Community Development

July 13, 2010

அரவாணியம்-விளிம்பு நிலை மக்களின் மொத்த உருவகம் –Transgenders- Epitome of Marginalization

Filed under: Uncategorized — cdmiss @ 1:44 pm

ற்றுக்கொள்ளல் (The Principle of Acceptance) என்ற கருத்தாக்கம் சமூகப்பணியின் அரிச்சுவடி;பால்பாடம். ஆனால் அதை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கான ஆரோக்கியமான போதனா முறைகளை சமூகப்பணிக் கல்வியாளர்கள் உருவாக்கத் தவறிவிட்டார்களென்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அந்தக் கருத்தாக்கமே, Inclusive Growth (அனைத்தையும், அனைவரைய்ம் உள்ளடக்கிய மேம்பாடு) என்று விரிவாகி, வலுவாகி, அனைவரும் எளிதாக உள்வாங்கும்படி, புரியும்படி வரும்போது, Acceptance என்ற கருத்தாக்கத்தின் வலிமையை, மேன்மையைப் பொதுமையாக்கவும்,உலகமயமாக்கவும் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது..

Acceptance-இன் எதிர்பபதம் Rejection -புறக்கணித்தல். மானுட அவலங்களுக்குப் புறக்கணித்தாலே காரணம் என்று நம் புத்தி தெளிவடைந்ததன் விளைவே நாம் கையாள ஆரம்பித்த Inclusive Growth என்ற கருத்தாக்கம். Inclusive Growth என்ற கருத்தாக்கத்தின் ஆழத்தை, அது சமூக மாற்றுருவாக்கச் சிந்தனைகளில் ஏற்படுத்திய வேகத்தை, பங்கேற்பு முறைகளில் (Participatory Methods) ஏற்பட்ட பரிச்சியத்தினால் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு, அவர்களின் ஜீவனோபாய முயற்சிகளை விருப்பு, வெறுப்பின்றி திறந்த மனதுடன் அணுகக் கூடிய மனமுதிர்ச்சி வேண்டும். அந்த மனமுதிர்ச்சியைப் பங்கேற்பு முறைகள் தரும்.

நாம் பிறரைப் புறக்கணிப்பதும், நம்மைப் பிறர் புறக்கணிப்பதும் சரியான புரிதல் இல்லாமல் உருவாக்கிக்கொள்ளும் முன் தீர்மானங்களாலும், துவேசத்தாலும் ஏற்படுவது. சகட்டு மேனிக்கு பிறரைப் புறக்கணிககத் தூண்டும் நமது தவறான முன்தீர்மான முடிவுகளையெல்லாம் தடிகொண்டு தாக்கி துவம்ஸம் செய்வது மாதிரியான பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. அதில் எனக்குப் பிடித்த ஆய்வு மும்பை சாப்பாட்டுக் கூடைக்காரர்களைப் பற்றியது.  (Mumbai Dabba walla, Alexandria Quien, EPW, March, 29, 1997). சாப்பாட்டுக் கூடைக்காரர்களின் சமூக அமைப்பை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து வைத்திருக்கும் பரீட்சார்த்தமான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அவர்களின் தொழில் நேர்த்தியை, நெறிமுறைகளை அழகாக எடுத்துச் சொன்ன ஆய்வு. Aravaani 1 அந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்ததின் விளைவாக விளிம்பு நிலை மக்களின் ஜீவனோபாய முயற்சிகளை உற்றுக் கவனிக்க ஆர்வமேற்பட்டு, சலவைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்று பலரை ஊற்றுக் கவனிக்க, கவனிக்க அவர்களிடமிருந்த உள்ளார்ந்த வலிமை புரிய வந்தது.

புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், அவர்களுக்காக கொள்கைகள் வடிவமைத்தும (Policy Design), கோடிக்கணக்கில் செலவிட்டும் நாம் செய்கின்ற முயற்சிகளெல்லாம் எதிபார்தத விளைவுகளை ஏற்படுத்தாமல், Jean Dreze சொல்கின்ற மாதிரி, “everything looks like it has been designed to fail” என்றே படுகிறது.

சற்று சிந்தித்துப் பார்த்தால், நாம் ஏற்றுக் கொண்டவர்களைவிட, நாம் புறக்கணித்து வைத்திருப்பவர்களின் பட்டியல்தான் நீளமாயிருக்கும் போலிருக்கின்றது. ஏழைகள், பல்வேறு ஜாதிக் குழுக்கள், தொழில் குழுக்கள், பூகோளப் பிராந்தியங்கள் என்று நீளும் பட்டியலில் திருநங்கைகள்-அரவாணிகளும் அடக்கம்.

சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது நான் அதன் வாசகன். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப இளைஞன், கனவுகளோடு கல்லூரியில் சேர, அவனுள், அவனாலயே கையாளமுடியாத மாற்றங்கள்…அந்த மாற்றங்களால் அவன் படும் அவஸ்தை…ஒரு ஆண் அரவாணியாவதை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள சமுதிரத்தின் “வாடாமல்லி” என்னைப் போன்று பலருக்கும் உதவியிருக்கும்.

நம்மில் பெரும்பாலோர் நினைக்கின்ற மாதிரி எந்த ஆணும் வீம்புக்கென்று அரவாணியாவதில்லை. ஒரு ஆண் அரவாணியாக மறுபிறப்பெடுப்பதை உளவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ கையாளவும், கட்டுப்படுத்தவும் நமக்கு இன்னும் கைவரப்பெறவில்லை. ஒரு ஆண் அரவாணியாகும் அந்த நிமிடத்தில், நறுமணம் கசிய, தேவாதி தேவர்களெல்லாம் பூச்சொரிய, அவர்களைச் சுற்றியிருப்பவர்களெல்லாம் பரவசமாகி களிநடனம் புரிவார்களென்பதெல்லாம் இல்லை. அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதெல்லாம் புராணங்களோடு சரி. மாறாக உதையும்,கேலியும், அவமரியாதையும்தான் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வெகுமதிகள்.

அரவாணியாவதென்பது எதனோடும் ஒப்பிடமுடியாத, மரணத்திற்கு ஒப்பான மாபெரும் அவஸ்தை. இந்த அவஸ்தையிலிருந்து விடுபட, ஒரு ஏதுவான சூழல் இல்லாவிட்டால், ஒரு ஆண் அரவாணியாவதை விட பிணமாகிவிடுவான். அவர்களை அரவணைத்து, ஆறுதல்படுத்தி, ஆணை விட அரவாணியத்திலிருக்கும் விடுதலையையும், சுகத்தையும் அவர்களுக்குப் புரியவைப்பது யார்? எது?

Vasan Eye Care நிறுவன விளம்பரத்தில் வருகின்ற மாதிரி, “நாங்க இருக்கோம்” என்று அரவணைத்துக் கொள்கின்ற சமூக அமைப்பு அரவாணிகளிடத்தில் இருக்கின்றது. அரவாணிகளே சொல்கின்றமாதிரி, அவஸ்தைக்குள்ளாகிருப்பவர்களின் கெமிஸ்ட்ரிஐ அவர்களால் (பிற அரவாணியால்) முகர முடியும். தாய், மகள், சகோதரி, சித்தி, ஜமாத் என்று விரியும் உறவுகளும், அமைப்புக்களுமே அவர்களைத் தற்கொலை முயற்சிகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகின்றது. அரவாணிகளின் சமூக அமைப்பு, சமூக உறவுகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குள்ளான சந்தோசங்கள், சச்சரவுகள் எதுவும் ரகசியமானதல்லவென்றாலும், அதை அறிந்து கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. அவர்களைபற்றி நாம் அறிந்திருப்பதெல்லாம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள் என்றுதான். அது எய்ட்ஸ்ஐ கட்டுப்படுத்த வேண்டுமானால் உதவலாம். வேரெதற்கும் பெரிய அளவில் உதவுமா என்பது கேள்விக்குரியே!

அங்க்கீகரிக்கப்படமாட்டோம் என்று தெரிந்திருந்தும் அரவாணி என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டு, எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அவர்களை ஜீவிக்க வைத்துக் கொண்டிருக்கும் சமூகப், பொருளாதார, உளவியல் காரணிகள் என்னென்ன? ஒரு தலித் புறக்கணிக்கப்படும்போது, உடல் ஊனமுற்றவர் புறக்கணிக்கப்படும் போது, அங்கே உதாசீனமும், உரிமை மீறலுமே பிரதானமாகின்றது. அவர்கள் கேலிப் பொருளாவதில்லை. ஆனால் அரவாணிகளிடம் அத்துணை அத்துமீறல்களும் நடப்பதோடு மட்டுமல்ல, அவர்களைக் கேலிக்குரியவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றோம்..

விளிம்பு நிலை மக்களில் கடைநிலையிலிருப்பவர்கள் அரவாணிகள். அரவாணிகளைப் பற்றிய சரியான புரிதல் அதிகமாகும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரப் போக்குகளையும், அதைக் கையாளும் சரியான கொள்கை முடிவுகளையும் நம்மால் எடுக்க முடியும்.

