Community Development

December 10, 2011

அறிவார்ந்த ஆணவமல்ல! பணிவார்ந்த பகிர்தலே!

Filed under: Uncategorized — Tags: , , , — cdmiss @ 5:46 am
இணையம் ஒரு மாபெரும் அறிவுச் சுரங்கம். அதைப் பயனுள்ளதாகவும், அழகுள்ளதாகவும் ஆக்குவது, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாத, முகமறியப்படாத தன்னார்வலர்களே. அனைவராலும் கையாளத்தக்க, எளிமைப்படுத்தப்பட்ட, இணையத் தொழில்நுட்பம் எத்தனையோ பேர்களுடைய ஆக்கத்திற்கு வடிகாலாய் இருந்து வருகின்றது. ஆர்வம் பெரிதா? அந்த ஆர்வத்திற்கு துணைநிற்கும் clip_image002தொழில்நுட்பம் பெரிதா? இரண்டும் ஏதாவதொரு புள்ளியில் இணையும் போது, அது அறிவுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று சொல்லப்படும் விக்கிபீடியா இதற்கு நல்ல உதாரணம். இப்படி நூற்றுக் கணக்கில் சொல்லலாம். தன்னார்வமும், தொழிநுட்பமும் இணையும் போது, சகலமும் சாமான்யர்களுக்கு சாத்தியமாகின்றது. “முடவர்கள் நடக்கின்றார்கள், குருடர்கள் பார்க்கின்றார்கள்” என்று பிரசங்கிப்பது மாதிரி, மிகச் சாதாரணமானவர்கள் கூட அறிவுப் பெருக்கத்திற்கு தங்களால் இயன்ற பங்கினைச் செய்ய முடிகின்றது.

இந்த இணையச் சூழல்தான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், சில பரிசோதனை முயற்சிகளில் என்னை ஈடுபடத்தூண்டியது. ஒரு ஆசிரியர் என்ற முறையில், வகுப்பெடுக்க, எனக்காக தயாரித்த பாடக் குறிப்புகளை, ஆவணமாக்கி, மாணவர்களின் உபயோகத்தின் பொருட்டு, இணையத்தில் பதிவேற்ற, அதைப் பயனுள்ளதாகக் கருதிய பலர், அதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியது என்னை உற்சாகப்படுத்தியது. “இதைத் தேடித்தான் இத்தனை நாளும் அலைந்து கொண்டிருந்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி” என்ற முகமறியா வாசகர்களின் பாராட்டு, என்னை மேலும் பல ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யத் தூண்டியது. ஆரம்பத்தில் மிகக் குறைவானவர்களால் பார்க்கப்பட்ட ஆவணங்கள், பலரால் விரும்பிப் பார்க்கப்பட இன்றுவரை ஆறரை இலட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுமுள்ளது. இதில் பெருமைப்பட ஏதுமில்லாயென்றாலும், என்னையும், நான் பணியாற்றிய சூழலையும் வைத்துப் பார்க்கும் போது, பலருக்கும் பயன்தரத்தக்க பணியைச் செய்து முடித்த திருப்தி ஏற்படுகின்றது.

clip_image002இணையத்தில் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலானவை ஒரு குறிப்பட்ட பாடப் பொருள் சார்ந்த விவரக் குறிப்புகளே. அது ஒரு மாணவர் சுயமாகக் கற்க உதவும் Self Learning Material கூட அல்ல. அவர்கள் வாசிப்பதில் என்னுடையதையும் சேர்த்துக் கொள்ளலாம். வாசிப்புப் பழக்கமுடைய மாணவர்களுக்கு, அவர்களின் புரிதலைத் தொகுத்துக்கொள்ள அந்த ஆவணங்கள் பயன்படலாம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்களுக்கு, ஒரு பாடப் பொருள் எதைஎதையெல்லாம் தொட்டுச் செல்லும் எனபதைப் புரிந்துகொள்ள உதவலாம்.  என்னுடைய ஆவணங்களை என் கல்லூரி தாண்டியும் பல பேர் பார்வையிடுகின்றார்கள் என்ற பயவுணர்ச்சியின் விளைவாக, அதை அழகுற தயாரிக்க வேண்டுமென்பதில் சிரத்தையெடுத்த அளவிற்கு, அதை முழுமைபெற்ற ஆவணங்களாக்க நான் சிரத்தையெடுக்கவில்லை. ஏனெனில் என்னால் கற்பிக்ககப்பட்ட எந்த பாடப்பொருளிலும் நான் முழுமை அடைந்திருக்கவில்லை. புரிதலை நோக்கிய பயணத்தில், என்னால் என் புரிதல்களை தொகுக்கத்தான் முடிந்தது. ஆகையால் என்னுடைய ஆவணங்கள் எதுவும் அறிவார்ந்த அகங்காரத்தின் வெளிப்பாடால்ல. மாறாக அது மிகப் பணிவான பகிர்தலே. பதிவேற்றங்களே.

நான் படித்த, பின் கற்பித்த சமூகப் பணிப் பாடத்திட்டத்தில், அதன் ஆதாரமான, நாடித்துடிப்பான “Theories of Social Work” நான் மாணவனாயிருந்தபோதும், பின் ஆசிரிய்ரான போதும் சேர்க்கப்படாததால், அதைக் கற்கவும், கற்பிக்கவும் வாய்ப்பில்லாமலிருந்தது, சமூகப் பணி தத்துவத்தை புரிந்துகொள்வதில் ஒரு வெற்றிடத்தை என்னுள் உருவாக்கி விட்டதை உணர்ந்தேன். சமூகப் பணி கருத்தாக்கம் என்பது மிகப் பெரிய உரையாடல். சமூகவியல், உளவியல், மானுடவியல், அரசியல், பொருளியல், நிர்வாகவியல் என்று அனைத்து அறிவுசார் துறைகளோடும், சமூகப் பணி கல்வியாளர்கள் உரையாடி, உரையாடி வகுத்தெடுத்த நடைமுறைக் கோட்பாடுகள். imageஇனிவரவிருக்கும் மாணவர்களாவது அதைப் புரிந்து கொள்ள உதவுவோம் என்று பாடத்திட்டதில் சேர்த்து, அதைக் கற்பிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெரும் நிலையில் ஒரு பருவம் மட்டும் கற்பிக்கும் வாய்ப்புதான். இருந்தாலும் அதற்கான குறிப்புகளைத் தயாரித்து, இணையத்தில் பதிவேற்ற, ஒரு வருடத்திற்குள் அந்த ஒரு ஆவணத்தை மட்டும் ஒரு இலட்சம் பேர்கள் பார்த்து ஆயிரக்கணக்கில் தரவிறக்கம் செய்திருக்கின்றார்கள். மேலைநாடுகளின் சமூகப்பணி பேராசிரியர்கள் பலர், அந்த ஆவணத்தை தங்கள் FaceBook பக்கத்தில் பகிர்ந்து கொள்ள, சமூகப்பணி என்னும் மாபெரும் கருத்தாக்க மரபின் தொடர்ச்சியாக என்னுடைய முயற்சியும் இணைக்கப்பட்டது என்றறிந்து நெகிழ்ந்தேன்.

என்னுடைய புரிதல், புரிதலின்மை வரையறைக்கு உட்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவனங்கள் என்னை மட்டுமல்ல, நான் படித்த, பணியாற்றிய கல்லூரியின் இருப்பையும் உலகிற்கு தெரியப்படுத்தியது, மகிழ்ச்சி தரத்தக்க விசயம்தான். இது மாதிரியான முயற்சிகளை கூட்டாகச் செய்வதற்கும், நிறுவனமயமாக்கவும் நான் வேண்டிக்கொண்டதை, சக ஆசிரியர்களும், நிறுவனமும் கண்டு கொள்ளாததற்கான காரணங்களை இன்றளவும் என்னால் ஊகிக்க முடியவில்லை.

சமூகப்பணி பாட பொருளை அனைவருடன் பகிர்ந்துகொள்ள நான் செய்த முயற்சிகள் எப்படியெல்லாம் கேலிக்குள்ளானது, எப்படியெல்லாம் வரவேற்பைப் பெற்றது என்பதை ஏற்கெனவே என்னுடைய பதிவுகளில் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒருபக்கம் உதாசீனப்படுத்தப்பட்டாலும், முகமறியா வாசகர்களின் பாராட்டு என் வலிகளுக்கு ஒத்தடமிட்டு வந்துள்ளது.

மார்க்ஸீய சிந்தனைத் தாக்கம் உள்ளவரும், இணையத் தொழில்நுட்பத்தின் பல கூறுகளின்மீது மாற்றுக்கருத்துக்கள் கொண்ட நண்பர் பாலாஜி (Square Computer Network Solutions, Chennai) அவர்கள், “உங்களை மாதிரி ஆட்கள் வெகுளித்தனமாக நல்ல  காரியங்களைச் செய்து தொலைப்பதால், பெருமளவு சுரண்டலுக்கு வழிவகுக்கும் தொழில் நுட்பங்கள் பற்றி என்னைப் போன்றவர்கள் அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது” என்று கடிந்துகொள்வார். திரு. பாலாஜி அவர்களின் விமர்சனமே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று பல நேரங்களில் நான் மகிழ்ந்திருக்கின்றேன்.     

July 30, 2011

மன்னார் வளைகுடா தந்த ஞானம் – V

Filed under: Uncategorized — cdmiss @ 6:05 pm

கீழமுந்தல், இராமநாதபுர மாவட்டம், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமம். ஒரு பங்கேற்புப் (Participatory Appraisal) பயிற்சியின் போது அங்கே ஆரம்பக் கல்வியின் வரலாற்றைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் (Focus group) ஈடுபட்டிருந்தோம்.

இன்று 200 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்தாலும், 75 குடும்பங்கள் வாழ்ந்த, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசு அங்கு ஒரு ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தி, ஆசிரியர் ஒருவரையும் நியமித்தது. கீழமுந்தல் சாயல்குடியில் இருந்து 15 கிலோமீட்டர், வாலிநோக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாயல்குடிக்கும் வாலிநோக்கத்திற்கும் சரியான போக்குவரத்து இல்லாதிருந்த போது கீழமுந்தலுக்கு மட்டும் எப்படிப் போக்குவரத்து இருந்திருக்கும்?. அங்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அங்குதான் வீடெடுத்துத் தங்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் எல்லா வீடுகளும் கூரை வீடுகள்தாம். சுவர்கள் கூட மண் சுவர்களல்ல. எல்லாம் தென்னந்தட்டியினால் மறைக்கப்பட்டது. மின்சாரம் கிடையாது. நிலத்தடி நீர் இப்போது போல் அல்லாமல் உபயோகிக்கும் அளவுக்கு இருந்தது பெரிய ஆறுதல்.

கீழமுந்தலலில் தங்கிப் பணியாற்ற எந்த ஆசிரியர் தான் முன்வருவார்?. வரும் ஆசிரியர்களும் ஓரிரு மாதங்களில் யாரையாவது பிடித்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இல்லை வார விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்லும்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ச்சியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அரசு அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருகாலத்தில் இராமநாதபுரம் மாவட்டமே தண்டனைக்குரிய இடமாக இருந்தபோது, கீழமுந்தல் போன்ற இடங்களில் எந்த செலவாக்குமில்லாத அதிகாரி, ஆசிரிய அனாதைகளைத் தான் நியமிப்பார்கள். கீழமுந்தல் அரசுப்பணியை பொறுத்தமட்டில் கழுமரம்.

கீழமுந்தலிலே தங்கி அர்ப்பணிப்போடு பணியாற்றிய சில ஆசிரியர்களை அவர்கள் நன்றியுடன் இப்பொழுதும் நினைவு கூறுகிறார்கள். எல்லா ஆசிரியர்களாலும் அப்படி இருக்க முடியாதே?. தொலைதூர இடங்களிலிருந்து ஆசிரியர்களைப் போட்டால் பிரச்சனைகள் தொடரும் என்பதைப் புரிந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், அருகாமை கிராமங்களில் ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களைப் பணியிலமர்த்த ஆரம்பித்தார்கள். நடந்தோ சைக்கிளிலோ வந்த இந்த ஆசிரியர்களின் பணிக்குப்பின் பள்ளி ஓரளவு தொடர்ச்சியாகச் செயல்பட ஆரம்பித்தது.

போக்குவரத்துவசதி இல்லாததால் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு சாத்தியமில்லை. 10 மணிக்கு பள்ளி திறப்பது. 4 மணிக்கு பள்ளி மூடுவது என்ற வரைமுறை ஏதுமில்லை. அருகாமை கிராமங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களைத் தொடர்ச்சியாக பணிபுரிய அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பழி வாங்கும் நோக்கோடோ, இல்லை வேறு ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கோடோ கீழமுந்தலுக்கு பணி மாறுதல் செய்துவிடுவார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன் வண்டித்தடமாக இருந்த பாதை, பிறகு சாலையாக மாற, சாயல்குடிக்கு சைக்கிளில் சென்று வர முடிந்தது. சில ஆசிரியர்கள், சாயல்குடியில் தங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து சென்றார்கள். சாயல்குடியிலிருந்து சைக்கிளை மிதிக்கவே சக்தியைச் செலவழித்துவிட்டு, கீழமுந்தல் பள்ளிக்கு வந்ததும் தூங்கிவிடுவார்கள். பள்ளிக்கூடம் “ஏதோ” செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

பிறகு பஸ் வசதி வந்தது. தினப்படி மூணு தடவை. சாயல்குடியிலிருந்து வாலிநோக்கத்திற்குச் செல்லும் பேருந்து காலை 10½ மணிக்கு வரும். மதியம் 12½ மணிக்கு வரும். மாலை 3½ மணிக்கு திரும்பும். சாயல்குடியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் 10½ மணிக்கு வருவார்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வகுப்பெடுக்க 11 மணி ஆகிவிடும்.. மாலை மூன்று மணிக்கு பள்ளியை மூடிவிட்டு 3½ மணி பஸ்சுக்கு கிளம்பிவிடுவார்கள்.

ஆசிரியர்களிடம் முன் தகவல் சொல்லாமல் எந்த மேலதிகாரியும் Inspection க்கு வரமுடியாது என்பது ஆசிரியர்களுக்கு ஆறுதல். ஆசிரியர்களைக் குறை சொல்லமுடியாது. 10½ மணிக்கு முன்னால் அவர்களால் வரமுடியாது. 3½ மணி பஸ்ஸை விட்டால் அவர்களால் போகவும் முடியாது. “அரசாங்கம் பள்ளியைக் கொடுத்தது. ஆசிரியர்களைக் கொடுத்தது. எங்க பிள்ளைகளும் படித்தார்கள். ஆனால் எங்க பிள்ளைகளின் படிப்பென்பது ரெம்பக் காலம் நாங்க கோவணத்த அவிழ்த்த நேரத்தின்படி (ஜெனனம்) தான் அமைந்தது”.

பஸ் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க 9.30 மணிக்கு பஸ். வந்தது. 10 மணிக்குப் பள்ளி திறந்தார்கள். 5 மணிக்கு திரும்பச் செல்ல பஸ். 4 மணிக்கு பள்ளியை சாகவாசகமாக மூடிவிட்டு பஸ் நிறுத்தத்தில் ஆசிரியர்கள் எங்களோடு உட்கார்ந்து கொண்டு ஊர் விஷயங்கள் நாட்டு நடப்புகள் பேசினார்கள். அன்யோன்யம் உருவானது.

பிறகு மின்சாரமும் வந்தது. மின்சாரம் வந்ததால் பிள்ளைகள் இரவு நேரத்தில் படிக்க முடிந்தது. ஊர்க்கடைகளில் பேப்பர், பேனா, பென்சில், இரப்பர், நோட்டுகள் விற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்கு ஏதுவான சமூகச் சூழ்நிலைகள் வேண்டும். கட்டிடங்களாலும் ஆசிரியர்களாலும் ஓரளவு கல்வியைத் தரமுடியும். மின்சாரம் கற்பதற்கான காலத்தைக் கூட்டும். போக்குவரத்து வசதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும். அது சில செளகாரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இது எதுவுமே இல்லாமல் படிபடி என்று சொல்வதும், து… ஏகலைவன் படிக்கவில்லையா? தெருவிளக்கில் படித்து முன்னேற வில்லையா? மேதையாகவில்லையா? அப்துல் கலாம் படிக்கவில்லையா? என்று முன்னுதாரணம் காட்டுவதெல்லாம் விதண்டாவாதம். எதுவுமிலாமல் படிக்கலாம்தான். முடியாது என்றில்லை. . அதெல்லாம் கீழமுந்தல்காரர் சொன்ன மாதிரி நாள் நேரம், நட்சத்திரம் பார்த்து கோமனத்தை அவிழ்த்திருந்தால் மட்டுமே, பெற்றோர்கள் படுக்கையில் கூடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

அனைவருக்கும் கல்வி என்பது ஒரு ஏதுவான சூழ்நிலையிலேதான் (Enabling Environment) சாத்தியப்படும். கல்வி பற்றி அரசின் சரியான கொள்கை முடிவுகள், அரசு ஆசிரியர்களைக் கையாளும் முறை (பணிமாறுதல் உட்பட), ஆர்வமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அக்கறை, கட்டமைப்பு வசதிகள் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் எல்லாமும் வேண்டும். எதுவுமில்லாமல் சாதிப்பதென்பது ஒரு குழந்தையின் முன்வினைப்பயனால் மட்டுமே சாத்தியமாகலாம்.

ஒரு குழந்தையின் கற்றலாற்றல் என்பது அவர் பெற்றோர் படுக்கையில் கூடும் நேரத்தைப் பொறுத்து அமைவதில்லை. அது ஒரு Enabling Environment (ஏதுவான சூழ்நிலையினால்) வருவது. என்று கீழமுந்தல்காரர்கள் எங்கள் மூளையில் ஞான விளக்கேற்றினர்கள்

மன்னார் வளைகுடா தந்த ஞானம்- IV

Filed under: Uncategorized — cdmiss @ 6:00 pm
 

இலங்கைத் தமிழர்கள் பால் எனக்கு உயர்வான எண்ணமே இருந்து வந்திருக்கின்றது. அது எதனாலென்று எனக்கும் புரியவில்லை? இலங்கை வானொலி தனது வர்த்தக ஒலிபரப்பால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கேட்டு வளர்ந்ததாலா? கல்லூரியில் படித்த போது இலங்கையிலிருந்து கிடைத்த பேனா நண்பர்களின் நல்ல தமிழ்க் கடிதங்களா? ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டு வந்த பொருட்களை நாம் விரும்பி உபயோகித்ததாலா? பின்னாளில் மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்கள் “இலங்கை மீனவர்கள் உபயோகித்த படகுகள் மற்றும் வலைகள் தரமுள்ளதாக இருக்கும் என்று சொன்னதாலா? மொழியின் பொருட்டும், இனத்தின் பொருட்டும் சொல்லனாத் துயரங்களை தாங்கி நின்ற அவர்களின் நெஞ்சுரத்தினாலா? .

நாம் (இந்தியா) பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற காலகட்டங்களில், இலங்கை தனது உள்நாட்டுப் பிரச்சினைகளால் தேக்கமடைந்தது. உள்நாட்டுப் போரினால் உலுக்கியெடுக்கப்பட்டாலும் கல்வி, சுகாதாரம் போன்ற அளவீடுகளில் நம்மை விட இன்றளவும் சிறப்பாகச் செயல்படுகின்றார்கள். உயர்ந்தே இருக்கின்றார்கள். என்னதான் போரிட்டுக் கொண்டாலும் அந்த தேசத்திற்கென்று ஒரு பொதுப் பண்பு இருக்கின்றது. அதை அவர்கள் தங்கள் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கொழும்பு நகரமும், என் பஸ் பயணத்தின் போது பார்த்த நகரங்களின் சாலைகளும் தூய்மையாக இருக்கின்றது. பேருந்துப் பயணத்தின் போது உணவுக்காக நிறுத்துமிடங்களிலுள்ள உணவகங்களின் பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலையில் நம்மவர் நடத்தும் மோட்டல்களைப்போல் பயணிகளைக் கொள்ளையடிப்பதில்லை.

கொழும்பு நகரத்தில் “பெட்ட” என்ற தெருவியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்திற்கும் சென்றிருந்தேன். அங்கேயிருக்கும் இரு சின்ன காய்கறிமார்கெட்டில் ஏறக்குறைய 200 வியாபாரிகள் 4*3 என்ற அளவில் கடை பரப்பியிருந்தார்கள். 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட சுற்றுச்சுவர் இல்லாத தெருவோரச் சந்தை, குப்பை கூளங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது. பெட்ட முழுமையும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தாலும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றது. சுற்றுச் சூழலை நாம் சரியாகப் பராமரிக்க முடியாததற்கு, இன்னும் எத்தனை காலம் மக்கள் தொகைப் பெருக்கததை காரணம் காட்டுவோமோ தெரியவில்லை?.

இலங்கைத் தமிழர்களுக்கு இனவுணர்வு இருக்குமளவு ஒரு தேசியக் குணமும் இருக்கின்றது. அவர்கள் நம்மைவிட எல்லாவகைகளிலும் உயர்ந்திருந்ததால்தான் அவர்கள் நீதியின் பொருட்டு நெடிய இன்னல்களைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் உயர்வான சமூக கலாச்சாரப் பின்னனிதான் அவர்களுக்கு உன்னதமான தலைவர்களைக் கொடுத்திருக்கின்றது.

நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஜாதிக் கலவரங்களின் போது தமிழ் நாட்டில் எதையும் இழக்காதவர்கள் எல்லாவற்றையும் இழந்தtது மாதிரி காட்டியதும், எல்லாவற்றையும் இழந்த இலங்கைத் தமிழர்கள் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமலிருப்பதும் இரு வேறுவிதமான பண்பாட்டுத் தளங்கள் இருப்பதைக் காட்டுகிறது. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு” என்பது நம்மை விட இலங்கைத் தமிழருக்கே பொருந்தும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி நான் அதிகம் வாசித்தது கிடையாது. அதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தவனும் கிடையாது. எனக்குக் கிடைத்த அனுபவமெல்லாம் மதுரையில் இலங்கைத் தமிழகதிகள் சிலருடன் பேசியதும், இலங்கையில் சில சாதாரண தமிழ்க் குடும்பங்களோடு உரையாடியதிலிருந்தும் புரிய வந்ததுதான்.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழகதிகளை விட பிற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நாம் காட்டிவரும் சில சலுகைகளை ஒப்பிடும் போது வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அதிகம். ஈழததமிழகதிகளின் முகாமை நாம் எப்படி வைத்திருக்கின்றோமென்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். இலங்கைப் பிரச்சினையை நம்முடைய இனமானக் காவலர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கிவிட்டர்கள்.

மதுரையில் இலங்கைத் தமிழகதிகளுக்காக முதலில் பெரியார் நகர் ஒதுக்கப்பட்டது. பெரியார் நகர் உலகவங்கி உதவியுடன் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை மாற்று இடமாற்றச் சேவை (resettlement project). ஆனால் தோற்பதகென்றே திட்டமிடப்பட்டது போலும். It is a biggest policy failure. வைகை நதிக்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளுக்கென்று கட்டப்பட்ட பெரிய குடியிருப்பு. அதில் யாரும் குடியேற முன்வராததால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கென்று ஒதுக்கப்பட, தரமற்ற முறையில் கட்டப்பட்ட அந்த வீடுகளும் சிதிலமடைய அவர்களை ஆனையூர் முகாமிற்கு மாற்றினார்கள்.

ஆனையூர் குடியிருப்பு ஹவுசிங் போர்டின் தோல்வியடைந்த திட்டம். இலங்கைத் தமிழர்கள் பங்களாதேஷ்காரர்கள் மாதிரி சட்டவிரோதமான குடியேற்றக்காரர்களல்ல. வறுமையின் நிமித்தமோ, இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகையின் நிமித்தமோ இங்கு வரவில்லை, வேறு நாடுகளுக்குப் போகமுடியாத அவசரம். வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அந்தக் கலாச்சாரத்தோடு தங்களால் ஒன்றிட முடியாது என்ற தயக்கம், குடும்பமாக, ஒட்டுமொத்தமாக வெளியேறமுடியாது என்ற நிர்பந்தத்தாலுமே தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழ்மொழி பேசுபவதாலும், தங்கள் தாய்மொழி வாயிலாக அவர்களுக்கு பரிச்சயமான வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று இடங்கள், தலைவர்கள் இங்கே இருப்பதாலும் பெரிய அளவில் கலாச்சார அதிர்ச்சியிலிருந்து தப்பிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு நிம்மதியைத் தருகின்றது.

ஆனையூர் அகதிகள் முகாமில் பெரியவர்கள் புலம்புவது மாதிரி, “கற்ற கல்விக்கும், அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிற்கும் எங்கட நாட்டில் தொடர்பிருக்கும், ஒரு பட்டதாரியென்றால், அதற்குரிய திறமையுடனும், பண்புடனுமிருப்பான்., எங்க பிள்ளைகளெல்லாம் இங்கு வந்து படித்து விட்டார்கள். பட்டம் பெற்று விட்டார்கள், ஆனால் எங்களின் உண்மையான பண்பை இழந்துவிட்டார்கள்”.. இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள விரைவான வழி.. அவர்களின் மரண அறிவித்தல்கள்தாம். அவரவர் வசதிற்கு ஏற்றபடி, ஒருவரின் மரணத்தை அவரின் வம்சாவழி விளக்கத்தோடு குறிப்பேடாக அச்சிட்டுக் கொடுக்கும் அவர்களின் பழக்கம் போற்றத்தக்கது.

இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழ்ப்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதால்தான், ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுத் துயரம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. (விடுதலைப் புலிகளை நேசிக்காத இலங்கைத் தமிழர்கள் கூட விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை சிலாகித்தே பேசுகிறார்கள்) இராணுவம் ஒரு பகுதியில் முகாமிட்டிருக்கும்போது சில அத்துமீறல்கள் அரங்கேறும் என்பது உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இந்திய அமைதிப்படை அத்துமீறுவதற்காகவே அனுப்பப்பட்டதுபோன்று தெரிகின்றது. இலங்கைத் தமிழர்களின் ஒழுக்க உணர்வுதான் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கவேண்டும்.

35 வயதடைந்த, தற்போது கொழும்பில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ்ப்பெண்மணியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. நம்மை பிடிக்காத பகைவர்கள் கூட நம்மிடம் பச்சாதபம் காட்டுவார்கள். ஆனால் அந்தத் தமிழ்ப்பெண், இந்திய அமைதிப்படை வீரர்களால் அவருடைய பெண்ணுறுப்பில் அறுவைச் சிகிச்சை செய்யுமளவிற்கு கூட்டாக துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றார். அதனால் அவரின் குடும்பம் அடைந்த இன்னல்கள்…இப்படி அவர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளது.

இந்திய இராணுவத்தின் உதவியில்லாமல், சிங்கள இராணுவத்தினரால் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது என்ற கருத்தை பலர் சொல்ல படித்திருக்கின்றேன். ஆனால் கடைசிப் போரின் போது முல்லைத்தீவு பக்கமிருந்து தப்பித்து வந்த 75 வயது முதியவர் மிகவும் வெகுளியாக “தாடிக்காரன் (சீக்கியர்) செத்துக் கிடந்ததைப் பார்த்தேன். தாடிக்காரனுக்கு அவ்விடம் என்ன வேலை? என்று என்னிடம் கேட்டபோது, நாம் கேள்விப்பட்டவற்றை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது.

இதற்கெல்லாம் சொல்லப்படும் காரணங்கள் நாம் செய்யாவிட்டால் சீனாக்காரனோ, பாகிஸ்தான்காரனோ செய்திருப்பார்கள் என்பதுதான். அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே இலங்கை அரசுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக நியாயப்படுத்தப்படுகின்றது. இந்த இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்களூக்கு உதவி கிடைக்கும் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது புரியவில்லை. இந்தியா என்பதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான். ஏனெனில் இலங்கையில் நம்மை அறிமுகப்படுத்தும்போது, “இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றார்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் நம்மைப் (தமிழ்நாட்டை) பல விசயங்களில் சார்ந்திருப்பது உண்மைதான். ஆறுகோடிக்கும் அதிகமான மக்களை, நுகர்வோரைக் கொண்ட பெரும் சந்தையை வைத்துக் கொண்டு நம்மால் பலவற்றை செய்யமுடியும். சினிமா தாயாரிப்பு, புத்தகப் பதிப்பு, மதம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய பொருளுற்பத்தி முறைகளை நம்மால் செய்யமுடியும். அதை இலங்கைத் தமிழர்கள் அப்படியே உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் அணுகுமுறை. அதற்காக அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பதாக் கருதினால், அவர்களைவிட நாம் உயர்வானவர்களாக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் ஒரு மாவட்ட ஜனத் தொகையைவிட குறைவான எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரச் செறிவிற்கும் செய்த பணி மகத்தானது. அதுவே அவர்கள் நம்மைவிட ஆற்றலில் உயர்ந்தவர்கள் என்பதற்கான அத்தாட்சி.

இலங்கையின் மீதும், இலங்கைத் தமிழர்களின் மீதும் எனக்கு இயற்கையாக ஏற்பட்ட அபிமானம், என்னுடைய இலங்கைப் பயணத்தால் இன்னும் அதிகரிதிருக்கின்றது. மீண்டும், மீண்டும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பயண ஆர்வத்தால் ஏற்பட்டதல்ல. அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாக எனக்குப் படுகின்றது.

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-III

Filed under: Uncategorized — cdmiss @ 5:53 pm

மன்னாரின் தரைப்பாலம்:

மன்னார் தீவையும், இலங்கையின் பிரதான நிலப்பரப்பையும் இணைத்திருக்கும் கடலின் ஊடாக போடப்பட்டிருக்கும் அந்த நீளமான தரைப்பாலத்தில் நின்றிருந்தபோது என்னை ஒரு பரவச உணர்வு ஆட்கொண்டது. பாம்பன் பாலம் ஒரு அதிசயமென்றால், இந்தத் தரைப் பாலமும் அதிசயம்தான். கடலால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலப்பரப்புகளை மன்னார் தீவு -தரைப்பாலம் இணைக்கும் பணியைத்தான் பாம்பன் பாலமும், மன்னார் பாலமும் செய்கிறது. பாம்பன் பாலம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ஆனால் மன்னார் பாலம், “நின்று பாரேன், நடந்து பாரேன், கொஞ்சம் உட்கார்ந்துதான் பாரேன்” என்று நம்மை  நட்புடன் தோழமையுடன் ஆசுவாசப்படுத்துகிறது. ஆழமேயில்லாத அந்தக் கடல்பகுதியைக் கடந்துதான் புராணகாலத்தில்  இராமபிரானும், வானரப்  படைகளும்  இலங்கைக்குள்  நுழைந்திருப்பார்கள். இராமனின் காலடித்தடங்கள் பட்ட இடத்தில், பாண்டிய, சோழர்களின் குதிரைகளின் குளம்படி பட்ட இடத்தில், சமீப காலத்தில் இனப்போரில் தங்கள் இன்னுயிர் நீத்த  எத்தனையோ வீரர்களின்  காலடித் தடங்கள் பட்ட இடத்தில் நிற்பதாக என்னுள் ஒரு உணர்வு.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கும் சேதுபாலம் (Adams Bridge) கடல்பகுதி புராண காலத்தில் இப்படித்தான் ஆழமற்று இருந்திருக்கவேண்டும். இப்பொழுது கூட பாம்பன் சின்னபாலத்திலிருந்து அலை வற்றிய நேரங்களில் அருகாமைத் தீவிற்கு முழங்கால் தண்ணீரில் நடந்து செல்ல முடிகின்ற மாதிரி, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நடந்தே செல்லும் படிதான் புராணகாலக் கடல் இருந்திருக்கும்.                                         

சில வரலாற்றுப் புரிதல்கள் நமக்கு ஏற்பட வேண்டுமென்றால் சில இடங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும். அலையடிக்கும் ஆர்ப்பரிக்கும் கடலை விட ஆழமற்ற அமைதியான கடல் உருவாக்கும் தோழமையுணர்வை சொல்ல வார்த்தையில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிலும் குறிப்பாக மன்னாரை நுழைவிடமாக்கி வந்தவர்கள் கடல் தந்த தோழமையுணர்வினால் தான் வந்திருப்பார்கள். அது பாண்டியர் கடலாய் இருந்திருக்கலாம். அது முத்துக்கள் கிடைத்த தென்கடல். சமீபகாலத்து வரை மீன்பிடித்து விட்டு மன்னார் வளைகுடாத் தீவுகளில் மீனவர்கள் ஓய்வெடுத்ததைப் போல, முத்துக் குளித்துவிட்டு மன்னார் தீவில் ஓய்வெடுத்திருப்பார்கள். அவர்கள் அந்நிய பூமிக்குச் செல்வதுமாதிரி கூட உணர்ந்திருக்கமாட்டார்கள். காலநிலை மாற்றங்களால் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காத பட்சத்தில் “சேதுவை மேடுறித்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் கனவு நனவாயிருக்கும்.

இந்தியா இலங்கை என்று இரு நாடுகளாக உருவானபின்னும், இராமேஷ்வரம் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் சொல்லிய மாதிரி “நினைச்சா இங்கிருந்து அங்கே போவோம் அங்கிருந்து இங்கே வருவாங்க. அருகருகே வலை இறக்கிக் கொண்டிருப்போம். புதுப் படம் ரிலீசானது தெரிந்து எங்க கூடவே வந்து மீனைப் போட்டுட்டு படம் பாத்துட்டுப் போவாங்க நாங்களும் அவங்க கூடப் போய் நாலு டம்ளர் சரக்கை ஊத்திட்டு வருவோம்”. இரு நாடுகளுக்கு மத்தியில் அப்போதும் எல்லைகள் இருக்கத்தான் செய்தன எல்லைகளில் துப்பாக்கிகள் முளைத்தது இப்பொழுதுதானே?

சுதர்ஸிணி
என் மாணவி ஏஞ்சலின் அகல்யா மூலமாக அறிமுகமான மன்னாரைச் சேர்ந்த யோகேஷ்வரி மற்றும் சுதர்சினி கொழும்பு  National Institute of Social Development-ல் BSW  படிக்கும் மாணவிகள் நான் சமூகப் பணி பேராசிரியர் என்பதால் அவர்களுக்கும் என்னிடம் சட்டென்று ஒரு ஓட்டுதல் ஏற்பட்டது.

சுதர்சினியிடம் மன்னாருக்குச் செல்ல வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னபோது, “மன்னார் சுற்றுலாத்தலம் இல்லையே!, அங்கே செல்ல வேண்டுமென்கிற உங்கள் விருப்பம் வித்தியாசமாக இருக்கின்றதே” என்று ஆச்சரியப்பட்டார். “உலகின் உயிர்ச் செறிவு மிக்க மன்னார் வளைகுடாப் பகுதியில் PAD  நிறுவனம் பணியாற்றுகின்றது. ஒரு வளமையான கடலுக்கு பெயர் தந்த மண்ணைப் பார்க்க வேண்டும். அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்” என்று நான் சொன்ன போது, “அதற்கு ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? இந்த வார இறுதியில் மன்னாருக்குச் செல்கிறேன். அங்கிருந்து மண் எடுத்து வருகின்றேன். ஆசை தீரப் பாருங்கள். இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லுங்கள்” என்றே கிண்டலடித்தார்.

“கொழும்பிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரம். ஏறக்குறைய  9 மணிநேரப் பயணம், இரவுப்பயணம் என்றால் கூடப் பரவாயில்லை. பகல் நேரத்தில்தான் பயணம் செய்ய வேண்டுமென்கின்றீர்கள். பஸ்ஸை நிறுத்தி ஆட்களை ஏற்றுவார்கள். பயணநேரம் கூடலாம்” என்று பயமுறுத்தியும் கூட நான் பிடிவதமாகப் போய் வரலாம் என்று சொன்ன போது, மன்னாரை வாழ்விடமாகக் கொண்ட அவருக்கு என்மீது மேலும் அபிமானமும், மரியாதையும் ஏற்பட்டது.

சுதர்ஷினி ஐந்துமாதக் குழந்தையாக இருந்தபோது, தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து, எல்லாவற்றையும் போட்டுவிட்டு, இரவோடிரவாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள் ஏறக்குறைய 15 வருடம் தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை. மீண்டும் UNHCR (United Nations High Commission for Refugees)  உதவியுடன் மன்னார் திரும்பி இழந்த வாழ்க்கையை எடுத்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சனை சுதர்ஷினி குடும்பத்தைப் போல மன்னார் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கின்றது.. அவர்களின் பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் இன்று இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்.

அருடதந்தை தந்தை இராயப்பா, சுதர்சிணி குடும்பம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் இழந்ததைப் பற்றிய புலம்பல் ஏதுமில்லை. நான் மன்னாரில் சந்தித்த தமிழக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்தபின்பும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மன்னார் பேசாலையில் நான் சந்தித்த பள்ளி முதல்வர் “எல்லாவற்றையும் போட்டுவிட்டு இரவோடிரவாக படகேறி உயிர் தப்பிய போது, கல்வியைத் தவிர, கல்வி தந்த ஆற்றலைத் தவிர வேறெதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று புரிந்தபோது, மீண்டும் திரும்பிய பின், எங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்” என்று அவர் அமைதியாகச் சொன்னபோது நான் கலங்கிவிட்டேன். இலங்கை இனப் பிரச்சனை தமிழர்கள் மத்தியில் புது உத்வேகத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் உத்வேகம் உலகை வசப்படுத்தும்.

இலங்கையில் நடப்பதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வந்தது. தென்மாவட்டங்களில் நடந்த ஜாதிக் கலவரங்களை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட, அந்தக் கமிசனின் வேண்டுகோளின்படி, கலவரத்தின் போது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மதுரை சமூகப் பணிக் கல்லூரியை வேண்டிக்கொள்ள, அதற்காக அந்தக் குடியிருப்பிற்கு நான் செல்ல நேர்ந்தது. இழப்புக்களை மிகைப்படுத்தி ஒருசாரார் சொல்ல, அவர் களைச் .சேர்ந்த இன்னொரு சாராரோ, “என்னங்கட டன் கணக்கில் தங்கம் பறிபோனதாயும், மந்தைமந்தையாய் ஆடுமாடுகள் தீக்கீரையானதாயும் சொன்னால் எப்படி? கேட்பவர்கள் நம்பும்படி சொல்லுங்கள்” என்று கடிந்து கொண்டனர். இதற்கு மாறாக இலங்கைத் தமிழரின் மனோபாவம் இருந்தது.
அருட் தந்தை இராயப்பா   
தங்களுடைய வீட்டில் என்னை வசதியாகத் தங்க வைக்க முடியாது என்று சுதர்ஷினி குடும்பத்தார், என்னை அருட்தந்தை ராயப்பாவுடன் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். கத்தோலிக்க திருச்சபை சுனாமியாலும், போரினாலும் அனாதைகளாக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளை அரவணைத்து, அவர்கள் கல்வி கற்பதற்கான எல்லாவசதிகளையும் செய்து தர மன்னாரில் “தூய வளனார் இல்லம்” என்ற விடுதி நடத்தி வருகின்றது. சமூகப் பணித் துறையிலிருந்தாலும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க அங்கிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியைப் போல்  தமிழ்நாட்டில்கூட நான் பார்த்ததில்லை. மெத்தையுடன் கூடிய தனித்தனி கட்டில், தனித்தனி மேஜைகள், அலமாரிகள் என்று இங்கே நடுத்தரக் குடும்பங்கள் கூட செய்துகொடுக்க முடியாத வசதிகள்.  நான் அங்கு தங்கியிருந்த ஞாயிற்றுக் கிழமையில், எனக்குக் கிடத்த நேரத்தில் மாணவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், அவர்களின் பாடப்புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பார்க்க வாய்ப்பேற்பட்டது. அங்கே தமிழ்க் குழந்தைகள் முழுக்க முழுக்கத் தமிழில் படிக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட நேர்த்தி, முக்கியமானவற்றை வண்ணக்கட்டங்களில் எடுத்துக்காட்டும். அழகு ஏற்க்குறைய ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் தரத்திற்கு ஒப்ப இருந்தது. நான் மாதிரிக்குப் பார்த்த நோட்டுப் புத்தகங்களில் மாணவர்களின் கையெழுத்து அழகாக இருந்தது. மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் பாடசாலை மட்ட தேர்ச்சிக் குறிப்பேடுகள (Monitoring Card), மாணவர்களின் முன்னேற்ற்த்தை அறிந்து கொள்ளும்படி விரிவாக இருந்தது.

இலங்கையில் பள்ளிக்கல்வி:

இலங்கையிலுள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை எட்ட இந்தியாவிற்கும், தழ்நாட்டிற்கும் இன்னும் பல காலம் ஆகலாம். இலங்கையில் 90 சதவீத மாணவர்களுக்கு சமச்சீர் கல்விதான்.  தரமான பள்ளிக்கல்விதான் இலங்கையின் வலிமை. தமிழ் சிங்களம் பிரதான போதனா மொழி. பிரச்சனைக்குப் பிறகு இப்பொழுது மும்மொழி (தாய் மொழி, ஆங்கிலம், சிங்கள/ தமிழ்) நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ் மாணவர்கள் சிங்களத்தை உள்வாங்குமளவு, சிங்கள மாணாவர்களால் தமிழை உள்வாங்க முடியாத நிலை. தமிழும் சிங்களமும் மட்டுமல்ல உல்கெங்கும் வியாபித்து, உலக மொழிகள் பல தெரிந்த ஒரு தமிழ் தலைமுறை இலங்கையில் உருவாகி வருகின்றது. இலங்கைத் தமிழன் கட்டாயமாக ஜெயிப்பான்.

இலங்கைத் தமிழர்களின் வலிமையே அவர்களுக்குக் கிடைக்கும் தரமான தாய்மொழிக் கல்விதான். அங்கே மொழிஎன்பது பிழைக்கும் உத்தியல்ல. அது கற்றலுக்கான கருவி, பெரும்பாலான இலங்கைத் தமிழ் மாணவர்களால் தாங்கள் நினைத்தை தமிழில் பிழையின்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும்  முடியும். இங்கே தமிழில் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு முதுகலை படிக்கும் பெரும்பாலான மாணவர்களால் கூட தமிழில் பிழையின்றி எழுத முடியாது. இதை நான் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. என்னுடைய ஆசிரியப் பணியின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

நம்மிடையே Centres of Excellence இருக்கின்றன. சர்வதேசத் தரமுடைய பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அதில் படிப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆனால் இலங்கையில் அனைவருக்கும் சத்தியமானது நம்முடைய சராசரித் தரத்தைவிட  பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கின்றது.

அருட்தந்தை ராயப்பாவின் அன்பும் கரிசனமும் என்னை நெகிழவைத்தது. தமிழ்நாட்டில் அருளனந்தர் கல்லூரியில் படித்ததால் அவருக்கு நிறைய நண்பர்கள் தமிழ்நாட்டில்  இருக்கின்றார்கள். இனப்போரின் போது ஒரு நள்ளிரவில் சிங்கள இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக் குள்ளாகியிருக்கிறார். “அங்கி அணிந்த என்னையே ஆர்மீக்காரன் அந்த அடி அடிச்சான்ன, எங்க பிள்ளைகளையெல்லாம் எப்படி அடிச்சிருப்பான். எம் பிள்ளைகலெல்லாம் எப்படித்தான் தாங்கிக் கொண்டார்களோ” என்று அவர் சொன்னபோது எனக்குச் சுரீர் என்றது. பிறகு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் முறையிட்டதன் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் என்றால் இந்துக்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகிறார்கள். முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் முஸ்லீம் அடையாளத்துடனே வாழ்கின்றார்கள்.

கிறிஸ்தவ மதம் தமிழ் இனப்பிரச்சனையில் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களை அரவணைத்துக் கொண்டுள்ளது. என்னுடைய மாணவர்களில் ஒருவரான அருட்சகோதரர் சவரிமுத்து, இத்தாலியில் அகதிகளாக வாழும் தமிழரிடையே பணியாற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பபட்டிருக்கின்றார். எங்கெங்கே இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு உதவவும், தமிழில் திருப்பலி கொடுக்கவும் முறையான ஏற்பாடுகளைத் அனைத்து திருச்சபைகளும் செய்து வைத்திருக்கின்றது. சிங்களவர்களிலுள்ள கிறிஸ்தவர்கள், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து குரலெலுப்பி வருகின்றார்கள். பெளத்தக் குருமார்கள் தான் சிங்களப்பேரின  வாதத்தைத் தூண்டுகின்றார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.. ஆனால் இலங்கையில் பெரும்பாலான பேருந்துகளில் புத்தர் உருவப்படத்தோடு இந்துக் கடவுளர்களின் உருவப்படங்களையும் காணலாம். சில பேருந்துகளில் இந்துக் கடவுளர்களின் பெரிய உருவப் படங்களைக்கூட காணமுடிகின்றது. இந்துக் கோயில்களுகு சிங்களர்களின் வருகை அதிகரித்த வண்ணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அருட்தந்தை ராயப்பாவுடன் இருந்த பொழுது ஆரம்ப பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒரு(கிறிஸ்தவர்) ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே ஆசிரியர்கள் பணியில் சேரும் போது இலங்கை ரூபாயில் 12-15 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். ஆனால் கொத்தனாருக்கு தினச் சம்பளம் ரூபாய் 1200. குறைந்த சம்பளத்தில் எப்படி திருப்தியாகப் பணியாற்றமுடிகிறது என்று கேட்ட போது, “ஆசிரியப் பணி புனிதமான பணி என்பதாக நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம்” என்று கூற, “கிறிஸ்தவப் பின்னனியில் இருந்து வருவதால் இப்படிச் சொல்கிறார்களா? இல்லை எல்ல மதத்தினரும் இப்படித்தான் நினைப்பார்களா? என்று கேட்டதற்கு, “இங்கே இந்து நல்ல இந்துவாகவும், முஸ்லீம் நல்ல முஸ்லீமாகவும் பெள்த்தர் நல்ல பெளத்தராகவும் தான் வளர்க்கப்படுகின்றோம்” என்றார். ந்ம்மை மாதிரி ஜாதி, மத துவேஷங்க்ளூக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத துவேஷமில்லாமல், இனத்துவேஷத்திற்கு ஆட்பட்ட இலங்கைப் பிரச்சனையை சட்டென்று புரிய முடியவில்லை.

நான் மன்னார் பகுதிக்கு விரும்பி வந்ததையறிந்ததும் மன்னாரின் மூலைமுடுக்கெல்லாம் காண்பிப்பதில் அருட்தந்தை ஆர்வம் காட்டினார். மன்னாரிலுள்ள பெருக்குமரம், 450 கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் பொருட்டு சங்கிலி அரசனால் கொல்லப்பட்ட தேவசாட்சி என்ற இடம், இலங்கையின் மிகப்பெரிய பேசாலை சர்ச், தலைமன்னார் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

450 வருடங்களுக்கு முன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது மாதிரி, பேசாலை சர்ச்சில் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது சிங்கள இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இன்று அந்த சர்ச்சை இலங்கையின் மிகப்பெரிய சர்ச்சாகக் கட்டி பதில் சொல்லிவிட்டார்கள்.

பேசாலை சர்ச்:

பேசாலை சர்ச்சின் அலுவலக மாடியில் பேசிக்கொண்டிருந்த போது, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை பற்றி பேசியபோது பல உண்மைகள் புரிய வந்தது. “தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதைக் கூட பொருத்துக் கொள்ளலாம். அவர்களின் மீன்பிடி முறைகளும் உபயோகிக்கும் வலைகளும் ஆட்சேபத்திற்குரியது’ என்றனர். இராமநாதபுரம் கடல்பகுதியில்  மூன்று கடல் (வாரத்திற்கு மூன்று நாட்கள் இயந்திரப் படகுகள் மீன் பிடிக்க அனுமதி) அமலில் உள்ளதைப் போன்று இலங்கைக் கடல்பகுதியிலும் தமிழக மீனவர்களுக்காக மூன்று கடலை அரசாணை ஏதுமில்லாமல் இலங்கை அரசு அமல்படுத்துகிறது. நாளை(திங்கள்) இரவு வந்து பாருங்கள், கடலுக்குள் ஒரு நகரமே இருப்பதுபோல், தமிழ் நாட்டுப் படகுகள் இங்கே மீன் பிடிப்பதை” என்று அவர்கள் சொன்னபோது என்னால் மெளனமாகத்தான் இருக்க முடிந்தது.

தமிழக மீனவர்கள்:

தமிழ் நாட்டுக் கடல் பகுதியில் மீன்வளம் குன்றி வருவதால் இலங்கைக் கடல் பகுதிக்கு நாம் மீனவர்கள் செல்கின்றார்கள் என்பதே உண்மை. உயிர்ச் செறிவுமிக்க மன்னார் கடல் பகுதியில் மீன்வளம் குன்றுவதற்கான பல காரணங்களில், வளைகுடாப் பகுதியிலுள்ள தரவைகளை நாம் சரியாகப் பராமரிக்காததும் ஒரு காரணம். மன்னார் தீவில் தரவைகள் பாழாக்கப்படவில்லை. கடலையொட்டிய தரவைகளுக்கும், (Coastal Wetlands), அதாவது ஈர நிலங்களுக்கும், கடலின் உயிர்ச்செறிவிற்கும் சம்பந்தமுண்டு. மன்னார் தீவில் தரவைகளில் திரியும் கணக்கற்ற கழுதைகளே, அங்கு தரவைகள் அதன் தன்மை மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றது. தமிழ் நாட்டுக் கடலில் மீன்வளம் குன்றிவருவது நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால். இதை விட்டுவிட்டு இனஉணர்வைத் தூண்டினால் மீன் வளம் பெருகிவிடுமா என்ன? தமிழ்நாட்டுக் கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக தேவையான அறிவியல் மற்றும் நிர்வாக ரீதியான முயற்சிகளை அரசு எடுத்துச் செய்ய நாம் வற்புறுத்த வேண்டும்.

பேசாலையிலிருந்து தலைமன்னாருக்குச் சென்றோம். தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து இருந்த காலத்தில் கட்டப்பட்ட சிறு துறைமுகத்தை பியரடி என்கிறார்கள்; அந்தப் பியரடி இன்று இலங்கைக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பியரடியிலிருந்து Adams bridge ஐ  பார்ப்பதற்கு, படகில் உல்லாசப்பயண ஏற்பாடுகளும் இருக்கின்றது.

தனுஷ்கோடியும் தலைமன்னாரும்:

இயற்கைச் சீற்றங்களாலும் உள்நாட்டுப் போரினாலும் எப்படி பழமை வாய்ந்த குடியிருப்புகள் நலிவடைகின்றன என்பதற்கு தனுஷ்கோடியும் தலைமன்னாரும் நல்ல உதாரணங்கள்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து கொழும்புக்கு இரயிலில் பயுணச்சீட்டு வாங்கிக் கொண்டு தனுஷ்கோடி வரை இரயிலிலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பலிலும் பின் அங்கிருந்து கொழும்புவிற்கு மீண்டும் இரயிலிலும் பயணம செய்ய முடிந்தது. அந்தக் காலத்தில் வாங்கப்பட்ட இரயில் பயணச்சீட்டை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தார்கள்.

இப்பொழுது மாதிரியான நிலை இருக்கும் பட்சத்தில் தனுஷ்கோடி புயலைக் காரணம் காட்டி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கமுடியாது. இன்றும் கூட தனுஷ்கோடியில் மீனவர் குடியிருப்பு அடிப்படை வசதிக்ள் இல்லாமல் அல்லோல்படுகின்றது. தனுஷ்கோடியைப் போன்று முற்றிலும் அப்புறப்படுத்தபடாவிட்டாலும் போரினால் மன்னாருக்கும் தலைமன்னாருக்கும் வந்து கொண்டிருந்த இரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் தன்னுடைய பழைய பொழிவை மீட்டெடுக்க இன்னும் சிறிது காலமாகும்.

அருட் தந்தை இராயப்பாவுடன் தேவதோட்டம் என்ற இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களில் 450 பேருக்கும் அதிகமானோர் சங்கிலி அரசனால் கொல்லப்பட்டது பழைய வரலாற்றுச் செய்தி. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட அடித்தளம் தோண்டிய போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் தென்பட்டு, அந்த எலும்புகளின் காலத்தைக் கணிக்க ஆய்விற்கு அனுப்ப, அந்த இடமே இப்பொழுது கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து பிரார்த்திவிட்டுச் செல்லும் புனிதத் தலமாகிவிட்டது.

அந்தக் கட்டிட வேலையை சுதர்ஷ்னியின் தகப்பனார் ஒப்பந்த அடிப்படையில் செய்வதால், கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறந்தவர்களின் எலும்புகளைப் புனிதமாகப் பாதுகாப்பது தெரிந்தது.

நாம் இன்னும்  பண்பட வேண்டும்:

மன்னார் அழகிய, மிக அமைதியான சிறு நகரம். ஞாயிற்றுக்கிழமையென்றால் ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி தெருக்களில் மக்கள் நடமாடடமில்லாமல் அமைதியாகிவிடுகின்றது.

இலங்கையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். ஞாயிறு இரவு, சுதர்ஷினியின் வீட்டிலிருந்து புனித வளனார் இல்லம் செல்ல புறப்பட்டபோது, இரவு பதினொரு மணிக்கு, எனக்கும் பகலில் செய்த மாதிரி, ஒரு ஹெல்மெட் (தலைக்கவசம்) கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். இந்த நேரத்தில் கூடவா? என்று கேட்ட போது நம்முடைய நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று சொன்னபோது சட்டத்தை மதிக்கும் அவர்களுடைய மனோபாவம் என்னை வியக்க செய்தது.

இனத்தால், மொழியால் நாம் இருவரும் ஒருவரே என்று இலங்கைத் தமிழரின் தோளில் நாம் கைபோடவேண்டுமென்றால் நாம் இன்னும் கொஞ்சம் பண்பட வேண்டும் போல் எனக்குப் பட்டது.(தொடரும்)

July 20, 2011

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-II

Filed under: Uncategorized — Tags: , , , , , , — cdmiss @ 2:50 pm

சமீபத்தில் இலங்கை சென்று வர வாய்ப்பேற்பட்டது. அந்த அனுபவங்களை மன்னார் (வளைகுடா) தந்த ஞானம் என்ற என்னுடைய முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதுகின்றேன். இந்தப் பயணமே நாங்கள் (PAD நிறுவனம்) மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுவதால் கிடைத்த வாய்ப்பு.

இலங்கைக்கு நான் ஏற்கனவே (2002) ஒருமுறை IMM என்ற நிறுவனத்தின் அழைப்பிற்கிணங்க சென்றிருக்கிறேன். பவளப்பாறைகளை மையப்படுத்திய பிழைப்பு முறைகளைப் பற்றிய ஆவணம் தயாரிக்கும் பணியில் என்னைச் சேர்த்து மேலும் இருவராக மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தோம். நான் தங்கியிருந்த ஹோட்டலும், பணியாற்றிய இடமும் குடித்தனங்கள் இல்லாத அதிகபாதுகாப்புடைய நிறுவனப்பகுதிகள். பணியின் நிமித்தமாக வெளியில் செல்லவோ யாருடனும் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலைதான் இந்தியாவில். ஆனால் இலங்கையிலோ தமிழைவத்துக்கொண்டு தடுமாறாமல் நடமாடமுடியும் என்ற நம்பிக்கை அந்த நான்கு நாட்களில் எனக்குள் ஏற்பட்டுவிட்டிருந்தது. இலங்கையிலிருந்து நான் திரும்புகிற பொழுது மீண்டும் மீண்டும் நான் இலங்கைக்குச் செல்ல வாய்ப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே விமானம் ஏறினேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு நான் முயற்சி செய்யாமலே சமீபத்தில் ஏற்பட்டது. பெங்களுரை பணியிடமாகக் கொண்ட PAC நிறுவனமும், நான் சார்ந்த PAD நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் Environmental Governance –Citizen Report Card என்ற திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையை இலங்கையின் CEPA என்ற நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்க PAC நிறுவனத்தாருடன், PAD நிறுவனப் பிரதிநிதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு கருத்தரங்கில் கலந்து கொள்வதை விட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு காலாற நடந்து அந்த மண்ணின் மணத்தையும் காற்றையும் சுவாசித்து வரவேண்டும் என்ற ஆவல். யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி சீட்டு வாங்க என்னுடைய மாணவி ஏஞ்சலின் அகல்யா ரெம்பவும் மெனக்கெட்டார். இலங்கை சென்று சேர்ந்த அடுத்த அரைமணி நேரத்திலே, ஏஞ்சலின் தோழிகள் இருவர் வந்து என்னை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, நான் இலங்கையில் இருந்து திரும்ப திட்டமிட்ட 6 ம் தேதிதான் அனுமதி கிடைக்கும் என்றனர். யாழ்ப்பாணத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அனுமதி தேவைப்படாத மட்டக்களப்புக்கு வரச்சொல்லி ஏஞ்சலின் ஆலோசனை கூறினாலும். நான் மன்னார் பகுதிக்குச் சென்றுவரலாம் என்று விரும்பினேன். இன்னும் எட்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் எது சாத்தியமோ அது நடக்கட்டும் என்று அமைதியானேன்.

அடுத்த நாள் கருத்தரங்கு நடந்த Cylon Continental Hotel லுக்குச் சென்ற போது எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பெண்கள் அதிக அளவு பங்கேற்ற அந்த கருத்த்தரங்க நிகழ்ச்சியில், அந்த பெண்களெல்லாம் இலங்கையில் மேட்டுக்குடியினராக இருந்தாலும், பாசாங்குத்தனம் இல்லாத ஒரு தோழமையுணர்வு தென்பட்டது. கருத்தரங்க ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தாலும் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்கள். கருத்தரங்கின் நோக்கங்களாக CEPA Exicutive Directer Priyantha Fernando வினால் தரப்பட்ட அறிக்கையின் தமிழக்கத்தில் Exicutive Drecter என்ற ஆங்கில வார்த்தைக்கு நிறைவேற்றுப் பணியாளர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த பாணியே இலங்கைத்தமிழரின் மொழிவளத்தையும் பண்பாட்டையும் காட்டியது. Exicutive Directer என்றால் இங்கு நிர்வாக இயக்குனர் /செயல் இயக்குனர் என்றே மொழி பெயர்க்கிறோம். CEPA ஒரு தொண்டு நிறுவனம். நிர்வாக இயக்குனர் என்ற மொழியாக்கத்தில் இல்லாத பணிவு, தொண்டுள்ளம், நிறைவேற்றுப் பணியாளர் என்ற மொழிபெயர்ப்பில் இருந்ததாக எனக்குப் பட்டது.

கருத்தரங்கின் இருக்கைகளே வித்தியாசமாக அமைந்திருந்தது. ஐந்து பேர் உட்காரும்படியான வட்டமேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஹெட்போன்கள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் கூட அதைவிட ஆடம்பரமான, அதிக நபர்கள் கலந்து கொண்ட, அறிவுபூர்வமாக நடந்த ஓரிரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தாலும் அக்கருத்தரங்குகளில் தோழமையுணர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கின் ஆரம்பத்திலே, கருத்தரங்குப் பகிர்தலை சிங்களத்திலோ, தமிழிலோ கேட்க விரும்புகின்றவர்கள் ஹெட்போன்களை உபயோகிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆசிய அளவிலான அக்கருத்தரங்கில் ஆங்கிலம் தெரியாதவர் எவரும் இருக்கமுடியாதுதான். இருப்பினும் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Inagural Session முடிந்த பிறகு ஆர்வமிகுதியால் எப்படி கருத்தரங்கு பகிர்தல் தமிழாக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ள்ள, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு ஒரு பெருமித உணர்வால் மனம் நெகிழ்ந்து போனேன்.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள்தாம். தமிழ் சிங்கள மொழியாக்கம் அவர்களுக்குத் தேவைப்படாததுதான். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கட்டாயத்தின் பேரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். மாறாக இது தொண்டு நிறுவன நிகழ்ச்சி, தமிழிலும் சிங்களமும் அங்கே சம மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்த உணர்வு என்னை தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்கச் செய்தது பத்தாண்டுகளுக்கு முன்னர் SIDA என்ற நிறுவனம் இந்தியாவில் நிதியுதவிதரும் நிறுவனங்களுக்காக அனுபவப் பகிர்தலை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் Carlton ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பிராந்தியங்களிலிருந்து கலந்துகொண்டவர்கள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மொழிபெயர்ப்புக்கென்று பிரத்தியோகமாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும் சில பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் கருத்துச் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங் (பின்னாளில் மக்சாசே பரிசு வாங்கியவர்) ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டாலும், உரையாட முடியாததால் ஹிந்தியிலே பேச, நான் வீம்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டேன் .அவர் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசுவதை மொழிபெயர்ப்பாளர் இரண்டு நிமிடங்களில் கருத்து சுருக்கமாகச் சொல்ல, நான் விரிவான மொழிபெயர்ப்பு தேவை என வீம்பு பிடித்தேன். தேனிர் இடைவேளையின் போது என்னை சந்தித்த மொழி பெயர்ப்பாளர், ராஜேந்திர சிங்கின் பணிகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானது அல்ல சில சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அவர் எதோ அதிசயத்தைச் செய்தது மாதிரி அவரை முன்னிறுத்துகின்றார்கள் என்று என்னுடைய வாயை அடைக்க முற்பட்டார், ஆனால் இராஜேந்திர சிங் அவர்களோ அவருடைய பணியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கருதி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவரது செயல்பாடுகள் பற்றிய ஆங்கில அறிக்கைகளைக் கொடுத்தார். அவருடைய நிறுவனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும் அளவிற்கு இந்தியாவில் ஆங்கிலம் ஒரு வல்லாதிக்க மொழியாகி விட்டது. தமிழ் மட்டுமல்ல ஏன் அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையோ இரண்டு கோடிப் பேர். அதில் தமிழ் வம்சாவழியினர் என்று குறிப்பிடப்படுவது 7.5% சதவீதம். தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்தால் இன்னும் கூடும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழ் பேசுவோர் 20-25 லட்சத்திற்குள் தான் இருப்பார்கள். ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் சாதிக்காததை, குறைந்த எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள் சாதித்திருக்கின்றார்கள். தமிழ் மொழி பற்றியும் தாய்மொழிப் பற்று பற்றியும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் இருப்பதாக எனக்கு படுகிறது.

அந்தக் கருத்தரங்கில் மொழி பெயர்ப்பாளர்களாக செயல்ப்பட்ட இரண்டு தமிழர்களைச் சந்தித்தேன். மன்னார் பகுதியை சேர்ந்த பிகிரி (Fiqri) அவர்கள், மன்னார் பகுதிக்குச் செல்ல விரும்புவதையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்ட பிறகு என்னுடன் இன்னும் தோழமையானார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் அவரின் தமிழ் ஆங்கிலப் புலமை மெச்சத்தக்கது. தரமான தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார். பரந்த வாசிப்புப் பழக்கமும் மும்மொழிப் பாண்டித்தியமும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) கொண்ட அவரின் பணிவு வியக்கத்தக்கதாயிருந்தது. ஒரு அமர்வு நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அமர்வை மொழி பெயர்க்கவில்லையா எனக் கேட்டபோது, யாரும் ஹெட்போனை உபயோகிக்க வில்லை, யாராவது ஒருவர் உபயோகித்தால் கூட சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஆரம்பித்து விடுவோம் என்று கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. யாராவது விளையாட்டுக்கு ஹெட்போனை வைத்திருந்தால் கூட அவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழினம் காத்ததாக சொல்லப்படும் குடும்பத்தில் தோன்றி, ஆங்கிலம் தெரியாமல் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலையில் அமைச்சர் அழகிரி இருக்கும் போது, சாதாரணத் தமிழனின் நிலையை நாம் எப்படி எடுத்து கொள்வது?. இனக்காவலர்களும், மொழிக்காவலர்களும் நிறைந்த தமிழகத்தில் நடக்காத நடக்கவியலாத அதிசயங்களை இலங்கையில் தமிழர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழைப்பொருத்த மட்டில் இலங்கைத் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர்தான். அவர்கள் நம்மை போல தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்தாம். அங்கு பேசப்படும் ,எழுதப்படும், கற்றுத்தரப்படும் தமிழுக்கும், தமிழ்நாட்டுத் தமிழுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகப்படுகிறது, அம்மா சமையல் என்றால் சும்மாவா என்ற விளம்பரம் மாதிரி, இலங்கைத் தமிழில் உணர்வும், உயிரும் கலந்திருப்பதாகப் பட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது தமிழ் நாட்டிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். போரிட்டோ ,சமாதானமாகியோ “தமிழ்” அடையாளத்தை இலங்கைத் தமிழர் கடைசிவரை தக்க வைத்துக் கொள்வார்கள்.

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க, தொல்லை வினைதரு இலங்கைத் தமிழரின் தொல்லையகல உணர்வுபூர்வமாகப் பிரார்த்திப்போம்.

June 16, 2011

விதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி

People can do it –மக்களால் செய்ய முடியும்
People can be trained to do it –மக்கள் செய்யமுடியுமாறு அவர்களைப் பயிற்றுவிக்க முடியும்
Conditions can be created to do it – அவ்வாறு செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும்

இதுதான் சமுதாய முன்னேற்றப் பணியின் ஆதார நம்பிக்கை. இந்த நம்பிக்கையினடிப்படையில்தான் முன்னேற்றப் பணியாளர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இந்த நம்பிக்கையில்தான் ஒரு புதிய பணிக்காக, கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களை ஒரு பயிற்சியில் ஈடுபடுத்தினோம். பத்ரியவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் காரியங்கள் நடக்காதபோது அவரே “என்ன எதுவும் நடக்கின்ற மாதிரி தெரியவில்லையே” என்று ஆதங்கப்பட வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. அந்தச் சூழ்நிலையும் மாறியது.

சமீபத்தில், அடுத்து வருகின்ற மூன்றாண்டுகளுக்கு இராமேஷ்வரம் பகுதியில் PAD செய்ய வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பங்கேற்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது.

வடிவேலு ஒருபடத்தில் “இப்பொழுதெல்லாம் துவைச்சு தொங்கப்போடுவது மட்டுமல்ல: கிளிப்பையும் மாட்டிவிட்டுப் போறாங்களே” என்று புலம்புவது மாதிரி, அரசு நிர்வாகத்தைப் பற்றிய மக்களுடைய கண்ணோட்டம் மாறிவருகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய கடுமையான விமர்சனங்களில், கோபத்தைவிட நியாயமே மேலோங்கியிருக்கின்றது.

ஒரு படத்தில் அலர்ட் ஆறுமுகம் என்ற பாத்திரத்தில் ஹோட்டலுக்குப் போகும் வடிவேலு, சாப்பாட்டில் பூச்சி இருப்பதாக ரகளை செய்யும் நபரை, “ஏண்டா! ஒரு ஆடு செத்துக்கிடக்கு! கோழி செத்துக்கிடக்கு! நண்டு செத்துக்கிடக்கு இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலே! பூச்சி மட்டும் தெரியுதாக்கும்” என்று மொத்தும் அந்தக் காட்சியை உதாரணம் காட்டி, கடலுக்குள் ஆயிரம் போகின்றது. ஆலைக் கழிவுகள், முனிசிபாலிட்டிகளின் பீக் கழிவுகள், ஆயில் கழிவுகள் என்று எத்தனையோ போய் பவளப் பாறைகளைச் சாகடிக்கின்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு, மீனவன் தீவுப் பக்கம் போறதுதான் கண்ணுக்குத் தெரிகின்றது. அவனால் தான் பவளப் பாறைகளே அழிவதாக அடித்து விரட்டுகின்றார்கள். வடிவேலு மொத்துன மாதிரி மொத்துனாத்தான் சரிப்பட்டு வருவார்கள். அவர்கள் ஆதங்கத்திலும் ஒரு நையாண்டி.

இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில், அந்தப் பொறுப்பை கல்லூரிப் பக்கம் கால்வைக்காத ஒரு பணியாளரிடம் ஒப்படைக்க, அவரிடமிருந்து கைப்பிரதியான அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவரிடமிருந்து மின்னஞ்சலில் வந்த அறிக்கையைப் பார்த்து நானே வியந்து போனேன். கம்ப்யூட்டரில் அந்தப் பணியாளர் உட்கார்திருந்ததைப் பார்த்தரியாத நான் அவரிடம் “இது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோதுதான், “NHM writer” என்று பத்ரி சார் சொன்னாரே அதை டவுண்லோட் செய்து நானே கணனியில் தட்டச்சு செய்தேன் என்றார். அதற்கு முன் அவர்கள் உபயோகப்படுத்திய தமிழ் மென்பொருள் user friendly ஆக இல்லாததால், ஆங்கிலம் தெரியாத பணியாளர்களை கம்ப்யூட்டர் பக்கம் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றது. உருப்படியான ஒரு தமிழ் மென்பொருள் எப்படியெல்லாம் ஒரு சாதாரணத் தமிழனுக்கு, விடுதலை உணர்வைத் தரும் என்பது புரிந்த போது, தமிழ் இனக் காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, எது தமிழை வளர்க்கும், தமிழைக் கொண்டே தமிழருக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது என்று தெரியாமல், தேவையற்ற பிரச்ச்னைகளில் நம் எல்லோருடைய நேரத்தையும், பொருளாதாரங்களையும் வீணடிக்கத் தூண்டுகின்றார்களே என்ற ஆதங்கம் தலைதூக்கியது. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். அதில் சில லட்சங்களைச் செலவழித்திருந்தால், தமிழுக்கான மென்பொருள்கள் சாதாரணத் தமிழனைச் சென்று அடைந்திருக்கும். தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும், இலவசமான, உபயோகத்திற்கு எளிதான மென்பொருள், ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு ஒரு வரப்பிரசாதம். விடுதலையுணர்வு. பத்ரி சார்ந்த நிறுவனம் செய்ததை, இனக் காவலர்களும், கலாச்சாரக் காவலர்களும் செய்திருக்க முடியாதா என்ன?

விழுவாய் தமிழா நெருப்பாய் என்று அறைகூவல் விடுபவர்களின் ஆதங்கம் புரிகின்றது. சில நேரங்களில் நாம் நெருப்பாக விழத்தான் வேண்டும். அதற்கு முன்னாள் நமக்கு விதையாக விழவும் தெரிந்திருக்க வேண்டும்.

பத்ரி சேஷாத்ரி என்னும் தமிழருக்கு விதையாக விழத் தெரிந்திருக்கின்றது. நன்றி

நான் மேல குறிப்பட்ட பணியாளர் (ஜெ.ஜெயராஜ்) தயாரித்த ஆவணம் குறைந்த பட்ச திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது.   Scribd      wePapers

May 30, 2011

பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி !

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தபோது, தமிழ் வலைப்பதிவுகளில் ஒப்பந்தத்தை விமர்சித்து எழுதிய பதிவர்களில் பெரும்பாலானவர்கள் பத்ரி என்னும் பதிவரை மானாவாரியாக விமர்சிக்க அதுவே என்னை பத்ரியைப் படிக்கத் தூண்டியது. பத்ரியைப் படிக்கப் படிக்க, அவருடைய அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. அவர்பால் அபிமானம் கொள்ள வைத்தது. எதையும் வித்தியாசமாக, அறிவியல் பூர்வமாக அணுகும் மாற்றுச் சிந்தனையாளர் எனப் புரிந்தது. சார்புநிலை கொள்ளாத, எதிலும் “மெய்ப்பொருள்” தேடுபவர்களுக்கு பத்ரியவர்களை பிடித்துப் போகும். எனக்கும் பத்ரியைப் பிடித்துப் போயிற்று.

பத்ரியைத் தொடந்து படித்தாலும், வலைபதிவுகளில் பின்னூட்டம் எழுதும் பழக்கமில்லாததால் வாசகன் என்ற அளவில் நின்றுவிட்டிருந்த என்னை பத்ரியவர்களிடம் அறிமுகப்படுத்தியவர், எங்கள் இருவரையும் தெரிந்த நண்பர் திரு.இராமச்சந்திரன் (Naethra Technologies & Mekkarai) அவர்கள்.

பத்ரியவர்களுடனான முதல் சந்திப்பிலே நான் கொண்டிருந்த பொதுவான சில தப்பபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய பேராசிரியப் பணி, நான் சார்ந்த துறை, பணியாற்றும் கல்லூரி, எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை, உயர் சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைக் கையாளுவைதைப் போன்று கையாளும் எங்கள் அணுகுமுறைகள் பலனளிக்கின்றதா என்று கேட்டபோது, ஆசிரியரென்ற முறையில் என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எழுத்தில் பார்த்த பத்ரியைவிட, நேரில் பார்த்த பத்ரி இன்னும் தோழமையுடனும், மனிதநேயத்துடனும் இருந்தார். அவருள் நல்லாசிரியர் ஒருவர் ஒளிந்திருந்திருப்பதை ஆசிரியாரான என்னால் உணர முடிந்தது. பத்ரியிடம் ஒளிந்திருந்த அந்த ஆசிரியர், முழுநேர ஆசிரியர்களான எங்களைவிட மாணவர்களிடம் அதிகக் கரிசனத்துடனிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

எங்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டபோது, கொஞ்சம்கூட பிகு செய்யாமல், வேறெந்தக் கல்லூரியை விடவும் எங்கள் கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது உபயோகமாக இருக்குமென்று கூறி உடனே தேதியும் கொடுத்தார். அதை “A Day with Badri” என்ற நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தோம். நிகழ்ச்சி தொடர்பான சில சம்பிரதாய நடைமுறைகளுக்காக பத்ரியைத் தொடர்பு கொண்டபோது, வேறு பணிநிமித்தமாக மதுரை வருவதையொட்டியே நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்தேன். தன்னுடைய வருகை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் தனக்கில்லை என்று பட்டவர்த்தனமாகக் கூறி விட்டார்.

அறிமுகத்தின் பொருட்டு பத்ரியின் ஐஐடி மற்றும் கார்னெல் பல்கலைக் கழக பின்புலம், அவருடைய சமீபத்திய சாதனைகளைச் சொல்ல, ஒருமாதிரி மிரண்டு போயிருந்த மாணவர்களை, ஒருசில நிமிடங்களில் மீட்டெடுத்து, ஆசுவாசப்படுத்தி, அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரம் மாணவர்களைத் தன்வசப்படுத்தினார். கற்பதில் ஆர்வமற்றவர்கள் என்று எங்களால் கணிக்கப்பட்டிருந்த மாணவர்கள், பத்ரியிடம் கேட்ட கேள்விகளிலிருந்து அவர்களுக்கிருந்த ஆர்வமும், அவர்களின் பொறுப்பான சிந்தனைப் போக்கும் புரியவந்தது. எங்களிடம் அதுவரை காட்டாத தங்களின் அழகான மறுபக்கத்தை பத்ரியிடம் காட்டியது என்னை வெட்கப்பட வைத்தது.

எங்கள் கல்லூரிக்கும், மாணவர்களுக்கும் தன்னால் எப்படியெல்லாம் உதவமுடியும் என்பதை நிர்வாகத்திற்கு கோடிட்டுக்காட்டினார். அவர் சொன்னபடியே, கல்லூரியின் Computer Lab-ஐ Student Friendly-ஆக மாற்றவும், எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் இணைய இணைப்பை ஏற்படுத்தி, இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதற்கு ஆலோசனை சொல்லவும், NHM Systems Engineer-ஐ அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பின்னர் கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களையும் அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பத்ரியவர்கள் மீண்டும் மதுரை வந்தபோது, எங்கள் ஆசிரியர்களுடனும் நிர்வாகத்துடனும் கணிசமான நேரம் செலவிட்டார். தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட, அறிவுஜீவிகளால் மதிக்கப்படுகின்ற, வியாபாரரீதியாக வெற்றிகரமாக ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டு, நேரமின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் நபரால் எப்படி எங்களுடன் நேரம் செலவிடமுடிகின்றது? தரமான கல்வி சாமான்யர்களையும் சென்றடையவேண்டும் என்ற பத்ரியவர்களின் சமூக அக்கறையும், கல்வியின்மீதும், மாணவர்களின் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் இதற்கெல்லாம் காரணமாயிருந்திருக்க முடியும்.

பத்ரியவர்களின் தொடர்பால் என் அணுகுமுறைகளில் மாற்றமேற்பட்டது. அவ்வளவாக நம்பிக்கையில்லாமல், விளையாட்டுத்தனமாக செய்து வந்த ஆவணப் பரிமாற்றங்களில் (Document Sharing) ஒரு நேர்த்தியைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். அந்த ஆவணங்கள் கடந்த இரண்டரை வருட காலத்தில் நான்கு லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், ஐம்பதாயிரம் பேர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டும் பயன்படுத்தப் படுகின்றது. மாணவர்களின் Field Work Reporting -ல மாணவர்கள் விரும்புகின்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்தபோது, செல்போன் கொண்டு குறைந்த வருவாய்க் குடியிருப்பை (குடிசைப் பகுதி- சேரி) புகைப்படங்கள் எடுத்து, அதை நல்ல ஆவணமாக்கினார்கள். மற்ற கல்லூரி மாணவர்களைவிட எங்கள் கல்லூரி மாணவர்கள், பாட முறையாலும், அவர்களுடைய சமூகப் பின்னணியாலும் வாழ்வின் எதார்த்ததிற்கு அருகாமையிலிருப்பதால், சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை உலகின் கவனத்திற்கு, நிபுணர்களின் கவனத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை எங்களிடம் ஏற்படுத்த பத்ரி முயற்சி செய்தார். அப்படி செய்யும் பட்சத்தில் கல்லூரிக்குப் பெருமையும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகுமென்று எடுத்துரைத்தார்.

தனி மனிதர்கள் மாற்றங்களை சுவீகரித்துக் கொள்ளும் வேகத்தில் நிறுவனங்கள் மாற்றங்களைச் சுவீகரிக்க முடியாதுதானே. கல்லூரியைப் பொருத்தமட்டில் காலம் கைகூடி வரட்டும் என்று, பத்ரியவர்களின் ஆலோசனைகளை மற்ற இடங்களில் பரீட்சித்துப் பார்க்க ஆவல் கொண்டேன்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றிவரும் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனத்தோடு எனக்கு நட்பு ரீதியான தொடர்பும், பொறுப்புக்களும் இருந்தது. PAD எனக்கு வகுப்பறையென்றால், அதன் களப்பணியாளர்கள் எனது நல்லாசிரியர்கள். அவர்களுடைய அனுபவத்தால் நானும், என்னுடைய அனுபவத்தால் அவர்களும் பரஸ்பரம் பயனடைந்து இருக்கின்றோம். PAD பணியாளர்களின் அனுபவத்தில், அணுகுமுறைகளில் கற்றுக்கொள்ள பாடங்கள் பல இருப்பதாக நான் எப்போதும் நம்பி வந்ததால் அதையெல்லாம் ஆவனப்படுத்தி, இணையத்தின் மூலமாக உலகோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டு. PAD மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த 115 கிராமங்களில் பணியாற்றுகின்றது. இக்கிராமங்கள் சார்ந்த தகவல்களையெல்லாம் இணையத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்; இணையத்தையும், சமூக வலைதளங்களையும், மக்களை ஒருங்கிணைக்கவும், நல்லாட்சி (Good Governance) அமைந்திடவும் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

நம்முடைய கிராமங்களின் வரலாறு, பாரம்பரியம், அறிவார்ந்த மேதமை (Indigenous Knowledge) முறையாக ஆவனப்படுத்தப்படவில்லை. நான் ஏற்கெனெவே “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை” என்ற பதிவில் எழுதியது மாதிரி, வரலாற்றுப் போக்குகளை நமது முன்னேற்ற முயற்சிகளுக்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு ஆவணப்படுத்தப்படவேண்டும் . இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.

மக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Microplans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Microhistory) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.

கடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூட தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால் இதைப் பலகலைக் கழகங்களோ அரசோ செய்யமுன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.

இந்த எண்ணம் என்னுள் வேரூன்றியதற்கு ஒரு வகையில் பத்ரிதான் காரணமென்று கூடச் சொல்லலாம். இந்தியாவின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை ஒரு தவமாகச் செய்துகொண்டிருந்த பேரா.சுவாமினாதனை அறிமுகம் செய்து வைத்தார். தன்னலமாற்று பேரா.சுவாமினாதன் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரிகளும், அதுவெல்லாம் கிராம அளவில் சாத்தியமே என்று காட்டிய “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை”யும் என்னுடைய ஆவலை அதிகரிக்கச் செய்தன. PAD நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் பரிசோதனை முயற்சிக்கு பத்ரியவர்களால் வழிகாட்டமுடியுமென்று நாங்கள் நம்பியதால் பத்ரியை வேம்பாருக்கு அழைத்தோம். நாகப்பட்டணத்தில் பள்ளி மாணவராக இருந்தபோது, மீனவர் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் அவருக்கிருந்ததால், கடல் பற்றியும், மீனவர் வாழ்க்கை பற்றியும் அவருக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் இருந்தது. அதிக கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களிடம் அவர்களுக்குப் புரியும்படியாகப் பேசி, அவர்களைக் கொண்டே “மன்னார் வளைகுடா வாழ்க்கை” என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை தொடங்க வைத்தார். தங்களுடைய கருத்துக்களையும் இணையத்தில் ஏற்றமுடியும், உலகோடு பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதை பணியாளர்கள் உணர்ந்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், நம்பிக்கைக்கும் அளவே இல்லை.

தமிழில் வலைப்பதிவுகளுக்குப் பஞ்சமில்லைதான். இருப்பினும் கிராமங்களுக்கென்று வலைப்பதிவுகள் இல்லை. ஆர்வத்தால் தொடங்கப்பட்ட ஓரிரு வலைப்பதிவுகளும் நேர்த்தியாக இல்லை. (என்னுடைய கணிப்பு தவறாயிருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டவும்) மாறாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் கிராமங்களுக்கு வலைப்பதிவுகள் தொடங்கி, அற்புதமான முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய வலைப்பதிவாக்கம் என்பது பொறுப்பான கடமை. எழுத்து, தொழில்நுட்பம், எதையும் சிக்கனமாகச் செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக அதைச் சமூக மாற்றுருவாக்கத்திற்குப் பயன்படுத்தும் சமூகநோக்கு என்று பலவும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். எங்களுக்கு (PAD) ஆர்வம் இருக்கின்றது. வழிகாட்ட பத்ரி போன்றவர்கள் இருக்கின்றார்கள். கிராம வலைப்பதிவுகள் தமிழகத்தில் மக்கள் இயக்கமாக உருப்பெறும் காலம் விரைவில் மலரும்.

நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி பத்ரி.

May 27, 2011

மன்னார் வளைகுடா தந்த ஞானம் -I

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பவளப் பாறைகள் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆய்வின் துணைக் கூறாக, பவளப் பாறைகளால் பயனடையும் பயனாளிகளைப் பற்றிய புரிதலுக்காக, பங்கேற்பு மதிப்பீடுகளைச் (participatory appraisal) செய்வதற்காக நானும், நண்பர் இராஜேந்திர பிரசாத்தும் (ராஜன்) இராமேஸ்வரத்திற்கு அழைக்கப் பட்டிருந்தோம். இராமேஸ்வரத்திற்கு அதற்கு முன் ஓரிருமுறை சென்றிருந்தாலும், அது மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த கடற்பகுதி என்று எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை.

