Community Development

November 23, 2019

தலைமுறைகள் தழைத்தது…..

Filed under: Uncategorized — Tags: , , , — cdmiss @ 11:51 am
1
1974 ஆம் வருடம்.
1973 ஆம் ஆண்டு BSc Zoo முடித்த நான், அந்த ஆண்டே முதுகலையில் சேர முடியாமைக்கும், 1974 ஆம் ஆண்டு மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இடம் பெற்றமைக்கும் பின்னே ஒரு கதை உண்டு. அது இங்கே தேவையில்லை.
இயக்குனர்
தா.வெ.பெ.இராஜா 
சமூகப்பணிக் கல்லூரியில் இடம் கிடைப்பது அப்போது மிகமிகக் கடினமாகையால், நானும், அக்கல்லூரி இயக்குனர் (கேப்டன்) த.வெ.பெ.ராஜா அவர்களுக்குத் தெரிந்த பெரியவரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று, இயக்குனர்  அவர்களைச் சந்தித்தேன். அக்கடிதத்தைப் படித்துக்கொண்டே, “600 பேருக்கு மேல் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் என்றாலும், என்னால் எதுவும் செய்ய முடியாது. தேர்வுக்குழு இருக்கின்றது. நேர்முகத் தேர்வில் உங்கள் performance பொறுத்தே  சீட் கிடைக்கும். இப்போது எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. ஆகட்டும் பார்க்கலாம்” என்று என் முகத்தைப் பார்க்காமலே சொல்லிவிட்டு, கடிதத்தை என்னிடமே திருப்பிக்கொடுக்க முயல, நான் தயங்கி நின்றதைப் பார்த்து, என்னைத் தவிர்க்க வேண்டி, மீண்டும் கடிதத்தை வாங்கிக் கொண்டு, “அவரிடமே (சிபாரிசு கடிதம் கொடுத்தவரிடமே) பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லியனுப்பிவிட்டார். இதை சிபாரிசுக் கடிதம் கொடுத்தவரிடம் போய்ச் சொல்ல “சரி! அவர் பேசினால் நான் சொல்லுகிறேன்” என்று அவரும் விட்டேத்தியாகச் சொல்லியனுப்பிவிட்டார். அவர் பேசினாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களை நேர்முகத்தேர்விற்கு அழைக்கும் வழக்கப்படி நானும் அழைக்கப்பட்டேன்.
முதுகலை சேர்க்கைக்கான நேர்முகத்தேர்வு எப்படியிருக்கும்?, அதை எப்படி எதிர்கொள்வது? என்பதில் அதற்கு முந்தைய ஆண்டு புட்டத்தில் மிதிபட்டு வெளித்தள்ளப்பட்ட அனுபவம் இருந்ததால் ரெம்பவே மிரண்டிருந்தேன். மேலும் படிக்க விரும்பும் பேரனின் விருப்பம் நிறைவேற, குல தெய்வத்திற்கு ஒருரூபாயைக் காணிக்கையாக முடிந்து, கோவில் குங்குமத்தை என் நெற்றியில் பூசி, என் பாட்டி என்னை ஆசீர்வதித்து அனுப்பியிருந்தார்.
அந்தக்காலத்தில், மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் நேர்முகத்தேர்வு ஏழு, எட்டு நாட்கள் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த மாணவர்கள், அவர்களின் உடன் வந்திருந்த பெற்றோர்கள் சிலரின் தோற்றத்தைப் பார்த்து நான் மிரண்டிருந்தாலும், என்னைப்போன்றும், இவர்களைவிட நாம் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றிய சிலரைப் பார்த்தும் சற்று ஆசுவாசமடைந்தேன்.  (அந்த நாளில் நேர்முகத் தேர்விற்விற்கு வந்திருந்தவர்களில் என்னைப்போன்றும், இவர்களைவிட நாம் பரவாயில்லை என்று நான் நினைத்த ஓரிருவர்தாம் தேர்வு பெற்றோம் என்பது வேறுகதை).
நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்தபோது, அந்தத் தேர்வுக்குழுவில் பெரியவர் PT இராஜனாரும் இருக்கிறார் என்பது மற்றவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தெரியவந்தது. அவர்தான் கல்லூரியின் தலைவராம்.(அப்படீன்ன??) அவருடைய மகன்,  PTR பழனிவேல்ராஜன் அவர்கள் அப்போது எங்கள் (தேனி) தொகுதியின் MLA. MLA  அவர்களின் தந்தையார்தான் அக்கல்லூரியின் தலைவரென்பது முதலிலே தெரிந்திருந்தால் யாரையாவது பிடித்து MLA வை அணுகி, அவரிடமும் சிபாரிசுக் கடிதம் பெற்றிருக்கலாம். (MLA விடம் கூட்டிச் செல்லுமளவு எனக்கு யாரும் இல்லை என்பது வேறு விஷயம்). இப்பொழுது காலம் கடந்து விட்டது.
என் முறை வந்து, நான் பதட்டத்துடன் உள்ளே சென்றேன். உட்காரச் சொன்னார்கள். அப்படித்தானே சென்ற ஆண்டும் உட்காரச் சொல்லித்தானே உதைத்தார்கள் என்ற நினைப்பு பயத்தை கொடுக்க நின்றுகொண்டே இருந்தேன். பிறகு இயக்குனர் உட்காரச் சொல்லி சைகையிட உட்கார்ந்தேன். இயக்குனர் த.வெ.பெ ராஜா அவர்கள், “இந்தப் பையன்  தேனியிலிருந்து வந்திருக்கிறார்” என்று PT இராஜன் (அவரை நேரில் பார்த்ததில்லையென்றாலும் போட்டோவில் பார்த்திருந்தேன்) அவர்களிடம் எடுத்துக்கொடுக்க,  அவர் என்னை ஊற்று நோக்கினார். என்னுடைய விண்ணப்பப் படிவத்தை வாங்கிப் பார்த்தார். அவர் பெரிய மனிதர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.  பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். போன்ற விவரங்கள் தவிர, அவரின் பேராளுமை பற்றி வேறெதுவும் எனக்கு அப்போது தெரியாது.
என்னைப் பார்த்து “எந்த ஊர்” என்று தமிழில் இயல்பாகக் கேட்க, “கோபாலபுரம், ஆனால்  கோனாம்பட்டி” என்று பேச்சு வழக்கு என்று தாடை நடுங்காமல் சொல்லிவிட்டேன்.
“எங்கே இருக்கிறது” என்று அவரே தொடர, “தேனிக்கு முன் இருக்கிற ரயில்வே கேட்டிலிருந்து தெற்கில் போகணும்”.
“அப்பா அம்மா என்ன செய்றாங்க” என்று கேட்க, “விவசாயம்” என்று பதில்சொல்ல, “எத்தனை குழி” என்று பெரியவர் தொடர, “15 குழி, 3 குழி அம்மச்சியாபுரம் பரவுலே வயக்காடு” என்று சொல்ல, “என்ன விவசாயம்” என்று மேலும் அவர் தொடர, “நெல், மிளகாய், பருத்தி, தக்காளி, கடலை” என்று சொன்னேன். குழி, அம்மச்சியாபுரம் பரவு என்பது தேனி வட்டார வழக்கு.அந்த வழக்கிற்காக நான் சொல்லவில்லை. வேறு விதமாக எனக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை.
தமிழவேள் P.T.இராஜனார்
“போன வருசமே முடிச்சிருக்கீங்க..இந்த ஒரு வருஷம் என்ன செஞ்சீங்க” என்று கேட்க,  “விவசாயம் தான். வரலட்சுமி காட்டன் போட்டிருந்தோம்” என்றேன்.
“ஏன் இங்கே சேர நினைக்கிறீங்க? என்று கேட்டதற்கு “இங்க படிச்சா வேலை கிடைக்கும்” என்று சொன்னார்கள் என்றேன்.
மீண்டும் ஒரு முறை என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். தான் கேட்கவேண்டிய கேள்விகளைக்  கேட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் கேட்கலாம் என்பதுபோல தேர்வுக்குழுவினரைப் பார்த்தார். யாரும் எதுவும் கேட்கவில்லை. “உனக்கான நேர்முகம் முடிந்துவிட்டது. போகலாம்” என்பதுபோல இயக்குனர் பார்வையால் சொல்ல, நான் வெளியேறினேன். அது நேர்முகத் தேர்வு போன்று இல்லாமல், ஒரு வாஞ்சை மிக்க பெரியவரிடம் பேசிவீட்டு வந்தது போல்  இருந்தது.40 வருடங்கள் கழித்து பதட்டமில்லாமல் எழுத முடிகிறது. ஆனால் அன்றோ…பல எண்ணங்கள்…என் முகத்தைப் பார்த்தே, இவனிடம் ஒத்த வரி ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கு மூச்சா போய்விடுவான் என்று நினைத்துதான் தமிழில் கேட்டிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன்.
நேர்முகத்திற்கு உள்ளே சென்ற மாணவர்களில் பலர் நீண்ட நேரம் கழித்தே அந்த அறையிலிருந்து வந்ததைப் பார்த்திருந்த எனக்கு, போன வேகத்திலே வெளித்தள்ளப்பட்ட என்னை, அங்கு காத்திருந்த மாணவர்கள் ஏளனமாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன். வெளியே வரும் மாணவர்களைச் சூழ்ந்து கொண்டு “உள்ளே என்ன கேட்டார்கள்” என்று கேட்க யாரும் என்னைச் சூழ்ந்துகொள்ளவில்லை. நான் அவர்களைப் பொறுத்தவரை பொருட்படுத்தத் தக்கவனல்ல என்பதை அது உணர்த்தியது மாதிரி பட்டது.  
எனக்குத் தெரிந்தவர்களில் யாரும் அங்கில்லையாதலாலும், மதுரை எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாததாலும், எங்கள் ஊருக்குச் செல்லும் கடைசி டவுன் பஸ்சைப் பிடிக்க அங்கிருந்து சட்டென்று வெளியேறினேன். இன்டர்வியூ எப்படி இருந்தது? என்ன கேட்டாங்க? சீட் கிடைக்குமா? என்று கேட்குமளவு எங்கள் வீட்டில் விவரம் இல்லை. அதற்கு முந்தைய வருடம் SSLC பெயிலாகி மேற்கொண்டு படிக்க விரும்பாத என் தம்பி, தன்னுடைய 17 வது வயதிலே விவசாயப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தான். பட்டதாரிகளுக்கென்று பால் வளத்துறை அப்போது அறிவித்திருந்த Mini Diary மானியத் திட்டத்தில், வீட்டிலிருந்த எழெட்டு எருமைகளோடு மேலும் பத்து எருமைகளை வைத்துப் பண்ணை வைக்கலாம் என்ற யோசனை எனக்கும், என் தம்பிக்கும் இருந்தது. ஆகையால் சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்பது பற்றிப் பெரிதாகக் கவலைப்படத் தோன்றவில்லை.
ஆனால் பதினைந்து நாள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாகவும், கடிதத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திச் சேரவேண்டுமென்றும், தவறினால் தேர்வு செய்யப்பட்டது காலாவதியாகிவிடுமென்ற தேதி குறிப்பிட்டு ஆங்கிலத்தில் கடிதம் வந்தது.
கல்லூரி இயக்குனரைத் தெரிந்திருந்த பெரியவர் எனக்காக உண்மையிலே சிபாரிசு செய்ததால் கிடைத்ததா? என் பாட்டியின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த குல தெய்வ அருளா? நான் BSc யில் பெற்ற மதிப்பெண்களா? எது என்னைத் தகுதியானவனாக ஆக்கியிருக்கும்? நிச்சயமாக என்னுடைய நேர்முகத் தேர்வு, நான் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்திருக்க முடியாது என்று நானே நினைத்தேன். 300 ரூபாய்தான் மொத்தக்கட்டணமே. அதைபுரட்டிக் கொண்டுபோக நான்கு நாள் ஆனது. ஐந்தாவது நாள்தான் செல்லமுடிந்தது.
கல்லூரி அலுவலக வாசலில் கூட்டமாக இருந்தது. தயங்கியபடியே நின்றிருந்தேன். என்னை விட வயது குறைவான, குள்ளமான, பள்ளி மாணவர் போல தோற்றமளித்த ஒருவர், என்னைப்பார்த்து நட்புடன் சிரித்து, “தேனி…. ரெங்கசாமி….அப்பா பேரு சீனிவாசன்…ஊரு கோபாலபுரம்” என்று cross check செய்யும் பாவனையில் கேட்க, நான் வேகவேகமாகத் தலையாட்டி ஆமோதித்தேன். ஏன் இவ்வளவு லேட்?. எல்லோரும் பணத்தை கட்டிவிட்டார்கள்.. நீங்கதான் கடைசி என்று சொல்லிக்கொண்டே பணத்தைக் கட்டுங்கள் என்று சொன்னார். அவர் பெயர் நாராயணசாமி என்று பின்னர் அறிந்தேன். அப்போது கல்லூரியில், அலுவலகத்தில் எல்லாமே அவர்தான்.. கல்லூரியில் சேர்ந்து அவரின் நண்பனான பிறகு, என்னுடைய பெயரை இயக்குனரும், பெரியவரும் (PT இராஜன் அவர்கள்) டிக் செய்திருந்ததை அவர் மூலமாகப் பின்னர் அறிந்தேன். பெரியவர் (PT இராஜன்) சென்னை மாகாண முதல்வராயிருந்திருந்தாலும், அவருக்குத் தான் பிறந்த  மண்ணின் மீது, அதன் மக்கள் மீது, தனிப்பரிவு இருந்ததாகவும், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் இருந்தால், தேனி பக்கமிருந்து வரும் மாணவர்களில் ஒன்றிரண்டு பேரை பரிந்துரைப்பாராம். இதைப்புரிந்து கொண்டுதான் கல்லூரி இயக்குனர்  என்னை இவர் தேனியிலிருந்து வருகிறார் என்று எடுத்துக்கொடுத்திருப்பார் என்று நான் தேர்வு பெற்ற ரகசியத்தைச் சொன்னார்
என்னங்கட இது….முதுகலை சேர்க்கைக்காக ஊர் பேரும், என்ன செய்கிறீர்கள்? என்று மட்டும் கேட்டார்களாம். சீட் கிடைத்ததாம்.. NEET, JEE, CAT, GMAT போன்றும், அதுபோன்ற பல நுழைவுத் தேர்வுகளுக்கு இயல்பாகப் பழகிவிட்ட இன்றைய தலைமுறை மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி, 40 வருடங்களுக்கு முன் நடந்த இந்தத் தேர்வு முறை பற்றி ஏளனமாகத்தான் நினைப்பார்கள். அப்பொழுது யாரும் ஏளனமாகப் பார்க்கவில்லை…1:20 என்ற அளவில் போட்டியிருந்தாலும், அங்கே சேருவதற்கு நிர்வாகம் கேட்கும் நன்கொடை (capitation) கொடுக்கப் பலர் தயாராயிருந்தாலும், வாடகைக் கட்டடத்தில் அக்கல்லூரி செயல்பட்டாலும், நன்கொடை வாங்காதிருப்பதை அந்தக் கல்லூரி நிர்வாகம் தர்மமாகக் கொண்டிருந்ததால், மாணவர் சேர்க்கை முறையைப் பற்றி எவராலும் விமர்சிக்க முடியவில்லை.
ஆனால் மதுரை சமூகப்பணிக்கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக வேறு விழுமியங்கள் இருந்தது மட்டுமல்ல, அது உயர் விழுமியங்களாகவும் இருந்ததைப் போகப்போகப் புரிந்துகொண்டேன். சமூக நீதி, தன்னிடம் படிக்கவரும் மாணவர்களை, குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்களை, எவ்வகையிலும் அச்சுறுத்தலாகாது என்ற கவனம்…. அந்தந்தக் கல்வித் தகுதிக்குரிய ஆங்கிலப் புலமையை அவர்கள் அங்கீகரித்தாலும், அங்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மிகப்பெரும்பான்மையினர், அந்த மொழியை இயல்பாகக் கையாளமுடியாமைக்கு அந்த மாணவனைக் கடந்த சமூகக் காரணிகளும் இருக்கின்றன என்பதைப் புரிந்திருந்ததால்….மாணவர்களைத் தேர்வு செய்ய, ஆங்கிலம் என்ற ஒன்றைமட்டும் ஒற்றை அளவுகோலாக வைத்திருக்கவில்லை. யார் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைத்தால், அதன் மூலம் தலைமுறைகள் தழைக்குமோ, அந்த மாணவனுக்குச் சராசரிக்கு மேலான மதிப்பெண் தகுதி இருந்தால் போதுமானது….அந்தக் கல்லூரி அரவணைத்துக்கொண்டது. அப்படித்தான் நானும் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அக்கல்லூரியில் படித்து அங்கே ஆசிரியராகப் பணிசெய்ய வாய்ப்புக்கிடைத்து, கிராம சமுதாய மேம்பாடு பாடத்தைக் கற்பிப்பவனாக ஆனபோது, என் பணியின் நிமித்தம் Understanding Rural Communities Based on Cropping Pattern என்ற கட்டுரையைப் படித்தபோதுதான், தமிழவேள் அவர்கள் என்னிடம் இயல்பாகக் கேட்ட கேள்விகளை வைத்து, வேளாண்மையைப் பின்னணியாகக் கொண்ட குடும்பங்களின் ஆளுமையை, அவர்கள் தொடர்ந்து பயிரிடும் பயிர்வகைகளைக் கொண்டே கணிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழவேள் அவர்கள் கேட்ட அதே கேள்விகளை என் மாணவர்களிடத்தில் கேட்டு, அவர்களின் குடும்பப் பின்னணியை என் போக்கில் விளக்கும்போது, “என்ன சார்! ஏதோ எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தது போல் துல்லியமாகச் சொல்கிறீர்களே” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
சின்ன குக்கிராமம், விவசாயப் பின்னணி, இங்கு படித்தால் வேலை கிடைக்குமென்று நம்புகிறான். இவனுக்கு வாய்ப்பளிப்போம். இவன் தலைமுறை தழைத்துப் போகட்டும் என்று அந்த தேர்வுக்குழு என்னை ஆசீர்வதித்திருக்கிறது. நான் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்திருக்கிறேன். அந்த ஆசீர்வாதம் என் வாழ்க்கையில் பொய்யாகவில்லை.
என்னைப்போன்று ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அந்த ஆசீர்வாதம் அக்கல்லூரி கொண்டிருந்த சமூகப் புரிதலிலிருந்து வந்தது.
2
நான் ஆசிரியரான புதிதில்
ஒரு மாணவன் கல்லூரியில் சேர விண்ணப்பப் படிவம் கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்தவன், நாம் பேசுவதை இவன் கேட்பான் என்று நம்பினானோ என்னவோ, “அண்ணே! இங்க சிபாரிசு இல்லாமல் சீட் கிடைக்காதாமில்லே” என்றபடியே என்னிடம் தயங்கித் தயங்கி வந்தான்.
“ஊரு கரிவலம்வந்தநல்லூர் பக்கமண்ணே…..மேலநீலிதநல்லூர் கல்லூரியில் படிப்பு. நிலபுலன் கிடையாது…கூலிவேலை தான்னே. அப்பா எங்களைவிட்டுட்டு இன்னொருத்தரோடு போயிட்டார். அம்மா, தங்கச்சி, அம்மாக் கிழவி. இங்க படிச்சா நிச்சயமா வேலை கிடைக்குமென்னு எங்க புரொபசர்ஸ் சொன்னாங்க. கூலி வேலைக்கு போய்க்கொண்டே தான் டிகிரி படிச்சேன். தமிழ் மீடியம்தான். 52 மார்க்குதான். ஆனா எப்பவும் எதிலும் பெயிலானதில்லை”.
அப்படியாகனும், இப்படியாகனும் என்ற ஆர்வம் எல்லாம் அவனிடம் இல்லை. ஆனால் நாலு பேருக்குச் சமதையாக, இதுவரை பட்ட கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறனும்….அதற்கு இந்தக் கல்வி வழிவகுக்கும் என்று நம்பியது தெரிந்தது.
அவனுடன் பேசினேன்…யாரிடமும் சென்று சிபாரிசுக் கடிதம் பெருமளவு அவனுக்குத் தொடர்புகளில்லை…..
“தம்பி! இங்கே யாரோட சிபாரிசும் செல்லுபடியாகாது. சிபாரிசு செய்கிறவர்களெல்லாம் நாம சொல்லித்தான் கிடைக்குது என்று நினைப்பார்கள். கல்லூரி டைரக்டர் நினைக்கணும்.  உங்கம்மாவை அழைத்து வந்து உங்க குடும்ப நிலையைச் சொல்லி, இயக்குனரிடம் முறையிடு. உனக்கு இங்கே சீட் கிடைத்துப் படித்தால், உங்கள் குடும்பம் தழைக்கும் என்று என்று உன் அம்மாவை வேண்டச்சொல்” என்று சொல்லி, அவன் தாயார் எப்படிப் பேசவேண்டும் என்று ட்ரைனிங்க் கொடுத்தேன். “ஜாக்கிரதை! நீங்கதான் சாமி என் பையனைக் கரைசேர்க்கனும் என்று சீன் போட்டு காலில் கையில் விழுந்தால் விரட்டிவிட்றுவாரு” என்று எச்சரித்து, இன்டர்வியூக்கான கடிதம் வந்ததும் அவர்கள் அம்மாவை அழைத்து வந்து டைரக்டரை பார் என்று அனுப்பிவிட்டேன்.
அவன் தன் தாயாருடன் வந்த அன்று நான் தற்செயலாக இயக்குனர் அறையில் இருந்தேன். கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளைக் கரையேற்றத் துடிக்கும் ஒரு தாயின் வைராக்கியம் அந்த அம்மையாரின் முகத்தில் தெரிந்தது.
யார் நீங்க? என்ன வேணும் என்று இயக்குனர் பார்வையால் கேட்டதைப் புரிந்துகொண்டு,
கையெடுத்து கும்பிட்டு, “ஐயா! நாங்க க.வ.நல்லூர் பக்கம். எனக்கு ஒரு பையன்.. ஒரு  பொண்ணு. பையன் காலேஜ் படிச்சி முடிச்சிட்டான். கூலி வேலைதான். இங்க படிச்சா வேலை கிடைக்குமென்னு சொல்றாங்க. நீங்க மனசு வச்சி இடம் கொடுத்தா, எங்க குடும்பம் பிழைச்சிக்கிடும்” என்று திருத்தமாக, பிசிறில்லாமல் பேசினார்.
“என்னம்மா! நீங்க பாட்டுக்கு உள்ள வர்ரீங்க. இடம் வேணுமென்னு சொல்றீங்க… இதென்ன சந்தைக்கடையா?…டைரக்டர் ஏதேதோ சொல்லி அவர்களை வெளியே அனுப்ப முயன்றார். அந்தம்மா…ஒரே போடாக…”கோவிலுக்கு போய் சாமிகிட்டே வேண்டுவது மாதிரி உங்களிடம் வேண்டுகிறேன். எம் பையன் இங்க படிச்சா எங் குடும்பம் பிழைச்சிக்கிடும். முடியாது என்று உங்க வாயால சொல்லாம நல்ல வார்த்தை சொல்லியனுப்பனும்” என்று சொல்ல, “சரி! சரி! பெரிய வார்த்தைகளெல்லாம் பேசாதீங்க” என்று சொல்லிவிட்டு, அந்தப் பையனைப் பார்த்து “உன் விவரத்தை ஆபீசில் கொடுத்துவிட்டுப் போ” என்று சொல்லியனுப்பி விட்டார். எந்த உத்தரவாதமும் இயக்குனரிடமிருந்து வராததால், “உம் பேச்சைகேட்டு எங்க அம்மாவையும் கூட்டிவந்தேன் பாரு” என்று என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு வெளியேறினான்.  .
சேர்க்கைக்கான தேர்வு முறைகள் முடிந்து, தகுதியான மாணவர்களைப் பட்டியலிடும் போது, டைரக்டர் அந்தப் பையன் எழுதிக்கொடுத்த குறிப்பைக் காண்பித்து இவன் பட்டியலில் வருவானா? என்று பார்க்கச் சொன்னார். ரெம்ப கீழே இருப்பதாகத் தெரிய வர, சரி இந்தப் பையனை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துவிடுங்கள் என்றார். நிர்வாக ஒதுக்கீடு என்பது பெரிய VVIP சிபாரிசுகளுக்கே கிடைக்கும். ஆனால் அவனுக்கு கிடைத்தது. தான் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்பதைக்கூட உணரமுடியாத மட்டித்தனம் அவனிடமிருந்தது வேறு விஷயம்.
அவன் படித்து முடித்து, 25 வருடங்கள் கழித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்த்தில் அவனை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தபோது, என்னை அடையாளம் கண்டு கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் பெயர் மறந்துவிட்டாலும், அவன் நினைவுகள் சட்டென்று வந்தது.
படித்து முடித்து ஓராண்டு NGO வில் வேலை. பின் வங்கிப் பணித்தேர்வு எழுதி கனரா வங்கியில் கிளார்க். MA முடிச்சிருக்கான். பேங்க் வேலை வேறு….அவர்களைவிட ஓரளவு வசதியான பட்டதாரிப் பெண் மனைவி. திருமணத்திற்குப் பின் மனைவியையும் தேர்வு எழுத வைத்து அவர்களுக்கும் வங்கி வேலை. தங்கைக்கு திருமணம முடித்து வைத்திருக்கிறான். ஒரு ஆண், ஒரு பெண். மச்சானுக்கு PWD ல் லஷ்கர் வேலை. .குடிப்பழக்கம். 38 வயதில் மரணம். தங்கையை வீட்டோடு வைத்துக் கொண்டான். தங்கை மகன் BE Computer Science. அப்பொழுது onsite ல் நைஜீரியாவில். தங்கை மகள் BSc Nursing. அவரும் வேலை பார்க்கிறார். MSc Nursing படிக்கப் போறாளாம். இவருக்கு ஒரே பையன் BE Computer Science முடித்து campus placement டில் பெங்களூரில் வேலை. ஜப்பானுக்கு on site பணிக்காக ஆறுமாதம் போய் வந்தானாம். கிழவி இல்லை. (சில சோகங்கள்  வேண்டாம்)
புதிய வீடு, கொஞ்சம் நிலபுலன்….டிராக்டர்….தங்கையின் பொறுப்பில் விவசாயம்…தங்கை மகளின் திருமணத்திற்காக கொஞ்சம் நகைகள்… சேமிப்பு….ஆளுக்கு ஒன்றாக அவன் வீட்டில் ஐந்து டூவீலர்ஸ். கார் வாங்க எண்ணமிருக்கிறது….இன்னும் பத்தாண்டுகள் பணியிலிருக்கலாம்…குழந்தைகளின் கல்வி மீதான முதலீடு முடிந்து, அவர்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்….இனியென்ன? தலைமுறை தழைத்தது.
கல்வி கரை சேர்க்கும்தானே…..கல்வியில் கவனம் செலுத்திய முதல் தலைமுறையினரின் அனைவர் வாழ்விலும் இப்படித்தான் நடந்துள்ளது. இதில் புதுமை ஒன்றுமில்லைதான். இதில் சமூகப்பணிக் கல்லூரியைப் பெருமை படப் பேச என்ன உள்ளது என்று கேட்கலாம்.
50 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும் PUC பெயில் என்று ஓரிருவராவது இருப்பர். PUC பெருந்தடை. அதையும் தாண்டி பட்டப்படிப்புக்கு வந்தவர்களின் கல்வி அதோடு முடிந்தது…. MA, MSc மிகக் குறைவான இடங்களே… எல்லோருக்கும் இப்பொழுது போல் வாய்ப்பு இல்லை…..முதுகலைப் பட்டப் படிப்பை வைத்து முதலமைச்சராக முடியாதுதான்….ஆனால் அதை முடித்துவிட்டால்….MA படிச்சிருக்கான்….ஏதோ .வேலையும் பாக்குறான்….அதுவே அவர்களை விடப் பொருளாதாரத்தில் செழுமை படைத்தவர்களிடம், இவனை நம்பி நம் பெண்ணைக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த, அதுகாறும் அவர்கள் அனுபவித்தறியாத சமூக மரியாதைக்கும், மேலதிகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் அந்தப்பட்டமே வழி வகை செய்தது…. இப்படி மேலெழுந்து தழைத்தவர்கள் பலர்….மதுரை சமூகப்பணிக் கல்லூரி மேலெழுந்து தழைப்பதை பலருக்கும் சுலபமாக்கியது….விரைவாக்கியது. கடந்த காலத்தில் உயர்கல்வி வாய்ப்பு எப்படியிருந்தது, அதிலும் சமூகப்பணிக்கல்வி வாய்ப்பு எப்படியிருந்தது என்பதை உணர்ந்தவர்களால் தான், மதுரை சமூகப்பணிக்கல்லூரியின் சமூகப் பங்களிப்பை உணர முடியும்.
3
1982 ஆம் ஆண்டு….
மதுரை மத்திய சிறைச்ச்சாலையில் ஆழ்நிலைத் தியானத்தைக் கைதிகளுக்குக் கற்றுத்தந்து அதன் விளைவுகளை ஆய்வு செய்ய, கல்லூரி முன்னெடுத்த ஒரு ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றினேன். 40 ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுக்குத் தியானம் கற்றுத்தரும் திட்டம். சிறைவாழ் மக்களின் அந்த அன்பு இன்றளவும் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
அதில் தனுஷ்கோடி என்பவர், தண்டனை முடிந்து இன்னும் ஆரேழு மாதத்தில் விடுதலையாகவிருந்தார். தன்னுடைய மூத்தமகன் கல்லூரிப் படிப்பை முடிக்கவிருப்பதாகவும், அவனை சமூகப்பணி படிக்க வைப்பதான தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். விடுதலையான பிறகு கல்லூரி வந்து இயக்குனரைச் சந்தியுங்கள் என்று ஆலோசனை சொன்னேன்.
விடுதலையான மூன்றாம் நாளே கல்லூரிக்கு வந்தார். இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்தேன். “தான் ஒரு கொலைக்குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி இருப்பதாகவும், சிறைக்கு களப்பணிக்கு வரும் அவரது (சமூகப்பணிக் கல்லூரி) மாணவர்களைப் பார்த்துப் பழகியதால், தன்னுடைய மகனையும் சமூகப்பணி படிக்க வைக்க விருப்பப்படுவதாகவும், அவருடைய மகனுக்கு இடம் கொடுத்து உதவவேண்டும்” என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு வேண்டுகோள் வைத்தார்.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து, அவரின் கைகளை வாஞ்சையாகப் பிடித்துக் கொண்ட இயக்குனர், “இந்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதற்காக மகிழ்ச்சி….ரிசல்ட் வந்தவுடன் உங்கள் மகனை விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்” என்றார். அவருடைய மகனுக்கு இடம் கிடைத்தது. அது எதிர்பார்த்ததுதான்.
ஆனால் அதைத் தொடர்ந்து நடந்துதான் சமூகப்பணிக்கல்லூரியின் பேரடையாளம். தனித்துவம். கல்லூரியில் பெற்றோர் கழகம் நடந்து வந்தது. முதலாமாண்டு சேரும் மாணவர்கள், முதல் நாள் கல்லூரிக்கு வரும்போது, பெற்றோருடன் வரவேண்டுமென்ற  வழக்கம். அக்கல்லூரியிலிருந்து, அக் கல்வியிலிருந்து பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லச் சொல்லும் வழக்கம் இருந்தது. ஒரு பத்து, பதினைந்து பெற்றோர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசுவதை வைத்து, பிற பெற்றோர்கள் அவர்களில் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த ஆண்டு மாவட்ட அமர்வு நீதிபதி ஒருவரின் மகளும், உதவி காவல் துறை கண்காணிப்பாளரின் (DSP) மகனும் கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள். அவர்களும் பேசினார்கள். தனுஷ்கோடி அவர்களும் பேசினார்.
தனுஷ்கோடி அவர்கள்  பேசியதை வைத்து அவர்தான் அந்த ஆண்டின் பெற்றோர் கழகத்திற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும், அதற்கு அடுத்து நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் அழைக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரிய மனிதர்களுக்கு இணையாக மேடையில் அமர்த்தப்பட்டு, உரையாற்றுவார். தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி அவர் உரையாற்றுவதை அனைவரும் ஆர்வமுடன் ரசித்துக் கேட்பார்கள். மாணவர்களும் அவரை அப்பா, அப்பா என்று சூழ்ந்துகொள்வார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ஆனந்தவிகடன், அப்பொழுது அங்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றிய திரு.சுந்தரம் என்பவரை அனுப்பிவைத்து, தன்னுடைய 3.10.1982 தேதியிட்ட இதழில் “சப்தமில்லாமல் சமுதாயப்பணி இங்கே நடக்கிறது” என்று ஏழு பக்க அளவில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியிட்டு கல்லூரியை கவுரவித்தது…..
எளிய பின்னணி கொண்ட மாணவர்களை அரவணைத்துக்கொண்டது சமூக அறிவியல் கல்லூரியின் அடையாளமாக இருந்தது. இன்று அடையாளங்கள் மாறிவந்தாலும், அரவணைப்பின் சுகத்தை அறிந்த, உணர்ந்த அதன் மாணவர்கள் தங்கள் பணித்தளங்களில் தங்களை நாடிவருவோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம் அந்த அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
4.
கல்லூரியில் ஆசிரியப்பணி சேர்ந்து 15 ஆண்டுகள் கழிந்தது.
என்னுடன் படித்தவர் நண்பர் ஜோஸ். 200 தடவைக்கு மேல் இரத்ததானம் அளித்ததால் அவர் குருதிக்கொடை ஜோஸ் என்றே மதுரையில் அறியப்படுபவர். மாணவனாக இருந்த போதே அவர் அதி தீவீர பெரியாரிஸ்ட். தமிழார்வம் மிக்கவர். அனைவருடனும்
அணுக்கமானவர். பல வருடங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான, ஏழை மாணவர் ஒருவருக்குப் பரிந்துரை செய்வார். அவர் பரிந்துரைகள் நியாயமாக இருக்கும். பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒரு ஆண்டு நேர்முகத் தேர்வு நடைபெற்ற சமயம். யாருக்கோ பரிந்துரைக்க வந்திருக்கிறார். என்னை சந்தித்தார்.
“ரெங்கசாமி! இன்று பெரியாரிலிருந்து டவுன் பஸ்ஸில் வந்த பொழுது அவ்வளவு கூட்டம். நெரிசல். அழகர் கோவிலுக்குச் செல்லும் அந்த பஸ்ஸில் கசங்கிய உடைகளுடன் ஒரு ஏழைத் தம்பதியர் ஏறினார்கள். அந்தப் பெண்ணின் கையில் கைக்குழந்தை. கையில் ஏதோ பை. இருவர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்த, நன்றாக உடையணிந்த கொஞ்ச வயசுப் பெண், எழுந்து, தான் அமர்ந்திருந்த சீட்டில் அமரச் சொல்லியும், பக்கத்தில் அவரோடு உட்கார்ந்திருந்த கொஞ்ச வயது ஆணைப் பார்த்து, உட்காரத் தயங்க, அதைப் புரிந்துகொண்ட இருவரும் எழுந்திருந்து அந்த தம்பதியை உட்காரச் சொல்ல, அதை மறுத்துவிட்டு குழந்தையை மட்டும் வைத்திருக்கச் சொல்லி நின்று கொண்டார். குழந்தையை வாங்கிக்கொண்ட அந்த இளவயதுப் பெண் பஸ்ஸில் வந்த இருபது நிமிடமும், தன் சொந்தச் சகோதரியின் குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்சிக் கொண்டு வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”.
நம்ம காலேஜ் ஸ்டாப்புலே இறங்க, அவரும் இன்டர்வியூக்காகத்தான் தன் சகோதரருடன் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு, பயணத்தின் போது அவர் பால் ஏற்பட்டிருந்த மரியாதையால், நானே அவர்களிடம்  பேச்சுக்கொடுக்க, அந்தப்பெண்ணின் மீது மேலும் மரியாதை ஏற்பட்டது. எந்தப் பேதமும் இல்லாமல்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு வந்த அந்தப் பெண் பிராமண வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரியவர, மேலும் மரியாதை ஏற்பட்டது. இந்த மாதிரி மனப்பக்குவம் கொண்ட பெண்கள் இங்கு படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் FC ஆதலால் அவர்கள் செலக்ட் ஆவார்களா என்று தெரியவில்லை”.
குருதிக்கொடை ஜோஸ்
“நான் ஏற்கனெவே ஒருவருக்குப் பரிந்துரைத்துவிட்டேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. நீங்களும், நாராயணனும் (உடன் படித்து கல்லூரியில் பேராசிரியர்) ஏதாவது செய்து, இது மாதிரியான பெண்கள் இங்கே சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அந்த மாணவி எல்லாத் தேர்வுகளிலும் சரியாகச் செய்திருந்தாலும் FC என்பதால் ஒரு சின்ன push தேவைப்பட்டது. அவர்களுக்கு இடம் கிடைத்தது. இன்றுவரைக்கும் ஜோஸ் அவர்கள் தான் அவரை அடையாளம் கண்டு சொன்னார்  என்பது அவருக்குத் தெரியாது.
தோற்றப்பொலிவில் சமமாக இருந்தாலும், கடைசியில் Attitude அறிந்துகொள்ள கேட்கப்படும் ஒன்றிரண்டு கேள்விகளை வைத்து உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், ஒரு பெண் தன் சக மானுடத்தை பேதமற்று நேசிப்பதை, இருபது நிமிட உற்றுநோக்கலால் ஜோஸ் போன்ற மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாதா என்ன? அவர் புரிந்துகொண்டது மட்டுமல்ல அதைப் போற்றவும் செய்தார்.
இவருக்கு இடம் கொடுத்தால்  தழைத்தோங்குவார் என்று நம்பிக்கை தந்தவர்களை, இவருக்கு இடம் கிடைத்தால் பேதமற்று சக மானுடர் மீது அன்பு செலுத்துவார் என்று நம்பிக்கை தந்தவர்களை சமூகப்பணிக்கல்லூரி மட்டுமல்ல அந்தக்கல்லூரியில் படித்த மாணவர்களும் அரவணைத்துக் கொள்வதை நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். ஜோசின் பரிந்துரை அதற்கான உதாரணம்.
5
மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படித்து, காவல்துறை துணைத் தலைவராக (Deputy Inspector General of Police) உயர்பதவி வகிக்கும் நண்பர் முத்துசாமி IPS அவர்கள் நேர்மையான அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டவர் அவரின் அனுபவத்தைக் கேட்டால், மேலே சொன்னதையெல்லாம் கடந்த கால உதாரணங்கள் என்று யாரும் உதாசீனப்படுத்திவிட முடியாது. முத்துசாமி அரவணைப்பு எனும் அடியுரமிட்டு உயிர் தளிர்க்க உதவிய ஒரு கல்லூரிப் பாரம்பரியத்தின் நீட்சி.
அவரின் அனுபவம். “ஒரு மாதத்திற்கு முன்னாள் ஒரு பந்தோபஸ்து பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். சுத்தமான உடை அணிந்திருந்தாலும் அவர் அணிந்திருந்த பேண்டும், ஷர்ட்டும் அவரின் வசதியின்மையைக் காட்டியது. என்னை நோக்கி வர முயன்ற அவரை ஒரு காவலர் தடுப்பதற்குமுன், பணிவான நமஸ்காரத்துடன் என்னை நெருங்கி அருகில் வந்துவிட்டார். என்னுள் இருந்த காவலர் புத்தி சட்டென்று தலைதூக்கியது. ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவருக்குப் பிரச்சனையிருக்கும். என்னிடம் புகார் சொல்லத்தான் வருகிறார்” என்றுதான் நினைத்தேன்.
‘வந்தவர் கும்பிட்ட கைகளை எடுக்காமலே “ஆறு வருசத்துக்கு முன், என் தம்பி பையனைக் காலேஜில் சேர்ப்பது விஷயமாக, எனக்குத் தெரிந்தவர் உங்களைப் பார்க்கச் சொல்லி உங்களைப் பார்த்தோம். ஆனால், எம்மகனிடம் பேசிவிட்டு, நீங்களோ நேரடியாக அவனை அழைத்துச் சென்று பச்சையப்பாசிலே சேர்த்து விட்டீங்க. அவன் பொறுப்பா படிச்சான். MSc முடிச்சி, இப்போ கவர்ன்மெண்ட் ஸ்காலர்சிப்புலே பூனாவில் டாக்டர் பட்டத்துக்குப் படிச்சிட்டிருக்கான். உங்களைப் பற்றி பத்திரிகையில் வரும் செய்திகளை எங்களுக்குக் காட்டுவான். பூனாவிற்குப் போகுமுன் உங்களைப் பார்க்கணும்னு நினைச்சான். ஆறு வருசத்துக்கு முன் நடந்தது..உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குமோ என்னமோ, இப்போ போய் பார்த்த்தால் ஏதோ காரியம் நிமித்தமாக அடிபோடுகிறான் என்று நினைத்து விடுவீர்களோ”என்ற பயத்தில் தயங்கிவிட்டான்” என்று தடுமாறிப் பேசினார்.
முத்துசாமி IPS
கூப்பிய கரங்களை எடுக்காமலே கண்ணில் நீர்தழும்ப பேசிக்கொண்டிருந்தவரின் தோளில் கைபோட்டு, “நீங்க எப்போ வேணுமென்றாலும் என்னை வந்து பார்க்கலாம். வீட்டிற்குக்கூட ஒரு நாள் வாங்க. என் போன் நம்பர் கொடுக்கிறேன். உங்க பையனை பேசச் சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்திருந்த போதே அடக்க முடியாமல் என் கண்களில் நீர்தளும்பியது. காரணம் நன்றி சொல்ல வந்த பெரியவரை, ஏதோ ஒரு சலுகையின் பொருட்டே நம்மிடம் வருகிறார்” என்று தவறாக நினைத்துவிட்டதற்காக.“நன்றியுணர்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல், தாங்கள் பெற்ற சிறு சிறு சாதனைகளை வெளியில் சொன்னால் தற்பெருமை பேசுகிறான் என்று தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் சாதாரண மக்கள் ஊமைகளாகி விடுவதை நினைக்க நினைக்க, அவரின் நிலையில் தானே நாமும் இருந்தோம் என்ற நினைப்பு வந்ததால் என் கண்ணீரை அடக்கமுடியவில்லை” என்றார்.
முத்துசாமி ஏழை மாணவர்களின் கல்வியின் பால் அக்கறை கொண்டு செயல்படுவது அறிந்த, தமிழகம் மதித்த காவல்துறை இயக்குனர் (Inspector General of Police) திரு. வால்டர் தேவாரம் அவர்கள் தனது கைப்பட முத்துசாமி IPS அவர்களுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில்  முத்தாய்ப்பாக Save children with a will to study and come up in life. Keep it up” என்று முடித்திருந்தார்.  “கல்வியின் மூலம் தழைக்க விரும்பும் எவருக்கும் உன் கரம் கொடுத்து காப்பாற்றும் செயலைத் தொடர்ந்து செய்” என்று வாழ்த்தியிருந்தார். என்ன ஒரு தீர்க்க தரிசனம் மிக்க வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
இதைச் சொல்லிவிட்டு கடைசியில் முத்துசாமி அவர்கள் ஒரு கேள்வி எழுப்பினார். “கல்லூரிச் சேர்க்கை தொடர்பாக என்னிடம் வரும் எல்லோருக்கும் நான் பரிந்துரைப்பது இல்லைதான். ஆனால் என் உதவியை நாடிவரும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் சில நிமிடங்கள் பேசினாலே, இக்கல்வியின் மூலமாக இவன் உயிர் பெற்று தழைப்பான்” என்று என் உள்மனம் சொல்லும். அப்படிப்பட்டவர்களை நானே நேரடியாக கல்லூரிக்கு அழைத்துச் சென்று முதல்வர்களிடம் பேசி அவர்களுக்கு உதவ வேண்டுகோள் வைப்பேன். என்னுடைய வேண்டுகோளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி நான் உதவிய யாரும் என் நம்பிக்கையைப் பொய்யாக்கியதுமில்லை” என்ன ஒரு தெளிவான புரிதல்.
“சார்! விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டியதில்லை. இந்த உதவி இவனை உயிர்த்தெழ வைக்கும் என்று நம்பும் ஒரு சிலருக்கு விதிகளைத் தளர்த்தி உதவி செய்து பார்க்கலாமே. அதை ஏன் நமது கல்வி நிறுவனங்கள் செய்வதில்லை. என்னென்னமோ testing procedures வைத்திருக்கிறீர்களே. இவன் உயிர்த்தெழுவான் என்று அறிந்துகொள்ள உதவும்  தேர்வுமுறைகளை (testing procedures) உங்களால் உருவாக்கமுடியாத என்ன? என்ற கேள்வியை எழுப்பினார். என்னிடம் பதில் இல்லை.
அப்படி ஒரு தேர்வுமுறையை மதுரை சமூக அறிவியல் கல்லூரி அந்தக்காலத்தில் வைத்திருந்தது. அப்படித் தேர்வு செய்யப்பட்ட பலரில் நீங்களும், நானும் இருந்திருக்கிறோம் என்று தான் அவருக்குப் பதில் சொல்ல முடிந்தது.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.