அரவாணிகள் உடலுறவு கொள்ளும் முறைகள், அவர்களின் உடலமைப்பை ஒட்டிய சுவாரசியங்களைத் தாண்டி, அவர்கள தனி மனுஷிகளாக, சமூக அமைப்பாக எப்படி இயங்குகிறார்கள், தங்களுடைய ஜீவனோபாய முயற்சிகளை எப்படி வகுத்துக் கொள்கிறார்கள் போன்றவற்றில் நமக்கேற்படும் புரிதல், தெளிவு, விளிம்பு நிலையில் வாழும் பிற மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் பரீட்சார்த்தமான நடைமுறைகளைக் கொண்டுவர உதவும். சமூக நன்மைக்காக வேண்டியாவது அரவாணிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவாணிகளைப் புரிந்து கொள்ள பிரத்யேக முயற்சிகள் எதும் நான் எடுத்ததில்லை. அரவாணிகள் பற்றி சில மாணவர்கள் ஆய்வு செய்ய விரும்பிய போது, இது இதையெல்லாம் பார்க்க முயலுங்கள் என்று உற்சாகப்படுத்தி, அவர்களோடு ஒத்துழைக்கத் தயாராயிருந்தாலும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும். எப்படியெல்லாம் ஆய்வு செய்வோம் என்பதை எழுதினால், மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொண்ட மாதிரிதான்.

ந்நிலையில் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பாரதி கண்ணம்மா என்ற அரவாணியைச் சந்தித்து என் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்து, Community Development மாணவர்களிடம் பேச அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அவருடன் மோனிஷா என்ற சக அரவாணியையும் அழைத்து வந்திருந்தார். இந்த அரவாணிகளிடத்தில்தான் என்ன பெரிய ஆளுமை! ஒரு கைதேர்ந்த பயிற்சியாளருக்குரிய லாகவத்தோடு பாரதி மாணவர்களைக் கையாண்ட பாணி, குகனோடு ஐவரானோம் என்று ராமபிரான் சொல்லிய மாதிரி, உங்கள் வயதில் எங்களுக்கு மகன்களும், மகள்களும் இருக்கின்றார்கள்- நீங்களும் எங்கள் பிள்ளைகள்தான் என்று மாணவர்களை உள்ளடக்கித் தங்களைத் தாங்களே விசாலப்படுத்திக் கொண்ட பாங்கு, பாரதியைப் பற்றி மோனிஷாவும், மோனிஷா பற்றி பாரதியும் அடித்துக் கொண்ட கமெண்ட்ஸ், பாரதி கண்ணம்மா மிஸ் கூவாகமாக முடிசூடியது, மோனிஷா நடிகர்திலகம் வீட்டு சமயலறையில் அறுசுவை தயாரித்தது, அரவாணிகளுக்கிடையேயான அரசியல், அந்த அரசியலால் நடக்கும் திருகுதாள வேலைகள் என்று எங்களுக்குப் புரிய வந்த அவர்கள் வாழ்க்கை முறைகள் … ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுவாரசியமாகத் தொடர்ந்தது அந்த அமர்வு. வாரந்தோறும் அவர்கள் அறக்கட்டளை நடத்தும் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றார்கள்.

Aravaani

பங்கேற்பு முறைகளைப் பயன்படுத்தி அரவாணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கையும், அபிமானமும் அவசியம். அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைத்தாகி விட்டது. பாரதி கண்ணம்மா, மோனிஷா போன்றவர்கள், அரவாணிகள் உலகத்திற்குள் எங்களின் கைபிடித்து அழைத்துச் சென்று, அரவாணியத்தைப் பற்றிய புதிய பரிமாணங்களைக் காட்டுவார்களென்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அரவாணியம் என்பது விளிம்பு நிலை/புறக்கணிக்கப்படுதலின் மொத்த உருவகம். ஏழ்மை, நிரந்தரமற்ற, இடர்பாடுகளுக்குள்ளான ஜீவனோபாய முறைகள், ஐயப்பாட்டிற்கும் கேலிக்குமுல்லாதல், விநோதமாகப் பார்க்கப்படல், உரிமை மறுக்கப்படல் என்று விளிம்பு நிலைமக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் அத்தனை அடையாளங்களையெல்லாம் தாங்கி நிற்பவர்கள் அரவாணிகள்.

விளிம்பு நிலை மக்களில கடைநிலையிலுள்ள அரவாணிகளைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்கும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் நிலையை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நம் அனைவரின் விடுதலை வேண்டியாவது, அரவாணிகளை நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisements

2 Comments »

 1. Sir,
  I can understand the agony of being rejected and maturity we need as social work students (at least to begin with). The great insight one could draw from this article according to me is Marginalisation is much beyond than poverty & casteism / raceism etc. Keep enlightening us Sir.
  Always your student,
  S. Sowmia

  Comment by Sowmia — July 19, 2010 @ 8:47 am

 2. Dear Sir,
  I feel that the society is in the process of accepting this section of people who are the Nature’s error. Its bcos of that only we social work students have come out of our prejudice and undertaking researches on them. though it may be a small attempt in getting them to know, the greater part lies in the hands of the policy makers and our politicians where they can change the attitude of the people by their decisions. Even the accepted 2nd gender has to fight all the way to get our 33% reservation in every aspects how come the 3rd gender will be Accepted ? ?

  Comment by Amirtha — July 24, 2010 @ 11:14 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: