார். சல்லாபம் முடிந்து சுந்தராம்பாள் ஆறுமுக முதலி முதுகை வருடுகிறாள். முதுகில் வியர்வை. “இன்னா வேக்காடு? ஏதோ கட்டை பொளந்து போட்றா மெரி…யப்பா” என்று சலித்துக்கொள்கிறாள். மோரிஸ் மைனர் கார் வாங்கி ஒட்டுமளவு வசதி. ரைஸ் மில் வைக்குமளவு, சினிமா எடுக்குமளவு கையில் காசு இருப்பு. நமக்கே “என்ன முதலியாரே ஒரு பேன் வாங்கி மாட்டிக்கொள்ளக்கூடாதா? வியர்வையில் ஏன் இப்படி நனைய வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகின்றது. சினிமா எடுப்பது வேறு. சினிமாத்தனமான வாழ்க்கை என்பது வேறு என்று முதலி புரிந்திருந்தார். கடந்த கால வாழ்க்கை அப்படித்தான் ஓடியிருக்கின்றது.

நான் டிகிரி முடிக்கும் வரை எங்கள் வீட்டில் பனைநார் கட்டில் ஒன்றுதானிருந்தது. அதுகூட அடுத்தடுத்து பிரசவித்த அத்தைகள் குழந்தைகளுடன் படுத்துக்கொள்ள செய்தது. ஆனால் தசாவராத மரச்சிற்பங்களுடன் தோதஹத்தி மரத்தில் நேர்த்தியாக செய்யப்பட்ட குழந்தைகளுக்காகச் செய்த தொட்டில் இருந்தது. சேர், டேபிள் இருந்ததில்லை. ஊர் முழுக்க அப்படித்தான். ஆனால் அதையெல்லாம் செய்வதற்குரிய மரங்கள் இருந்தது. நுணுக்கமாக மரவேலை செய்யத்தெரிந்த தச்சர்கள் அருகிலே இருந்தார்கள். ஆனால் எதையும் செய்துகொள்ளத் தோன்றாமல் இருந்தார்கள். ஆளுயர உரலில் அதிகாலை எழுந்திருந்து அரைமூட்டை புன்னாக்கையும், பருத்திவிதையும் ஆட்டி மாடுகளுக்குக் நீர்விடத் தெரிந்த அவர்களால், மாவாட்டி இட்லி தோசை சாப்பிடத்தெரியவில்லை. கட்டில், நாற்காலி, மேஜைகளுக்கான தேவையை எப்போது, எதனால் உணர ஆரம்பித்தார்கள்? அதுவெல்லாம் வேண்டும் என்று அவர்களை உந்திய அந்த வினாடியை எப்படி காலங்கடந்து இப்போது தரிசிப்பது? தீப்பெட்டி மட்டுமல்ல, கால எந்திரப்பயணம் செய்யத் தீர்மானித்தால் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஏராளமான பொருட்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளுடன் நம்மால் பயணிக்க முடிந்தால், நாம் வாழ்ந்த, வாழப் போகின்ற வாழ்க்கையைப் பற்றி புதிய தரிசனங்களை அவைகள் நிச்சயமாகத் தரும்.

திராவிடக் கண்ணாடியும், வெள்ளெழுத்துக்கண்ணாடியும்.

வெட்டுப்புலியை வேறு வழியில்லாமல் திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்ததாக தமிழ்மகன் குறிப்பிடுகின்றார். “படிப்பவர்களும் திராவிடக் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்” என்று அவர் சொல்கின்றபோது சற்று பயந்தேன். ஆனால் அடுத்த வரியில் “முன்முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டது எனக்கு ஆறுதலைத் தந்தது. ஏனெனில் நான் வெள்ளெழுத்துக் கண்ணாடி மட்டும் அணிந்திருப்பவன். திராவிடக் கண்ணாடி என்னிடமில்லை. லட்சுமணரெட்டி மனைவி விசாலாட்சி சொல்வதுமாதிரி, “மடத்துக்குப் போனாலும் சரி, திடலுக்குப் போனாலும் சரி அளவோடு இருக்கனும்” என்ற கருத்து எனக்குப் பிடித்தமானது. தியாகராஜன் மனைவி ஹேமலதா மாதிரி, “எதுக்கு மீட்டிங் வந்தவங்கோலாம் ஐயமாரை திட்டிகிணு இருந்தாங்க? வேறு வேலையே கிடையாதா?……ஐயருங்களைத் திட்றதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னங்க? இது மாதிரி வெகுளித்தனமாகவும், சிலநேரங்களில் உசுப்பேற்றி விடவும் கேட்பேன். அது என்னை வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத பிறவியாக சிலரை எண்ணவைத்துள்ளது.

கடற்கரை மீனவர்களுக்குத்தான் சொந்தம் என்று ஒருமுறை விவாதம் வந்தபோது, என்னால் பேசாமலிருக்கமுடியவில்லை. “கடற்கரை மீனவனுக்குச் சொந்தம். காடு ஆதிவாசிகளுக்குச் சொந்தம். நிலம் உழுதவனுக்குச் சொந்தம். வீடு குடியிருப்பவனுக்குச் சொந்தம். அப்படியென்றால் என்னைமாதிரி ஆட்களுக்கு உங்க சாமானா சொந்தம்?” என்று கேட்டுவிட்டேன். ஒரு காலத்தில் வாழ்வாதார உத்தரவாதத்தின் பொருட்டு வேகமாக எழுந்த கோஷங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குப் போட்டுக்கொண்டிருப்போம்?. கட்டிதட்டிப் போயிருந்த சமூக அமைப்பையும், நிர்வாகத்தையும் நெகிழ்ச்சியுறச் செய்ய வலுவான கோஷங்களும், உயிர்களைப் பலிகொண்ட போராட்டங்களும் தேவைப்பட்டன. ஒரு காலகட்டம் உருவாக்கிய கருத்தாக்கங்களை, கோஷங்களை, உத்திகளை எந்த மாற்றமும் செய்யாமல், எல்லாக் காலத்திற்கும் செல்லுபடியாக்க நினைப்பது, பிடிவாதமன்றி வேறென்ன? நமது பிடிவாதம் மாறிவரும் பலவற்றை பார்க்க மறுத்து, புரிதலைத் தடுக்கும் என்றேன். கோபத்தில் வெற்றிலைச் சாறை ஹேமலதா முகத்தில் தியாகராஜன் துப்பிய மாதிரி, அவர்களால் என் முகத்தில் துப்ப முடியவில்லை மாறாக முன்பின் தெரியாதவர்களிடம் என்னைப் பற்றி தப்பபிராயத்தை விதைத்து விட்டார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, கணனியில் என்னுடைய கருத்துக்களை தமிழில் உள்ளிடும் ஒவ்வொரு முறையும், அந்த ஈரோட்டுப் பெரியவர் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவராமல் இருந்திருந்தால், இதுவெல்லாம் நமக்கு சாத்தியப்பட்டிருக்குமா என்ற நெகிழ்ச்சியுடனே உள்ளிடுகின்றேன் என்பது.

நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்தரம் என்ற காந்தியாரின் கருத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதற்கு மாறாக, பெண்கள் நகைகள் அணியாமல்-அலங்காரம் செய்யாமல்-ஆண்களைப் போல கிராப் வெட்டிக்கொள்ளவேண்டும் என்ற பெரியாரின் கருத்தின் மீது இன்னும் அதிக மரியாதை உண்டு. ஒவ்வொருவருக்கும் வரலாற்று உண்மைகளை அவரவர் ஆர்வங்களுக்கும், யூகங்களுக்கும் ஏற்ப புரிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றதல்லவா? அந்த உரிமை முன்னை விட பலதளங்களில் இப்போது மூர்க்கத்தானமாக மறுக்கப்படுகின்றது மாதிரி எனக்குப் படுகின்றது.

வெட்டுப்புலியில் சின்னச்சின்ன சம்பவங்களை தமிழ்மகன் மிக எதார்த்தமாகப் பதிவு செய்து செல்கின்றார். படிப்பவர் எல்லார் மனதிலும் ஒரே மாதிரியான மனவெழுச்சிகளை உருவாக்கியிருந்தால் அது திராவிட இயக்கப் பிரச்சாரமாகப் போயிருக்கலாம். ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்மகன் அப்படிச் செய்யவில்லை.

திராவிடஅரசியல் திராவிடசினிமாவின் தலைச்சன் குழந்தை

திரு. எஸ்.எஸ்.இராஜேந்திரனைப் பற்றி வரும் குறிப்புகள் என்னைக் கால எந்திரத்தில் பயணிக்க வைத்தாலும், அது எனக்கு அவ்வளவு சுகமானதாக இல்லை. திராவிட அரசியல் திராவிட சினிமா கூட்டணி பெற்ற முதல் குழந்தை அவர்தான். எஸ் எஸ் ஆர் தான் இந்தியாவிலே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சினிமா நடிகர். என்னுடைய ஊரான தேனி தான் அந்த கௌரவத்தை அவருக்கு வழங்கியது. 1972 தேர்தல் நடந்தபோது மூன்றாவதோ, நான்காவதோ படித்துக்கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு இரண்டு மூன்று முறை பிரச்சாரத்திற்காக வந்தபோது அருகிலிருந்து பார்த்தவன். “என்னா நெறம்? என்னா பவுடரு? என்னா மேக்கப்பு? என்று பெருசுகள் வியக்கும்படி முழு ஒப்பனையோடு தான் வந்திருந்தார். நாம துடைக்கிற மாதிரி முகத்தை அழுத்தித் துடைக்காமல், கைத்துண்டை வைத்து முகத்தில் ஒற்றி, ஒற்றி எடுத்த அந்த காட்சி என் நினைவில் ஆழமாகப் பதிந்தது. அந்தக் காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் அசைக்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்த தேனி என்.ஆர்.தியாகராஜனை வீழ்த்தவே எஸ்.எஸ் ஆரை களமிறக்கியதாகப் பின்னாளில் கேள்விப்பட்டேன். என்.ஆர்.தியாகராஜன் எங்கள் ஊருக்கு மிகப் பரிச்சயமானவர். சிலரின் குடும்ப விசேசங்களுக்குக் கூட வந்து செல்வார்.

எங்கள் ஊரில் செயல்பட்டுக் கொண்டிருந்த விவசாய சங்க ஆண்டு விழாவில் அவர் பேசியது எனக்கு இன்னும் நினைவிலிருக்கின்றது. “மூணு ஏக்கர், ஐஞ்சு ஏக்கர் வச்சிருக்கிற விவசாயிக்கூட, கோயம்புத்தூர், மெட்ராஸ் பக்கம் வீட்டில் லைட்டு, கிணத்துலே மோட்டார், சைக்கிள் என்று வசதியாக வாழ்கின்றான். சில பேர் மோட்டார் பைக் கூட வச்சிருக்காங்க. பத்து, இருவது, முப்பது ஏக்கர் வச்சிருக்கிற நம்மிடம் அந்த வசதியில்லை. அவன் பணப்பயிரா வெள்ளாமை செயிரான். நீங்களும் மாறனும். எதைப் பயிர் செஞ்சாலும் அதிகமா மகசூலெடுக்கணும். சங்க பொறுப்பாளர்கள் என்னை அடுத்து வந்து பார்க்கும்போது இந்த மாசம் புதுசா இரண்டு மூன்று மோட்டார்கள் எங்க ஊர்லே மாட்டியிருக்கின்றோம் என்று சொல்லணும். கிணறு வெட்டுங்க. இப்ப நில அடமான பேங்க்லே கிணறுவெட்ட, ஆழப்படுத்த கடன் கொடுக்குறாங்க. அடுத்த வருசத்திற்குள் இந்த ஊர்லே கமலை இருக்கக்கூடாது. இன்னும் நிறைய வீட்டிலே கரண்ட் இருக்கணும். நாலு பக்கம் போய்வர, நடந்து சாகாமலிருக்க, ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று சைக்கிள் இருக்கணும். எல்லாப் பிள்ளைகளையும் விவசாயத்தைப் பார்க்கவிடாமல், சிலபேரை படிக்க வைக்கணும்” என்றார். NRT என்று அழைக்கப்பட்ட என். ஆர். தியாகராஜன் இன்றைக்கு இல்லை. ஆனால் அவர் பேசியது நினைவில் உள்ளது. அவர் பேச்சின் எதிரொலியாக பலபேர் மோட்டார் வாங்கி மாட்டிக்கொண்டதும் நினைவில் உள்ளது.

சிறுவயதில் நான் பார்த்த அந்த எஸ்.எஸ்.ஆர் இன்றும் இருக்கின்றார். ஆனால் அவருடைய பவுடர் பூசிய அதீத ஒப்பனைதான் நினைவுக்கு வருகின்றது. அவர் அரசியல் பக்குவம் பெற்று, இன்னும் விரிவாக பல தளங்களில் பணியாற்ற அவருக்கு பலவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் முக்கியமான அரசியல் திருத்தச் சட்டம் (பஞ்சாயத்து ராஜ்) பாராளுமன்றத்தில் தாக்கலாகி வாக்கெடுப்பு நடந்த போது, அந்தநேரம் பார்த்து SSR சிறுநீர் கழிக்க சென்று விட்டதால் அந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போனதாக கேள்விப்பட்டபோது, முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பி அழகு பார்த்த எங்கள் தொகுதி மீதும், எங்கள் மக்களின் மீதும் சிறுநீர் கழிக்கச் சென்றதாக துடித்துப் போனேன். கால எந்திரப் பயணத்தின் அனுபவங்களை அசைபோட்டுப் பார்த்தால், தமிழ்மகன் சொல்வது மாதிரி, “அப்பாவித்தனமான குடும்பங்கள் மட்டும் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருக்கவில்லை. அப்பாவித்தனமான சில தொகுதிகளும் அப்படி இருந்தது” என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பிரமிக்க வைத்த பி&சி மில்

வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் ஊகங்களுக்கும் ஏற்ப பதிவு செய்யப்படுகின்றது. புரிந்து கொள்ளப்படுகின்றது. சில நேரங்களில் நம்மையும் அறியாமலே சில உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிடும். சின்னசின்ன விசயங்களைக் கூட வெட்டுப்புலியில் தமிழ்மகன் பதிவு செய்கின்றார். வெட்டுபுலியைப் பற்றிய விமர்சனமொன்றில், “எங்கே மா.பொ.சி? என்று ஒரு விமர்சகர் கோபமாகக் குறித்திருந்தார். மா.பொ.சிக்கு அந்த விமர்சகர் தந்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஆதங்கம். எனக்குக் கூட இவ்வளவு மெனக்கெட்ட தமிழ்மகன் பஞ்சாயத்து தேர்தலைப் பற்றி சிலதைப் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. நாம் ஆயிரம் ஆலோசனை சொல்லலாம். பின்னோக்கி நகர்வதற்கிணையாக பக்கவாட்டில் நகர்வதும் சிரமம்தான். இருந்தாலும், திராவிட இயக்க நாவலாக வடிக்கப்பட்ட வெட்டுப்புலியில், அதற்கு தொடர்பேயில்லாத பி & சி மில்லைப் பற்றி தமிழ்மகன் பதிவு செய்திருப்பது அவர் பதிவு செய்ய மறந்த பலவற்றிற்கு பிராயச்சித்தம் தேடித்தந்து விடுகின்றது. அது என்னை சுகமான கால எந்திரப் பயணத்திற்கு கூட்டிச் சென்றது.

பம்பு ஷெட் கனெக்க்ஷனுக்காக மெட்ராஸ் வந்த லட்சுமணரெட்டி ஆறுமுக முதலி மகன் சிவகுருவைப் பார்க்க நேரிடுகின்றது. லட்சுமணரெட்டி ஊத்துக்கோட்டையில் சிலகாலம் இருந்தபோது, சிவகுருவின் நிர்வாகத்தில் நடந்த முதலியாரின் டெண்ட் கொட்டகையிலிருந்த வள்ளி சாப்பாட்டுக் கடையில் வேலை பார்க்கின்றார். சிவகுரு அப்பொழுதே பொறுப்பற்று இருந்தவன். சினிமா எடுக்கின்றேன் என்று எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இருக்கும்போது இந்த சந்திப்பு நடக்கின்றது. லட்சுமணரெட்டி தன் மாமனார் பி ஆண்டு சி மில்லில் வேலை பார்த்ததைப் பற்றி சொல்லும்போது, “பெரிய மில்லு. இர்வதாயிரம் பேர் வேல செயறான். அடடா..கம்பனி உள்ளயே கப்பல் போவுது. ரயிலு போவுது. அடேங்கப்பா இனிமே யாரலயும் அப்படி ஒரு மில்லு கட்டமுடியாது. மைல் கணக்கா இந்த நீட்டுக்கும் அந்த நீட்டுக்கும் கட்டி வெச்சிருக்கான்னா…” லட்சுமணரெட்டி பரவசப்பட்டு, தன் மாமனாரின் சொந்தக் கட்டடம் போலவே அந்த மில்லை விவரிக்கின்றார். ஐம்பதுகளில் இருபதாயிரம் பேர் வேலை பார்த்தார்கள் என்றால், அன்றைய மெட்ராஸ் ஜனத்தொகையில் இலட்சம் பேருக்கு மேல் அது ஜீவனமளித்திருக்கின்றது. மெட்ராசின் வளர்ச்சிக்கு அது அடிகோலியது. நாம் நினைவில் வைத்திருக்கும் எந்த தலைவரையும் விட, எந்த இயக்கத்தையும் விட மெட்ராஸ் வளர்ச்சிக்கும், விரிவுக்கும் அந்த மில்லின் பங்களிப்பு பெரிது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையும் கும்பகோணமும் மக்கள்தொகையைப் பொறுத்த மட்டில் ஓரளவு சமநிலையில் இருந்தது. ஆனால் மதுரை பாய்ச்சலெடுத்து முன்னேறியது. கும்பகோணம் பின் தங்கியது. அந்த முன்னேற்றத்திற்கு மீனாக்ஷி அம்மையின் அருள் என்பார்கள். அப்படியென்றால் கும்பகோணத்தில் இருக்கும் கோயில்களெல்லாம் சக்தியற்ற குட்டிச் சுவார்களா? அப்படி இல்லை. மதுரை பாய்ச்சலெடுத்ததற்குக் காரணம், ஹார்வி சகோதரர்கள் கட்டிய மதுரா கோட்ஸ் என்ற நூற்பாலைதான். அங்கும் இருபதாயிரம் தொழிலாளர்கள். மில்லுக்குள்ளே இரயில் போனது. ஹார்விபட்டி என்று ஒரு நகர் உருவானது. மதுரையில் மேலும் பஞ்சாலைகள் உருவாக, மதுரை ஒரு வணிக மையமாக உருவெடுக்க, தூங்கா நகர் என்று பெயரெடுக்க அந்த மில்லும் ஒரு காரணம். மில்லில் தீபாவளி போனஸ் போட்டால் மதுரை நகைக் கடைத் தெருவில் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகுமாம். மதுரையை வளர்த்தெடுத்ததில் அதன் பங்கு அதிகம். அது அறம் வளர்த்த ஆலை. மதூரா கோட்ஸ் மாதிரி, டி.வி. சுந்தரம் ஐயங்கார், கருமுத்து தியாகராஜன் செட்டியார் பங்கும் மதுரையின் வளர்ச்சியில் முக்கியமானது. அவர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மதுரை என்றால் அஞ்சா நெஞ்சன், அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் என்று நினைவு வருமாறு மாறிப்போனது ஒரு வரலாற்றுச் சோகமன்றி வேறென்ன? திராவிட இயக்க நாவலில் அழகிரியின் பெயர் விடுபட்டால், மதுரை பக்கம் வரமுடியாதென்று தமிழ்மகன் பயந்தாரோ என்னமோ – நாவலை முடித்த கடைசிப் பக்கத்தில் “அழகிரிதான் மினிஸ்டர்” என்று பதிவு செய்து தன்னை பாதுகாத்துக்கொண்டார்.

பி & சி மில் தொழிலார்கள்தான் தமிழகம் கண்ட பல தலைவர்களை தங்கள் தொழிற் சங்கங்கள் மூலம் அரவணைத்திருக்கின்றார்கள். கொச்சையாகச் சொன்னால் அன்னமிட்டு ஆதரித்திருக்கின்றார்கள். இனக்காவலர்கள், குடிதாங்கிகள், இடிதாங்கிகள், சமூகநீதிக் காவலர்கள், சிறுத்தைகள், புரட்சி புலிகள், தளபதிகள் என்று அடைமொழிகளோடு புறப்பட்ட தலைவர்களின் கவர்ச்சி வெளிச்சம் பலவற்றை மறைத்து விட்டது. சிலதை மறக்கும் போது “உபயமத்ததுகள்” வந்து அந்த இடத்தைப் பிடுங்கிக்கொள்ளும். அவர்களின் பிடியிலிருந்து, அது உருவாக்கும் மாயையிலிருந்து மீள வேண்டுமென்றால் வரலாற்றை மீளுருவாக்கம் செய்யவேண்டும் மெட்ராசின் வளர்ச்சிக்கு, விரிவுக்கு அடித்தளமிட்ட ஒரு ஆலையைப் பற்றி, லட்சுமணரெட்டியை சாக்காக வைத்து தமிழ்மகன் பிரமிப்பது அவரின் முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை காட்டுவதன்றி வேறென்ன? நன்றி தமிழ்மகன். மிக்க நன்றி.

இயல்பூக்கமும் அறிவூக்கமும்

வராலாற்றுச் சட்டகத்தில் வாழ்க்கையை பொறுத்தும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் கற்பனை சார்ந்த சுதந்திரம், சிலரின் வாழ்க்கையை வரலாற்றுச் சட்டகத்தில் பொறுத்துபவர்களுக்கு இருப்பதில்லை. பின்னதில் எதார்த்த எல்லைகளை மீறமுடியாது. வெட்டுப்புலி வரலாற்றுக் கற்பனையல்ல. It is an attempt to superimpose the history with the life actually lived by some. சிலவற்றைச் சொல்ல அசாதாரணமானவர்களின் பெயரைத் தமிழ்மகன் பயன்படுதினாலும், அவர்களை வெட்டுப்புலியின் கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்தியே காட்டுகின்றார். வெட்டுப்புலியின் கதாபாத்திரங்கள் மிகச் சாதாரணமானவர்கள். சிறுத்தையை சின்னாரெட்டி வெட்டியதுகூட, சாகசத்தை விரும்பியல்ல, மாறாக தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் இயல்பூக்கத்தினாலேதான். சக மனிதர்கள் மீதான வாஞ்சையே அவரை கைராசிக்கார வைத்தியராக்கியது. சினிமா ஆர்வத்தில் தன் வைத்திய ரகசியத்தை இரண்டு ரூபாய்க்குச் சொல்லிவிடுமளவு அவர் சாதாரணமானவர்தாம். ஆனால் அவர்கள் மூலமாக தமிழ்மகன் காட்டும் வாழ்க்கை மதிப்பீடுகள் அசாதாரணமானவை.

வாழ்வின் உயர்வான மதிப்பீடுகளை மனிதர்கள் பல சமயங்களில் இயல்பூக்கமாக வெளிப்படுத்துகின்றார்களென்ன்பதே மானுடப் பிறவியின் அழகு. அந்த மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்க கல்வி நிறுவனங்களோ, குருநாதர்களோ, தலைவர்களோ தேவைப்படுவதில்லை. தசரதரெட்டியைப் பற்றிய குறிப்பில் “தெரிஞ்சோ தெரியாமலேயோ மனசில் தைரியமும், அதே சமயம் பழி பாவத்துக்கு அஞ்சுகிற தன்மையும் கொண்ட, தானே உருவாக்கிக்கொண்ட, தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு தன் பையன் லட்சுமணனால் குந்தகம் நேர்ந்துவிடக்கூடாதே” என்று அஞ்சுவதாகத் தமிழ்மகன் குறிப்பிடுவது அவர்கள் காட்டிச் சென்ற வாழ்க்கை மதிப்பீடுகளைத்தான்.

தேளு (தேன்மொழி) என்ற பறையர் சிறுமியிடம், “தேளு அந்தப் பானைல கொஞ்சம் கூழு இருக்கு. அதைக் குடிச்சிட்டு கழுவி வச்சிட்டுப் போறயா?” என்று தசரதரெட்டி சொன்னதைக்கேட்டு, “நாம் கஞ்சி குடித்த பானையை பறப்பிள்ளை தொடுவதா” என்று கோவித்துக்கொண்டு சென்ற பாலகிருஷ்ணரெட்டியைச் சட்டை செய்யாமல், ”நாய்க்கு ஊத்தினாலும் பரவால்லே. மனுசனுக்கு ஊத்தக் கூடாதன்றானே…எவன்யா சொன்னா இவங்கிட்டே இப்படி” என்று தசரதரெட்டி சொல்வது படித்தறிந்ததனால் வந்ததல்ல. அதே மாதிரி லட்சுமணன் பறையர் பெண் குணவதியிடம் காதல் கொண்டு, அவளுடைய தாய் நாகரத்தினத்தை அக்கா என்றும், தருமனை மாமா என்று அழைப்பதும், குணவதி சுட்டிக்காட்டியதால் மட்டுமல்ல. காதல் மயக்கத்தினால் மட்டுமல்ல. அப்படித்தான் சகமனிதர்களை அழைக்கவேண்டும் என்று அவனுக்குள்ளிருந்த மதிப்பீடு சட்டென்று மேலோங்கியதால்தான். அதுதான் பின்னாளில் பறையர் தெரு வழியாக லட்சுமணரெட்டியைச் செல்ல வைக்கின்றது. அவர்கள் தோள் மேல் கைபோட்டு பேச வைக்கின்றது. அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கச் சொல்கின்றது. அவரின் இந்த மனோபாவமே அவரை பெரியாரிடம் ஈர்க்கின்றது. தசரதரெட்டி மற்றும் லட்சுமணரெட்டி கதாபாத்திரங்களை தமிழ்மகன் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார்.

இந்த இயல்பூக்கம்தான் கடந்த காலத்தில் மாற்றங்களை முன்னெடுத்துச் சென்றது. சமூகத்தை முன்னகர்த்தியது. இந்த முன்னகர்வு மெதுவாகச் சென்றதாக நினைத்தவர்கள், முன்னகர்வை/மாற்றங்களை துரிதப்படுத்த நினைத்தவர்கள் கோட்பாடுகளை உருவாக்கினார்கள். இயக்கம் கட்டினார்கள். வெட்டுப்புலியில் இயல்பூக்கமாக எழுந்த மாற்றங்களும், இயக்கம் கட்டி எழுப்பிய மாற்றங்களும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. தசரதரெட்டியும், ஆறுமுக முதலியும், லட்சுமண ரெட்டியும் இயல்பாகப் பூத்தவர்கள். கணேசன் அவருடைய இருமகன்கள் – நடேசன், தியாகராஜன், லட்சுமணரெட்டியின் மகன் நடராஜன், மருமகன் பாலு இயக்கங்களால் கவரப்பட்டு, அறிவிலிருந்து பூத்தவர்கள். தமிழ்மகனும் இதில் எது பெரிது என்று எந்த இடத்திலும் சொல்ல முற்படவில்லை. அதுதான் எதார்த்தம்.

தசரதரெட்டி- லட்சுமணரெட்டியென்ற குதிரைகள்.

புத்தகத்தைப் படித்துமுடித்து அதை மீண்டும் அசைபோட்ட போது, வெள்ளைக்காரன் ஜேம்ஸின் குதிரையை லட்சுமணன் ஒட்டுவதாக வெட்டுப்புலியைத் தமிழ்மகன் தொடங்கியது அவரின் படைப்பியல் திறன். வெட்டுப்புலியில் குறிக்கப்பட்ட பயண சாதனங்களில் – குதிரை, மாட்டுவண்டி, சைக்கிள், ட்ராம், ரயில், பஸ், கார், லாரி, ஏரோபிளான் – இவைகளில் குதிரையைத் தவிர மற்றது அனைத்திற்கும் ஏதோ ஒருவகையில் முன்னரே போடப்பட்ட வழித்தடங்கள் தேவைப்படுகின்றது. தடங்கள் இருக்கும் பட்சத்தில் பயணம் வேகமானதாக இருக்கும். குதிரை மட்டும்தான் அது செல்லும் பாதையையே தடமாக்கிச் செல்லும். தசரதரெட்டியும், லட்சுமணரெட்டியும் ஒருவகையில் குதிரை போன்றவர்கள். அவர்கள் யார் போட்ட தடத்திலும் பயணப்படவில்லை. அவர்களுக்கான தடத்தை அவர்களே உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்களுடைய வாழ்வின் மதிப்பீடுகள் இயல்பூக்கமாகவே வருகின்றது. கடவுளைக் கருவியாக வைத்தே ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரப்படுத்துகின்றார்கள் என்ற கருத்தாக்கம் இவர்களின் வாழ்க்கையில் பொய்யாகின்றது. வெள்ளையர்கள் பற்றி, ஜமீன்தார் பற்றி, பிராமணர்கள் ஆதிக்கம் பற்றி தசரதரெட்டியின் கருத்துக்கள் அனுபவம் சார்ந்தவை. குளித்துவிட்டு நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளும் பழக்கத்திற்கும், தற்போதைய பாஷையில் சொல்வதென்றால் ஹிந்துத்துவ சம்பிரதாயத்திற்கும், பறையர்களை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதற்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதாகவே அவர்களின் ஆன்மீகம் இருந்ததாக நான் புரிந்துகொண்டேன்.

அய்யா பெருசா? அம்மா பெருசா?

தியாகராஜன் ஹேமலதா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலும், நடராஜனுக்கு ஏற்பட்ட நிலையும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. தியாகராஜனும் சரி, நடராஜனும் சரி அடிப்படையில் சுயநலமில்லாத, சமூகத்தை முன்னகர்த்திச் செல்ல விருப்புடையவர்கள். மதம், அது சார்ந்த நம்பிக்கைகள், அதுசார்ந்த மனிதர்கள் குறிப்பாக பிராமணர்கள் அதற்குத் தடையாக இருப்பதாக உணர்ந்தது அவர்களுடைய நேரடி அனுபவமில்லை. அவர்களுக்கு அப்படிச் சொல்லப்பட்டது. அவர்களுடைய பிராமணத் துவேஷம் இயல்பூக்கமல்ல. மாறாக அறிவூக்கம். அதனால்தான் ஒருகட்டத்தில் பார்ப்பனனைப் பழி சொல்லிக்கொண்டிருப்பது தப்பிக்கும் குணம் என்று தியாகராஜன் உணர்கின்றான். தேவையற்ற துவேசத்தை விட்டொழிக்கின்றான். ஹேமலதா அதற்கு மாறான குணம் கொண்ட வஞ்சகமில்லாத வெகுளி. அதனால்தான் மறப்பதற்கும், மாறுவதற்கும் ஒரு வினாடி போதும் என்று அவர்களால் காட்டமுடிகின்றது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தையோ, தன் சகோதரன் நிலைகண்டு நிலைகுலைந்த நாகம்மா சாய் பக்தையானதையோ ஆன்மீகம் பகுத்தறிவை வென்றதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. தியாகராஜனுக்கு, நடராஜனுக்கு சொல்லப்பட்ட இல்லை அவர்கள் புரிந்துகொண்ட பகுத்தறிவு சமூக முன்னகர்தல் பற்றியது. சமூக முன்னகர்வைவிட மன அமைதி பிரதானமாகத் தேவைப்பட்டபோது தியாகராஜன் அன்னையிடம் அடைக்கலமாவதும், நாகம்மை சாய் பக்தையாவதும் மிக இயல்பானது. அது யாரும், யாரையும் வெற்றிகண்டதாக ஆகாது. “எது பெரிது? என்று விவாதம் நடக்கும் போதெல்லாம், களப்பணியின் போது ஒரு கிராமத்தில், “போங்கடா உங்க கட்சியும், கடவுளும் – TVS 50 கொடுத்த சுகத்தைக்கூட அவங்கலாள கொடுக்க முடியலே” என்று முற்றுப்புள்ளி வைத்த பெயர் தெரியாத மனுசனின் குரல் மட்டும் நினைவுக்கு வந்துவிடும்.

எத்தனை சூழ்ச்சி? எத்தனை சூது? எவ்வளவு துவேஷம்?

வெட்டுப்புலியில், தமிழ்மகன் தன் படைப்பின் உச்சத்தைத் தொடுவது கிருஷ்ணப்ரியா நடராஜன் உரையாடல் மூலம்தான். கிருஷ்ணப்ரியா பிராமணப் பெண். நடராஜனுடன் MPhil படிப்பவள். நடராஜனே உணர்ந்தமாதிரி அரசகுமாரிபோல் அழகுடையவள். ஆனால் நடராஜனுக்கோ அவள் பிராமணப் பெண்ணாயிருப்பதால் துவேஷம். விலகியே நிற்கின்றான். தன்னிலை விளக்கமாக அவள் தன்னைப் பற்றி நடராஜனிடம் சொல்வது பிராமணத் துவேஷம் கொண்ட யாரையும் சற்று சிந்திக்கவைக்கும். “எங்க அப்பா கோயில் குருக்கள். அவர் கொண்டாற பிரசாதம்தான் எங்களுக்குச் சாப்பாடு. அண்ணா ஏற்பட்டு வேலைக்குப் போனப்புறம்தான், எல்லார் போலவும் காலையில, ராத்திரியெல்லாம் சாப்பிட்டோம். நா எங்க வீட்லே காபி குடிச்சது அஞ்சாங்கிலாஸ் முடிச்ச பின்னாடிதான்”….”எனக்குத் தெரிஞ்சு நானோ, எங்கப்பாவோ, அண்ணனோ, எங்கம்மாவோ யாரையும் சின்னதா தொந்தரவு செஞ்சது கிடயாது”….”ஆனா நீங்கள்லாம் பிராமானாள்னா ஏதோ சூழ்ச்சி செஞ்சு கெடுக்க வந்தவான்னே பாக்கறீங்க. எங்க குடுமபத்தில அந்த மாதிரி ஒரு சூழ்ச்சியும் செஞ்சதில்லே” நடராஜன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கல்ல, ஒரு சகமனிதனிடமிருந்த தேவையற்ற துவேசத்தைப் போக்குவதற்காக கொடுக்கப்பட்ட விளக்கம். அதை நடராஜன் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. ஆனால் நிச்சயமாக, அது அவன் தாத்தா தசரதரெட்டியும், அப்பா லட்சுமணரெட்டியும் காட்டிய வழியல்ல.

தியாகராஜனும் ஹேமலதாவும் ரோட்டில் கார் ஓட்டியவர்கள். தேவை ஏற்பட்டபோது அவர்களின் வண்டியைத் (வாழ்க்கை) திருப்பிக்கொள்ள முடிந்தது. ஆனால் நடராஜன் தண்டவாளத்தில் ஓடிய ரயில். நினைத்த மாதிரி திரும்ப முடியவில்லை.

இந்தத் துவேஷம்தான் நாம் தீர்க்க நினைக்கும் பிரச்சனைகளை விட மோசமானது. அது இன்னும் ஆழமாக பல்வேறு தளங்களில் இன்று வேரூரின்றி விட்டது. ஆரியச் சூது, காலனியாதிக்கச் சூது, பன்னாட்டு நிறுவனங்களின் சூது என்பது உண்மையாகக் கூட இருக்கட்டுமே. ஆனால் அதை மிகைப்படுத்தி, நம்மை அச்சுறுத்தி, நம் பார்வையைத் திசை திருப்புவதுகூட, நம்மாலே சரிசெய்துகொள்ளக்கூடிய பலவற்றில் நம்மை ஈடுபடாமல் தடுக்க நம்மவர்களே செய்யும் சூழ்ச்சி போல் தெரிகின்றது. இந்த சூழ்ச்சிச் சூத்திரத்தின் வணிக வடிவம்தான்… குழந்தைகளை தரையில் தவழவிடாதீர்கள்….அக்குழந்தையைத் தாக்க கோடிக்கணக்கான வைரஸ்கள் உங்கள் வீட்டுத் தரையில் காத்திருக்கின்றன…. உங்கள் கழிப்பறையில் உங்களை நிலைகுலைக்க கிருமிக்கூட்டம் கூடாரமிட்டிருக்கின்றது…. தெருவிலிருக்கும் தூசியிலிருக்கின்றது உங்கள் பேரழகைச் சீர்குலைக்கும் கிருமிக் கூட்டம்….. இவைகளிலிருந்து பாதுகாக்கவே நாங்கள் பொருட்களைத் தயாரிக்கின்றோம். “நாங்க இருக்கின்றோம்” என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்வதும், “பத்திரமா பாத்துக்குங்க” என்ற பாசக் குரலும் பயமுறுத்தலையே உத்தியாகக் கொண்டிருக்கும் சமூக, அரசியல் இயக்கங்களின் வணிக நீட்சிதானே?

சின்னச் சின்ன உரையாடல்கள், சம்பவங்கள் மூலமாக தமிழ்மகன் நமது சிந்தனையைக் கிளறுகின்றார். அப்படியெல்லாம் கிளறவேண்டும் என்று தீர்மானித்து அவர் செய்யவில்லை. சம்பவங்களும், உரையாடல்களும் எதார்த்தமாக அப்படித்தான் நடந்திருக்கும். ஆனால் அது படிப்பவனைப் படுத்தியெடுக்கின்றது.

முப்பதுகளிலே சின்னாரெட்டியின் பையன்கள் ஓடியாடி தேடிய சம்பாத்தியத்தை நிலம் வாங்குவதில் முதலீடு செய்ய, அந்த நிலத்திலும் விதைப்பாடாக இல்லாமல் நடவு நட்டி வெள்ளாமை செய்ததால் எரு பத்தாமல் போய்விட்டதாக சின்னாரெட்டி புலம்புகின்றார். மாறிவரும் வாழ்க்கையின் ஏதார்த்தம் சின்னாரெட்டி தனக்குத்தானே பேசிக்கொள்வதிலிருந்து தெறித்து விழுகின்றது. “எல்லோருக்கும் நெல்லுச் சோறு சாப்பிட ஆசை வந்துவிட்டது. நாலு ஏக்கராவது நடவு செய்ய வேண்டும். எரு பத்தவில்லை.. கிடயமத்தணும்… ஐம்பது ஆடு வச்சிருக்கவன் பெரிய வருவாய்க்காரனாகி விட்றான். ஒரு ராத்திரி மந்தை மடக்க பத்தானா கேக்றான். இவன் என்னவோ களத்தில் இறங்கி அண்டை கழிக்கிற மாதரி கூலி பேசறான். இங்கே இல்லையென்றால் எங்காவது ஓரிடத்தில் ஆடுகளை மடக்கி இருக்கவைக்கப் போறான். அங்கயும் அவை புடுக்கை போதும். புடுக்கை போடாம இர்க்குறதுக்கு மிஷினா வச்சிருக்கான். அவனுக்கு வந்த வாழ்வு. அதில் வசூல் செய்து விடுகிறான்” ……கடைசியில் முத்தாய்ப்பாக “அப்படித்தான் ஒரு தொழிலைத் தொட்டு ஒரு தொழில் வளரவேண்டியிருக்கின்றது” என்று முடிக்கின்றார்.

நெல்லுச்சோறு சாப்பிட ஆசையை வளர்த்து, விதைப்பாடாக இல்லாமல் நடவுநட்டி வெள்ளாமை செய்ய நம் விவசாயிகளைத் திசைதிருப்பி, எருவைத் தட்டுப்பாடாக்கி, கடைசியில் யூரியா போடவைக்க எப்படியெல்லாம் பிராமணர்களும், வெள்ளையர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பார்கள்?. அப்படித்தானே பசுமைப்புரட்சி கூட சர்வதேசச் சதியாக குறிக்கப்படுகின்றது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு, கூலை மட்டும் குடித்துக்கொண்டிருந்த அந்த பொற்காலத்திலிருந்து சதிசெய்தல்லவா நாசகாரக் கும்பல் நம்மை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்?. நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நாள்தோறும் சதிவலை பின்னப்படுவது மாதிரியான பிரேமை ஆழ விதைக்கப்பட்டிருப்பது பெரிய சோகம். இந்த சூழ்ச்சிகளைப் பற்றி புதுப்புது விளக்கங்களுடன் சுருதி குறையாமல் சொல்லிவருவது அச்சமூட்டுகின்றது. இதை மறுக்கக் கூடவேண்டாம், ஒப்புக்கொள்ளாமலிருந்தால், ஆதரவாகக் கையைத் தூக்காமலிருந்தால் கூட அவன் இனத்துரோகி. பார்ப்பனனுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிப்பவன் என்று முத்திரையிடப்படுவது அதனிலும் பெரிய அவலம்.

கொசஸ்தலை ஆற்றைப் பார்க்கும் லட்சுமணரெட்டி, ஆற்றுநீர் காற்றில் சுருண்டு கிடக்கும் போர்வை போல் மெலிந்து கிடப்பதைப் பார்த்து விசனப்படுகின்றார். மணல் குவாரி ஏலம்விட்டதால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது தெரிகின்றது. ‘தெளுக்க இருந்த மணல்’ இருபது முப்பது அடி ஆழத்துக்குப் போய்விட்டதையும், ஆங்காங்கே ‘களிப்புத் திட்டுகள்’ தெரிய ஆரம்பித்துவிட்டதையும் கவலையுடன் பார்க்கின்றார். அவருடைய கிணற்றிலே முப்பது அடிக்கும் மேலாக நீர் கீழிறங்கி விட்டதை உணர்கின்றார். மணல் குவாரி ஏலம் விட்டபோது ஊருக்கு வருமானம் என்று நினைத்தவிஷயம், இப்போது ஊருக்கு நஷ்டமாக மாறிவிட்டதும் தெரிகின்றது.

லட்சுமணரெட்டி தத்வார்த்தமாக யோசிக்கின்றார். எல்லா நல்ல விஷயங்களின் முடிவிலும் ஒரு தீமை காத்திருப்பதுபோல, எல்லா தீமையின் எல்லையிலும் ஒரு நன்மை இருப்பதை உணர்கிறார். ஒரு செயல் அதனுடைய வளர்ச்சியினாலே வேறுபட்டு விலகிப்போய் முரண்பட ஆரம்பிக்கின்ற விந்தையை அவர் திராவிட இயக்கங்களோடு ஒப்பிட்டு உணர்கிறார். மணல் குவாரியை ஏலம் எடுத்திருந்த தன் சினேகிதரான மணி நாயுடுவிடம் சொல்லி மணல் அள்ளுவதை நிறுத்தச் சொல்லவேண்டும் என்று முடிவெடுத்து அவரைப் பார்க்கின்றார்.

மணிநாயுடுவோ, “நான்தான் காண்ட்ராக்ட் எடுத்தேண்ணு பேரு. இதில எத்தனை பேருக்கு பங்கு போவுது தெரீமா? அத நிறுத்துனா அத்தன பேரும் மேலே வுழுந்து பாய்வானுங்கோ..என்னோட எல்லா பிசினஸையும் பாதிக்கும் ரெட்டியாரே…..எம் பையன் மாளிவாக்கம் இஸூகூல் கட்றதுக்கு காண்ட்ராக்டு எடுத்துட்டான். அத அப்படியே விட்டுட்டு வாடாண்ணு சொல்லமுடியுமா? அதுக்கு கமிஷன் வெட்டனும். கொடுத்த கமிஷனை எடுக்க இன்னொர் காண்ட்ராக்டு எடுக்கணும். அப்படித்தான் ஆளை அப்பிடியே இஸ்துக்குனு போவுது…சட்டன்னு நின்னுட முடியுமா?….. எம்.எல்.ஏ, சேர்மேன், தாசிலு, ஆர்.ஐ எவ்ளோ பேரு இதிலே சம்பந்தப்பட்டிருக்கான்னு நினைக்றே. நீ….நீ பாட்டுக்கு சுளுவா சொல்லிட்டே…..நாளயலிருந்து நிறுத்திடுன்னு. இன்னும் ஒரு வருஷம் காண்ட்ராக்டு இருக்குது. அதக்கப்புறம் வேணா நா உட்டூர்றேன். ஒண்ணு வேணா எழுதி வச்சுக்கோ. வேற ஒருத்தன் ஏலம் எடுப்பான். அவங்கிட்டே போயி நீ இப்படியெல்லாம் உக்காந்து பேசமுடியாது. ருசி கண்டுட்டானுங்கன்னா விடுவானுங்களா? என்று சொல்கின்றார். நண்பர் சொன்ன எதார்த்தம் முகத்தில் அறைந்தது மாதிரி இருக்கின்றது. எந்தச் சூழ்ச்சி கொசஸ்தலை ஆற்றில் மணலை அள்ளச் சொன்னது? மணி நாயுடுவை அப்படிப் பேசவைத்தது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு லட்சுமணரெட்டி மௌனம் சாதித்தது இயலாமையினாலா அல்லது அவர் ஏதாவதொரு சூழ்ச்சியின் கைக்கூலியாகி விட்டதாலா? சம்பவங்களைத்தான் தமிழ்மகன் சொல்லிச் செல்கின்றார். நமக்குத்தான் ஆயிரம் கேள்விகள்.

கல்லூரியில் படித்தபோது தியாகராஜன் சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு அற்புத ஆளுமையாக உருவாகிவந்தான். பேராசிரியர்களை கேள்விகளால் மடக்கினான். தமிழ் மன்றப் பொருப்பெடுத்து, உருவாகி வந்த தலைவர்களுடன் தோளுரசினான். அப்படிபட்டவனுக்கு ஹேமலதா மனைவியாக வாய்த்தபோது, அவள் தனக்கு மனைவியானதுகூட “பிராமணச் சூழ்ச்சியோ” என்று சந்தேகித்தான். அப்படியென்றால் தூத்துக்குடி மணிகண்டனை ஹேமலதாவுடன் சேர்த்தது எந்தச் சூழ்ச்சி?. மணிகண்டனின் சூழ்ச்சியால் சாராயம் விற்க, அது போலீஸ் கேசாகின்றது. ஸ்டேஷனில், ஹேமலதாவின் கையில் குத்தப்பட்டிருந்த அண்ணா உருவப் பச்சையைப் பார்த்த கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரிடம் “சார் இவள் அண்ணா உருவத்தை பச்சை குத்தியிருக்கின்ற தமிழ்ப்பெண். இவளை விட்டுவிடலாம்” என்று சொல்லவில்லை. மாறாக “சார். பச்சை குத்தியிருக்கா….இவ மதுசூதனன் ஆளாகக் கூட இருக்கலாம்” என்று கான்ஸ்டபிள் எச்சரிக்க, அதனால் ஹேமலதாவை விட்டுவிடுவது, ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றது. ஆரியச் சூழ்ச்சியைச் சொன்ன அண்ணாவின் பச்சைக்கு இல்லாத மரியாதை மதுசூதனனுக்கு கிடைப்பது எதனால்? யாருடைய சூழ்ச்சியால் அங்கே அண்ணா உதாசீனப்படுத்தப்பட்டு, மதுசூதனன் முன்னிற்க முடிந்தது? ஆரியச் சூழ்ச்சி என்பதே நீர்த்துபோன கருத்தாக்கமாகி விட்டதா? சின்னச் சின்ன சம்பவங்கள். உரையாடல்கள் தாம். ஆனால் தமிழ்மகன் நம் பொட்டிலடிக்கின்றார். வலிக்கத்தான் செய்கின்றது. அதை ஆரியச் சூழ்ச்சி என்று முத்திரை குத்தினால் வலி இருக்காதுதான். ஆனால் நமக்கே தெரியும். அது நாமே விரித்துக்கொண்ட வலையென்று. வலி பொறுத்துத்தான் ஆக வேண்டும். .

நாம் விதைத்த துவேசமே இன்று டிராகுலா மாதிரி பிடித்துக்கொண்டு நம்மை விடமறுக்கின்றது. வெட்டுப்புலியைப் பற்றிய இந்த வாசிப்பனுபவத்தை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் வந்திருந்தார். என்னை விட அதிக தமிழிலக்கியப் பரிச்சயம் உள்ளவர். பொட்டிலடித்தாற்போல “நீ எழுதுவதையெல்லாம் எவனும் படிக்கமாட்டான். ஏன் தமிழ்மகனே படிக்கமாட்டார்”. மாறாக, “ஏய்! தமிழ்மகனே! திராவிட இயக்க நாவலென்ற பெயரில் ரெட்டியையும், பெட்டியையும் எழுதியிருக்கின்றாய். இப்படி ஒரு குப்பையை எழுதுவதற்கு உனக்கு யார் தைரியம் கொடுத்தது? ரெட்டி வந்தேறிகளைப் பற்றி எழுதும் நீயும் வந்தேறியா? என்று அவர் தொடர்ந்தபோது, “ஐயோ! இது தெலுங்கு ரெட்டியில்லை, தமிழ் பேசும் வன்னிய ரெட்டி” என்று நான் திருத்தமுயன்றபோது, “ரெட்டியன்னா தெலுங்கு என்றுதான் எடுத்துக் கொள்வார்கள். சும்மா வந்தேறி, சோம்பேறி, துத்தேறி என்று போட்டுத்தாக்கு. அப்படியென்றால்தான் நாலுபேர் படிப்பான். காரம் காட்டு. துவேஷத்தைக் கக்கு. அப்படி எழுதினால்தான் நீ படிக்கப்படுவாய். பாராட்டப்படுவாய்” என்றார். அதுதான் நடைமுறையாகி வருகின்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஏதோ விளையாட்டாக எழுத ஆரம்பித்த இந்த வாசிப்பனுபவம் இவ்வளவு நீளும் என்று நானே அறியவில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரீதியான வியாதி (Occupational Hazard) உண்டு. அது ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பொருந்தும். வெட்டுப்புலியைப் படிக்கப் படிக்க இந்த academic concept ஐ விளக்க இந்த உரையாடலை, இந்த சம்பவத்தை உதாரணம் காட்டலாமே என்று என்னை யோசிக்க வைத்தது. சமூக மாற்றத்தை, அதன் அழகோடும், அவலட்சனத்தோடும் எதனோடும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழ்மகன் ஆவனப்படுத்தியிருப்பது மாதிரிதான் என் குறைந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து நான் உணர்ந்து கொண்டது.

வெட்டுப்புலியில் நான் இரசித்த, என்னைச் சிந்திக்கவைத்த உரையாடல்களும், சம்பவங்களும் நிறையவே உள்ளன. இதற்கு மேல் இதை நீட்டினால், வாசிப்பனுபவம் என்ற எல்லை கடந்து அது வரலாறு, இலக்கிய விமர்சனமாகிவிடும் ஆபத்து இருக்கின்றது. நான் விமர்சகனல்ல. அப்படி இருக்கவும் நான் விரும்பியதில்லை.

வெட்டுப்புலியில் குறிக்கப்படும் ஊர்கள் எல்லாம் உண்மையானவை. அதை கூகுள் மேப்ஸ்லில் காணலாம். ஒரு மேப்ஐ (வரைபடத்தை) வைத்து, எந்தெந்த இடங்களில் என்னென்ன சம்பவங்கள், உரையாடல்கள் நடைபெற்றது என்பதைக் குறித்தால் நாவலை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வாய்ப்பாயிருக்கும். வெட்டுப்புலியில் குறிக்கப்படும் ஜெகநாதபுரம் கூகுள் மேப்ஸ்லில் அருமையாகத் தெரிகின்றது. ஆனால் ரங்காவரம் குறிக்கப்படவில்லை.. ரங்காவரம் என்று தேடினால், விக்கிமேப்பில் செல்வம் என்பவரின் வீட்டைக் காட்டுகின்றது. அருகிலிருக்கும் மீன் குஞ்சு பொரிப்பகம் ரங்காவரத்தை மறைத்து வைத்துள்ளது ஊத்துக்கோட்டை இன்று பெரிய நகராகிவிட்டது. சென்னை நகரத்தில் கதைக்களனை வரைபடத்தில் தேடுவது பரிச்சயமுள்ளவர்களுக்கு எளிது. முழு நாவலையும் ஒரு வரைபடத்தின் மூலமாக எளிமையாக விளக்கலாம் என்றே படுகின்றது. அதையொட்டி என் புரிதலுக்காக நானே செய்துகொண்ட சின்ன முயற்சியே இந்த வரைபட்ம்.

padamசென்ற வருடம் கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களுடன், திருமழிசைக்கு அருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற ஊரில் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய கிராம முகாமில் கலந்து கொண்டேன். வெட்டுப்புலியை சென்ற வருடமே படித்திருந்தால் நிச்சயமாக, ஜமீன் கொரட்டூர் அருகிலிருக்கும் பூண்டி ஏரியையும், ரங்காவரத்தையும் நிச்சயமாகப் பார்க்கப் போயிருப்பேன். ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் நான் நெருக்கமாக உணர்வதால் அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்ற ஆவல் எழுகின்றது.

வெட்டுப்புலி பொருளடக்கம்

வெட்டுப்புலியில் இது மாதிரியான பொருளடக்கம் தரபடவில்லை. எண்கள் கொண்டே தலைப்புகள் அடையாளப்படுத்தப்படுகின்றது. நான் தான் எனது புரிதலின் பொருட்டு ஒவ்வொரு அத்தியாயத்தின் உள்ளடக்கத்தை வைத்து தலைப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு வாசகருக்கும் அவர்கள் புரிந்துகொண்ட உள்ளடக்கத்தை பொறுத்து இந்த தலைப்புகள் மாறலாம்.

நாற்பதுகள்

பக்.17-20

1.லட்சுமணனின் குதிரையேற்றம் -21-29

2.சிறுத்தை சின்னாரெட்டி பற்றி மங்கம்மா லட்சுமனனிடம் சொல்லல் 30-39

3.மைலாப்பூர் உறவு 40-46

4.படவேட்டான் 47-54

5.படவேட்டான் சிலை கொண்டுவருதல் 55-63

6.லட்சுமணன் ரங்காவரம் புறப்படுதல் 64-71

முப்பதுகள்

78-80

1.வைத்தியர் சின்னாரெட்டி அறிமுகம் 81-88

2.லட்சுமணன் பிறத்தல் ருத்ராரெட்டி முத்தம்மா ஜெகநாதபுரம் வருகை  89-99

3. தசரத ரெட்டி முத்தம்மா மனத் தடுமாற்றம் 100-103

3.ருத்ராரெட்டியும் முத்தம்மாவும் ரங்காவரம் திரும்பல் 104-106

4.ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியார் 107-112

5.ஆறுமுக முதலியின் சினிமா ஆசை. 113-122

6.ஆறுமுக முதலியை அலைக்கழித்த சினிமா ஆசை 123-128

7.ஆறுமுக முதலி சினிமா எடுக்க அலைதல் 129-135

8.சின்னாரெட்டி சிறுத்தையை வெட்டுதல் 136 -139

மீண்டும் நாற்பதுகள்

143-144

1.ஆறுமுக முதலி அண்ணன் கணேசன் ஊத்துக்கோட்டை வருதல் 145-151

2.சத்தியமூர்த்திக்கு கருப்புக்கொடி 152-159

3 .ரங்காவரத்தில் லட்சுமணன் – பூண்டி ஏரிப்பணி 160-164

4.லட்சுமணன் குணவதி காதல் 165 -169

5.ஜாதி பேதங்களைப் பற்றி லட்சுமணன் பிரக்ஞை 170-176

6.காதல் வெளிப்பட களேபரம்.177-187

7.குணவதியைத் தேடி ஊத்துக்கோட்டையில் லட்சுமணன் 188-194

ஐம்பதுகள்

197-199

1.நடேசனும் தியாகராஜனும் (ஆறுமுக முதலியின் அண்ணன் மகன்கள்) 200-205

2.லட்சுமண ரெட்டியும் மணி நாயுடுவும் 206-212 

3.லட்சுமண ரெட்டி- விசாலாட்சி திருமணம் 213-217

4.பெரியாரின் மனவோட்டம் 218-224

5.சிவகுரு சினிமா எடுத்தல் 225-230

6.சிவகுரு சினிமா எடுத்து நொடித்தல் 231-234

7.சிவகுருவும் லட்சுமண ரெட்டியும் சந்தித்தல்

அறுபதுகள்

241-242

1.தியாகராஜன் ஹேமலதா கல்யாணம் 243-249

2.தியாகராஜன் ஹேமலதா தம்பத்யம் 250-254

3.நாகம்மாவை படிக்க வைக்க லட்சுமண ரெட்டி தீர்மானித்தல்  255-259

4.மெட்ராஸில் லட்சுமண ரெட்டி – மாமனாரும் மருமகன் லட்சுமனரெட்டியும் 260-266

5.ஏ.ஜி.எஸ் ஆபீசில் தியாகராஜன் 267-270

6.மாம்பலம் சிவா விஷ்ணு கோவில் முன்பு சிவகுரு 271-௨௭௩

எழுபதுகள்

276-277

0.பெரியார் திடலில் லட்சுமனரெட்டியும் சௌந்தரபாண்டிய நாடாரும் 278-283

1.நாகம்மா திருமணப் பேச்சு 284-288

2.எமர்ஜென்ஸியும் தியாகராஜனும் 289-292

3.தியாகராஜன் ஹேமலதா-மணிகண்டன் மற்றும் குழந்தை 293-298

4.லட்சுமண ரெட்டி மகன் நடராஜனும் மருமகன் பாலுவும் 299-304

5.மீண்டும் எ.ஜி.எஸ்சில் தியாகராஜன் 305-308

6.கொசஸ்தலை ஆற்றின் கரையில் லட்சுமணரெட்டியின் நினைவலைகள் 309-313

7.லட்சுமணரெட்டியும் கணக்குப் பிள்ளையும் 314-319

8.தியாகராஜன் ஹேமலதா மாறிய நெஞ்சங்கள் 320-324

9.நடேசன் -ரேணுகா 325-328

எண்பதுகள்

331-333

1.பச்சையப்பன் கல்லூரியில் நடராஜன் -ஈழ ஆதரவு 334-337 

2.நடராஜனும் கிருஷ்ணப்பிரியாவும் 338-345

தொண்ணூறுகள்

349-351

1.வண்ணத்திரை இதழில் நடேசன் மகன் ரவி

பத்தாயிரம் முதல் பத்து

361-362

1.நியூயார்க்கில் நாகம்மை மகன் தமிழ் 363-368  

2.நடராஜனின் துயரம் –லட்சுமண ரெட்டியின் இறுதி 369-373

பத்தாயிரம் 2009

ஏர்போர்ட்டில் கனிமொழி

எனக்குத் தெரியாது. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்மகன் எந்த இடத்தை வகிக்கின்றார் என்பது. சில தமிழ் எழுத்தாளர்கள் போல் பிரபலமானவர் இல்லாததுபோல்தான் தெரிகின்றது. வெட்டுப்புலியை நான் படிக்க நேர்ந்ததும் விபத்துதான். ஆனால் வெட்டுப்புலி எனக்கு நிறைவான வாசிப்பனுபவம் தந்தது. தமிழ்மகனை நான் இப்போது எனக்கு மிக நெருக்கமானவராகவும், மரியாதைக்குரியவராகவும் உணர்கின்றேன்.

April 17, 2013

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்- II. Poomani as a Teacher and Anjaadi as a Text Book-II

Filed under: Uncategorized — Tags: , , , , — cdmiss @ 6:17 pm

முந்தைய பதிவின் தொடர்ச்சி ………

4

திரு.சிவராமன் அவர்கள் அஞ்ஞாடிக்கு எழுதிய பின்னுரையில் “ஒரு வாசகன் படைப்பில் தேடுவதும், காண்பதும் உருவாக்கியவனின் மனம் என்ன தரத்திலானது என்பதைத்தான்” என்ற வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. படைப்பாளாரின் தரம் பனைமரம் மாதிரியோ, சிகரம் மாதிரி நெடுநெடுவென்று உயர்ந்திருந்தால், என்னை மாதிரி நோஞ்சான் வாசகர்கள் (சிவராமன் பாஷையில், கலைப்படைப்புகளின் சிறந்த மாதிரிகளோடு இடைவிடாது தொடர்பு இல்லாதவர்கள்; கடுமையான வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) உயரம் தொட முடியாது. அண்ணாந்து பார்க்கலாம். அவ்வளவுதான். தமிழிலக்கியத்தில் திருப்புமுனை என்று சொல்லப்பட்ட சில புத்தகங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வ மூட்டவில்லை. காரணம் அதன் உயரமாகக்கூட இருந்திருக்கலாம். மாறாக, ஒரு படைப்பை உருவாக்கியவனே அதன் உயரத்தைத் தொடும்படியாக, தன் கதைசொல்லும் திறனால், மொழிநடையால் நமக்கு உதவினால் எப்படியிருக்கும்?.

அஞ்ஞாடியில், நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி, அதற்குள் ஒரு கதையை வைத்து, கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து, வாசகனின் பாஷையிலே பேசி……பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள், பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சுவாங்கும் போது சற்று இளைப்பாறிச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் (படலங்களாகப்) பிரித்து, ஒன்றிலிருந்து இன்னொன்று போக, அளவாக படிக்கட்டுகளை (தலைப்புகள்) அமைத்து, ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும், சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க, என்னைப் போன்ற வாசகர்களுக்கு (அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) மூச்சுத் திணறத்தான் செய்கின்றது. “நால்லாத்தானே போய்க்கிட்டிருந்தாறு. தீடீர்னு ஏன் நம்மை மூச்சுத்திணற வைக்கின்றாரு” என்று சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து மேலும், கீழும் பார்க்கும் போது, கீழே அவர் விவரித்துச் சொல்லும் நிலப்பரப்பிற்கும் (கதைக்களத்திற்கும்), மேலே அவர் தொட்டுக்காட்ட நினைக்கும் மதிப்பீ டுகளுக்குமான தொடர்பு புலப்படுகின்றது.

கலிங்கல் மற்றும் கழுகுமலையைச் சுற்றி நம் கைபிடித்து “சொகமாக” சுற்றிக்காட்டும் பூமணி, தீடீரென்று பலவேசத்தின் கல்விளைக்கு (நாகர்கோவிலுக்கு அருகில்-படலம்-5) நம்மைத் தூக்கிச் செல்கின்றார். பள்ளர்-வண்ணார்–நாடார்-நாயக்கர் என்ற பிரக்ஞையில்லாத ஆண்டி-மாரி-பெரியநாடார் நட்புக்கிடையில், “மேச்சாதிக்காரனாக இருந்தா எனக்கென்ன! ஞாயமென்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே” என்று அவர்களுக்கு இணையாக நியாயச் சண்டியராகும் (கலிங்கல் கருத்தையா) அளவிற்கு இடம்கொடுக்கும் கரிசலின் பின்புலத்தைக் காட்டிவிட்டு, திடீரென்று “எந்தா பொலையாடி மவனே தள்ளி நில்லுடே” என்று ஆணவமாகப் பேசும் நாயர்களையும், நம்பூதிரிகளையும் நமக்கு காட்டும்போது “இங்கே எதுக்கு நம்மை கூட்டியாந்தாறு” என்று யோசிக்க வைக்கின்றார். தங்கள் மார்புகளைக்கூட மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து பலவேசம் என்ற மனிதனைப் பிரித்துக்கொண்டு வந்து கழுகுமலையில் நடுகின்றார்.

5

பலவேசம் என்ற கதாபாத்திரம் ஒரு அர்த்தமுள்ள குறியீடு. தங்கள் மீது சுமத்தப்பட்ட எல்லாச் சிறுமைகளையும் தாங்கிக் கொண்டு, எத்தனை விதமான போராட்ட முறைகள் இருந்தனவோ அத்தனையையும் கையாண்டு, மதம் மாறியதிலிருந்து, பிரிட்டிஷ் மகாராணிக்கு மனுச்செய்து கொள்வது வரை, “கோயிலுக்குள்ளே போற காலமும் வராமயா போயிடும்” என்று சளைக்காமல் போராடிய ஒரு குழுவின் கம்பீரமான வரலாற்றை தொடங்கிவைக்க பூமணி கையாண்ட கதாபாத்திரம்தான் பலவேச நாடர். ஒன்றுமில்லாமல் கழுகுமலைக்கு வந்து, தலைச்சுமையாக கருப்பட்டி விற்று, பின் பொதிமாடு வாங்கி, பின் ஒத்தைமாட்டு வண்டி, ரெட்டைமாட்டு வண்டி என்று பலவேசத்தின் வளர்ச்சியோடு, வண்டிப்பேட்டை தொடங்கி நாடார்கள் நாலா திக்கிலும் பரவி, ‘தெராசு பிடிச்சாத்தான் யேவரமா. இது புது யேவாரம்” என்று புதுத் தொழில்களில் ஈடுபட்டு, அருப்புக்கோட்டை, கமுதி, கழுகுமலை, சிவகாசி என்று அவர்கள் அனுபவித்த வலியையெல்லாம் மறந்து, “பழசை எதுக்குக் கிண்டி கெளரிச் சங்கடப்படனும்” “மறந்தாத்தானே ஆத்துமா சமாதானமடையமுடியும். முன்னேறமுடியும்” என்று அவர்களின் மனோபாவத்தை வார்த்தைகளாக்கிக் காட்டும்போது……கல்விளைக்கு ஏன் நம்மைக் கூட்டிச் சென்றார் என்று கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிய வரும் போது, பூமணியின் தரத்திலும், உயரத்திலும் பிரமித்து நிற்பதைத் தவிர வழியில்லை.

அதேமாதிரிதான் படலங்கள் 7,8,9,10. விரிவான வாசிப்புப் பழக்கம் இல்லாத என்போன்ற வாசகர்களுக்கு, மிகவும் செங்குத்தாக மூச்சுதிணறித் திணறி ஏறும்படி அமைந்திருந்தாலும், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தால், பூமணி விவரிக்கும் வரலாற்றிற்கும், சொல்லவந்த கதைக்களத்திற்கும் உள்ள தொடர்பு புரியவருகின்றது. சிலுவைப் போர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவு, கத்தோலிக்க-பிராட்டஸ்டண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த மோதலைத் தெரிந்திருக்கின்ற அளவு, ஜைன-சைவ மோதலைப் பற்றி, ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் அவர்கள் நம்பிக்கையின் பொருட்டு கழுவேற்றப்பட்டது நமக்குத் தெரிந்திருக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையென்பது, நாடு பிடித்தலுக்கும், மக்களின் நம்பிக்கையைப் பிடித்தலுக்குமான அதிகாரப் போராட்டத்தின் ஆடுகளம்போல்தான் கடந்தகாலங்கள் இருந்திருக்கின்றது. நமது நம்பிக்கைகள்தான் நம்மை வழிநடத்தியிருக்கின்றதென்றாலும், அதே நம்பிக்கைகள்தான் நம்மை மூச்சுத் திணறவும் வைத்தது என்பதை பூமணி தொட்டுக்காட்டிச் செல்கின்றார். விரிவான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வரலாற்று எழுத்து நடைதவிர்த்து, பாமர நடையில் பூமணி சிலவற்றைச் சொல்லிச்செல்லும் போது அதன் அழகை, என்னைப் போன்றவர்களைவிட இன்னும் கூடுதலாக அனுபவிப்பார்கள்.

6

பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையங்கள் உருவானது, முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகை, ஜமீன்கள் உருவானது…. அஞ்ஞாடியில் சித்தரிக்கப்படும் வாழ்வெல்லாம் இந்த வரலாற்றின் எச்சங்களே. கடந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும்கூட கலவரங்களும், சமாதானமின்மையும் முன்னேற்றத்தை முற்றிலும் முடக்கமுடியாவிட்டாலும், அதை நிச்சயமாகத் தாமதப்படுத்தும். சிறிதும் பெரிதுமான உள்நாட்டுப்(பாளையங்களுக்கிடையே)போர்கள், நம்பிக்கைத் துரோகங்கள், அரண்மனைகளுக்குள்ளே நடந்த கண்ணாமூச்சி விளையாட்டுகள், சகோதரத் துரோகங்கள், அரண்மனைகளுக்கு நெருக்கமாயிருந்தவர்களின் அத்துமீறல்கள், ஆள்வோர்களின் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியாகும் போது, அது சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்பதை நம்முடைய மனமுதிர்ச்சிக்கு ஏற்ப யூகித்துக் கொள்ளும்படி பூமணி விட்டுவிடுகின்றார். தங்களுடைய கோவணத்தை யாரும் உருவிவிடக்கூடாது என்று சமஸ்தானங்களும், பாளையக்காரர்களும், ஜமீந்தார்களும் பயந்திருந்த போது, மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

தன்னுடைய மதத்தைச் சார்ந்தவர்களே கூட்டம்கூட்டமாக மாற்று மதத்திற்கு மாறிக்கொண்டிருந்தபோது, “கீச்சாதிப் பயலுகதானே போனாப் போறாங்க” என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமஸ்தானங்களையும், பாளையங்களையும் ஆன்மீகம் வளர்த்தார்கள் என்று சொன்னால், “வொக்காளி! அவனுக என்னத்தை ஆன்மீகம் வளர்த்தாணுகளோ” என்று யாருக்காவது கோபம் வந்தால் அதை நியாயமற்றது என்றும் தள்ளிவிட முடியாது.

ஆவணச் சான்றுகளின் அடிப்படையிலே பெரும்பாலும் கடந்தகால வரலாற்றைப் பூமணி அணுகுகின்றார். கதாபாத்திரங்கள் உரையாடிக்கொண்டது வேண்டுமானால் பூமணியின் புனைவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களில் பலர் உண்மையில் வாழ்ந்தவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை, ஊமத்துரையை, வெள்ளையர்களுடன் அவர்கள் போரிட்டதை “முதல் விடுதலைப் போராக” பூமணிக்கு முன்னரே பல வடிவங்களில் ஆவணப்படுத்திவிட்டார்கள். அதையெல்லாம் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர்கள் சொல்ல மறந்ததில் எதையெல்லாம் பூமணி சொல்லமுயன்றிருக்கின்றார், ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கு எப்படி அர்த்தம் கூட்டியிருக்கின்றார் என்பது. எனக்கென்னவோ கடந்த கால வரலாற்றோடு, சமீபகால வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்படியான ஒரு தளத்தை, வாய்ப்பை பூமணி உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவே படுகின்றது. “தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்” என்ற ராஜ்மகாலின் விளம்பர வாசகம் போல், பல மாச்சரியங்களை இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டலைகின்ற நமது கோட்டித்தனத்தை பூமணி நாசூக்காகச் சொல்லும் போது நமக்கே சிரிப்பு வருகின்றது. .

7

கழுகுமலையில் ஏற்பட்டது திடீர்க் கலவரம். சட்டென்று ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் (ஜமீன் மேனேஜர்), நாடர்களையும் சேர்த்தே பழிதீர்த்துக் கொண்ட வஞ்சகம். ஆனால் சிவகாசிக் கலவரம் திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தை நாடர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது பெரிய பாடம். “வேலும் மயிலும் துணை” என்று கோஷமிட்டுக்கொண்டு, வெள்ளையர்களை ஊமத்துரை பாடுகண்ட மனதைரியத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிவகாசிக் கலவரத்தை நாடார்கள் எதிர்கொண்ட தீரம்.

“பிடிக்கலன்னா வேதத்துக்கு ஓடிப்போயி ஒதுங்கிக்கோ. இங்கிருந்தா இப்படித்தான். காலங்காலமா இருந்து வாற வழக்கத்த ஓதறித்தள்ளீட்டு ஒன்னோட கூடிக் கொலாவ முடியாது. அணிலு கொப்புலதான் ஆம கெணத்துல தான். மத்த கீச்சாதிக்காரனெல்லாம் இப்படியா முண்டீட்டு தோரணி பண்றான். பொச்சப் பொத்திக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதான்” (709) இதை பூமணியின் கற்பனை என்று ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. இது கடந்த காலத்தில் நாடர்கள் அனுபவித்த உண்மை.

அத்தனை ஜாதியினரும், ஏன் மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களும் கூட பயந்து ஒதுங்கிக் கொள்ள, சிவகாசி இந்து நாடார்கள் மட்டும் தனித்து விடப்படுகின்றார்கள். சிவகாசி கோயில் நூழைவுப் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த செம்புக்குட்டி நாடார், “நான் பனையேறியில்லடா. படியேறி. செவங்கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்…..நான் சாதாரண செம்புக்குட்டி நாடான்னு நெனைச்சயா. நான் செம்பகப் பாண்டியண்டா” என்ற அவரின் கர்ஜனை கட்டபொம்மு ஜாக்சன் துரை யிடம் கர்ஜித்ததைவிட உணர்வுபூர்வமானது. அதைவிட ஒருபடி உயர்ந்தது. கட்டபொம்மனாவது தன் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள ஆவேசப்பட்டான். அவனுள் விடுதலை வேட்கையோடு, சுயநலமும் கூட இருந்தது அவனுக்கு உதவ பலர் இருந்தனர். ஆனால் சிவகாசியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் “செவங் கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்” என்ற கர்ஜனையில் சுத்த தரிசனத்திற்கான தேடல் மட்டுமே இருந்தது. இதைவிட ஒரு உயர்வான ஆத்மத் தேடலை யாராவது ஆவனப்படுத்தியிருக்கின்றார்களா என்ன? செம்புக்குட்டி நாடாரை 63 நாயன்மார்களோடு 64 வது நாயன்மாராக வைத்து வழிபட்டாலும் அதில் ஒன்றும் தவறில்லை.

“வேலும் மயிலும் துணை” என்ற மந்திரத்தை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு வெள்ளையர்களின் பீரங்கிகளை பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எதிர்கொண்டது மாதிரி, “காளியும் மாரியும் நமக்கு தொணையிருக்கும்போது கவலையெதுக்கு” என்ற தைரியத்துடன் நாடார்கள் களமிறங்கினார்கள். கலகக்காரர்களை, நாடார்கள் எதிர்கொண்ட விதத்தை பூமணி விவரிக்கும் போது, கலகக்காரர்களைவிட எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த நாடார்களின் நெஞ்சங்களிலும், ஆயுதங்களிலும் அவர்கள் நம்பியது மாதிரி, காளியும், மாரியும் குடிகொண்டுவிட, அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், “காளியே கோவங்கொண்டு துரத்துவதாக” கலகக்காரர்கள் ஊரை விட்டு ஓடினர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கைப்பற்றி, இடித்துத் தரைமட்டமாக்கி, உழுது, அடையாளத்தை மறைக்க ஆமணக்கை விதைத்தான் வெள்ளையன். நூறாண்டுகளுக்குப் பின்னே அரசு முயற்சி எடுத்து அங்கே நினைவுச் சின்னம் எழுப்பியபின்தான் அவ்விடத்திற்கு உயிர் வந்தது. ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் சிவகாசி நாடார்கள் மீண்டெழுந்தார்கள்.

கட்டபொம்மன் வசனத்தை இன்றும் நாம் மறக்காமல் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த வசனத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூறுவது, தேச பக்தியை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கவா? இல்லை நம்முடைய இயலாமையை மறைக்க கையாளும் உத்தியா? ஆனால் சிவகாசிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதை மறந்துவிட்டார்கள். “மறக்கப்போயித்தானே இம்புட்டுக்கு முன்னேறியிருக்காக” என்று அஞ்ஞாடியில் (904) வரும் உரையாடல் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றது.

சிவகாசிக்குப் பின்னும் நாடார்கள் நீண்டகாலம் பொறுமை காத்தார்கள். மக்கள் மக்களாக இருந்தவரை மாற்றங்கள் மெதுவாக நடக்கின்றது. ஆனால் மக்கள் வாக்காளர்களாக, தொழிலாளர்களாக, நுகர்வோர்களாக உருமாறும்போது மாற்றங்கள் வேகம் கொள்கின்றன. ஓட்டு வாங்குவதற்குத்தான் கோயிலைத் திறந்துவிட்டார்கள் என்பதை பூமணி நாசூக்காக சொல்லிச்செல்லும் போது, அதை ஒட்டுப்பொருக்கிகளின் சூழ்ச்சி என்ற அவநம்பிக்கையோடு அல்ல, மாறாக ஜனநாயகம் நடைமுறைக்கு வரவர, மக்களின் அபிலாட்சைகளை ஆள்வோர் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டதை பூமணி நமக்கு புரியவைத்துவிடுகின்றார். நாம் கண்டடைந்த ஜனநாயகம் குறைபாடுகள் அற்றதல்ல. இருப்பினும், கலிங்கல் மயானத்தில், ஆண்டியும் கருப்பியும் குழிக்குவெளியே அட்ணக்கால்போட்டு வெயில்காய்ந்து கொண்டிருக்கும் போது, ஆண்டி கருப்பியிடம் “ஏ கழுத. எதுவும் கெட்டுப்போகல. முன்னேறியிருக்கு’ என்று சொல்வதைப் படிக்கும்போது, “வொக்காளி! இதைவிட மேலாக இந்த மண்ணையும், இந்த மண்ணில் ஜனித்த சகலத்தையும் மகிமைப்படுத்தமுடியுமா? என்று பிரமிப்பிலிருந்து மீளமுடியவில்லை. நூற்றாண்டுகால இந்த மண்ணின் வரலாற்றை உள்வாங்கி, தன் நாடி நரம்புகளிலெல்லாம் கரைத்து, ஞானக்கரைசலாக, ஞானிகளின், அரசர்களின், புலவர்களின் வார்த்தைகளாக அல்ல சாதாரண மக்களின் வார்த்தைகளாக, பூமணி வெளிப்படுத்தும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்கமுடியவில்லை.

8

நான் அஞ்ஞாடியை ஒரு பாடப்புத்தகமாகத்தான் பார்த்தேன். எந்த ஒரு மாணவனும் பாடப்புத்தகத்தில் பொருளடக்கத்தையே முதலில் பார்ப்பான். அஞ்ஞாடியில் அப்படியான பொருளடக்கம் இல்லை. பல தமிழ் இலக்கியப் படைப்புகளில் பொருளடக்கம் இல்லை என்பது உண்மை. அது தேவையற்றதென கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம். பொருளடக்கமும், சொற்பட்டியல்/பெயர்ப் பட்டியல் வாசிப்பதற்கும், வாசித்த பகுதிகளைக் மறு வாசிப்பு செய்யவும் வாசகனுக்கு உதவும். அதனால், என்னுடைய புரிதலை ஆழமாக்க எனக்குப் பயன்படுகின்ற மாதிரி அஞ்ஞாடிக்கான பொருளடக்கம் தயார் செய்தேன். அதை இங்கு தந்துள்ளேன். இந்தப் பொருளடக்கம் அஞ்ஞாடியை இனிமேல் வாசிப்பவர்களுக்கு உதவலாம்.

அஞ்ஞாடி 22 படலங்களாகவும், ஒவ்வொரு படலமும் பல்வேறு தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளடக்கம் கொடுக்கப்படாததால் நமக்கு பிடித்த பகுதிகளை தேடுவதற்கு மெனக்கெட வேண்டியிருக்கின்றது அந்த குறைபாட்டைக் களையவே  இப் பொருளடக்கம் கொடுக்கப்படுகின்றது  

படலம் 1 1-112

படலம் 10 487-540

படலம் 17. 794-824

1.    கண்ணுக்குட்டியும் கழுதைக்குட்டியும்

1.    தகர்ந்தது பாளையம்

1.பிண வாடை

1.    தண்ணிப் பேயி

2.    தடுமாறும் உறவுகள்

2.கிழக்குச் சீமை

2.    ருசியாயிருக்குதா

3.    மைனர் ராசா

3. கோழிக்கொள்ளை

3.    அவுத்துக்கிருச்சாம் கழுத

4.    அரண்மனை விவகாரம்

4. மேலச்சீமை

4.    கட்டுத்துறை விட்டு வெளியேறி

5.    வந்தாரைய வெங்கட்ராயர்

5. கோயில்கள் எரிந்தன

5.    கூனையிலே பதனியாம்.

6.    புது வழி

6. பாவா பாவா

6.    அடித்தட்டு விளையாட்டு

7.    பரலோக மாதவே

8. நடை திறப்பு

7.    அடிவானம் வெளுத்துருச்சு

8.    வேத போதம்  

9. தடையும் தண்டமும்

8.    கஞ்சி போடுங்கஞ்ஜா

9.    ஊர் புதுசு கோயில் புதுசு 

10. குற்றப் பத்திரிகை

9.    எம்பிளி கருப்பி

10.   சோறு வேணாம் துணி வேணாம்

11. குற்றமும் தண்டனையும்

10.   போயிட்டயே கழுத ஓதஞ்சான்

11.   அல்லேலூயா

படலம் 18. 824-880

11.   புது மூச்சு

படலம் 11 540 – 605

1. முளைக் கீரை

12.   இப்படியும் உண்டுமா

1.    அருமுருக்கு

2. ஆப்பு

13.   மஞ்சனத்திப் பூக்கள்

2.    கண்டனமாக்கி ஓடும் காலம்

3. அரவக் கருடனார் உலா

14.   கதகதயாம்

3.    உன்னைக் கழுவுகின்றேன்

4. இறக்கம்

15.   போடி அனந்தி

4.    தேரும் குருத்தும்

5.ஆலமரம் சாஞ்சது

படலம் 2 113-159

5.    நீக்கிரகம் பண்ணுவேன்

6. நாடார் தோட்டம்

1.    வாங்க மக்கா

6.    பாவத்தின் சம்பளம்

7. பணமும் கோயிலும்

2.    கேளுங்க மக்கா

7.    சிலுவைப்பாடு

8. தப்பித் திரிந்தவர்கள்

3.    வனவாசம்

8.    தேரோட்டம்

9.பல்லாக்குச் சுமை

4.    வயித்துப் பாடு

9.    அவ்வளவுக்காயிப் போச்சா

10.தீட்டுச் சிலுவை

5.    மதியக் குளிப்பு

10.   வாக்குமூலம்

11.சீமையிலிருந்து சேதி

6.    நல்லாருப்ப தாயீ

11.   என் அஞ்ஞயிள்ளே

12.சம்சாரி வேலையா

7.    கருத்தையன் பெண்டாட்டி

12.   பிரேத விசாரணை

13.புகையும் நெருப்பும்

படலம் 3  159-212

13.   அடுத்தகட்டம்

14.ரெண்டு பங்கு

1.        பாளையறுவாள்

14.   அடையாளப் பேரேடு

15.முகாவெட்டு.

2.    கும்பிய கருப்பட்டி

15.   விசாரணையும் விசாரமும்

16.அடுப்பு அடுப்பே

3.    பனையும் துணையும் 

படலம் 12 605-647

படலம் 19 881-905

4.    வெள்ளைப் பேத்தி

1.        விசாரிக்கப்படாத கதை

1.கதவு திறந்தது

5.    நல்ல பொண்ணுதான்

2.        அமைய மாட்டாங்காளே

2. புது மீனாட்சி

6.    பருசம் வேலம்புங்க

3.  நீதியின் தேவனே

3.தானான தனனன்னா

7.    என்னைப் பெத்த அப்பன் 

4. சிறைவாசம்

4. நில்லும் பிள்ளாய்

8.    பட்டணப் பிரவேசம்

5.     ரெட்ட வெள்ளாவி

5. தள்ளிப் போட்டிருக்கலாமே

படலம் 4 212- 260

6. ஆத்தும விடுதலை

6. அடடா…

1.    தாது வந்தது.

7.ஏகசுதன் உயிர்த்தெழுந்தார்

7. விடிஞ்ச பின்னே

2.        தண்ணீரும் கண்ணீரும்

8.அடியே மாடத்தி

படலம் 20. 906-952

3.    சின்னஞ் சிறுசுகள்

9.மாதவுக்கு மாற்றுமனை

1. அண்ணைக்குப் பாத்த முகம்

4.    மாண்டதும் மீண்டதும்

10.வாறென் இவனே

2. நாடாக்கமார் தெரு

5.    மேகாட்டு நெல்

படலம்.13. 647-672

3.முறிவு

6.    கால மழை பொழிஞ்சது

1. கூடை தொடேன்

4.குடல் கழுவி

படலம் 5 261-308

2. நெய்தல் மகன்

5.நெல்லுச் சோறு

1.    கோயிலும் குளமும்

3. பாலையின் தோழன்

6.நெத்திலி

2.    பொலையாடி மவளே

4.முல்லையின் பிள்ளை

7.சோளத்தட்டை

3.    தீமிதி

5.மனசெல்லாம் மருதம்

8.வெலபோயிட்டானே

4.    வந்த இடமே சொந்தம்.

6.குறிஞ்சி மனம்

9. பிடிமானம்

5.    கோயிலைத் தேடி

7.வணிக உழவன்

10. வெறிச்சோடிய திருணை 

6.    வடலிவளர்த்து

8.நெடும்பயணம்

படலம்.21. 953-1002

படலம் 6 308-386

9. பாண்டியக் காலடிகள்

1. ஆகமான சவரிமுடி

1.    செல்லக் கொடி

10. சிறுக்குளம் பெருக்கி

2. தேவ மாதா

2.    நித்திரையும் ஆனதென்ன

படலம் 14. 672-707

3. வாழப் பிறந்தவளே

3.    கட்டுச்சோறும் எலியும்

1.மேலைக்கூவல்

4. உப்புச் சக்கரை

4.    எலிக்கூத்து

2.வெயிலும் மழையும்

5. வேதப் பள்ளிக்கூடம்

5.    வெளையாடி முடிச்சாச்சி

3.ஊடு பட்டம்

6. அலைச்சலும் உலைச்சலும்

6.    கருப்புக் கானா

4.கர்த்தரின் பந்தியில் வா

7. ஒப்புவதாரடி ஞானப்பெண்ணே

7.    ஊர்க்குடும்பு

5.முதல் கனி

8. கழுத்துப் புண்

8.    வீடாள வந்தவளே

6.வேதச் சாதி.

9. கண்டுகொண்டேன்

9.    அந்தா போராண்டா

7.காட்டுவழி நெடுக

10. வண்ணாக்குடி வம்சாவளி

10.   சிறகு முற்றி

8.இதோ வெட்டுங்கள்

11. அடிவகுத்துக் கொடியறுத்து

படலம் 7 386- 412

9.ஆறுதல் அடை மனமே

12. காக்கா முட்டை

1.    பிஞ்சுப் பழம்

10.வேத வெள்ளாமை

படலம் 22  1002-1050

2.    அரகர அரகர

11.அந்தரங்கம்

1. தொலைந்து போனது

3.    அருகா முருகா

படலம் 15. 708-734

2. தங்கையா கூட்டம்

4.    அரை மலை

1.ஆம கெணத்துலதான்

3. பாவ சங்கீர்த்தனம்

5.    மோனத் திருமேனிகள்

2.தீவட்டிக் கொழுத்தி.

4. என்ன எழவு உறவோ

6.    அமணச் சுவடுகள்

3.கொலையுண்ட நந்தவனம்

5. கழுதகளைக் காணலயே

படலம் 8 412-446

4.எங்கே வைப்பது

6. அலச்சல் தீரலயே

1.    கழுகுமலை தேடிவரும்

5.முன்னோட்டம்

7. வாழைத்தார்

2.    எட்டப்பவம்சம்

6.பதட்டமும் ஆவலாதியும்

8. தொட்டிவீடு

3.    ரத்தமானியம்

7.கூடிக்கலையும் மேகங்கள்

9. மறப்பும் நினப்பும்

4.    வடுகபாண்டியர்

8.வருத்தமே மிஞ்சியது.

10. ஆறுக்கு மூணடியாம்

5.    கைமாறும் அதிகாரம்

படலம் 16. 734-791

 

6.    சிவசங்கரன் பிள்ளை ஓடை

1.தனிமரம்

நன்றி 1051 -1053

7.    எட்டனும் கட்டனும்

2.நெருங்கி நெருங்கி

பின்னுரை 1054-1066

8.    சும்மா கெடக்காது சிங்கம்

3.தன் கையே

 

படலம் 9  446-487

4.வா மச்சான் வா

 

1.    ஊமைக் கனல்

5.தொடரும் வேட்டை

 

2. உடைந்தது சிறை எழுந்தது கோட்டை

6. போதகரும் ஆதரவும்

 

3. முன்னேறிப் பின்வாங்கி

7. கடைசி நம்பிக்கை

 

4. வெற்றிமேல் வெற்றி

8. ஆயுத முளைப்பாறி

 

5. ஆயுத வேட்டை

9.முற்றுகை

 

6. போர் முழக்கம்

10.படுகளம்

 

7. பறந்துவிட்ட ராசாளி

11. தும்பை விட்டு.

 

8. அஞ்ஞாடி வந்துட்டானே 

12. பிணக்கணக்கு

 

9.    சிவகங்கை தேடி

13. சுட்டாலும் சும்மா இருந்தாலும்

 

10.   பேசிப் பிரிந்த கைகள்

14.மரண ஓலம்

 

11.   காளேசுரா

15.பம்மாத்து

 

12.   பிரயச்சித்தம்

16.கழுகுமலைக்கு போவலைய்யா

 

 

 

 

9

அஞ்ஞாடியின் பலமும், பலகீனமும் நாம் ஞாபகத்திற்கு சவால்விடுமளவு நடமாடும் கதாபாத்திரங்களே. அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைத் தொடர்ச்சியை புரிந்துகொள்வது சற்று சிரமமானதுதான். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையோட்டத்தில் முக்கியப்பங்கிருக்கின்றது. இந்தகுழப்பத்தைத் தவிர்க்க கதாபாத்திரங்களை அவர்கள் வம்சா வழிப்படி புரிந்துகொண்டேன். ஆண்டி வம்சம், மாரி வம்சம், பெரியநாடார் வம்சம், உத்தண்டு, குட்டையன், தூங்கன், மொங்கன் வம்சம், சத்திரப்பட்டி சுந்தர நாயக்கர் குடும்பம், வேப்பங்காடு ஆண்டாள் குடும்பம் என்று வகைப்படுத்திக்கொண்டேன். அதே மாதிரிதான் கிறிஸ்தவ மத போதகர்களையும் புரிந்துகொள்ள முயற்சிசெய்தேன். என் புரிதலையொட்டி சில வம்சாவளிப் பட்டியலை தயாரித்தேன். இந்த வம்சாவளிப் பட்டியல் அஞ்ஞாடி கதாபாத்திரங்களை சட்டென்று அடையாளம் காணவும், மொத்தக் கதையோட்டத்தில் அவர்கள் பங்கை இரசிக்கவும், அசைபோடவும் உதவும். அஞ்ஞாடியை ஒரு புதினமாகப் பார்த்திருந்தால் இந்த வேலையில் ஈடுபட்டிருக்க மாட்டேன். அதைப் பாடபுத்தகமாகப் பார்த்ததன் விளைவு.

Andi Vamsaavali New

மாரி வம்சம்

பெரிய நாடார்

பிற வம்சம்

10

மேலைநாட்டு கல்லூரி ஆசிரியர்கள், ஒரு பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகத்தை, அத்தியாயம் வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு அத்தியாயமும் என்ன சொல்லவருகின்றது என்பதன் சுருக்கத்தையும், அதோடு தொடர்புடைய மற்ற புத்தகப் பட்டியலையும் power point presentation ஆக தருவதை இணையத்தில் பார்த்திருக்கின்றேன். அது மூலப் புத்தகத்தை படிக்க மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் உத்தி. எனக்கும் அஞ்ஞாடி புத்தகத்திற்கு அது மாதிரி குறிப்புகள் கொடுக்க ஆசைதான். அஞ்ஞாடி கதைக்களத்தின் வரைபடங்களை- கலிங்கலூருணியில், கழுகுமலையில், சிவகாசியில் கதை நடந்த இடங்களை, அந்த இடத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை ஒரு GIS Presentation ஆக்க ஆசைதான். பார்க்கலாம்.நான் செய்யாவிட்டாலும் யாராவது செய்வார்கள்.

April 9, 2013

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Textbook

Filed under: Uncategorized — Tags: , , , , , , — cdmiss @ 12:06 pm

1

என்னுடைய வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை மிகவும் விரும்பி வாசித்துள்ளேன். மதுரையில் அவர் பேசுகின்றாரென்றால், அந்தக்கூட்டங்களுக்கு தவறாமல் சென்றுவிடுவேன். என்னுடைய சமூகப் பார்வையை கட்டமைத்ததில் அவருக்குப் பங்குண்டு. பின் கோபல்ல கிராமம் படித்துவிட்டு, இடைசெவலுக்குச் சென்று, கி.ரா.வை ஆசைதீர தரிசித்துவிட்டு வந்தேன். கடந்த ஆண்டு நான் விரும்பி வாசித்த புத்தகம் காவல்கோட்டம். நிறைய வாசிக்க வாய்ப்பிருந்த ஆசிரியப் பணியிலிருந்தாலும், எனக்குத் தேவையானதை மட்டும் வாசிக்கும் கஞ்சத்தனமிக்கவனாகவே நான் இருந்துவந்துள்ளேன். ஆங்கிலத்தில் என் பாட சம்பந்தப்பட்ட நூல்களைத் தவிர, பிறவற்றில் என் வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. தியானப் பயிற்சியும் களப்பணியுமே எனக்கு பலவற்றைப் புரியவைத்தது. மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலே வாசித்துள்ளேன். தியானப் பயிற்சியால் இவர்களை நான் புரிந்துகொண்டதற்கும், எனக்கு அறிமுகமான சிலர் புரிந்து கொண்டதற்கும் வித்தியாசங்கள் இருந்ததை உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் அவர்களை நான் விரிவாகப் படிக்காவிட்டாலும், படித்த அளவு அவரை என்னால் உள்வாங்கமுடிந்தது. அவரைப் உள்வாங்க தியானப் பயிற்சி உதவும். வாசிப்பது கொஞ்சமாக இருந்தாலும், அது எனக்குள் மாற்றத்தை உண்டாக்குமளவிற்கு நெகிழ்ச்சியானவனாக இருந்து வந்துள்ளேன் என்பதுதான் உண்மை.

பூமணியின் எழுத்துக்களை அவ்வளவாக நான் படித்ததில்லை. அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயமோகன் அவர்கள் தனது இணைய தளத்தில் அவரைப்பற்றி எழுதியபோதுதான், நான் பூமணியின் “வெக்கை” படித்த நினைவு வந்தது. வெக்கை என்னை ஒரு மாதிரியாக படுத்தியது என்று கூட சொல்லாலாம். அந்த படுத்தலை உதறிவிடாமல், என்னுள் கரைத்துக்கொண்டேன். வெக்கையின் கதைக்களம் எனக்கு மறந்துவிட்டதென்றாலும், கி.ரா.வைப் போன்று பூமணியையும் எனக்கு நெருக்கமானவாராக உணர்ந்தேன். ஜெயமோகன் எழுத்துக்கள் பூமணி மீதான அபிமானத்தை என்னுள் வளர்த்துவிட்டன. இந்தநிலையில் தான் என் மாணவர் வினோத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்னை படிக்கவைத்தார்.

பூமணியை அதிகம் வாசிக்காமலயே, அவர் மீதிருந்த அபிமானத்தால்தான், அஞ்ஞாடி எனக்கு கனமற்றதாகத் தெரிந்தது. வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம் என்று சிலர் எழுதுவதைப் படித்திருக்கின்றேன். அதை “அஞ்ஞாடி” எனக்கு நிறைவாகத் தந்தது பூமணிக்கு நன்றி.

ஒரு எழுத்தாளன் தன் ஆளுமையை எழுத்தில் வெளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ இல்லாமல் பூமணி அவ்வளவு இயல்பாக, தான் பார்த்த, தான் வாழ்ந்த சமூகத்தின் மீது வாஞ்சையுடன் வெளிப்படுகின்றார். அது வாழ்வின் மீது தீராக் காதல் கொண்டவர்களாலேயே முடியும். அஞ்ஞாடி பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு. அது பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு மட்டுமல்ல, படிப்பவர்களையும் பக்குவப்படுத்த எழுதப்பட்ட பாடப் புத்தகம். பாடப் புத்தகங்களில் எழுத்தாளனின் ஆளுமை வெளிப்படக்கூடாதுதான். அதனால்தான், தான் சித்தரிக்கும் கதாபாத்திரங்களின் ஆளுமைகளிலிருந்தே நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சூட்சுமத்தை பூமணி கையாண்டுள்ளார்.

2

கழுகுமலை, சிவகாசிக் கலவரங்களின் போது முக்கிய கதாபாத்திரமான ஆண்டி உயிரோடிருப்பதாகக் காட்டப்படுவதால், அஞ்ஞாடி ஏறக்குறைய 150 வருடகால வாழ்வியலைப் படம்பிடித்துக் (ஒருசில சம்பவங்கள் தவிர) காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த 150 வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள். மனிதர்களைப் பலிவாங்கிய வலிமிகுந்த போராட்டங்கள். சுதேசி ஆள்வோர்களும் சரி, விதேசி ஆள்வோர்களும் சரி மாற்றத்திற்கான நியாயங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருந்த பாராமுகப் போக்கு. கோயிந்தன் போன்றவர்கள் முன்னெடுத்த மாற்றத்திற்கான முஸ்தீபுகள். ஆனால் இந்த மாற்றங்களையெல்லாம் கடந்து, பூமணி செதுக்கியிருக்கின்ற கதாபாத்திரங்கள், இதிகாச கதாபாத்திரங்களைப் போல காலம் கடந்து நிற்கின்றன. நிற்கும்.

Resilience என்ற வார்த்தைப் பிரயோகம் சமூகப் பணியாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அதை இடர்ப்பாடுகளை தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய நிலை என்று சொல்லலாம். Resilient Families மற்றும் Resilient Communities ஐ கட்டமைப்பதுதான் சமூகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால். ஆண்டி-கருப்பி என்ற ஆளுமைகள் தங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எப்படி இடர்ப்பாடுகளைத் தாங்கி நிற்கும் வலுவைத் தருகின்றார்கள் என்பதுதான் அஞ்ஞாடி வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறி. ஆண்டியின் குடும்பம் மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூட அவர்களோடு தொடர்புடைய அனைவரின் resilience-க்கும் உதவுகின்றார்கள். பஞ்சம் பிழைக்க வந்த சண்முக நாடாரின் குடும்பத்திற்காகட்டும், சுந்தர நாயக்கர் மற்றும் ஆண்டாள் என்ற நாயக்கர் பெண்மணிக்காகட்டும், கருத்தையா தன் கூட்டாளிகளுக்கு செய்துகொடுக்கும் ஏற்பாடுகளில் அது வெளிப்படுகின்றது. இதையெல்லாம் செய்வது மிகச் சாதாரண மனிதர்கள்தாம். இதையெல்லாம் இப்படிஇப்படி செய்யவேண்டும் என்று விரிவான ஆய்வுகளுக்குப்பின் பரிந்துரைக்கின்ற கனமான பாடப்புத்தகங்கள் சொல்லும் உத்திகளையெல்லாம் போகிற போக்கில் வெளிப்படுத்தி, நம்மையெல்லாம் அஞ்ஞாடி கதாபாத்திரங்கள் அசர வைக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.

அஞ்ஞாடி ஆண்டி-மாரியின் நட்பில் தொடங்கும் ஒரு வாழ்வோவியம். அவர்கள் பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆனால் அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள்….வண்ணாக்குடி, கழுதைகள், வண்ணாந்துறை பற்றி எழுதும்போதெல்லாம் பூமணி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார். கம்மந்தரிசில் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த மாரி என்று முதல் பக்கத்தில் தொடங்கும் பூமணி, இறுதியில் 990 ஆம் பக்கத்தில், கலிங்கலில் வாழ்ந்த மாரியின் வம்சவரலாறு என்றுகூட குறிப்பிடாமல், கலிங்கலில் பட்டமாண்ட அல்லத்தானின் வம்சவரலாறு என்று சொற்பிரயோகம் செய்யும் போது, பூமணியின் மனது புரிய வருகின்றது.

பட்டமாண்ட பாளயக்காரர்களெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்துபோக, வேறு எந்த ஆதாரங்களுமில்லாத ஒரு வண்ணார் குடும்பம், CPR என்று சொல்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிளைவிட்டுப் படர்வது பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவரை CPR பற்றி மிகப் பெரிய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் சொல்லமறந்ததை எல்லாம் அஞ்ஞாடி சொல்லிச் செல்கின்றது. சலவைத் தொழிலுக்கும், sustainable Development க்கும் தொடர்புகளிருப்பதை களப்பணியினின் மூலம் அறிந்துகொண்டவன். இன்று வரை அவர்களில் பெரும்பாலோர் Common Property Resources ஐ நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். நகரத் தெருக்களின் மரநிழலிலோ, கட்டடங்களின் உயரத்தால் நிழல் விழும் இடங்களிலோ நின்று தொழில்செய்து கொண்டிருக்கும் அயர்ன் வண்டிக்காரர்கள் அதற்கு நல்ல உதாரணம். எந்த ஒரு சேவைத் தொழிலாளியும் – வீட்டு வேலைக்காரர்கள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உருவாக்க முடியாத நம்பகத்தன்மையை அவர்கள் சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்று தெரியாமலே, விலையுயர்ந்த துணிகளை அவர்களிடம் தேய்க்கக் கொடுக்கின்றார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் சீர்குழைத்ததாக இதுவரை எந்தப் புகாருமில்லை. இமயத்தின் கோவேறு கழுதைகளை அடுத்து நான் படித்தவரை, வண்ணார்களின் வாழ்வியலை இவ்வளவு கரிசனத்தோடு தமிழ் எழுத்தாளர்கள் யாரேனும் கையாண்டிருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

மருது சகோதரர்களுக்கும்- ஊமைத்துரைக்கும் இடையிலிருந்த நட்பைவிட, ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-பெரிய நாடாருக்கும் இடையே நிலவிய நட்பு நமக்கு ஒரு பாடம். பாளயக்காரர்களின் நட்பை நம்மால் பாவிக்க(Imitate)/பின்பற்ற முடியாது. ஆனால் நாம் நினைத்தால் ஆண்டி-பெரிய நாடாருக்குமிடையே, சுந்தர நாயக்கர்- மாடப்பனுக்குமிடையே, ஆண்டாள்- நெத்திலி வேலம்மாள் இடையே ஏற்பட்ட நட்பை நம்மால் பின்பற்ற முடியும்.

சிவகாசி கலவரத்தில் தன் கணவன் தங்கையாவைப் பறிகொடுத்துவிட்டு, கழுகுமலைக்குத் தன் இருகுழந்தைகளுடன் திரும்புகின்றாள் பெரிய நாடாரின் பேத்தி தெய்வானை. தோளில் கிடக்கும் மகள் இறந்துவிட்டதுகூட அவளுக்குத் தெரியவில்லை. களைத்து, சோர்வுற்று வரும்போது எதிரில் தென்பட்ட ஆட்டுக்காரனிடம் வழிகேட்கிறாள்.

“கழுகுமலை எங்கிருக்குய்யா”

“மேக்க தொலவட்டாச்சே.போறதுக்குள்ளே இருட்டீருமே”

“தெக்க என்ன ஊரு இரிக்குது”

“கலிங்கலூருணி”

“தூரமா”

“எட்டிப்போனா செத்த நேரத்திலே போயிரலாம்”

…..கலிங்கலுக்கு தெய்வானை நடையை விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வீட்டிற்கு செல்கின்றாள். ஆண்டிக்குடும்பன் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றான். காலம் கடக்கின்றது. கலிங்கலில் நாடார் தெரு உருவாகின்றது. அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது.

(சத்திரப்பட்டி) சுந்தர நாயக்கர் – மாடப்பக்குடும்பன், மாடனின் மனைவி முத்தம்மா, மகள் சீனித்தாய் இவர்களைச் சுற்றி பின்னப்படும் பாசவலை போன்று எல்லோரையும் பின்னிக்கொண்டால் இவ்வுலகில் எவ்வளவு சமாதானம் உண்டாக்கியிருக்கும். சுந்தர நாயக்கர் தன் மனைவியால் அவமானப்படுத்தப்படுவதாக நினைக்கும் போதெல்லாம், மாடப்பனின் ஆறுதல் வார்த்தைகள், ஒரு குடும்பனின் வார்த்தைகளாக அல்லாமல் ஒரு குருவின் உபதேசமாகவல்லவா வருகின்றது.

View albumView albumView albumView albumView album

“நாளெல்லாம் ஒரே மாதிரி இருந்தே முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க மாரிக்கிறனும் சாமி” “எல்லாம் நல்லா நடக்குதா சந்தோசம்னு பெருந்தன்மையா நெனைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மனதை வருடும் இதமான வார்த்தைகள் அதுவும் ஒரு வாலிபனிடமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் பெரிய பாடம்.

அதே மாதிரி கலிங்கல் நெத்திலி வேலம்மாள் – வேப்பங்காடு ஆண்டாள் உறவைச் சொல்லவேண்டும். துயருரும் ஒருவர் தன்னிடம் கொட்டித்தீர்ப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம் கடைபிடிக்க வேண்டிய தர்மம். படபடவென்று பேசும் கதாபாத்திரமாக நெத்திலி வேலம்மாள் காட்டப்பட்டாலும், விதவையான ஆண்டாள் உணர்ச்சிகளோடு தோற்று கர்ப்பம் தரிக்க அதைக் கலைப்பதற்கு நெத்திலி உதவினாலும், அதை ஆண்டாளின் பலகீனம் என்றோ, இழுக்கியல்புடையதாகவோ (not attaching any stigma with the people who are suffering) நினைக்காமல் உதவுவதும், அந்த உதவியை சாக்காக வைத்து சலுகைகள் பெறமுயற்சிக்காததும், அந்த இரகசியங்களை காப்பாற்றுவதும் – நெத்திலி வேலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம்.

பருவமடைந்த குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி கையாளவேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றோம். ஆனால் வெளிஉலகத் தொடர்பில்லாத ஆண்டியும் கருப்பியும் தங்கள் மகள் வீரம்மாளின் காதலை அங்கீகரிக்கும் போது, படிப்பென்ன மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற யோக ஞானத்தின் விளக்கமாக அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகின்றது.

நம்முடைய ஞாபகசக்திக்கு சவால்விடுமளவு எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோட்டத்தில் தேவைப்படுகின்றார்கள். தன் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம், கருத்தையா பிற சண்டியர்கள் கலிங்கலைக் கொள்ளையடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுனியாக, பொறுப்பற்ற இளைஞனாக கோயிந்தன் காட்டப்பட்டாலும், தேங்கிக்கிடக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சார ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்களை நிச்சயமாக சிந்திக்க வைக்கும்.

கொத்துக்கொத்தாக பஞ்சத்திலும், நோயிலும், கலவரங்களிலும் மக்கள் மடிவது நம்முள் பலகேள்விகளை எழுப்பினாலும், அதற்கான விடைகளை நோக்கி சற்றாவது நாம் முன் நகர்ந்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஆனால் தன் மகன் மாரிமுத்துவின் பாராமுகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பொம்மக்காள், உவர்க்காட்டுத் தோட்டத்தின் தெலாக்கல்லில் தூக்குப் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நாடார், தொழுநோயாளியான மரியான் உபதேசியாருக்கு மரணத்திற்குபின் கிடைக்கும் மரியாதை, மரணத்திற்கு முன் கோவிந்தனின் மனநிலை – இந்தச் சம்பவங்கள் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் இன்றளவும் நம்மிடம் இல்லை. அதற்கான விடைகளை நாம் தேடுகின்றோமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அஞ்ஞாடி சிலவிடைகளை தொட்டுக்காட்டிச் செல்கின்றது. அது என்ன?

3

ஏதாவது சம்பவத்தையோ, மனிதர்களையோ நினைவுகூறும் போது, “அதுமாதிரி இப்ப எங்கே பார்க்கமுடியுது, அந்த மாதிரி மனுசங்க இப்ப எங்கே இருக்காங்க” என்று கடந்த கால விருப்புணர்வு (nostalgic feeling) மிகும்போது, அந்த சம்பவங்களும், மனிதர்களும் நடைமுறை சாதியமற்றவைகள் என்ற கருத்தே அதிலிருந்து மறைமுகமாக வெளிப்படுகின்றது. கடந்தகால மிகையுணர்வு நிகழ்காலச் சம்பவங்களைப் புரிந்துகொண்டு செயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக அந்த மாதிரியான சம்பவங்கள் காலம் கடந்தும் தொடர்கின்றது, அந்த மாதிரியான மனிதர்கள் இன்றும் நம்முடன் வாழ்கின்றார்கள் என்ற உணர்வு மேலோங்கும்போதுதான், அதிலிருந்து, அவர்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றோம். “அஞ்ஞாடி” குறிப்பிடும் சம்பவங்களாகட்டும், சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகட்டும், காலத்தைக்கடந்து வெவ்வேறு வடிவங்களில் நம்மைத் தொடர்கின்றன. அதை பூமணி எழுத்தாக்கிக் காட்டும் போது, அதை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, “ஓ! அதுமாதிரி தானே இதுவும், அவர்கள் மாதிரிதானே இவர்களும்” என்று நமக்கு புரியவரும் போது, “அஞ்ஞாடி” புதினம் என்ற நிலையிலிருந்து மேலுயர்ந்து நம்மைப் பக்குவப்படுத்தும் பாடப்புத்தகமாகின்றது. நாம் பாடம் கற்றுக்கொள்ள தோதாக அஞ்ஞாடியில் எத்துணை சம்பவங்கள். எத்துணை மனிதர்கள்.

ஆண்டியின் மனைவி கருப்பி கதைப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவள். ஆனால் அவள் குழந்தைகளைக் கையாளும் முறை, நூற்றாண்டுப் பழமைக்குப் பதிலாக இன்றுகூட பார்க்க முடிந்த செயலாகத்தான் இருக்கின்றது.

கருப்பி பிள்ளைகளை வளர்த்த விதத்தை பூமணி விளக்குகின்றார்.

“அவள் தன் பேரனை என்னமாக வளர்த்தாள்”……ஒருதடவை பேரனை தலைக்குமேலே தூக்கி அண்ணாந்து கொஞ்சும் போது சரியாக அவள் வாயில் மோண்டுவிட்டான். அவள் பதட்டப்படவில்லை. மோண்டு முடிக்கும் வரை வாயைத் திறந்து காட்டிவிட்டு கொப்புளித்துத் துப்பினாள்”

அதைப் பார்த்த ஆண்டி “நீயென்ன எறும மாட்டுப் பெறவியா” என்று திட்டுகின்றான்.

அதற்கு கருப்பி “ஒனக்கு ஒண்ணும் தெரியாது. புள்ளையை படக்குன்னு எடுத்தா மோத்திரத்தை அடக்கீரும்”

இன்னொரு சம்பவம்…

ஒரு நல்ல நாளன்று கும்பா நெறைய நெல்லுச்சோற்றில் பருப்பாணம் ஊற்றி ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரன் (பொய்யாளி) நின்றாமானைக்கி கும்பாவில் மோண்டுவிட்டான். அதைப்பார்த்த சொக்கம்மா (கருப்பியின் மருமகள்) “சனியனே ஒனக்கு மோத்திரக் குடுக்கை அந்துபோச்சா” என்று ஓடிவந்து பொய்யாளியை அடிக்கின்றாள்.

அடிதாங்காமல் அழுத பேரனை மடியில் வைத்து அமர்த்தியபடி, அந்த சோற்றை கருப்பி பிசைகின்றாள். சாப்பிட்டு முடித்துவிட்டு அழுது ஓய்ந்திருந்த பேரனைப் பார்க்கின்றாள். ‘பருப்புக்கு கொஞ்சம் உப்பு கூடிப் போச்சுடா” என்கிறாள்.

வலிக்கும் வரை அன்பு செலுத்து (Love Until it Hurts) என்று மதர் தேரெசா பற்றிய புத்தகத்தின் அட்டையப் பார்த்துள்ளேன். வலிக்கும் வரை வேண்டாம். அருவருப்பில்லாமல் இருந்தாலே போதுமே. அன்புக்கு அருவருப்பு கிடையாது.

சில ஆண்டுகளுக்கு முன், தவழ்ந்து திரிந்த எங்கள் வீட்டுப் பாப்பா, தட்டில் வைத்திருந்த பட்டாணியை எடுத்து முழுங்கி விட்டது. தட்டில் வைத்திருந்த பட்டாணியை காணவில்லை என்று தேடியபோது, நான்கைந்து மணிநேரம் கழித்து, அது பாப்பாவின் வயிற்றிலிருந்து ஜீரணமாகமுடியாமல் கழிச்சலாக வெளிவந்தது. பட்டாணியை விட்டுவிட்டு கழிச்சலை மட்டும் வீட்டு நாய் நாக்கிவிட்டுச் சென்றுவிட, கொத்தான பட்டாணி எண்ணை தடவிய பளபளப்புடன் வராண்டாவில் கிடந்திருக்கின்றது. அதைச் சுத்தம் செய்யுமுன், உறவாடிவந்த அம்மையார் அப்பட்டணிகளை எடுத்து தின்ன ஆரம்பித்தார். அதைப் பார்த்து பதறிப் போய், “அதையெடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாவோட பீயில் வந்தது” என்று அலற, அவரோ மிக நிதானமாக, “பாப்பா பீயிலே வந்ததுதானே. ஏதோ பாலிடால் தடவுனது மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாரே பார்க்கலாம்.

கருப்பிகள் என்றைக்கு செத்தார்கள். அவர்கள் செத்தார்கலென்றாள், அஞ்ஞாடி பாசையில், “வொக்காளி இந்த ஓலகம் என்ன மயித்துக்காகுறது”. அவர்கள் காலம் தோறும் வாழ்கின்றார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இரண்டு மூன்று கருப்பிகள் ஒருசேர ஒருவீட்டிலிருந்தால் அது பல்கலைக்கழக அந்தஸ்து A+ தரச் சான்றிதழ் பெறுகின்றது.

அடுத்து ஆண்டியைப் பற்றி ஒரு சித்தரிப்பு.

ஆண்டியின் விதைப்பில் பழுதிருக்காது. கருப்பி கையிலும் பழுதிருக்காது. அவர்கள் விதைத்தால் பயிர்கள் எக்காளமிட்டு முளைக்கும். அவர்களின் கைராசியும் நேர்த்தியும் அப்படி.

தங்கள் நிலத்தில் விதைத்துக் கொடுக்க அயலூர்களிலிருந்தும் ஆண்டியைத் தேடி வருவார்கள். இன்ன சாதிக்காரர்கள் என்றில்லை. அவனும் சுணங்காமல் போவான். ஆண்டி எந்த ஊருக்குப் போனாலும் வாய்நிறைய மரியாதை கிடைக்கும். மேல்சாதிக்காரர்கள் கூட அவன் விதைப்பைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

போகிற ஊர்களிலெல்லாம் “வெள்ளாமையெல்லாம் எப்படீருக்கு” என்று ஆண்டி அக்கறையாக விசாரிப்பான்.

“புள்ளீகளைப் பத்தி வெசாரிக்கிற மாதிரியில்ல வெள்ளாமையைப் பத்தி விசாரிக்கான். அவன் என்ன கஞ்சிக்கில்லாத வெங்கம் பயலா. ஈரனேர்ச் சம்சாரி. ஏகப்பட்ட நிலம். வாழைப்பழம் போல மாடுகள். கெதியான விவசாயம். சொந்த வேலையைப்போட்டுவிட்டு ஊரானுக்கு வெதச்சிக் கொடுக்கனும்னு வேதவதியா?

விதைபுக்காக ஆண்டிக்கோ, கருப்பிக்கோ யாராவது கொத்துக்கூலி கொடுக்கவந்தால் வசவு நாறிவிடும். அடுத்தவர்கள் காட்டில் விதைப்பது பிரியத்தினால். அது அவர்களைப் பிடித்தாட்டிய கிறுக்கு.

தன்னார்வத்தில் செயல்பட்ட அற்புதத் தம்பதியினர் The couple together were great volunteers.

சிலவருடங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலுக்காக, நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரு informal discussion-க்காக தமிழ் நாடறிந்த மதுரை பேராசிரியர்கள் இருவரை தொடர்புகொண்டோம். தமிழ் இலக்கிய/கலாச்சாரப் பின்னணியில் சமூகப்பணி கல்வியைப் புரிந்துகொள்ள செய்யப்பட்ட முயற்சி. அவர்களை எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நாங்கள் அழைத்துக்கொண்டு வருகின்றோம் என்று ஆர்வமுடன் சொல்லிச்சென்ற மாணவர்கள் வாடிய முகத்துடன் திரும்பினார்கள். என்னவென்று கேட்க, அவங்க ரெண்டு பேரும் சொல்லிவைத்த மாதிரி இரண்டாயிரம் ரூபாய் “கொத்துக்கூலி” கேட்கின்றார்கள் என்று சொல்ல வேறு இரண்டு பேராசிரியர்களை (Prof. EKR of Yadhava College and Prof. Pothi Reddy of American College) அழைத்து வந்தோம். தன்னார்வத்துடன் செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.

இதைவிட மனதை நெகிழ வைத்த சம்பவம்.

கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுடன் எனக்கு சின்னதாக அறிமுகம் உண்டு. உங்களை மாதிரியான நபர்கள் எங்கள் மாணவர்களிடையே பேசினால் அவர்கள் மேலான செயல்களுக்கு தூண்டப்படுவார்கள் என்று அவரை கல்லூரிக்கு அழைத்தேன். மதுரைக்கு வேறு வேலையாய் வரும்போது மாணவர்களைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்படி அவர் மதுரைக்கு வந்தபோது “பத்ரியுடன் ஒருநாள்” என்று தலைப்பிட்டு நிகழ்ச்சி நடத்தினோம். அது மாணவர்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்காக “தேங்காய் முடி” (பொன்னாடை போர்த்தியது) வழங்கினோம். நாங்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றோம், அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னார். ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வருகின்றோம் என்றதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அவரே ஆட்டோ பிடித்துச் சென்றார். அடுத்த சில தினங்களில் அவர்களுடைய System Engineer ஐ சென்னையிலிருந்து அனுப்பிவைத்து, மிகக் குறைந்த செலவில் கல்லூரி கணணிகளுக்கு இணையவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்ல அனுப்பினார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களை அனுப்பி வைத்து, எங்களுடைய அனுபவங்களையெல்லாம் ஆவணப்படுத்தி உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? என்பதை அறிந்துவர அனுப்பினார். எங்களுக்கு ஒரு செலவும் இல்லை.

ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு அவரையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.

அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்.

அஞ்ஞாடி முழுக்க காலம் கடந்துநிற்கும் கதாபாத்திரங்கள்தாம். ஆண்டியின் கொள்ளுப் பேரனாக கோயிந்தன் என்று ஒரு கதாபாத்திரம். மாற்றங்களை மிக மெதுவாக எதிர்கொள்ளும் கலிங்கலில் சடசடவென மாற்றங்களைக் கொண்டுவருகின்றான். சிறுசுகளையும், பெருசுகளையும் கிராப் வெட்டிக்கொள்ள வைக்கின்றான். பெருசுகளின் “பொட்டணத்தை” மறைக்க கோவணம் கட்டவைக்க தந்திரம் செய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ரகசியத்தை தெரிந்துகொண்டு குளுவன் செவிட்டில் அறைந்து துரத்திவிட்டு அதைப் பற்றி ஜம்பமடிக்காமல் அமைதிகாக்கின்றான். ஊரில் முதன்முதலாக மடமும், வேப்பமரத்தடியில் உட்கார்ந்துபேச மேடையும் கட்டுகின்றான். இளைஞர்களை ஒன்றிணைத்து கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றான். கலிங்கலில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும், விதைக்கின்றான். முன்னேற்றப் பணியாளர்களைப் பற்றி பேசும் போது “அவர்கள் முன்னேற்றப் பணியை மகிழ்ச்சிக்குரியதாக்கினார்கள்” என்று ஒரு அறிஞர் குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி கோயிந்தன் எந்த கோட்பாட்டு வட்டதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.

கோயிந்தன் வாய் கூசாமல் சாமிகளைக் கிண்டலடிப்பான். அப்படியொரு குணம். “சாமியைக் கும்புட்டாத்தானே மழ பேயும்” என்பவரிடம் “அப்ப இத்தனை வருஷம் கும்புட்டதெல்லாம் பொய்யா” என்று எதிர்க்கேள்வி போட்டு மடக்குவான்.

ஆனால் அதே நேரத்தில், சத்திரப்பட்டி சக்கிலியக்குடி முனியசாமி மீது மூத்திரம் மோண்டு கொண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காரச் சிறுவர்களை ‘ஏலே அகராதி புடிச்ச அறுதச் சிறுக்கி புள்ளீகளா” என்று அவர்கள் மீது கல்லெறிந்து விரட்டுவான்.

“அதை சாமியா என்னன்னு நெனச்சீக. மழைன்னும் பாக்காம வெயிலன்னும் பாக்காம பாவம் அது பாட்டுக்கு ஒத்தியிலே நிக்குது. அதைப் போயி பாடு காங்கீகளே. நாளைக்கு மேச்சாதிக்காரப் பசங்க வந்து ஓங்க சாமி மேல பேண்டுவச்சா என்ன செய்வீக”

“பேண்ட குண்டிய அறுத்து நாய்க்குப் போட்ருவோம்” என்று மோண்டவன் அதட்டலாகச் சொல்ல, “ஒன் மானிய அறுக்குற ஆளில்லங்கிற துமுருள பேசுற. தைரியமான எளவட்டங்கன்னா அங்கயே நில்லுங்க. அத்தன பேரு குஞ்சியவும் அறுத்து காக்காய்க்கு போடுறனா இல்லையான்னு பாரு” என்று கோவத்தோடு கத்துவான்.

கோவணத்தைக் கெட்டிக்கோ, குஞ்சியத்தான் பொத்திக்கோ” என்று பயல்கள் பொச்சைப் பொத்தியபடி ஓடிவிடுவார்கள்.

கோயிந்தனுக்கு சகலரிடமும் இருந்த சௌஜன்யம் கடந்த கால நிகழ்வல்ல. இன்றைக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அதை சமூக மூலதனம் என்கின்றார்கள். இவர்களெல்லாம் ஊருக்கு ஊறுகாயாகவும், வீட்டிற்கு வேப்பங்காயாகவும் இருப்பவர்கள். ஊருக்கு ஒரு கோயிந்தன் இருந்தாகவேண்டும் என்பது சமூகவிதி. இல்லையென்றால் அது ரெவின்யூ பாஸையில் பேச்சற்ற கிராமமாகிவிடும். அவர்களில்லாமல் ஊரில்லை. முன்னேறிய ஊர்களிலெல்லாம், யாரையும் கேட்கவேண்டாம், என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட கோயிந்தன்கள் இருப்பார்கள். இன்னும் தொடரும்

படங்கள் நன்றி

http://vidhaanam.wordpress.com, http://solpudhithu.wordpress.com, http://seyakumaar.wordpress.com,

April 4, 2013

நல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital

பத்ரி கொடுத்த புத்தகம்.

ஓரிரு மாதங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Swaraj என்ற புத்தகத்தின் தமிழாக்கமான “தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க” (தமிழில் கே.ஜி. ஜவர்லால் – கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தைத் திரு. பத்ரியவர்கள் படிக்கக் கொடுத்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாடறிந்த சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் இந்தியாவில் நிறைவேற அவரின் பங்களிப்பிற்காக ராமோன் மக்ஸாசே விருதும் பெற்றவர். பன்முக அனுபவம் கொண்ட அவருடைய கருத்துக்களைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதும் கூட ஒருவிதமான சமூக அக்கறையே. அந்த வகையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

அந்த புத்தகத்தைப் படித்தபோது எனக்குள்ளே பல சிந்தனைகள். தன்னாட்சியே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை. ஆதாரம். மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டுமென்பதில் சமரசத்திற்கு இடமில்லையாதலால், தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தை யாராலும் வெளிப்படையாக விமர்சிக்க முடியாது. ஆனால் நம் முன்னுள்ள சவாலே தன்னாட்சியை அடைவது பற்றியல்ல; ஏற்கெனவே ஓரளவு கைகூடியிருக்கும் தன்னாட்சியை (புதிய பஞ்சாயத்து அமைப்பு) எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பது பற்றித்தான். தன்னாட்சி என்பது சர்வரோக நிவாரணியல்லவென்றாலும், சர்வரோக நிவாரணத்திற்கான மூலப்பொருள் அதில் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு நிவாரணியை சரியாக உபயோகிக்கத் தெரிந்தால்தான் (மருந்தின் அளவு, எத்தனைவேளைகள், எத்தனை நாட்கள், பாதுகாக்கும் முறை), நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும். மருந்து நன்றாகச் செயல்படவும், அதன் பக்க விளைவுகளைத் தடுக்கவும் சில நேரங்களில் துணை மருந்துகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த users Intelligence மாதிரி, தன்னாட்சி சரியாகச் செயல்படவேண்டுமென்றால், அதற்குத் துணைபுரிய ஒத்திசைவான சூழலும் வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கு வலுசேர்க்கக் கையாண்ட உதாரணங்களிலெல்லாம், தன்னாட்சியைவிட இந்த ஒத்திசைவான சூழலே மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தன்னாட்சிக்கு வலுசேர்க்கவும், தன்னாட்சி தவறிழைக்காமல் பார்த்துக்கொள்ளவும் ஒத்திசைவான சூழல் முக்கியம்.

தன்னாட்சியும் சமூக மூலதனமும்

இந்த ஒத்திசைவான சூழலை “சமூக மூலதனம்” என்று சொல்லலாம். சமூகம் செயல்பட பல்வேறு அமைப்புகள்/நிறுவனங்கள், மதிப்பீடுகள், விதிமுறைகள் பெரிய அளவு உதவுகின்றன. ஆனால் இவையெல்லாம் மூலதன அந்தஸ்தை அதன் போக்கில் பெற்றுவிட முடியாது. சமூகமென்பது மானிட உறவுகளின் வலைப்பின்னல் (Society is web of social relationships). அந்த உறவுகளில் ஸ்திரத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படும்போது அது மூலதன அந்தஸ்தைப் பெற்று, முன்னேற்றத்திற்கான மூலப் பொருளாகின்றது. ஒரு தரிசு நிலம், நீர்ப்பாசன வசதி பெரும்போது எப்படி அதனுடைய உற்பத்தி பெருகுகின்றதோ, அது மாதிரி சமூக மூலதனம் உள்ள இடங்களில், மற்ற மூலதனங்களான இயற்கை மூலதனம் (Natural Capital), மனித மூலதனம் (Human Capital), நிதி மூலதனம் (Financial Capital), கட்டுமான மூலதனம் (Physical Capital) போன்றவை உயிர்த்தெழும். மேலும் இந்த மூலதனங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து செயல்படும் தன்மை கொண்டவை.

தன்னாட்சி/ ஊராட்சி கூட ஒரு மூலதனம்தான். இன்றைய தன்னாட்சி சட்டபூர்வமான ஸ்திரத் தன்மையை அடைந்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அதைக் கொண்டுசெலுத்துபவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகிவிட்டதால், அது சமூகமூலதனம் என்ற அந்தஸ்திலிருந்து பெருமளவு நீர்த்துப்போய்விட்டது. அது சிலரின் கழுத்திலும், விரல்களிலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்ற தங்கநகை போன்று ஒரு Non Performing Asset.

சமூக மூலதனம் – சில உதாரணங்கள்

நமது பிரச்சனைகளான பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் ஊழல், அதனால் ஏற்படும் திறமையின்மை போன்றவை சமூக மூலதனம் நீர்த்துப் போனதன் விளைவே. ஒரு சமூகம் தன்னைத்தானே புனரமைத்துக்கொள்ள நீர்த்துப்போன சமூக மூலதனங்களை மீண்டும் கட்டமைக்கலாம். அல்லது புது மாதிரியான சமூக மூலதனங்களை உருவாக்கலாம். ஊழலுக்கு எதிரான அண்ணாவின் அமைப்புக்கூட தேசிய அளவில் அப்படி உருவான சமூக மூலதனம்தான். பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பாலியல் சிறுபான்மையினர் போன்றோர் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் செயல்படும் நிறுவனங்கள் சமூக மூலதானத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் மாணவர் அமைப்பும் கூட சமூக மூலதனமே. இந்த மாதிரியான Macro Examples-ஐ உதாரணம் காட்டினால், இவைகளைக் கவர்ச்சியும், அர்ப்பணிப்பும், செல்வாக்குமிக்க தலைவர்கள் தோற்றுவித்து நடத்துவதால், இதற்கெல்லாம் பெருமுயற்சியும், பேராற்றலும் தேவை என்று நினைத்து நம்மில் பலர் சோர்வடைந்து விடுகின்றோம். ஆகையால் கிராம அளவில், ஒரு சிறிய எல்லைக்குள் நடக்கும் Micro Examples-ஐ உதாரணமாகக் கொண்டால், நம்முடைய புரிதல் இன்னும் சற்று அர்த்தமுள்ளதாகும்.

கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் I.

என்னுடைய கிராமத்தையே எடுத்துக்கொள்வோம். 70 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு ஆரம்பப்பள்ளி உருவானது. உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் முனைப்பாக செயல்பட்டு, ஒரு துணை தபால்நிலையம் கொண்டுவந்தார். நான் பள்ளிப்படிப்பு முடித்த அந்த காலகட்டத்தில், எங்கள் ஊருக்கு கிடைத்த அந்த பின்கோடே என்னை மனவெழுச்சிக்கு உள்ளாக்கியது. என்பெயர், ஊர்ப்பெயர், பின்கோடு இருந்தாலே இந்ததேசத்தில் எங்கிருந்தும் என்னை அடையாளம் காணமுடியும் என்ற பெருமையை அந்த இலக்கங்கள் கொடுத்தது.

நான்கு உட்கடை கிராமங்களைக் கொண்ட பஞ்சாயத்தில், பல்வேறு சமன்பாடுகளால் (Equations) எங்கள் ஊரைச்சேர்ந்த யாரும் ஆரம்பத்தில் ஊராட்சி தலைவராக முடியவில்லை. அரசுத் திட்டங்களெல்லாம் (சமூகநலக் கூடம், துணை சுகாதார நிலையம் என்று) பக்கத்து ஊருக்கே சென்றது. பொதுவான கட்டமைப்பு வசதிகளைத்தவிர பிரத்தியேகமான அரசு முதலீடுகள் எதுவும் எங்கள் ஊருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் ஊரிலிருந்த மூன்று ஜாதியினரும் பல இலட்சங்களைச் செலவழித்து புதிய வழிபாட்டுத் தலங்களை, கல்யாண மண்டபங்களைக் கட்டிக்கொண்டனர். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியானது. ஆனால் அதை நிர்வகித்த குழுவால் தரத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

கடந்த காலத்தில் ஜாதிகளுக்குள்ளும், ஜாதிகளுக்கிடையேயும் இருந்த சௌஜன்யம் இப்போது இல்லை. இதனால் பிரச்சனை ஏதுமில்லாவிட்டாலும், கூட்டு முயற்சிகள் பெரிதளவு நின்றுவிட்டது. சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எங்கள் ஊரிலுள்ள அனைத்து முதியோர்களும் முதியோர் பென்ஷன் பெறுகின்றார்கள். “கொள்ள காசு பென்சனாக நம் ஊருக்கு வருகின்றது” என்று சொன்னவரிடம், “எல்லாத்தையும் தொலைச்சுட்டோம். இதுல மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் இரண்டுமூன்று நபர்களின் பெயரைச் சொல்லி “அவங்க ஏற்பாடுதான். 1200 லிருந்து 1500 வரை செலவாகும். பென்ஷன் வாங்கித்தந்து விடுவார்கள்” என்றார். இந்த ஏற்பாட்டை நம்மில் பெரும்பாலோர் ஊழல்/இடைத் தரகு (in collusion with govt staff) என்பார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. அது ஒரு சேவை (service provision). மக்களை அலைக்களிக்காமல் ஒரு அரசுத் திட்டத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது. அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. (They are not power brokers. Instead they are bridges/ bridging social capital) அவர்கள் நம்பிக்கையானவர்கள். கடந்த காலத்தில் சமூக மூலதனம் வலிமையாக இருந்தபோது, ஊராரால் பள்ளி போன்ற அமைப்புகளை அரசுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தமுடிந்தது. இன்று அந்த வலிமை நீர்த்துவிட்டது. அவர்களால் பள்ளியின் தரத்தை கட்டிக்காப்பாற்றக்கூட முடியவில்லை. அதற்கு இன்னும் அதிக ஒருங்கிணைப்பு தேவை. அது இல்லை. இருந்தாலும் அவர்களால் பென்ஷன் வாங்கிக்கொடுக்க முடிகின்றது.

கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் II.

பல ஊர்களிலும் இதே நிலைதான். சமூக மூலதனம் தரத்திலும், அளவிலும் மாறி விட்டது. இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு உள்ளடங்கிய மீனவ கிராமம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊரில் மீனவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் மூலமாக இருபத்தைந்து வீடுகளை அவ்வூர்த் தலைவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அது மாதிரியான தலைமை இப்போது இல்லாததால், சுனாமி வீடுகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தது. மாறாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லாத காலங்களுக்கு, அரசு காப்பீட்டுத்/ ஈட்டுத் தொகை (lean period insurance) வழங்குகின்றது. அதைப் பெற மீனவர்கள், அடையாள அட்டை பெற்று கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி பிரீமியமும் செலுத்தவேண்டும். அந்தப் பணத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பும் சேர்ந்து கடலுக்குச் செல்லாத நான்கு மாதங்களுக்கு கணிசமான ஈட்டுத்தொகை வழங்கப்படுகின்றது. சற்றுத் தொலைவிலிருந்த அலுவலகத்தில் சென்று பிரீமியம் செலுத்துவதில் தொய்வு ஏற்பட, ஆரம்பத்தில் பலகுடும்பங்களால் ஈட்டுத்தொகையைச் சரியாகப் பெறமுடியவில்லை. மீன் வளத்துறையுடன் நெருக்கமாக இருந்த ஒருசிலர், அந்தப்பிரீமியத்தை வசூலித்து கட்ட ஆரம்பித்தார்கள். இரசீதுகளையும் பத்திரமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு பிரீமியம் கட்ட முடியாதபோது அவர்களே கட்டி, பின் அந்த பணத்தை வாங்கிக் கொள்வார்கள். இதற்கு குறைந்த சேவைக்கட்டணமாக மாதம் ரூபாய் ஐந்து பெற்றுக்கொள்வார்கள். பிரீமியம் கட்டவும், ஈட்டுத்தொகை பெரும்போது மீனவர்கள் கொடுக்கும் வெகுமதி என்று இந்த சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எத்துணை பேருக்கு சேவை செய்கின்றார்களோ அதைப்பொருத்து மாதம் குறைந்த பட்சம், 1200-1500 வரை வருமானமீட்டமுடியும். இது அவர்களுக்கு ஒரு (துணை) ஜீவனோபாய உத்தி.

“சார் நாங்க அலையவேண்டியதில்லை. பிரீமியம் கட்டவேண்டிய கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன் சொல்வார்கள். பிரிமியத்தோடு அஞ்சு ரூபாய் சேத்துக் கொடுக்கணும். பணத்துக்கு தட்டுப்பாடு என்றால், இருப்பதை வாங்கிக் கொண்டு அவர்களே மீதிப் பணத்தைப் போட்டு கட்டிவிடுவார்கள். மீதியை எங்கள் கணக்கில் பற்று எழுதிக்கொள்வார்கள். வேறு வழியற்ற முதியோர்களுக்கும், விதவைகளுக்கும் அவர்களே கட்டி விடுவார்கள். ஈட்டுத் தொகையில் அதைப்பிடித்துக் கொள்வார்கள். அவர்களே வயதிற்கு வந்த எல்லோருக்கும் அடையாள அட்டை வாங்கி உறுப்பினராக சேர்த்துவிடுவார்கள்” என்று விளக்கமளித்தார். இதைச் செய்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளல்ல. அவர்கள் Service Providers. இதில் வேறொரு கோணம் இருப்பதை மீனவர்களே உணர்ந்திருக்கின்றார்கள். மீனவர்கள் அல்லாதோருக்கும் அடையாள அட்டை வாங்கி அவர்கள் பெயரில் பிரிமியம் செலுத்தி, ஈட்டுத்தொகையை மீன்வளத் துறை அதிகாரிகளும் இவர்களும் பங்கு போட்டுக்கொள்வார்கள். “அதனால் எங்களுக்கென்ன நஷ்டம்” என்று சொல்லும் மீனவர்களுக்கு இதில் ethical issues இருப்பதாகப் படவில்லை.

இந்த மாதிரியான ஏற்பாடுகள் நமக்கு சிலவற்றை புரியவைக்கின்றது. உள்ளூர் அரசியல்வாதிகளிடம் எதற்குச் செல்ல வேண்டும், உள்ளூர் Service Providers களிடம் எதற்குச் செல்லவேண்டும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட இந்த மாதிரியான மாற்றங்களைக் காணலாம். சமூக மூலதனம் இன்று individual மற்றும் community assets ஆக பரிணாமம் அடைந்திருக்கின்றது. மாறிவரும் இந்தப் பரிணாம மாற்றத்தில் நிறைகள் இருப்பது மாதிரி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒருவகையான Bridging Social Capital. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டாள் சமூக மூலதானத்தின் பல்வேறு கோணங்களைப் புரிந்து கொள்ளலாம்.

நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்

சமூக மூலதனத்தை நான் புரிந்துகொண்டதை இன்னொரு கோணத்தில் இப்படி விளக்கலாம்.

நாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே அவர்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா? என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.

அவ்வளவாக மனமுதிர்ச்சி அடையாத காலத்தில், என்னுடைய புரிதலும் இந்த பொதுக்கருத்தை ஒட்டியே இருந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள, பாலமேடு பாத்திரகாளியம்மன் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு சென்று வந்த பிறகு என்னுடைய புரிதல் மாற்றுருவாக்கமடைந்தது.

பாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்

பாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது? தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ? அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ?

அவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “வொக்……..ளி. புரிஞ்சிக்கிட்டாயா. இது காமராஜரின் ஆதரவு அல்ல. சொல்லப்போனால் பத்ரகாளியம்மன் ஆசிகூட அல்ல. இவர்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,….நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது. அவர்களோடு நீயும் சேர்ந்துவிடாதே”. பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை எனக்குப் புரியவைத்தது.

உலக வங்கியும் சமூக மூலதனமும்.

சமூக மூலதனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்ற உலகவங்கி, தன்னுடைய திட்டங்களிலெல்லாம் மக்கள் அமைப்புகளைக் கட்டி அதை சமூக மூலதனமாக வளர்த்தெடுக்க முனைப்பு காட்டுகின்றது, திட்டச் செலவில் கணிசமான பங்கையும் அதற்கென்று ஒதுக்கீடு செய்கின்றது. சமூக மூலதனம் பற்றி விளக்க வந்த உலகவங்கி, “சமூக செயல்பாடுகளின் பண்பையும்(Quality-தரம்), அளவையும்(Quantity) தீர்மானிக்கும் நிறுவனங்கள்/அமைப்புகள், உறவுமுறைகள்/தொடர்புகள், மற்றும் விதிமுறைகளை சமூக மூலதனம் எனலாம்.. சமூக மூலதனத்தை ஒரு சமூகத்தில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வைத்தல்ல, மாறாக அவைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருக்கும் சக்தியை வைத்தே மதிப்பிடவேண்டும்” என்கிறது. (‘Social capital refers to the institutions, relationships, and norms that shape the quality and quantity of a society’s social interactions… Social capital is not just the sum of the institutions which underpin a society – it is the glue that holds them together’) மனிதர்கள் ஒருவரோடொருவரை, மற்றும் நிறுவனங்களோடு பிணைப்பதில் நம்பிக்கை (Trust) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நம்பிக்கையை உருவாக்க செயல் மற்றும் வாக்குச் சுத்தம் தேவை. அப்படி உருவாகும் நம்பிக்கை பசை (Glue)/ பெவிகால் போன்றது. அதுதான் மனிதர்களைப் பிணைத்து வைக்கும் மந்திரம். சமூக உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை உருவாகும் போது, அது பயனுள்ள காரியங்களைச் செய்ய தூண்டுகோலாயிருக்கும். .

சமூக மூலதனத்திற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். பேஸ்புக், டிவிட்டார் கூட சமூக மூலதனம் தான். ஆனால் எனக்கென்னவோ சமூக மூலதானத்திற்கு நாமெல்லாம் சட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல முன்னுதாரணமாக நாடார் உறவின்முறை படுகின்றது. பாலமேட்டில் மட்டுமல்ல…இன்னும் பல ஊர்களில் செயல்பட்டுவரும் உறவின்முறைகளைச் சொல்லலாம். தரமான பள்ளிகள், சின்னச் சின்னதாக மருத்துவ மனைகள், ஆங்காங்கே நடைபெறும் ஜீவனோபாய மேம்பாட்டு முயற்சிகள் (பால் பண்ணைகள் போல – தங்குமிட வசதிகள்), அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்படும்படியான ஏற்பாடுகள். Bonding/ Bridging/ Linking Social Capital என்று வகைப்படுத்தப்படும் சமூக மூலதனத்தை உறவின்முறை உதாரணம் கொண்டே விளக்கலாம்.

சமூக மூலதனத்தை ஏன் உருவாக்க முடியவில்லை.

நாடார் உறவின் முறை செய்தது மாதிரி ஏன் பிற ஜாதியினரால் பரவலாகச் செய்யமுடியவில்லை?.

குலதெய்வ வழிபாடு இந்துக்களுக்கு முக்கியமான ஒன்று. கடவுளை நம்பாதவர்கள் கூட குலதெய்வ வழிபாட்டை விமர்சிக்க மாட்டார்கள். எனக்கும் ஒரு குலதெய்வம் உண்டு. சமாளிக்க முடியாத சங்கடங்கள் வரும்போது, “ஆத்தா நீதான் கைகொடுக்கவேண்டும்” என்று, பெரும் தெய்வங்களைக்கூட அல்ல, குலதெய்வத்தை நோக்கியே கைதொழும். வெட்டவெளியில், மேற்கூரை இல்லாமல், சூலாயுதத்தையும், ஒரு விளக்குக் கம்பத்தையும் குறியீடாகக் கொண்டதே எங்கள் குலதெய்வம். மகாசிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் எங்கிருந்தெல்லாமோ வந்து நம்பிக்கையுடன் கூடுவார்கள். அமைப்பாளர்கள் என்று யாரும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல, பக்தர்களுக்கு சில வசதிகள் செய்துகொடுக்க சில முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து சில வசதிகள் செய்தார்கள். பின் காலப்போக்கில் இந்தப்பணிகளில் ஈடுபட்ட சிலர் தங்களை நிர்வாகஸ்தர்களாக காட்டிக்கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரிக்கு முன் நிர்வாகஸ்தர்கள் ஆண்டறிக்கை அனுப்புவார்கள். அதில் பல லட்சங்களில் வரவு செலவு நடைபெற்றதாக காட்டப்பட்டிருக்கும். இந்த நல்லபணிக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, ஒரு கணிசமான தொகையை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக்கொண்டோம்.

எங்களின் காணிக்கையை காசோலையாகக் கொடுக்க நினைத்து, அந்த காசோலையை எப்படி எழுதுவது என்று கேட்டபோதுதான், கோவில் பெயரில் வங்கிக் கணக்கு கூட அந்த நிர்வாகிகள் தொடங்காதது தெரியவந்தது. அதில் ஒரு நிர்வாகஸ்தர், “என் பெயரிலே செக் கொடுத்திருங்க’ என்று சொன்னபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பல இலட்சங்களில் ஆண்டு தோறும் காணிக்கைகள் வரும் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வங்கிக் கணக்கு இல்லாதது என்னவோ போலிருந்தது. கோவில் காரியங்களை முன்னின்று செய்யும் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது கூட தெய்வகுற்றமாகி விடுமென்பதால், நான் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு, குலதெய்வத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, எனது உறவு முறைகளின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது. அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படாதபோது, எந்தவொரு அமைப்பிலிருந்தும் நம்மை அன்னியப்படுத்திக் கொள்ளவே தோன்றும். ஆனால் நாம் விலகி இருப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. நம்மை அவர்களை நோக்கி கவர்ந்திழுக்க, பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். கோவிலுக்கு வங்கிக் கணக்கு தொடங்காமல், கோவிலுக்கென்று இணையதளம் தொடங்கவிருப்பதாக மகாசிவராத்திரியன்று அவர்கள் ஒலிபெருக்கியில் மீண்டும், மீண்டும் சொன்னதுகூட அந்தமாதிரியான உத்திதான். தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தன்முனைப்பான செயல்பாடுகளே அவர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. இதுமாதிரியான தலைமையை நான் கவனித்த அளவு நாடார் உறவின்முறையில் இல்லை.

சமூக மூலதனம் உருவாக கையாளப்படும் உத்திகள்.

சமூக அமைப்புக்களின்/நிறுவனங்களின் மீதான நம்பிக்கை நீர்த்துப் போகும் போது மக்கள் அதிலிருந்து விலகி நிற்கத் தொடங்குகின்றார்கள். மக்கள் பங்கெடுத்தால்தானே அமைப்புகள் உயிர்பெறும். மக்கள் பங்கெடுத்தால்தானே பணம், அதிகாரம், பேரம் பேசும் திறனை அதிகரிக்க முடியும். விலகி நிற்கும் சாதாரண மக்களை அமைப்புகள் நோக்கி இழுக்க, பயத்தையோ, ஜாதி/மத/மொழி வெறியையோ, வாக்குறுதிகளையோ உருவாக்க வேண்டியுள்ளது. இந்த கண்ணோட்டத்தில்தான் இப்போதைய பல அமைப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பஞ்சாயத்து/ஊராட்சி கூட ஒரு சமூக மூலதனம்தான். அதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் பங்கெடுக்காமல் அது உயிர் பெறாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் மக்கள் பங்கேற்றால்தான் அது உயிர்பெறும். அந்த பங்கேற்பை பெறுவதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன. வாக்குறுதிகளும், பணமும், ஆரோக்கியமற்ற முறையில் தூண்டப்படும் வேறு சில உணர்வுகளே மக்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்கின்றது.

மக்களின் நம்பிக்கையை வைத்து இன்றைய ஊராட்சிகள் செயல்படவில்லை. மாறாக அரசு நிதி ஒதுக்கீட்டில்தான் உயிர் வாழ்கின்றது. அரசாங்கத்தின் நிதியுதவி இருக்கும்போது மக்களாவது. மண்ணாங்கட்டியாவது. மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்காமல் தன்னாட்சியை அர்த்தமுள்ளதாக்குவது சற்று சிரமம் தான்.

நம்து தவறான அனுமானங்களே தன்னாட்சிக்கு தடைக்கல்.

மேலிருந்து ஆள்வோர்தான் தன்னாட்சிக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது ஓரளவிற்குத்தான் உண்மை. மாறாக, நாம் ஒவ்வொருவரும்தான் நம்மையறியாமலே தன்னாட்சிக்குத் தடையாக இருக்கின்றோம். கீழ்மட்டத்திலிருப்பவர்கள் எல்லாம் மந்த புத்தியுடனும், சுயநலத்துடனும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பதே நம்மில் பெரும்பாலோருடைய அனுமானம். இது ஆரம்பப்பள்ளி ஆசிரியரைப் பற்றிய நம்முடைய கணிப்பில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். அவர்கள் பொறுப்பற்றவர்கள். பள்ளிக்குத் தாமதமாக வருவார்கள். மேஜையில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தூங்குவார்கள். இதற்குமேல் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கதையும் ஒன்றுண்டு. பள்ளிக்கு வந்த ஆய்வாளர் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்ய “ஜனகனின் வில்லை யார் ஒடித்தது? என்று கேட்க, “ஜனகன் என்ற பெயரில் இந்த வகுப்பில், பள்ளியில் யாரும் படிக்கவில்லையென்றும், அப்படி யாரேனும் தவறுதலாக உடைத்திருந்தால் அதற்கான தண்டத் தொகையை மாணவர்களுக்குப் பதிலாக தானே கட்டிவிடுவதாக” அசட்டுத்தனமான பதில் சொல்லும் நபராகவே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் காலமெல்லாம் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றார். அதற்கு மாறாக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கொஞ்சம் புத்திசாலி. அவரைவிட கல்லூரி ஆசிரியர் புத்திசாலி. அவரையும்விட பலகலைக்கழக ஆசிரியர் அதி புத்திசாலி போன்ற அனுமானங்களால் நம் மூளையை நிரப்பி வைத்திருக்கின்றோம். ஒவ்வொரு நிலையிலும் புத்திசாலித்தனமும், அசட்டுத்தனமும் நிறைந்திருந்தாலும், கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அசட்டுத்தனமே பகிரங்கப்படுத்தப்படுகின்றது.

இதே அனுமானம்தான் ஆட்சியாளர்களைப் பற்றியும் நமக்கிருக்கின்றது. ஒரு ஊராட்சி தலைவர் மந்த புத்திக்காரராக, சுயநலக்காரராக, ஜாதி, மதவெறி கொண்டவராக, பெண்பித்தராக, உள்ளூர் வளங்களைப் பற்றி போதுமான அறிவில்லாதவராக சித்தரிக்கப்படுகின்றார். ஆனால் அதற்கு மாறாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை மனமுதிர்ச்சி கொண்டவராகவும், அதற்குமேல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எல்லாம் தெரிந்த ஞானவானாகவும் நாம் உருவகப்படுத்தி வைத்துள்ளோம். நம் நாட்டை, மாநிலத்தை பொறுப்பற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம். அதனால் ஆபத்தில்லை. ஆனால் இந்தியா கிராமங்களில் வாழ்வதால் அதை எப்படி பொறுப்பற்றவர்களிடம் ஒப்படைக்க முடியும்? அதனால்தான் கிராமங்களுக்குத் தன்னாட்சி கொடுக்க தயங்குகின்றோமோ?

நமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடந்த காலத்தில் பஞ்சாயத்து அமைப்புகளை வைத்து பல சாதனைகளைச் செய்துள்ளோம். செய்யத் தவறியுமிருக்கின்றோம். அவைகளின் சாதனைகள்தாம் அவைகளை மீண்டும் உயிர்பிக்க உதவியது. அவைகளின் தவறுகளே அவைகளை இடையில் சிறுதுகாலம் செயல்படவிடாமலும், இப்பொழுது அரசியல் சட்டப்படி அவை நித்தியமாகிவிட்டாலும், அவைகளுக்கு முழுஅதிகாரம் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டையாகவும் நிற்கின்றது.

.தொடக்க காலத்தில், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை போன்ற பல பணிகள் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகக் கட்டுபாட்டிற்குள்ளேதான் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சில குறைபாடுகளால், அத்துறைகளை பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து பிரித்தெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பிரதானிகள் பல தவறுகளை செய்து வந்தாலும், அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதில்லை. மாறாக அதைச் சுட்டிக்காட்டினாலே அது உரிமைப் பிரச்சனையாகி விடுகின்றது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கள், நகரசபைகள் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கலாம். அவர்களைப் பதவிநீக்கம் செய்யலாம்.

நமது கிராமங்களுக்குத் தன்னாட்சியை அதன் உண்மையான அர்த்தத்தில் கிடைக்கச் செய்ய நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள். கிராம தன்னாட்சி சரியான முறையில் நடந்தால், ஆங்காங்கே மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மக்கள் தலைவர்கள் உருவாகிவிடுவார்கள். இந்த மாதிரியான தலைவர்கள், சில மதிப்பீடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருதேர்தலிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் இவர்களிடம் வோட்டுபிச்சை கேட்கவேண்டிவரும். அதற்கு மாறாக மதிப்பீடுகளையும், விதிமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்தால், மக்களை அணுகுவது–பணத்தை வைத்தோ, பொய்யான வாக்குறிதிகளை வைத்தோ அணுகுவது எளிதாக இருக்கும். “முன்னத்தி ஏர் போற சாலை ஒட்டித்தான் பின்னத்தி ஏர் போகும்” என்பது பழமொழி. பாராளுமன்றம், சட்டமன்றம் போலவே நம்து ஊராட்சிகளையும் நாம் வார்த்தெடுத்துவிட்டோம். ஊராட்சிகள் அப்படி இருப்பதுதான் நம்முடைய அரசியல் வாதிகளுக்கு வசதியானது.

இதற்கு மாற்று வழி என்ன?

பஞ்சாயத்துக்கள் செயல்படாமிலிருந்த கடந்த கால்த்தில் ஒரு கிராமத்தில் சில முயற்சிகளை முன்னெடுத்தேன். நமது நாட்டை வழிநடத்த பாராளுமன்றம். மாநிலத்தை வழிநடத்த சட்டமன்றம் போன்று ஏன் கிராமங்களை நிர்வாகிக்க கிராமப் பாராளுமன்றம் கூடாது என்று நினைத்து கிராமப் பாராளுமன்றம் தொடங்க முனைந்தோம். சில பிரச்சனைகள் வந்தது. அதைக்கையாள சில முயற்சிகள்…..அந்த ஊர் மக்களுக்கு பிடிக்காத பாரம்பரியத் தலைமையை செயலற்றதாக்க ஒரு கோவிலைக் கட்டினோம். கோவிலின் குடமுழுக்கை ஒட்டி பிரச்சனை பூதாகரமாகி, சட்ட ஒழுங்குப் பிரச்சனையானது. இதில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த குன்றக்குடி அடிகளார், ”நீங்கள் செய்த முயற்சி பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்திற்காக நீங்கள் காய்களை நகர்த்திய விதம் அறிவு பூர்வமானது. இருந்தாலும் ஆரம்பத்திலே ஒரு தவறைச் செய்துவிட்டீர்கள். நீங்கள் கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கக்கூடாது. பாராளுமன்றம், சட்டமன்றம் என்ற வார்த்தைகளை மக்கள் எப்போதும் அதிகாரத்தோடு தொடர்பு வைத்தே புரிந்து கொள்கின்றார்கள். கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தை அவர்களுக்கு போதை ஏற்றிவீட்டது போலும். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட ஆரம்பிக்க உங்கள் நோக்கம் பாழாகிவிட்டது. பாராளுமன்றம் என்ற வார்த்தைக்குப் பதிலாக கிராம திட்டக்குழு என்ற வார்த்தையை உபயோகித்திருந்தால் அதிகாரப் போட்டி வந்திருக்காது. திட்டமிடுதல் என்ற வார்த்தை எதிர்காலத்தைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கும். அதிகாரத்தை கைப்பற்ற அல்ல மாறாக தங்களுக்கு எது தேவை என்று கற்பனை செய்ய தூண்டப்பட்டிருப்பார்கள்.” என்றார். அதுதான் உண்மை.

ஜனநாயகம்/அதிகாரப் பரவல் என்ற பெயரில், பாராளுமன்றத்திலிருந்தும், சட்டமன்றத்திலிருந்தும் அதிகார போதையை, பொறுப்பின்மையை, சுயநலப் போக்கை நமது ஊராட்சி அமைப்புகளுக்கும் பரவலாக்கிவிட்டோமோ என்று தற்போதைய நிலைமை நம்மை எண்ணவைக்கின்றது.

சமூக மாற்றங்களும் சமூக மூலதனமும்.

அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்று நாம் கண்காணிக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு திட்டமும் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் கவலைகொள்வதில்லை. குடிமராமத்து முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நம் நீராதாரங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தோம். அதனால் நீராதாரம் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் இந்த அதிகார மாற்றத்தால் சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கிலெடுக்கத் தவறிவிட்டோம். சிறு, குறு விவசாயிகள் என்ற கருத்தாக்கமும் அதையொட்டி வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தின எனபதை ஒரு கிராமத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். “முன்னெல்லாம் சொத்து பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பத்திரங்களில் இன்னார் இன்னாரென்று குறிப்பிட்டு விவசாயிகளெல்லாம் சுகஜீவனம் என்றே எழுதுவார்கள். இப்பொழுதெல்லாம் சுகஜீவனத்தை தவிர்த்துவிட்டு இன்ன ஜாதி, விவசாயம் எனறு குறிப்பிடுகின்றார்கள். நிலச்சுவான்தார், நிலக்கிழார் என்ற பிரயோகம் கல்யாணப் பத்திரிகைகளோடு நின்றுவிட்டது. பரிவர்த்தனைப் பத்திரங்களில் அதை மறந்தும் குறிப்பிடுவதில்லை” என்றனர்.

அரசின் கொள்கை வரைவுகள், கட்டமைப்பு வசதிகள் மனித உறவுகளில், அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. “தொழு நிறைய மாடு நின்னுச்சி. வண்டிவண்டியா குப்பை அடிச்சோம்” என்று பெருமை பேசுபவர்கள், இயற்கை உரத்தின் அருமை பேசுபவர்கள், இன்றைக்கு ஏன் அதையெல்லாம் விட்டார்கள்?. ஏன்னா அன்னைக்கு எத்தனை மாடு வச்சிருந்தாலும் குடிகஞ்சிக்கு மாங்கு மாங்கென்று வேலை பார்க்க ஒரு ஏழைக்கூட்டம் இருந்திச்சி. இன்னைக்கு அது மாறிறிச்சி” பசுமைப் புரட்சி நிலத்தையும் நீரையும் பாழ்படுத்திவிட்டது என்று கவலைப்படுபவர்கள், பசுமைப்புரட்சி சமூக உறவுகளில் கொண்டுவந்த மாற்றங்களை மறந்துவிடுகின்றார்கள்”. நாம் கறித்துக்கொட்டும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிய தாக்கத்தைவிட, பசுமைப் புரட்சி சமூக உறவுகளிலும், சமூக அமைப்புகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

ஒரு டிராக்டர் ஒரு ஊரில் அறிமுகமானால், அங்கே பதினெட்டு விவசாயத் தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள் என்று ஆரம்பத்தில் என் பட்டப்படிப்பின் போது படித்தேன். பின் அலுவலகங்கள் கணனி மயமான காலகட்டத்தில் எத்துணையோ பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவரங்களைக்காட்டி வாதிட்டோம். இப்பொழுதுகூட அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் எத்தனையோ சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று புள்ளிவிவரங்களின் துணைகொண்டுதானே எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அதுவெல்லாம் சமூக உறவுகளில், சமூக அமைப்புகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி பிரக்ஞையும் நமக்கில்லை.

மின்சாரம், போக்குவரத்து, சொல்லப்போனால் நமக்குத் தெரிந்து அறிமுகமான வயது வந்தோர் கல்வி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், தொலைக்காட்சி, மினிபஸ், ஷேர்ஆட்டோ, ரேஷன் அரிசி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று….ஏன் டாட்டாவின் சின்னயானை கூட சமூக உறவுகளை, சமூக அமைப்புகளை புரட்டிப் போட்டிருக்கின்றது. அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நீர்த்துப் போன சமூக மூலதனத்தை நம்மால் புனரமைக்க முடியாது. முன்னேற்றத்திற்கு துணை புரியும் புதிய சமூகமூலதனங்களை நம்மால் உருவாக்கமுடியாது.

செயல்படாமல் இருக்கின்ற பழைய சமூக மூலதனங்களை செயல்படவைக்கவும், புதிய சமூக மூலதனங்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றது. என்னென்ன மாதிரியெல்லாம் நாம் திட்டமிட்டால் இதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

March 29, 2013

அன்வர் பாலசிங்கத்தின் இருநாவல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings

Filed under: Uncategorized — Tags: , , , , — cdmiss @ 12:55 am

“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” மற்றும் “செந்நீர்” என்ற இரண்டு நாவல்களைப் படிக்குமுன் அன்வர் பாலசிங்கத்தைப் பற்றி நான் ஏதும் அறிந்திருக்கவில்லை. அந்த இரண்டு புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னவர் நண்பரும், மாணவருமான வினோத் அம்பேத்கார். “உங்களை மாதிரி ஆசிரியர்களெல்லாம் நாளொன்றுக்கு குறைந்தது 200 பக்கங்களாவது படிக்கவேண்டும்” என்று குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) சொன்னதை வருடத்திற்கு 200 பக்கங்கள் என்று புரிந்து கொண்டவன்.  ஆனால் வினோத் அம்பேத்காரின் ராசி, அவர் எதைக் கொடுத்தாலும் என்னையறியாமல் படித்துவிடுகின்றேன். அவரே பணம் செலவழித்து, புத்தகங்கள் வாங்கி, சிரமம் பாராமல் என்னிடம் தந்து, படிக்கச் சொல்வதைப் பார்க்கும் போது, குன்றக்குடி அடிகளாரின் அறிவுரையை எப்படியும் என்னை பின்பற்ற வைத்துவிடுவது என்று சபதம் எடுத்திருப்பது மாதிரிதான் தெரிகின்றது.

அன்வரின் புத்தகங்களைப் படித்தபின்பு, அன்வரின் மீதும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்கருவின் மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. விரிவான வாசிப்புப் பழக்கம் எனக்கில்லையாதலால், என்னால் இலக்கிய விமர்சனமெல்லாம் செய்யமுடியாது. நாம் வாசிப்பதெல்லாம் எப்படி சமூகத்தைப் பற்றிய நம் புரிதலை விரிவாக்குக்கின்றது என்பதை வைத்துத்தானே ஒரு புத்தகத்தையும், அதை எழுதிய ஆசிரியரையும் நாம் மதிப்பீடு செய்கின்றோம். அந்த வகையில், சில கோணங்களில் என் பார்வையை விரிவாக்கிய அன்வர் மீதும் அவரின் எழுத்துக்கள் மீதும் எனக்கு மரியாதை ஏற்பட்டது.View album

“கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” மதம் மாறிய இஸ்லாமியர்களைப் பற்றிய கதைக்களம். அது மாதிரியான களத்திற்கு ஏற்கனவே நான் அறிமுகமாகியிருந்தேன். செங்கோட்டைக்கு அருகில், அச்சன்கோயில் செல்லும் வழியில் உள்ள மேக்கரை என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள்தான் மீனாட்சிபுரம், (நாவலில் குறிப்பிடப்படும் காமாட்சிபுரம்/பில்லா நகர்) மதமாற்றத்திற்கு வித்திட்டது என்று சொல்வார்கள். மேக்கரை கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த (நேத்ரா) இராமசந்திரன் அவர்களோடு சில பணிகளை முன்னெடுத்தோம். தன்னுடைய வாழ்வும் வளமும் அச்சன்கோயில் ஐயப்பன் மற்றும் மேக்கரையில் எழுந்தருளியுள்ள கோட்டைவாசல் கருப்பனால் கிடைத்த ஆசீர்வாதம் என்று நம்புகின்றவர் இராமசந்திரன். அச்சன்கோயில் கேரளாவில் உள்ளதால், தமிழக எல்லையிலுள்ள மேக்கரை முன்னேற்றத்திற்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய நினைத்தார். அவருடைய பணிகளில் நான் உடனிருந்தேன். ஏறக்குறைய ஐந்தாறு இலட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு கிராம அறிவு மையம், மேக்கரை பள்ளிக்கு நண்பர் பாலாஜி மூலம் கணனி மற்றும் கணனிப் பயிற்சி, மேக்கரை மாணவர்கள் அரசுப்பேருந்து சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு அரசுப் பேருந்துகளின் நேரத்தை பெருமுயற்சி செய்து மாற்றியமைத்தது, மேக்கரையில் சமூக நலக்கூடம் கட்ட இடம் வாங்குவதற்கு திரு.இராமசந்திரன் அவர்கள் செய்த கணிசமான பொருளுதவி, மேக்கரை மாணவர்களின் கல்வித்தரம் உயர நடத்திய Tution Centre மற்றும் அங்கு பால்வளம் பெருக்க எழெட்டு மாதம் பணியிலமார்த்தப்பட்ட முழுநேரப் பணியாளருக்கான ஊதியம் (மாதம் 10000 ரூபாய்) என்று பல இலட்சங்கள் முதலீடு செய்தும், நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அதிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேக்கரை ஒரு அழகான கிராமம். அந்த அழகிற்கு பின்னே வறுமையும், இயலாமையும் மறைந்திருந்ததை எங்களால் உணரமுடிந்தது. மேக்கரை நிலங்கள் ஒரு பாரம்பரிய சைவ ஆதீனத்திற்குச் சொந்தமானது. நிலவுடமையில் இருந்த கட்டுப்பாடுகளால், அம்மக்களால் விவசாயத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அதில் எங்களால் தலையிடமுடியாதாகையால், வேறு வகைகளில் மக்களின் விருப்பங்களை அறிந்து சில முயற்சிகளை முன்னெடுத்தோம். மேக்கரையில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க, அம்மக்கள் விரும்பியவற்றையே அவர்களுக்குத் தரவேண்டுமெண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தோம். மக்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட விருப்பங்களினடிப்படையில் செயலாற்ற முற்பட்டபோது, அந்த முயற்சிகளில் அம்மக்கள் பாராமுகமாக நடந்துகொண்டார்கள்.

உதாரணமாக மேக்கரை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கலாம் என்று யாரோ சொன்ன வாக்குறுதியை முன்வைத்து, பலபேரிடம் நன்கொடைவாங்கி கணிசமான பொருட்செலவில் விழா எடுத்தவர்கள், மேக்கரை பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எங்கள் முயற்சியில் வழங்கப்பட்ட கணணிகளை பயன்படுத்துவதில் அந்த அளவு ஆர்வம் காட்டவில்லை. எங்களிடம் தொடர்பிலிருந்த சமூகத் தலைவர்களின் பேச்சில் இருந்த ஆர்வத்தை அவர்களின் செயலில் பார்க்கமுடியவில்லை. அவர்களைப் புரிந்துகொள்வது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஜாதியென்று பார்த்தால் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களும், அவர்களிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியர்களும்தாம். பள்ளர் இனமே அங்கு பெரும்பான்ன்மையினம். மதம் மாறியிருந்தாலும் ஜாதி ஒன்றுதானே என்று எண்ணும்படியாகவே அவர்களுக்கிடையேயான உறவுமுறைகளும் இருந்தது. எங்களுடைய புரிதல் தவறு என்று அன்வரைப் படித்தபின்புதான் உணரமுடிந்தது.

அன்வரவர்களின் “கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” படித்த பின்புதான், மேக்கரை சமூக உறவுகளில் இருந்த உள்விரிவாக்கம் (Complexity) புரியவந்தது. மதம், அதையொட்டி ஏற்படும் நடைமுறை ஆசார நிர்பந்தங்கள், அதனடிப்படையில் கட்டமைக்கப்படும் ஆளுமைகள் இவையெல்லாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய விசயங்கள். இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலுமுள்ள வழிபாட்டுடன் கூடிய பிரசங்கங்கள், அதைப் பின்பற்றுபவர்களின் ஆளுமையை ஓரளவு கட்டுப்படுத்தவும், கட்டமைக்கவும் செய்கின்றது. ஒரே ஜாதிதான் என்றாலும் இருவேறு நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் தரும் உயர்வு தாழ்வு மனப்பானமை – சிக்கலான ஆளுமைகளை உருவாக்குகின்றது. திருமணமாகாதிருக்கும் முதிர்கன்னிகள் பில்லா நகரின் பிரச்சனை. அந்த பிரச்சனையையொட்டி அன்வர் வெளிப்படுத்தும் வலி ஒருபக்கம். அப்பிரச்சனையை புரிந்து கொள்ளவும், தீர்க்கவும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அன்வர் வெளிப்படுத்தும் பார்வை இன்னொரு பக்கம். ஒரு பிரச்சனைக்கான தீர்வு முக்கியமென்றாலும், அந்த பிரச்சனை பற்றிய விவாதங்கள் அப்பிரச்சனையின் பல பரிமாணங்களை புரியவைக்கும். தீர்வு எதையும் அந்தப் புத்தகம் முன்வைக்கவில்லை. பல பிரச்சனைகளுக்கு நம்மிடம் தீர்வில்லை. தீர்வுக்கான நம்முடைய முயற்சிகளே சில நேரங்களில்பிரச்சனைகளாகி விடுகின்றது. இதுதான் எதார்த்தம். இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது.

முன்னேற்ற முயற்சிகளிலும் பல நேரங்களில் நாம் அடைய வேண்டிய இலக்குகளைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கின்றேம். நாம் அடையவேண்டிய இலக்குகளை அடைந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நமக்குக் தெரிந்திருந்தாலும், அந்த இலக்குகளின் மீது நம்மால் செயல்படமுடியவில்லை. பிரச்சனைகளும், முன்னேற்ற முயற்சிகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பில்லா நகரில் பிரச்சனை விவாதிக்கப்பட்டதை அன்வரால் இலக்கியமாக்கமுடிந்தது. மேக்கரையில் நாங்களெடுத்த முன்னேற்ற முயற்சிகளில், மக்களுடைய பாராமுகம் வேறு வகையான உரையாடல்களின் விளைவாய் இருந்திருக்கலாம். அந்த உரையாடல்கள் எங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை என்று சொல்வதைவிட, முன்னேற்றப் பணியாளர்கள் அது மாதிரியான உரையாடல்களைக் கேட்கும் உத்தியைக் கைவரப் பெறவேண்டும் என்றே எனக்குப் படுகின்றது. Development Workers need to have sensitive ears என்று சொல்வது இதனால்தான்.

செந்நீரின் கதைக்களம் சற்று விரிவானது. வலிமிக்கதும் கூட. காணாமல் போன தங்கள் மகனைக் கண்டெடுப்பதில் சுப்பன் தம்பதிகளில் தொடங்கும் ஆதாயநாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து காட்டுராஜா, முனியாண்டி, மூணாறு எம்.எல்.ஏ பூபாலன், தொழிற்சங்கங்கள், காவல்துறை என்று விரிந்துகொண்டே செல்கின்றது. பிரச்சனையைத் தீர்க்க முனையும் ஆதாய நாட்டமுடையவர்களில் சுயநலமற்ற கதாபாத்திரங்களையும், பிரச்சனைக்குக் காரணமான மிக மோசமான சூழ்ச்சியாளர்களையும், பிரச்சனையை வைத்து ஏமாற்றிப் பிழைக்க முயல்பவர்களையும், அரசு மற்றும் எஸ்டேட் நிறுவனம் போன்ற ஆதாயநாட்டமுடைய பாத்திரங்கள் எப்படி பிரச்சனையைக் கையாள்கின்றன என்று வாசகனுக்கு வலிக்கும்படியாகவே கதை சொல்லப்படுகின்றது. வலி, போராட்டங்கள், மரணங்கள், கடைசியில் எம்.எல்.ஏ கொல்லப்படுதல் – எந்த தீர்வுக்காக இதெல்லாம் நடக்கின்றதோ, அதாவது கிட்டுவைக் கண்டடைவது, அது கடைசிவரை சாத்தியமாகவில்லை. இது மாதிரிதானே நம்முடைய முன்னேற்ற முயற்சிகள் அது கண்ணாமூச்சி விளையாட்டாகவே ஆகிவிடுகின்றது. பல முயற்சிகள் முளையிலே கறுக்கப்படுகின்றன. இன்னும் சில நேரங்களில், நம்பிக்கையை வளர்த்து, அதை வளரவிட்டு கிள்ளி எறிந்துவிடுகின்றார்கள்.

முன்னேற்றப் பணிகளில், குறிப்பாக ஜீவனோபாய மேம்பாட்டுப் பணிகளில் ஆதாய நாட்டமுடையவர்கள் (Stake Holders) என்ற கருத்தாக்கம் மிக முக்கியமானது. ஆதாய நாட்டமென்றால் ஒரு முயற்சியில் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும், பாதிப்புகளையும் உணர்ந்து அதற்கேற்ப அந்த முயற்சிகளுக்கு ஆதரவோ, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவது. சிலநேரங்களில் தங்களுக்கு அனுகூலம் என்று அறிந்திருந்தாலும், தன்னுடைய எதிரிக்கு இன்னும் அதிக அனுகூலமாகும் என்று தெரியவரும் போது, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவார்கள். ஆதாய நாட்டம் என்பது கொச்சையான வார்த்தையல்ல. புரிந்து கொண்டு செயல்பாட்டில் கையாளவேண்டிய ஒரு முக்கியமான கருத்தாக்கம்.

இதுவெல்லாம் தெரிந்துதான் மேக்கரை சமூகத்தை அனுகினோம். ஆதாய நாட்டமுடையவர்களை சமநிலைப்படுத்த (Stakeholder Balancing) சில முயற்சிகளைச் செய்தோம். காரணம் மேக்கரையில் செய்யப்பட்ட முதலீடுகளெல்லாம் திரு.இராமச்சந்திரன் அவர்களின் சேமிப்பிலிருந்து செய்யப்பட்டவை. நன்கொடைகள் பெற்றோ, வெளிநாட்டு உதவி பெற்றோ காரியமாற்றியிருந்தால், விளைவுகளைப் (Impact) பற்றி அதிகமாக கவலைப்படத் தோன்றியிருக்காதுதான். ஆகையால் மிக நிதானமாக ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு காரியமாற்ற வேண்டிய கட்டாயம். புரிந்து கொண்டுதான் செயலாற்றுகின்றோம் என்று நாங்கள் நினைத்தாலும், எதிர்பார்த்த குறைந்த பட்ச ஒத்துழைப்புகூட அம்மக்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆகையால் ஒரு நல்ல மனிதரின் சேமிப்பில் கணிசமான தொகை வீணாவதற்கு நாமும் காரணமாயிருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே எனக்கேற்பட்டது.

மேக்கரையினரின் பாராமுகத்திற்கான காரணம் தெரியாமல் நான் பலநாட்கள் குழம்பிப் போயிருக்கின்றேன். அன்வரவர்களின் இரண்டு புத்தகங்களைப் படித்தபின் சில புரிதல்கள் ஏற்பட்டது. ஆதாய நாட்டமுடையவர்கள் (Stakeholders) என்ற கருத்தாக்கத்தின் பன்முகப் பரிமானங்களை அவருடைய புத்தகங்களைப் படித்தபின்பே உணர முடிந்தது. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதிலும், ஒரு புது முயற்சிக்கான ஆதரவிலும், எதிர்ப்பிலும் ஜாதி, மதம், அரசியல் மற்றும் பிற காரணங்கள் கணிசமான பங்கு வகிக்கும் என்பது பொதுவான புரிதல். இந்த பொதுவான புரிதலைத் தாண்டி சில நுட்பமான விசயங்களை அன்வரவர்கள் தன்னுடைய இரண்டு நாவல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார்.

நல்லது என்பதற்காக எந்தவொரு செயல்திட்டத்திற்கும் உடனடி சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. நல்லவைகளையும் புரிந்துகொண்டு செயல்பட செந்நீர் நாவலில் வரும் முனியாண்டி போன்ற கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றார்கள்.

ஜாதி, மதம், அரசியல் சார்ந்த ஆதாய நாட்டம் எப்பொழுதும் ஒருமித்ததாக, தட்டையாக இருப்பதில்லை எனபதை அன்வர் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றார். இது தவிர மொழி, இனம், வரலாற்றுப் புரிதல் போன்ற இன்ன பிற காரணங்களும் ஆதாய நாட்டத்தை (பிரச்சனைகளைக் கையாள்வதில்) எப்படி வழிநடத்துகின்றது என்பதை அன்வர் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றார். நூர்ஜஹானின் மரணம், கல்லூரி மாணவன் கிட்டு காணாமல் போவது -. இந்தப் பிரச்சனைகளை ஒரு சமூகம் எப்படிக் கையாள்கின்றது என்பதை அன்வர் எடுத்துச் சொல்லும் போது ஆதாய நாட்டத்தின் பன்முகப் பரிமாணங்களை கோடிட்டுக் காட்டுகின்றார்.

கருப்பாயீ என்ற நூர்ஜஹானை இஸ்லாத்திற்கு எதிரான குரலாகவும், செந்நீரை தமிழ் தேசிய உணர்வை தூண்டுவதாகவும் எடுத்துக்கொண்டு அன்வருக்கு ஆதரவும் எதிர்ப்பும் விமர்சனங்களில் வெளிப்படுகின்றது. ஆனால் எனக்கென்னவோ இருவேறு பிரச்சனைகளை மாறுபட்ட சூழலில் வாழும் இரு சமூகங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை விளக்கிச் சொல்வதாகவே படுகின்றது. இந்த இரண்டு நாவல்களிலும் வரும் முக்கிய கதாபாத்திரங்களை, பிரச்சனைகளுக்கு உள்ளான, மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கமுயலும் ஆதாய நாட்டமுடையவர்களாக கருதும் பட்சத்தில், பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் கையாளும் அணுகுமுறையை, அவர்கள் சார்ந்த மதம், ஜாதி, மொழி, இனம், வரலாற்றை அவர்கள் புரிந்துகொண்ட பாங்கு போன்ற பல்வேறு காரணங்களும், அந்த காரணங்களில் இருக்கும் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கை சார்ந்த அடர்த்தியுமே தீர்மானிக்கின்றது.

தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக அன்வர் வெளிப்படுத்தும் வலி, ஆதங்கம், கோபம் போன்ற வெளிப்பாடுகளை ஆதாய நாட்டம் என்ற academic கருத்தாக்கத்தை வைத்து நீர்த்துவிட எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் அந்த வலியைத் தாண்டி அன்வரின் எழுத்துக்களை புரிந்து கொள்ள முயலும் போது, ஒரு academic கருத்தாக்கம் பற்றிய புரிதல்கள் சட்டென்று விரிவைடைகின்றது. ஆதாய நாட்டத்தை ஒருசிலரின் உளச்சிக்கல் அல்லது சுயநலம் அல்லது பிறகாரணங்கள் காட்டி குறுக்க முயற்சிக்காமல், எதார்த்தவாழ்வின் உண்மைகள் என்று புரிந்துகொண்டு செயல்படும்போது முன்னேற்றப் பணியாளர்கள் தங்கள் செயல்பாடுகளில் அதை சற்று லாவகத்துடன் கையாளக் கற்றுக்கொண்டால் இன்னும் அதிக உயரத்தை எட்டலாம் என்றே எனக்குப் படுகின்றது. அதற்கு அன்வரின் புத்தகங்கள் உதவும். இந்தப் புரிதல்தான் அன்வரின் மீதும், அவரின் எழுத்துக்கள் மீதும் என்னை அபிமானம் கொள்ள வைத்தது.

March 16, 2013

நம்பிக்கைகளின் மீது ஊற்றப்பட்ட ஆசிட்

Filed under: Uncategorized — Tags: , , , — cdmiss @ 4:52 pm

எண்பதுகளின் (1980) தொடக்கத்தில் வைகையாற்றில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட, மதுரை நகரில் ஆற்றங்கரையோரமிருந்த குடிசைகள் அடித்துச் செல்லப்படுவது தொடர்கதையானது. இதைத் தவிர்க்க வைகைக் கரையோரமிருந்த குடிசைவாசிகளுக்கு பாதுகாப்பான மாற்றிடக் குடியிருப்புகளைத் (Resettlement) தர அரசு திட்டமிட, அதன்படி 2000 குடியிருப்புகளைக் கட்ட தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவனியாபுரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, சாமநத்தம் கிராமத்தில் கண்மாய் புறம்போக்கு இதற்காக தேர்வு செய்யப்பட்ட்டது. வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, ஏற்கனெவே தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு 1989 ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆரம்பமானது. (ஒரு வீட்டின் மதிப்பு 11500 ரூபாயென்று நினைவு. 500 ரூபாய் முன்பணம் செலுத்தி ஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்துகொண்டு மாதம் 80 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு தவணைமுறையில் பணம் கட்டவேண்டும்) தகவல் தெரிவித்தும், வீடுகளைப் பெற்றுக்கொள்ள பெரும்பாலான பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை. அப்பொழுது குடிசைமாற்று வாரியத்தில் களப்பணிக்காகச் சென்றிருந்த மாணவர்களிடம், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை ஏற்கும்படி (Convince) செய்ய வேண்டிக் கொள்ளப்பட்டார்கள்.

clip_image002

பயனாளிகள் வீடற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை ஏற்றுக்கொள்ள முன்வராதாதற்கு பல்வேறு காரணங்கள். புதிய குடியிருப்பு அவர்களின் அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து மிகத் தொலைவில் அமைந்திருந்தது. பெயருக்கென்று அமைக்கப்பட்ட சாலையும், ஓரிரு முறை வந்து செல்லக்கூடிய பஸ் வசதியும் அவர்களுக்கு திருப்தி தருவதாக இல்லை. நிலத்தடி நீர் இருந்தாலும், அதைக் குடிக்க உபயோகிக்க முடியாது. மார்க்கெட், மருத்துவமனை என்று எந்த வசதியும் அருகில் இல்லை. அப்பொழுது நானே மதுரையில் சொந்த வீடில்லாமல்தான் இருந்தேன். ஆகையால் “வசதிகள் இல்லைதான். அங்கு செல்வதில் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். 11500 ரூபாய்தான். மாதம் 80 ரூபாய் தவணை. இருபது வருடங்களுக்கு கட்டலாம். குடியிருக்கக் கூட வேண்டாம். எதிர்காலத்திற்காகும் முதலீடு என்றாவது இந்த அதிர்ஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று ஒரு முப்பது பயனாளிகள் வரை ஓடியாடி கன்வின்ஸ் செய்தோம். சில பயனாளிகளை மாணவர்களும் நானும் சைக்கிளில் அழைத்துச் சென்ற அனுபவமும் உண்டு.

அந்த பருவ (Semester) களப்பணி முடிந்தது. அதன் பிறகு அங்கு செல்ல வாய்ப்பேற்படவில்லை. இருந்தாலும் கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் பளிச்சென்று இருந்த பெரியார் நகர் என் மனதை விட்டு அகல மறுத்தது. 60 அடி அகலமுள்ள பிரதானச் சாலை. 40 அடி அகலமுள்ள துணைச் சாலை. 30 அடி அகல குறுக்குச் சாலை. அசவுரியங்கள் இருந்தாலும், வீடற்றவர்களுக்கு அது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே எண்ணியிருந்தேன். உலக வங்கி கடனல்லவா? தனியார் கட்டுமான நிறுவனங்கள் மாதிரி வண்ண தகவலறிக்கைகள் தயார் செய்திருந்தார்கள். அந்த அறிக்கைகள் சிலவற்றை பத்திரமாக பல ஆண்டுகள் பாதுகாத்தும் வைத்திருந்தேன். பெரியார் நகருக்கு மீண்டும் சென்றுவர நினைத்தாலும் அது சாத்தியமாகவில்லை. என்னுடைய அக்கறையும், சமூகப் பொறுப்பும் ஆசைப்பட்டதோடு நின்றுவிட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளைவிட, ஒரு கல்லூரி ஆசிரியரின் பொறுப்பின்மை குறைந்ததா என்ன?

2000 வீடுகள். அப்பொழுதே நூறு கோடி ரூபாய் முதலீடு. ஆசியாவின் மிகப் பெரிய மாற்றிடக் குடியிருப்பு (resettlement project) என்ற பெருமை. 2000 வீடுகளிலும் மக்கள் குடியேறியிருந்தால், வீட்டிற்கு ஆறு பேர் வீதம் 12000 மக்கள் குடியேறி, அது Township அந்தஸ்தை பெற்றிருக்கும். இன்று சேர்முகத்தாய் வாசன் கல்லூரி அருகில் என்று அடையாளம் சொல்லப்படுவது மாறி, வைக்கம் பெரியார் நகர் அருகிலுள்ள கல்லூரி என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

நகரத்தை விட்டு சற்று தள்ளி, நாற்பது ஐமபது வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் கூட தங்கள் குடியிருப்பை ஜீவனுள்ளதாக்கி, அதைச் சுற்றி மேலும் முன்னேற்றம் ஏற்படும்படியாக மாற்றிக்காட்டி விடும்போது, 2000 வீடுகளைக் கொண்ட மிகப் பெரிய குடியிருப்புத் திட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்ட குடிசைமாற்று வாரிய அதிகாரிகளின் திறமையை என்னவென்று பாராட்ட?

அவனியாபுரம் பெரியார் நகரிலிருந்து வந்த என் மாணவர் வினோத் அம்பேத்காரிடம் “அங்கு ஒருநாள் போய்விட்டு வரவேண்டுமே” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சென்ற 11.3.2013 அன்று, 24 வருடங்களுக்கு பின் வைக்கம் பெரியார் நகருக்குச் சென்றேன். அவனியாபுரத்திலிருந்து பெரியார் நகருக்கு செல்லும் பாதை அப்போது இருந்ததைவிட இப்போது மோசமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. பெரியார் நகர் ஊர்த் தலைவரான முத்துச்சாமி ஐயா அவர்கள், எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆரம்பம் முதல் அங்கு குடியிருப்பவர்.

“கட்டிய ஐந்தாறு மாதத்திலே பாதிவீடுகள் ஈழக்களியான மண்வாகால் கீழிறங்கவும், விரிசல் விடவும் ஆரம்பித்தன. வந்து சென்ற பஸ்களும் பின் முறையாக வரவில்லை. வேறு போக்கிடம் இல்லாமல் அங்கு குடியேறிய சொற்ப குடும்பங்களுக்கும் நரக வேதனைதான். 500 ரூபாய் கட்டி வீட்டைப் பெற்றுக்கொண்டவர்களும், வீடுகளின் விரிசலைப் பார்த்து,தலைக்கு வந்தது தலைப்பாகையோடு முடித்துக் கொள்ளலாமென்று தவணை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளை ஒதுக்கீடு செய்துவிட்டபின், குடிசைமாற்று வாரியமும் அங்கிருந்த அலுவலகத்தை மூடிவிட்டது”.

“உலக வங்கியிடம் வாங்கிய கடனை அடைக்கவேண்டுமே. அப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஆயிரம் குடும்பங்கள் மாதம் 150 ரூபாய் வாடகைக்கு அங்கே பணையம் வைக்கப்பட்டனர். இப்படியாக அரசுப் பணத்தை ஒரு துறையிலிருந்து மறுதுறைக்கு சுழற்சி செய்து விட்டார்கள். அவர்கள் வந்த பிறகு குடியிருப்பு கொஞ்சம் கண்டுகொள்ளப்பட்டது. அகதிகளாக ஒரிரண்டு ஆண்டுகள் அங்கிருந்தவர்களும், இங்கே இருப்பதைவிட சிங்களவன் குண்டுக்கு பலியாவதுமேல் என்று இலங்கைக்கு திரும்பிவிட, பெரியார் நகர் மீண்டும் அரசுப் பார்வையிலிருந்து விலகியது. 2000 வீடுகள் கட்டப்பட்டதில் ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் சிதிலமடைந்து விட்டன. இப்போதுள்ள வீடுகள் எல்லாம் குடியிருப்போர்களால் மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டவையே”.

தரமற்ற வீடுகளைக் கட்டியதாக ஒப்பந்தகாரர் மீது ஒப்புக்காக போடப்பட்ட வழக்கு, ஒரு நபர் கமிஷன், அவ்வப்போது உண்மை அறிய வரும் அரசு அதிகாரிகள்- இதன் வெளிப்பாடு “எங்கோ தவறு நடந்துவிட்டது. பணத்தைக் கட்டுங்கள் என்று உங்களை (குடியிருப்போரை) கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பணத்தைக் கட்டாமல் குடியிருப்பவர்களின் பெயர்களுக்கு மனை உரிமை (வீடுகள் இடிந்துவிட்டதால்) வழங்கவும் முடியாது” என்று யாரும் யாரையும் நிர்பந்திக்கமுடியாத நிர்வாகச் சிக்கல். தாய்க்கிராமமான சாமநத்தம் ஊராட்சியின் வாக்கு வங்கியே பெரியார் நகராதலால், சில வசதிகள் வந்து சேர்ந்துள்ளன.

கண்மாயில் மீன் வளர்க்கின்றோம் என்ற பெயரில் கழிவு நீரைக் கொண்டுவந்து நிரப்பியிருப்பதால் வருடம் பூராவும் கொசுத்தொல்லை. குடிநீர் விலைக்கு வாங்கித்தான் குடிக்க வேண்டியிருக்கின்றது”.

அவர்கள் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் இந்தியாவின் பல குடியிருப்புகளில் உள்ளதுதான் என்று சமாதானமடைய முடியவில்லை. காரணம் பெரியார் நகர் தானாக உருவான குடியிருப்பல்ல. அது நூறு கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட ஒரு மாற்றுக் குடியிருப்பு. சரியாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் நகரமாக, ஒரு sattelite city யாக வளர்ந்து பரிணமித்திருக்கும். அந்த வாய்ப்புக்கள் சுத்தமாக அழித்தொழிக்கப்பட்டு, பார்வைக்கே பரிதாபமாக காட்சியளிக்கின்றது.

பெரியார் நகரின் கட்டுமானப் பணிகளை முன் நின்று கவனித்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒன்றும் ஏப்பை சாப்பைகளல்ல. அப்பொழுது செயற்பொறியாளராக இருந்தவர் பெயருக்குப் பின்னால் BE, ME, MBA பட்டங்களை பார்த்ததாக நினைவு. Civil Engineering படித்த பொறியாளர்கள்தாம் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத என்ன? மண்வாகைப் பொறுத்துதான் அஸ்திவாரம் அமைக்கப்படவேண்டுமென்று. எப்படி ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வீடுகள் பழுதடையும்படியாகவும், கட்டிமுடித்து 20 ஆண்டுகளுக்குள் எல்லா வீடுகளும் இடிந்து மன்னாகப் போகும்படியாகக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. குடிசை மாற்று வாரியத்திலே Community Development க்கு என்று தனிதுறையும் (Department), பணியாளர்களும் இருக்கின்றார்கள். அன்றாட வாழ்வாதார மையங்களிலிருந்து, மக்களை அப்புறப்படுத்தி மாற்றிடம் கொடுக்கும் போது அவர்கள் என்னென்ன சிரமத்திற்கு உள்ளாவார்கள், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதைத் முன்கூட்டியே திட்டமிட்டு, அதை திட்டச் செலவில் சேர்த்திருக்கலாமே? பொறியாளர்களால் வீடுகளைத்தான் கட்டமுடியும். அவர்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதால் தானே, உலக வங்கியின் வற்புறுத்தலின் பேரில் Community Development என்ற துறையே குடிசைமாற்று வாரியத்தில் உருவானது. யோசித்துப் பார்த்தால் எல்லோரும் சேர்ந்துதான் 2000 குடும்பங்களின் நம்பிக்கையைத் தகர்திருக்கின்றார்கள்.

வினோதினி, வித்யா போன்ற இளம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றப்பட்டது அக்கிரமம். ஆசிட் ஊற்றப்படுவதற்கு முன்னாலிருந்த அவர்களின் தோற்றபொலிவுவையும், ஆசிட் ஊற்றியபிறகு அவர்கள் பொலிவிழந்து உருக்குழைந்ததைப் பார்ப்பவர்கள், ஆசிட் ஊற்றியவர்களின் மீது கடுங்கோபம் கொள்வது நியாயமே. நான் பெரியார் நகர் உருவான பொழுது அது பொலிவுடனிருந்ததைப் பார்த்தவன். அந்த திட்டத்தைப் பற்றிய அழகான வண்ணமிகு தகவல் அறிக்கைகளை, ஒரு வளரிலம் பையன் சினிமா நடிகைகளின் படத்தை, தன்னுடைய நோட்டுப்புத்தக பக்கங்களுக்கிடையே மறைத்து வைத்து பார்ப்பதைப்போல பல ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருந்தவன். மீண்டும் பெரியார் நகரைச் சென்று பார்த்த போது எனக்கென்னவோ ஆசிட் ஊற்றப்பட்ட வினோதினி, வித்யாவின் முகங்களே நினைவுக்கு வந்தன.

2000 குடும்பங்களின் நம்பிக்கை மீது ஆசிட் ஊற்றிவிட்டு, அந்த குற்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல், 40 கோடி ரூபாயில் அங்கே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, மீண்டும் பெரியார் நகரை எடுத்துக் கட்டப் போவதாக குடிசை மாற்று வாரியம் முன்வந்ததாம். “ஐயா! இட நெருக்கடியான இடங்களில் அடுக்கு மாடிகளோ, புடுக்கு மாடிகளோ கட்டிக்கொடுங்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு மனை உரிமை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கோபப்பட, ஆசிட் கேனை தூக்கிக் கொண்டு, குடிசை மாற்று வாரியம் ராஜாக்கூர் சென்று விட்டதாம். ராஜாக்கூரில் எப்படியெல்லாம் ஆசிட் ஊற்றியிருக்கின்றார்கள் என்பதை ஒருநாள் நானும், வினோத்தும் பார்த்துவர நினைத்திருக்கின்றோம்.

December 10, 2011

அறிவார்ந்த ஆணவமல்ல! பணிவார்ந்த பகிர்தலே!

Filed under: Uncategorized — Tags: , , , — cdmiss @ 5:46 am
இணையம் ஒரு மாபெரும் அறிவுச் சுரங்கம். அதைப் பயனுள்ளதாகவும், அழகுள்ளதாகவும் ஆக்குவது, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாத, முகமறியப்படாத தன்னார்வலர்களே. அனைவராலும் கையாளத்தக்க, எளிமைப்படுத்தப்பட்ட, இணையத் தொழில்நுட்பம் எத்தனையோ பேர்களுடைய ஆக்கத்திற்கு வடிகாலாய் இருந்து வருகின்றது. ஆர்வம் பெரிதா? அந்த ஆர்வத்திற்கு துணைநிற்கும் clip_image002தொழில்நுட்பம் பெரிதா? இரண்டும் ஏதாவதொரு புள்ளியில் இணையும் போது, அது அறிவுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று சொல்லப்படும் விக்கிபீடியா இதற்கு நல்ல உதாரணம். இப்படி நூற்றுக் கணக்கில் சொல்லலாம். தன்னார்வமும், தொழிநுட்பமும் இணையும் போது, சகலமும் சாமான்யர்களுக்கு சாத்தியமாகின்றது. “முடவர்கள் நடக்கின்றார்கள், குருடர்கள் பார்க்கின்றார்கள்” என்று பிரசங்கிப்பது மாதிரி, மிகச் சாதாரணமானவர்கள் கூட அறிவுப் பெருக்கத்திற்கு தங்களால் இயன்ற பங்கினைச் செய்ய முடிகின்றது.

இந்த இணையச் சூழல்தான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், சில பரிசோதனை முயற்சிகளில் என்னை ஈடுபடத்தூண்டியது. ஒரு ஆசிரியர் என்ற முறையில், வகுப்பெடுக்க, எனக்காக தயாரித்த பாடக் குறிப்புகளை, ஆவணமாக்கி, மாணவர்களின் உபயோகத்தின் பொருட்டு, இணையத்தில் பதிவேற்ற, அதைப் பயனுள்ளதாகக் கருதிய பலர், அதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியது என்னை உற்சாகப்படுத்தியது. “இதைத் தேடித்தான் இத்தனை நாளும் அலைந்து கொண்டிருந்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி” என்ற முகமறியா வாசகர்களின் பாராட்டு, என்னை மேலும் பல ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யத் தூண்டியது. ஆரம்பத்தில் மிகக் குறைவானவர்களால் பார்க்கப்பட்ட ஆவணங்கள், பலரால் விரும்பிப் பார்க்கப்பட இன்றுவரை ஆறரை இலட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுமுள்ளது. இதில் பெருமைப்பட ஏதுமில்லாயென்றாலும், என்னையும், நான் பணியாற்றிய சூழலையும் வைத்துப் பார்க்கும் போது, பலருக்கும் பயன்தரத்தக்க பணியைச் செய்து முடித்த திருப்தி ஏற்படுகின்றது.

clip_image002இணையத்தில் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலானவை ஒரு குறிப்பட்ட பாடப் பொருள் சார்ந்த விவரக் குறிப்புகளே. அது ஒரு மாணவர் சுயமாகக் கற்க உதவும் Self Learning Material கூட அல்ல. அவர்கள் வாசிப்பதில் என்னுடையதையும் சேர்த்துக் கொள்ளலாம். வாசிப்புப் பழக்கமுடைய மாணவர்களுக்கு, அவர்களின் புரிதலைத் தொகுத்துக்கொள்ள அந்த ஆவணங்கள் பயன்படலாம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்களுக்கு, ஒரு பாடப் பொருள் எதைஎதையெல்லாம் தொட்டுச் செல்லும் எனபதைப் புரிந்துகொள்ள உதவலாம்.  என்னுடைய ஆவணங்களை என் கல்லூரி தாண்டியும் பல பேர் பார்வையிடுகின்றார்கள் என்ற பயவுணர்ச்சியின் விளைவாக, அதை அழகுற தயாரிக்க வேண்டுமென்பதில் சிரத்தையெடுத்த அளவிற்கு, அதை முழுமைபெற்ற ஆவணங்களாக்க நான் சிரத்தையெடுக்கவில்லை. ஏனெனில் என்னால் கற்பிக்ககப்பட்ட எந்த பாடப்பொருளிலும் நான் முழுமை அடைந்திருக்கவில்லை. புரிதலை நோக்கிய பயணத்தில், என்னால் என் புரிதல்களை தொகுக்கத்தான் முடிந்தது. ஆகையால் என்னுடைய ஆவணங்கள் எதுவும் அறிவார்ந்த அகங்காரத்தின் வெளிப்பாடால்ல. மாறாக அது மிகப் பணிவான பகிர்தலே. பதிவேற்றங்களே.

நான் படித்த, பின் கற்பித்த சமூகப் பணிப் பாடத்திட்டத்தில், அதன் ஆதாரமான, நாடித்துடிப்பான “Theories of Social Work” நான் மாணவனாயிருந்தபோதும், பின் ஆசிரிய்ரான போதும் சேர்க்கப்படாததால், அதைக் கற்கவும், கற்பிக்கவும் வாய்ப்பில்லாமலிருந்தது, சமூகப் பணி தத்துவத்தை புரிந்துகொள்வதில் ஒரு வெற்றிடத்தை என்னுள் உருவாக்கி விட்டதை உணர்ந்தேன். சமூகப் பணி கருத்தாக்கம் என்பது மிகப் பெரிய உரையாடல். சமூகவியல், உளவியல், மானுடவியல், அரசியல், பொருளியல், நிர்வாகவியல் என்று அனைத்து அறிவுசார் துறைகளோடும், சமூகப் பணி கல்வியாளர்கள் உரையாடி, உரையாடி வகுத்தெடுத்த நடைமுறைக் கோட்பாடுகள். imageஇனிவரவிருக்கும் மாணவர்களாவது அதைப் புரிந்து கொள்ள உதவுவோம் என்று பாடத்திட்டதில் சேர்த்து, அதைக் கற்பிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெரும் நிலையில் ஒரு பருவம் மட்டும் கற்பிக்கும் வாய்ப்புதான். இருந்தாலும் அதற்கான குறிப்புகளைத் தயாரித்து, இணையத்தில் பதிவேற்ற, ஒரு வருடத்திற்குள் அந்த ஒரு ஆவணத்தை மட்டும் ஒரு இலட்சம் பேர்கள் பார்த்து ஆயிரக்கணக்கில் தரவிறக்கம் செய்திருக்கின்றார்கள். மேலைநாடுகளின் சமூகப்பணி பேராசிரியர்கள் பலர், அந்த ஆவணத்தை தங்கள் FaceBook பக்கத்தில் பகிர்ந்து கொள்ள, சமூகப்பணி என்னும் மாபெரும் கருத்தாக்க மரபின் தொடர்ச்சியாக என்னுடைய முயற்சியும் இணைக்கப்பட்டது என்றறிந்து நெகிழ்ந்தேன்.

என்னுடைய புரிதல், புரிதலின்மை வரையறைக்கு உட்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவனங்கள் என்னை மட்டுமல்ல, நான் படித்த, பணியாற்றிய கல்லூரியின் இருப்பையும் உலகிற்கு தெரியப்படுத்தியது, மகிழ்ச்சி தரத்தக்க விசயம்தான். இது மாதிரியான முயற்சிகளை கூட்டாகச் செய்வதற்கும், நிறுவனமயமாக்கவும் நான் வேண்டிக்கொண்டதை, சக ஆசிரியர்களும், நிறுவனமும் கண்டு கொள்ளாததற்கான காரணங்களை இன்றளவும் என்னால் ஊகிக்க முடியவில்லை.

சமூகப்பணி பாட பொருளை அனைவருடன் பகிர்ந்துகொள்ள நான் செய்த முயற்சிகள் எப்படியெல்லாம் கேலிக்குள்ளானது, எப்படியெல்லாம் வரவேற்பைப் பெற்றது என்பதை ஏற்கெனவே என்னுடைய பதிவுகளில் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒருபக்கம் உதாசீனப்படுத்தப்பட்டாலும், முகமறியா வாசகர்களின் பாராட்டு என் வலிகளுக்கு ஒத்தடமிட்டு வந்துள்ளது.

மார்க்ஸீய சிந்தனைத் தாக்கம் உள்ளவரும், இணையத் தொழில்நுட்பத்தின் பல கூறுகளின்மீது மாற்றுக்கருத்துக்கள் கொண்ட நண்பர் பாலாஜி (Square Computer Network Solutions, Chennai) அவர்கள், “உங்களை மாதிரி ஆட்கள் வெகுளித்தனமாக நல்ல  காரியங்களைச் செய்து தொலைப்பதால், பெருமளவு சுரண்டலுக்கு வழிவகுக்கும் தொழில் நுட்பங்கள் பற்றி என்னைப் போன்றவர்கள் அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது” என்று கடிந்துகொள்வார். திரு. பாலாஜி அவர்களின் விமர்சனமே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று பல நேரங்களில் நான் மகிழ்ந்திருக்கின்றேன்.     

July 20, 2011

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-II

Filed under: Uncategorized — Tags: , , , , , , — cdmiss @ 2:50 pm

சமீபத்தில் இலங்கை சென்று வர வாய்ப்பேற்பட்டது. அந்த அனுபவங்களை மன்னார் (வளைகுடா) தந்த ஞானம் என்ற என்னுடைய முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதுகின்றேன். இந்தப் பயணமே நாங்கள் (PAD நிறுவனம்) மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுவதால் கிடைத்த வாய்ப்பு.

இலங்கைக்கு நான் ஏற்கனவே (2002) ஒருமுறை IMM என்ற நிறுவனத்தின் அழைப்பிற்கிணங்க சென்றிருக்கிறேன். பவளப்பாறைகளை மையப்படுத்திய பிழைப்பு முறைகளைப் பற்றிய ஆவணம் தயாரிக்கும் பணியில் என்னைச் சேர்த்து மேலும் இருவராக மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தோம். நான் தங்கியிருந்த ஹோட்டலும், பணியாற்றிய இடமும் குடித்தனங்கள் இல்லாத அதிகபாதுகாப்புடைய நிறுவனப்பகுதிகள். பணியின் நிமித்தமாக வெளியில் செல்லவோ யாருடனும் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலைதான் இந்தியாவில். ஆனால் இலங்கையிலோ தமிழைவத்துக்கொண்டு தடுமாறாமல் நடமாடமுடியும் என்ற நம்பிக்கை அந்த நான்கு நாட்களில் எனக்குள் ஏற்பட்டுவிட்டிருந்தது. இலங்கையிலிருந்து நான் திரும்புகிற பொழுது மீண்டும் மீண்டும் நான் இலங்கைக்குச் செல்ல வாய்ப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே விமானம் ஏறினேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு நான் முயற்சி செய்யாமலே சமீபத்தில் ஏற்பட்டது. பெங்களுரை பணியிடமாகக் கொண்ட PAC நிறுவனமும், நான் சார்ந்த PAD நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் Environmental Governance –Citizen Report Card என்ற திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையை இலங்கையின் CEPA என்ற நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்க PAC நிறுவனத்தாருடன், PAD நிறுவனப் பிரதிநிதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு கருத்தரங்கில் கலந்து கொள்வதை விட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு காலாற நடந்து அந்த மண்ணின் மணத்தையும் காற்றையும் சுவாசித்து வரவேண்டும் என்ற ஆவல். யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி சீட்டு வாங்க என்னுடைய மாணவி ஏஞ்சலின் அகல்யா ரெம்பவும் மெனக்கெட்டார். இலங்கை சென்று சேர்ந்த அடுத்த அரைமணி நேரத்திலே, ஏஞ்சலின் தோழிகள் இருவர் வந்து என்னை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, நான் இலங்கையில் இருந்து திரும்ப திட்டமிட்ட 6 ம் தேதிதான் அனுமதி கிடைக்கும் என்றனர். யாழ்ப்பாணத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அனுமதி தேவைப்படாத மட்டக்களப்புக்கு வரச்சொல்லி ஏஞ்சலின் ஆலோசனை கூறினாலும். நான் மன்னார் பகுதிக்குச் சென்றுவரலாம் என்று விரும்பினேன். இன்னும் எட்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் எது சாத்தியமோ அது நடக்கட்டும் என்று அமைதியானேன்.

அடுத்த நாள் கருத்தரங்கு நடந்த Cylon Continental Hotel லுக்குச் சென்ற போது எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பெண்கள் அதிக அளவு பங்கேற்ற அந்த கருத்த்தரங்க நிகழ்ச்சியில், அந்த பெண்களெல்லாம் இலங்கையில் மேட்டுக்குடியினராக இருந்தாலும், பாசாங்குத்தனம் இல்லாத ஒரு தோழமையுணர்வு தென்பட்டது. கருத்தரங்க ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தாலும் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்கள். கருத்தரங்கின் நோக்கங்களாக CEPA Exicutive Directer Priyantha Fernando வினால் தரப்பட்ட அறிக்கையின் தமிழக்கத்தில் Exicutive Drecter என்ற ஆங்கில வார்த்தைக்கு நிறைவேற்றுப் பணியாளர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த பாணியே இலங்கைத்தமிழரின் மொழிவளத்தையும் பண்பாட்டையும் காட்டியது. Exicutive Directer என்றால் இங்கு நிர்வாக இயக்குனர் /செயல் இயக்குனர் என்றே மொழி பெயர்க்கிறோம். CEPA ஒரு தொண்டு நிறுவனம். நிர்வாக இயக்குனர் என்ற மொழியாக்கத்தில் இல்லாத பணிவு, தொண்டுள்ளம், நிறைவேற்றுப் பணியாளர் என்ற மொழிபெயர்ப்பில் இருந்ததாக எனக்குப் பட்டது.

கருத்தரங்கின் இருக்கைகளே வித்தியாசமாக அமைந்திருந்தது. ஐந்து பேர் உட்காரும்படியான வட்டமேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஹெட்போன்கள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் கூட அதைவிட ஆடம்பரமான, அதிக நபர்கள் கலந்து கொண்ட, அறிவுபூர்வமாக நடந்த ஓரிரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தாலும் அக்கருத்தரங்குகளில் தோழமையுணர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கின் ஆரம்பத்திலே, கருத்தரங்குப் பகிர்தலை சிங்களத்திலோ, தமிழிலோ கேட்க விரும்புகின்றவர்கள் ஹெட்போன்களை உபயோகிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆசிய அளவிலான அக்கருத்தரங்கில் ஆங்கிலம் தெரியாதவர் எவரும் இருக்கமுடியாதுதான். இருப்பினும் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Inagural Session முடிந்த பிறகு ஆர்வமிகுதியால் எப்படி கருத்தரங்கு பகிர்தல் தமிழாக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ள்ள, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு ஒரு பெருமித உணர்வால் மனம் நெகிழ்ந்து போனேன்.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள்தாம். தமிழ் சிங்கள மொழியாக்கம் அவர்களுக்குத் தேவைப்படாததுதான். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கட்டாயத்தின் பேரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். மாறாக இது தொண்டு நிறுவன நிகழ்ச்சி, தமிழிலும் சிங்களமும் அங்கே சம மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்த உணர்வு என்னை தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்கச் செய்தது பத்தாண்டுகளுக்கு முன்னர் SIDA என்ற நிறுவனம் இந்தியாவில் நிதியுதவிதரும் நிறுவனங்களுக்காக அனுபவப் பகிர்தலை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் Carlton ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பிராந்தியங்களிலிருந்து கலந்துகொண்டவர்கள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மொழிபெயர்ப்புக்கென்று பிரத்தியோகமாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும் சில பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் கருத்துச் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங் (பின்னாளில் மக்சாசே பரிசு வாங்கியவர்) ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டாலும், உரையாட முடியாததால் ஹிந்தியிலே பேச, நான் வீம்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டேன் .அவர் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசுவதை மொழிபெயர்ப்பாளர் இரண்டு நிமிடங்களில் கருத்து சுருக்கமாகச் சொல்ல, நான் விரிவான மொழிபெயர்ப்பு தேவை என வீம்பு பிடித்தேன். தேனிர் இடைவேளையின் போது என்னை சந்தித்த மொழி பெயர்ப்பாளர், ராஜேந்திர சிங்கின் பணிகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானது அல்ல சில சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அவர் எதோ அதிசயத்தைச் செய்தது மாதிரி அவரை முன்னிறுத்துகின்றார்கள் என்று என்னுடைய வாயை அடைக்க முற்பட்டார், ஆனால் இராஜேந்திர சிங் அவர்களோ அவருடைய பணியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கருதி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவரது செயல்பாடுகள் பற்றிய ஆங்கில அறிக்கைகளைக் கொடுத்தார். அவருடைய நிறுவனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும் அளவிற்கு இந்தியாவில் ஆங்கிலம் ஒரு வல்லாதிக்க மொழியாகி விட்டது. தமிழ் மட்டுமல்ல ஏன் அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையோ இரண்டு கோடிப் பேர். அதில் தமிழ் வம்சாவழியினர் என்று குறிப்பிடப்படுவது 7.5% சதவீதம். தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்தால் இன்னும் கூடும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழ் பேசுவோர் 20-25 லட்சத்திற்குள் தான் இருப்பார்கள். ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் சாதிக்காததை, குறைந்த எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள் சாதித்திருக்கின்றார்கள். தமிழ் மொழி பற்றியும் தாய்மொழிப் பற்று பற்றியும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் இருப்பதாக எனக்கு படுகிறது.

அந்தக் கருத்தரங்கில் மொழி பெயர்ப்பாளர்களாக செயல்ப்பட்ட இரண்டு தமிழர்களைச் சந்தித்தேன். மன்னார் பகுதியை சேர்ந்த பிகிரி (Fiqri) அவர்கள், மன்னார் பகுதிக்குச் செல்ல விரும்புவதையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்ட பிறகு என்னுடன் இன்னும் தோழமையானார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் அவரின் தமிழ் ஆங்கிலப் புலமை மெச்சத்தக்கது. தரமான தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார். பரந்த வாசிப்புப் பழக்கமும் மும்மொழிப் பாண்டித்தியமும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) கொண்ட அவரின் பணிவு வியக்கத்தக்கதாயிருந்தது. ஒரு அமர்வு நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அமர்வை மொழி பெயர்க்கவில்லையா எனக் கேட்டபோது, யாரும் ஹெட்போனை உபயோகிக்க வில்லை, யாராவது ஒருவர் உபயோகித்தால் கூட சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஆரம்பித்து விடுவோம் என்று கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. யாராவது விளையாட்டுக்கு ஹெட்போனை வைத்திருந்தால் கூட அவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழினம் காத்ததாக சொல்லப்படும் குடும்பத்தில் தோன்றி, ஆங்கிலம் தெரியாமல் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலையில் அமைச்சர் அழகிரி இருக்கும் போது, சாதாரணத் தமிழனின் நிலையை நாம் எப்படி எடுத்து கொள்வது?. இனக்காவலர்களும், மொழிக்காவலர்களும் நிறைந்த தமிழகத்தில் நடக்காத நடக்கவியலாத அதிசயங்களை இலங்கையில் தமிழர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழைப்பொருத்த மட்டில் இலங்கைத் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர்தான். அவர்கள் நம்மை போல தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்தாம். அங்கு பேசப்படும் ,எழுதப்படும், கற்றுத்தரப்படும் தமிழுக்கும், தமிழ்நாட்டுத் தமிழுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகப்படுகிறது, அம்மா சமையல் என்றால் சும்மாவா என்ற விளம்பரம் மாதிரி, இலங்கைத் தமிழில் உணர்வும், உயிரும் கலந்திருப்பதாகப் பட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது தமிழ் நாட்டிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். போரிட்டோ ,சமாதானமாகியோ “தமிழ்” அடையாளத்தை இலங்கைத் தமிழர் கடைசிவரை தக்க வைத்துக் கொள்வார்கள்.

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க, தொல்லை வினைதரு இலங்கைத் தமிழரின் தொல்லையகல உணர்வுபூர்வமாகப் பிரார்த்திப்போம்.

June 16, 2011

விதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி

People can do it –மக்களால் செய்ய முடியும்
People can be trained to do it –மக்கள் செய்யமுடியுமாறு அவர்களைப் பயிற்றுவிக்க முடியும்
Conditions can be created to do it – அவ்வாறு செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும்

இதுதான் சமுதாய முன்னேற்றப் பணியின் ஆதார நம்பிக்கை. இந்த நம்பிக்கையினடிப்படையில்தான் முன்னேற்றப் பணியாளர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இந்த நம்பிக்கையில்தான் ஒரு புதிய பணிக்காக, கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களை ஒரு பயிற்சியில் ஈடுபடுத்தினோம். பத்ரியவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் காரியங்கள் நடக்காதபோது அவரே “என்ன எதுவும் நடக்கின்ற மாதிரி தெரியவில்லையே” என்று ஆதங்கப்பட வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. அந்தச் சூழ்நிலையும் மாறியது.

சமீபத்தில், அடுத்து வருகின்ற மூன்றாண்டுகளுக்கு இராமேஷ்வரம் பகுதியில் PAD செய்ய வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பங்கேற்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது.

வடிவேலு ஒருபடத்தில் “இப்பொழுதெல்லாம் துவைச்சு தொங்கப்போடுவது மட்டுமல்ல: கிளிப்பையும் மாட்டிவிட்டுப் போறாங்களே” என்று புலம்புவது மாதிரி, அரசு நிர்வாகத்தைப் பற்றிய மக்களுடைய கண்ணோட்டம் மாறிவருகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய கடுமையான விமர்சனங்களில், கோபத்தைவிட நியாயமே மேலோங்கியிருக்கின்றது.

ஒரு படத்தில் அலர்ட் ஆறுமுகம் என்ற பாத்திரத்தில் ஹோட்டலுக்குப் போகும் வடிவேலு, சாப்பாட்டில் பூச்சி இருப்பதாக ரகளை செய்யும் நபரை, “ஏண்டா! ஒரு ஆடு செத்துக்கிடக்கு! கோழி செத்துக்கிடக்கு! நண்டு செத்துக்கிடக்கு இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலே! பூச்சி மட்டும் தெரியுதாக்கும்” என்று மொத்தும் அந்தக் காட்சியை உதாரணம் காட்டி, கடலுக்குள் ஆயிரம் போகின்றது. ஆலைக் கழிவுகள், முனிசிபாலிட்டிகளின் பீக் கழிவுகள், ஆயில் கழிவுகள் என்று எத்தனையோ போய் பவளப் பாறைகளைச் சாகடிக்கின்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு, மீனவன் தீவுப் பக்கம் போறதுதான் கண்ணுக்குத் தெரிகின்றது. அவனால் தான் பவளப் பாறைகளே அழிவதாக அடித்து விரட்டுகின்றார்கள். வடிவேலு மொத்துன மாதிரி மொத்துனாத்தான் சரிப்பட்டு வருவார்கள். அவர்கள் ஆதங்கத்திலும் ஒரு நையாண்டி.

இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில், அந்தப் பொறுப்பை கல்லூரிப் பக்கம் கால்வைக்காத ஒரு பணியாளரிடம் ஒப்படைக்க, அவரிடமிருந்து கைப்பிரதியான அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவரிடமிருந்து மின்னஞ்சலில் வந்த அறிக்கையைப் பார்த்து நானே வியந்து போனேன். கம்ப்யூட்டரில் அந்தப் பணியாளர் உட்கார்திருந்ததைப் பார்த்தரியாத நான் அவரிடம் “இது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோதுதான், “NHM writer” என்று பத்ரி சார் சொன்னாரே அதை டவுண்லோட் செய்து நானே கணனியில் தட்டச்சு செய்தேன் என்றார். அதற்கு முன் அவர்கள் உபயோகப்படுத்திய தமிழ் மென்பொருள் user friendly ஆக இல்லாததால், ஆங்கிலம் தெரியாத பணியாளர்களை கம்ப்யூட்டர் பக்கம் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றது. உருப்படியான ஒரு தமிழ் மென்பொருள் எப்படியெல்லாம் ஒரு சாதாரணத் தமிழனுக்கு, விடுதலை உணர்வைத் தரும் என்பது புரிந்த போது, தமிழ் இனக் காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, எது தமிழை வளர்க்கும், தமிழைக் கொண்டே தமிழருக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது என்று தெரியாமல், தேவையற்ற பிரச்ச்னைகளில் நம் எல்லோருடைய நேரத்தையும், பொருளாதாரங்களையும் வீணடிக்கத் தூண்டுகின்றார்களே என்ற ஆதங்கம் தலைதூக்கியது. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். அதில் சில லட்சங்களைச் செலவழித்திருந்தால், தமிழுக்கான மென்பொருள்கள் சாதாரணத் தமிழனைச் சென்று அடைந்திருக்கும். தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும், இலவசமான, உபயோகத்திற்கு எளிதான மென்பொருள், ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு ஒரு வரப்பிரசாதம். விடுதலையுணர்வு. பத்ரி சார்ந்த நிறுவனம் செய்ததை, இனக் காவலர்களும், கலாச்சாரக் காவலர்களும் செய்திருக்க முடியாதா என்ன?

விழுவாய் தமிழா நெருப்பாய் என்று அறைகூவல் விடுபவர்களின் ஆதங்கம் புரிகின்றது. சில நேரங்களில் நாம் நெருப்பாக விழத்தான் வேண்டும். அதற்கு முன்னாள் நமக்கு விதையாக விழவும் தெரிந்திருக்க வேண்டும்.

பத்ரி சேஷாத்ரி என்னும் தமிழருக்கு விதையாக விழத் தெரிந்திருக்கின்றது. நன்றி

நான் மேல குறிப்பட்ட பணியாளர் (ஜெ.ஜெயராஜ்) தயாரித்த ஆவணம் குறைந்த பட்ச திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது.   Scribd      wePapers

Older Posts »

Blog at WordPress.com.