கடலில் கால் நனைத்திருந்தாலும், கடலைப் பற்றிய எனது புரிதல், சாதாரண மனிதருக்கிருக்கும் பொது அறிவின் எல்லையைத் தாண்டிச் சென்றதில்லை. பவளப் பாறைகளைப் படத்தில் மட்டும் பார்த்தவன். ஆகையால் அதன் பன்முகப் பயன்களெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆய்விற்கு போவதற்கு முன்னால, பவளப் பாறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. தெரியாவிட்டால் என்ன? பவளப் பாறைகளோடு தங்கள் வாழ்வை இணைத்துக்கொண்ட ஒரு பயனாளர் கூட்டத்தோடுதானே இருக்கப் போகின்றோம். அவர்களுக்கு நாம் நல்ல மாணக்கர்கள் என்று புரியும்படி நடந்துகொண்டால், அவர்களின் அனுபவ ஞானத்தால் நமக்கு சாயமேற்றி சாப விமோசனம் தந்து விடாமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இராமேஸ்வரம் புறப்பட்டோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கான அத்தாட்சியே இத்தொடர்.

நீங்கள் உண்மையென்றும், நன்மையென்றும் மனமொப்பி அறிந்ததை தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்கள் என்ற மனோபாவத்தோடு மக்கள் முன் அமர்ந்தால், நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அர்த்தமுள்ள பகிர்தல் ஆரம்பமாகும்.அது நம்மைத் தெளிவாக்கும். இதுதானே பங்கேற்பு முறைகளின் (participatory methods) நம்பிக்கை.

இராமேஸ்வரத்தில் பாம்பனைச் சேர்ந்த சின்னப்பாலம் மற்றும்        தோப்புக்காடு குடியிருப்புகள். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த  தொண்டு நிறுவன (TRRM) பணியாளர்களால் அறிமுகம் எளிதானது. கடற்கரையோரம் பல தலைமுறைகளைப் பார்த்தறிந்த பூவரசு மரம் எங்களுக்கு போதி மரமானது.

பல பங்கேற்பு உத்திகளைப் பயன்படுத்தினோம். வலைகளைப் பின்னிக்கொண்டே வாய் வார்த்தைகளால் பவளப் பாறைகளை வர்ணித்துக்காட்டினார்கள். மீன்கள் பவளப் பாறைகளைச் சுற்றி வருவது போல், வார்த்தைகளால் பவளப் பாறைகளைச் சுற்றி வந்தார்கள். குஞ்சு பொரித்தார்கள. அதை வலைபோட்டுப் பிடித்தார்கள். பாறைகளில் சிக்கிக்கொண்ட வலைகளை வார்தைகளால் கவனமாகப் பிரித்தார்கள்.

“பவளப் பாறைகள் கடலின் கருவறை மாதிரி; மீனவர்களின் வாழ்வு அங்குதான் ஜனிக்கிறது” என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். எங்களுக்கும் புரிய வைத்தார்கள்.

அவர்களைப் பொருத்த வரை கடலும் நிலமும் வேறுவேறல்ல. நிலத்தின் நீட்சியே கடல். நமக்கு நிலம் எப்படிப் பரிச்சயமோ, அப்படித்தான் கடல் அவர்களுக்கு. கடலை நோக்கிக் கைகளைக் காண்பித்து, அங்கே ஆறு ஓடுகிறது; ஆற்றைத் தாண்டினால் சேறு. இந்தப் பக்கம் பொட்டல். நிலத்தின் அத்தனை வகைப்பாடும் கடலிலா? இல்லை கடலின் வகைப்பாடு நிலத்திலா? நமக்குப் புரியவில்லை.

ஆங்கிலேயர் நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து வரைபடம் தயாரித்து, நாட்டை வசப்படுத்தியது மாதிரி, கடலை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இந்தத் தெரிதல்தான் அவர்களுடைய பிழைப்பாதாரம். அவர்களுடைய அனுபவ ஞானத்தைப் பார்த்து, நாம் பிரமிப்பதைக் கண்டு, ஆணவம் கொள்வதற்கு பதிலாக பணிவாகின்றார்கள். உண்மையான ஞானத்தின் அடையாளமே பணிவுதானே.

“கடல் ஒரு கைக்குழந்தை மாதிரி. காத்து வெயில்,மழைன்னு எதுவும் அதன் தன்மையை மாத்திடும். கடலைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. காத்தைத் தெரிஞ்சிருக்கணும். வெயிலைத் தெரிஞ்சிருக்கணும். மழையைத் தெரிஞ்சிருக்கணும். ஆகாசத்தைத் தெரிஞ்சிருக்கணும்” என்று ஐமபூதங்களின் இணையறாத் தொடர்பை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, இவர்கள் படகேறி மீன்பிடிக்கச் செல்கிறார்களா? இல்லை நடுக் கடலில் தவமியற்றி இயற்கைப் பேருண்மைகளை அறியச் செல்கிறார்களா என்று வியப்பே ஏற்பட்டது.

மூன்று நாட்கள்… கடல் பற்றி, பவளப்பாறைகள் பற்றி, மீனவர் வாழ்க்கை பற்றி, அவர்களின் சுகதுக்கங்கள் பற்றி, மாறி வரும் மீன்பிடித் தொழில் நெறிமுறைகள் பற்றி, அவர்களின் பொதுவான நம்பிக்கைகள் பற்றி…பாடங்கேட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. அதுதான் நண்பர் ராஜனை மன்னார் வளைகுடாவின் சற்றேறக்குறைய மையப் பகுதியான வேம்பாரில் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனம் (2001) தொடங்க வித்திட்டது. சுனாமிக்காக கடலோரம் நண்பர் ராஜன் கரையொதுங்கவில்லை. பேராசியாராகப் பணியிலிருந்தாலும், PAD நிறுவனப் பொறுப்பிலிருந்தாலும், எனக்கென்னமோ மக்கள் முன்னும், PAD நிறுவனக் களப்பணியாளர்கள் முன்னும் மாணவன் என்னும் மனோபாவம் தான் இருக்கின்றது. ஏனெனில் என்னுடைய கற்றல் அவர்களிடமிருந்துதான் தொடங்குகின்றது.

PAD வேம்பாரில் செயல்பட ஆரம்பித்த பின், கடல் சூழியலில் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாகப் பணிபுரியும் நண்பர்களான முனைவர்கள் பாலசுந்தரம் (பாரதிதாசன் பல்கலை), பொய்யாமொழி (பாண்டிச்சேரி பலகலை) ஒருமுறை வேம்பார் வந்தபோது, கடல் சூழியல் பற்றி அவர்களிடம் பேசியதைப் பார்த்து, “கடலைப் பற்றி நான் அதிகம் வாசித்திருப்பதாகப்” பாராட்டினார்கள். உண்மையென்னவென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் கேள்வி ஞானம்தான். கடல் சூழியல் தொடர்புடைய பல கலைச் சொற்களை என்னால் பிழையின்றி எழுதமுடியாது.

மக்களறிவு (People’s Knowledge) என்பது கடலோரம் பரவிக் கிடக்கும் மணல்லல்ல. அது நிலத்தடியில் உறைந்திருக்கும் நன்னீர் போன்றது. சில இடங்களில் கைகளைக் கொண்டு மணலைப் பறித்தாலே நீர் ஊரும். சில இடங்களில் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் விரும்புமளவு, சுவையான நீர் கிடைக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஒரு நல்ல ஆத்ம சாதகன் குருவைத் தேடுகின்ற மாதிரி, இல்லை நல்ல சாதகனை குருவே தேடி வருகின்ற மாதிரி, பங்கேற்பு முறைகளிலும் நாம் நல்ல Key Infomants-ஐ தேடிக் கொண்டேயிருக்க வேண்டும்.சில நேரங்களில் நாம் தேடுவது தெரிந்தாலே அவர்கள் நம்முன் நிற்பார்கள்.

பங்கேற்பு முறைகள் என்பதும் ஒரு ஆத்ம சாதகம்தான். அதைப் PAD நிறுவனத்தோடும், பணியாளர்களோடும், மக்களோடும் சேர்ந்து செய்ததை, கற்றுக் கொண்டதை மன்னார் வளைகுடா தந்த ஞானம் என்ற தலைப்பில் இங்கே தொடந்து உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

December 14, 2010

எனது இந்துத்வம்

Filed under: Uncategorized — Tags: , — cdmiss @ 8:41 am

சாப விமோசனம்
ஐநூறு  அடிக்கு மேலான ஆழ்துளைக் கிணறுகள்
இவ்வளவு அவ்வளவு என்றில்லாமல்
எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தேக்க
நிலத்தடித் தொட்டிகள்.
எந்த வறட்சியையும், தண்ணீர் பஞ்சத்தையும் தாங்கும்
வீடுகளிருந்த அந்தத் தெருவில்.. ஒரு தெருக்குழாய்!

தெருக்குழாய்களுக்கு அழகே
அதைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குடங்களும்
நைலான் சேலைப் பெண்களும்தானே!
அதற்குக் கூட வழியில்லாமல்
அத்தெருக்குழாய் சபிக்கபட்டிருந்தது.
துருப்பிடித்து பல காலமாய் நின்று கொண்டிருந்தது
சாப விமோசனத்திற்கு காத்துக் கொண்டிருந்த அகலிகை மாதிரி..
இன்று காலை வாக்கிங் சென்றபோது
அத்தெருக்குழாயைச் சுற்றிலும்
தமிழல்லாத வேறு பாஷையில் பேசிக்கொண்டு
கொஞ்சம் தள்ளியிருந்த காலி பிளாட்டில்
ரோடு வேலைக்காக வந்து டெண்டடித்துத் தங்கியிருந்த
பீகாரியப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்…

ஸ்ரீ ராமன் மட்டுமல்ல
சீதைகளும் சில நேரங்களில் சாப விமோசனம் தரமுடியும்

நிலையாமை
அது ஒரு நாலு ரோடு கூடுமிடம்..
6 x 10 என்ற விசாலமான பிளக்சில்
உள்ளூர், தமிழக, தேசிய தலைவர்கள்
மாலையுடன்….
மகுடம் தரித்து உட்கார்ந்திருப்பார்கள்….
கவர்ச்சியாகச் சிரிப்பார்கள்….
கம்பீரமாக நடப்பார்கள்….

பருவத்திற்கு ஏற்றமாதிரி
படங்களும் மாறிவிடும்.

மாறினால்தான் என்ன?

எதைக் கொண்டுவந்தார்கள்
அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட
அவர்கள் அங்கு இல்லாததால்
எதை இழந்துவிட்டது
அந்த நாலு ரோடு சந்திப்பு!

பாண்டிச்சேரியிலிருந்து மதுரை
முன்னொருநாள்
ஆரோவில்லுக்குச் சென்றிருந்தேன்
என் நண்பரின் நண்பர்களாக
பல காலம்
ஆசிரமத்திலும்
ஆரோவில்லிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்
பலருடன் பக்கத்திலமர்ந்து பேசினேன்.
அரவிந்தரையும் அன்னையையும்
அவர்களிடத்தில் தேடினேன்….

பிறிதொருநாள்
கண் சிகிச்சைக்காக உறவினறொருவரை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்
அப்பொழுது தான் தெரிந்தது
நோயாளியாகவும்,
நோய் தீர்ப்பவராகவும்
அரவிந்தரும், அன்னையுமே நடமாடிக் கொண்டிருந்தனர்.
அரவிந்தரும், அன்னையும்
பாண்டிச்சேரியிலிருந்து மதுரை வந்து
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவாம்.

December 12, 2010

கோவிந்தநகரம் –ஓர் இந்திய கிராமத்தின் கதை

கதவு கூடப் போடமுடியாமல் வட்டக்குடிசையில் கோவிந்தப்பா தொடங்கிய வாழ்க்கை, அவ்வட்டாரத்திற்கென்றிருந்த சகல இடர்ப்பாடுகளையும் சாமாளித்து, வாய்ப்புக்களை வசப்படுத்தி, எப்படி கோவிந்தநகரமாக, ஒரு மேம்பட்ட நாகரீகமாக வளர்ந்தது என்பதைச் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணமே- கோவிந்தநகரம் – ஓர் இந்திய கிராமத்தின் கதை.
இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா

வரலாறும் அது தரும் படிப்பினைகளும் நமக்கு வேண்டும்:
வரலாறு என்பது நடந்து முடிந்த கடந்த காலச் சம்பவங்களின் தொகுப்புதானென்றாலும், சம்பவங்கள் தொக்குப்பட்டால்தான், அந்தச் சம்பவங்கள் உருவாக்கிய தாக்கத்தை, அதிர்வலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மறுவினையாற்றத திட்டமிடமுடியும். அச்சம்பவங்கள் தொகுக்கபடாத பட்சத்தில், கால இடைவெளிகளுக்குள் (past,present,future) உள்ள உயிர்த் தொடர்பு (organic & dynamic continuity) அறுந்துபடும். இந்த உயிர்த் தொடர்ச்சி, அனுபவத் தொடர்ச்சியென்பது பழமையைப் பாதுகாப்பதல்ல. பழமையென்பது தொடர்ச்சியற்றுப் போன, நூலறுந்த நிலை. அனுபவத் தொடர்ச்சியென்பது புதுமைக்கு எதிரானதல்ல. அது புதுமையையை நடைமுறைக்கேற்றவாறு மாற்றியமைக்கும் நுண்ணறிவு. நிலைத்த முன்னேற்றம் (sustainable development) வலியுறுத்தும் தலைமுறைகளுக்கு இடையேயான ஒப்புரவுப் பண்பை (intergenerational equity) அடையவேண்டுமென்றால், அது கடந்த தலைமுறையின் வாழ்க்கையை, வழிமுறைகளைத் தொகுப்பதன் மூலமாகவும், ஒப்பீடு செய்யவதன் மூலமாகவுமே சாத்தியப்படும்.
வரலாற்றுப் போக்குகளை முன்னேற்ற முயற்சிகளுக்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு தொகுக்கப் படவேண்டும். இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Microplans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Microhistory) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.
கடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூட தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால் இதை பலகலைக் கழகங்களோ அரசோ செய்யமுன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.
வரலாற்றுப் படிப்பினைகள்:
மின்சாரம் வந்ததால் ஏற்பட்ட ஓய்வால் ஆண்களிடையே உருவான அரசியல் ஈடுபாடு, பேருந்து வசதிகள் பெருகியதால் (ஆசிர்யர்களால் மட்டுமல்ல) உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட கல்வித்தர மேம்பாடு, மாறுதலடைந்த பிழைப்பாதார வாய்ப்புகள், புதிதாகப் பாலம் கட்டப்பட்டதால் உயர்ந்த நிலமதிப்பு மற்றும் சமூகப்பிணக்குகள், பெருநகரத்தோடு சாலையால் இணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைச்சாலை வந்தபின் எழுந்து நின்ற மீனவக் கிராமம், சாலை விபத்தில் இறந்த கிராமத்து முக்கியஸ்தரால் பல்லாண்டுகள் ஸ்தம்பித்து நின்ற கிராமம், பள்ளி மாணவனாயிருந்த போது ஊருக்குள் ஆழ்துளைக்கிணறு தோண்டியதைப் பார்த்து, நீராதரத்தைப் பெருக்க வழிமுறைதெரிந்து ஊரில் முதன்முதலில் ஆழ்துளைக் கிணறுதோண்ட முனைந்ததால் நிலத்தடி நீரில்லாத கிராமத்தில் இருபதாண்டு காலம் வேளாண்மையை நீட்டித்த அதிசயம், ஊரில் கோயில் கட்டியதால் ஊரே பிளவுபட்டது, ஒன்றுபட்டது, தலித்துகளை ஏற்றுக்கொண்டதால் சுகப்பட்ட கிராமங்கள், அவர்களோடு மல்லுக்கட்டி இருதரப்பும் இழந்ததும்,பெற்றதும், காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் (Love & intercaste marriages) ஊர்தோரும் உருவாக்கிய விதவிதமான அதிர்வலைகள், திருமணபந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுமுறைகள் (extra marital relationship) ஜாதிகளுக்குள்ளே உருவாக்கிய ஒப்புரவு, ஆரம்பப் பள்ளி நடுநிலைப் பள்ளியானால் பட்டதாரி ஆசிரியர்தான் தலைமையாசிரியராக முடியுமென்பதால் அவ்வூரின் ஆரம்பக் கல்வியை சீர்குலைத்த செகண்டரி கிரேடு கிராம ஆசிரியர் என்று நூற்றுக்கணக்கான சம்பவங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும், அதையொட்டி செயல்திட்டங்கள் வகுத்து ஜெயித்த தொண்டு நிறுவன முயற்சிகளோடு நானே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றேன். இது ஒருபுறம். இன்னொரு புறமோ, தேசியத் திட்டங்களையும், மாநிலத் திட்டங்களையும் ஒவ்வொரு கிராமமும் உள்வாங்கிப் பிரதிபலிக்க முயன்றபோது ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் கிராம அளவில் உருவாக்கிய தாக்கங்கள், அந்தத் தாக்கங்களை குழு (ஜாதி) அளவில் உள்வாங்கிய தனித்தன்மை- கிராம வரலாறு என்பது தேசிய வரலாற்றிற்கு இணையான உள்விரிவாக்கமும் (complexity), சுவாரசியமும், படிப்பினையும் கொண்டதுதான். இப்படிப்பினைகளை நாம் புறக்கணித்ததால்தான், அனுபவத் தொடர்ச்சி அறுந்துபோனதால்தான், நம்மால் ஆண்டுதோறும் வரும் வறட்சி, வெள்ளத்தைச சரியாகக் கையாளத் தெரியாமலும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற திட்டங்களால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகின்றது என்றெல்லாம் கருத ஆரம்பித்துவிட்டோம்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தைத் திருத்தி, (Constitutional Amendment) அதிகாரத்தைப் பரவலாக்கி (Decentralized Democracy), வளர்ச்சிப் பணிகளுக்கென்று கோடிகோடியாக முதலீடு செய்தும், நம்மால் ஒரு கிராமத்திற்கான குறைந்தபட்ச பண்போவியக் குறிப்புகளைக் (Profile &Data base) கூட உருப்படியாக குறித்து வைக்க முடியவில்லை.
பங்கேற்பு முறைகளில் (Participatory Methods-PRA) எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமுண்டு என்று என் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும். பங்கேற்பு முறைகளில் Timeline & Trend change என்ற முறையை எங்கு சென்றாலும் பரீட்சித்துப் பார்ப்போம். காரணம் அதன் மூலம் வரலாற்றுணர்வு கிடைப்பது மட்டுமல்ல, அது மற்ற முறைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை சோதித்தறிய ஒரு அற்புதமான Triangulation Tool கூட.
கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை:
கிராம வரலாறு பற்றிய என்னுடைய ஏக்கத்தைப் புரிந்துதானென்னவோ, என்னுடன் கல்லூரியில் படித்த, என்மீது சகோதர வாஞ்சை கொண்ட, எங்கள் ஊருக்கு அருகாமையிலிருக்கும் அம்பாசமுத்திரத்திலிருந்து நண்பர் பெருமாள்சாமி, சமீபத்தில், தனக்கு தற்செயலாகக் கிடைத்த “கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை, எனக்கு மிகவும் பிடிக்குமென்று, அனுப்பியிருந்தார். அப் புத்தகம் எனக்குப் பிடித்தது மட்டுமல்ல என் சிந்தனையையும் பல்வேறு கோணங்களில் தூண்டிவிட்டது.
அப்புத்தகத்தைப் படித்த பொழுது எனக்கென்னவோ மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திரா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால், ஹிந்து நாளிதழில் குன்றக்குடியில் அடிகளார் செய்துவந்த கிராம முன்னேற்றப் பணிகளைப் படித்துவிட்டு “This is what I wanted for all my villages” (இது மாதிரி இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் நடைபெற விரும்புகின்றேன்) என்று குறிப்பெழுதியது நினைவுக்கு வர, “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை படித்தபோது நானும் இந்திரா காந்தியின் மனநிலையில்தானிருந்தேன் – இது மாதிரி ஒவ்வொரு இந்திய கிராமத்தின் கதையும் எழுதப்படவேண்டுமென்று.
கோவிந்தநகரம் தேனிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். தேனியிலிருந்து எங்கள் ஊரான கோபாலபுரத்தை(கோனாம்பட்டியை)த் தாண்டி கூப்பிடு தூரத்தில் உள்ள ஊர்தானென்றாலும் இதுவரை நான் அந்த ஊருக்குச் செல்ல வாய்பேற்படவில்லை. இருப்பினும் கல்லூரியில் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஆனால் கோவிந்தநகரத்தில் உறவினர்களைக் கொண்டிருந்த நண்பர் (பெரியாழ்வார் வெங்கட்ராமானுஜம் என்ற பெரி வெங்கட்) ஒருவர் கிடைத்தார். இன்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பெரிவெங்கட்டின் தாய்மாமா, கோவில்பட்டியருகிலுள்ள நாலாட்டின்புதுரிலிருந்து கோவிந்தநகரத்தில் செட்டிலாகியிருந்தார். கோவிந்தநகரம் என் பக்கத்து ஊர் என்ற பாசத்தைவிட, என் பாசத்துக்குரிய நண்பனின் உறவினர்கள் வாழும் ஊர் என்ற அளவுடன் என் பரிச்சயம் நின்றுபோய்விட்டது.
எழுத்தா? தவமா?
அவ்வூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் (திரு.ஆ.கோவிந்தராஜன்) மற்றும் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்த அதிகாரி (திரு.கி. வெங்கிட்டராமன்) இணைந்து கோவிந்தநகரத்தைப் பற்றி அருமையான வரலாற்று ஆவணம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள். அப்புத்தகத்தில் எழுதப்பட்ட விசயங்கள், புகைப்படங்கள், ஆதாரங்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், எழுதியிருக்கின்றார்கள் என்று சொல்வது அவர்களின் முயற்சியை உதாசீனப்படுத்துவது மாதிரி. இருவரும் சேர்ந்து ஊருக்காக தவமியற்றியிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எழுத்துத் திறமை, பணத்தை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்யமுடியுமென்றால் இந்தநாட்டில் இது மாதிரி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். மண்மீது கொண்ட பேரபிமானம், இனி வரப்போகின்ற தலைமுறைக்கு சிலவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டுமென்ற ஆர்வம், பொறுப்பு இதுதான் இதுமாதிரியான புத்தகங்களை உருவாக்க உணர்வு ரீதியாக அவர்களை உந்தித் தள்ளியிருக்கும். அவர்களுக்கு நன்றி.
கோவிந்தப்பா உருவாக்கிய குடியிருப்பு:
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு, அவர்கள் விரும்பிய சொத்தை இனாமாக வழங்கும் (கவுல் வாங்குதல்) அன்றைய வழக்கப்படி வாங்கிக்கொண்ட 25 ஏக்கர் நிலத்தில், கோவிந்தப்பா போட்ட வட்டக்குடிசைதான் கோவிந்தநகரம் என்ற கிராமமாக, நாகரீகமாக வளர்ந்துள்ளது. “கேட்டேயாள அண்ணாச்சி! பத்து வீட்டுக்காரணுக இருக்கிற ஊருக்கு நகரமென்னு பேரு வச்சிக்கிட்டாணுக. ஆயிரம் குடும்பங்க வாழ்ர நம்ம ஊரைப் (விருது)பட்டியங்குறோம்! என்று நூறு வருடங்களுக்கு முன்னமயே ஊர் பேரை வைத்து மற்றவர்களைத் திகைக்க வைத்த ஊர்.
ஏறக்குறைய 250 பக்கங்களுக்கு நீளும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு தகவலும், பல இடங்களிலிருந்து குடிபெயர்ந்த குடும்பங்கள் எப்படி தங்களை, ஒருசமூகமாக, ஒரு நாகரீகமாக வார்த்தெடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாம் வந்து குடியேறினார்கள் என்று தகவல்கள் இருந்தாலும், எந்தெந்தக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருப்பார்கள் என்ற காரணத்தை அறிய இப்புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. நம் எல்லோருக்கும் ஒரு பூர்வீகம் இருந்திருக்கின்றது. அந்த பூர்வீகத்திலிருந்து நாம் ஏன் பெயர்த்தெடுக்கபட்டோம் என்பதை அறிய நாம் ஆர்வம் காட்டியதில்லை. இடப்பெயர்வும், மறுகுடியேற்றமும் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இப் புத்தகம் அந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றது.
1885 ஆம் ஆண்டு கோவிந்தப்பாவால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு, ஆரம்பத்தில் “பட்டாளத்து நாயக்கன்பட்டி” என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோவிந்தநகரமானதலிருந்து, முதல் குடிநீர்க் கிணறு எப்பொழுது வெட்டப்பட்டது? யார் வீட்டிற்கு முதலில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது? யார் கிணற்றில் முதலில் மோட்டார் பொருத்தப்பட்டது? உள்ளூர்ப் பள்ளி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? ஊரின் முதல் பெண் ஆசிரியை யார்? முதல் பட்டதாரி யார்? குழாய் பதித்து பாசன வசதி செய்தவர் யார்? முதலில் வெளிநாடு சென்றவர் யார்? சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர், அதன் பிறகு விவசாயப் போராட்டத்தில் சிறை சென்றவர் யார்? யார்? கதையெழுதியவர்கள், கவிதையெழுதியவர்கள் என்று பல தகவல்களைக் கொடுத்து அவர்களின் புகைப்படங்களையும் இணைத்திருக்கின்றார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்ட விண்வெளி விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லும்போது “பத்மபூசன் விருது பெற்ற பத்மாவதி கணவர்” என்று குறிப்பிட்டு, தங்கள் ஊரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் எழுத்தில் கொண்டாடி மரியாதை செய்திருக்கின்றார்கள்.
அப்புத்தகத்தில் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்ட பல சம்பவங்களைப் படிப்பவர்களுக்கு கிராம வாழ்வைப் பற்றிய தெளிவு கிடைக்கும். இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும், இது நம் ஊரில் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்திப் புரிந்துகொள்ளத் தூண்டும். இந்தத் தூண்டுதலுணர்வுதான் இப்புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
வீடுகளின் பரிணாமம்
ஊர் உருவாகிய 150 கால வரலாற்றில், இப்பொழுதைய (1991) கணக்குப்படி 792 வீடுகள் இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களில் தெரியும் வீடுகளைப் பார்த்தால் நவீனமாகக் கட்டப்பட்ட மாடிவீடுகளாகத் தெரிகின்றது.
கதவில்லாமல் கட்டப்பட்ட மண்ணாலான வட்டக்குடிசைகள் தொடங்கி, செவ்வக வடிவில் கட்டப்பட்ட மண்வீடுகள், கூரைவேய பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கால்நடைகளுக்கென்று வீட்டிற்குள்ளும், வீட்டையொட்டியும் கட்டப்பட்ட தொழுவம், விவசாயக் கருவிகள் வைத்துக்கொள்ள, தானியங்களைச் சேமிக்க, சாமான்கள் வைத்துக்கொள்ள தனித்தனி இடங்கள், சமையலறையின் அமைப்பு, காலந்தோறும் மாறிவந்த கட்டுமானப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றது. வீட்டுக் கூரைகளும், வீட்டடிக் கிணறுகளும் எப்படி சமூக அடையாளங்களாக பரிணாமம் அடைந்தது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு காலகட்டம் வரைக்கும் உள்ளூரில் கிடைத்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளை, சிறிது சிறிதாக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை வைத்துக் கட்டும்படியான தேவை ஏன் ஏற்பட்டது? எப்பொழுது, எதற்காக ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தேட இப்புத்தகம் ஆர்வமுள்ளவர்களைத் தூண்டலாம். வெளியிடப் பொருட்களின் (External inputs) ஆதிக்கம் வேளாண்மையில் இருப்பதைப் பற்றி கடுமையான விமர்சனங்களும், பரவலான விழிப்புணர்வும் உருவாகி, இயற்கை வழி வேளாண்மையைப் (Organic Agriculture) பற்றி பேசி வருகின்றோம். கட்டுமானத் துறையில் நமது கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தி இழந்தது பற்றி யாரும் பேசுவதில்லை. வாழ்க்கை என்பது ஒன்றுதான். ஒன்றில் முழுக்க, முழுக்க சார்புத்தன்மையும் இன்னொன்றில் இயற்கை வழி சுயதேவைப் பூர்த்தியென்பதும் சிந்திக்க வேண்டிய செய்திகள். இப்புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
கிராம நிதியிலிருந்து கிராமத் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், வசூலிக்கப்படும் வாடகை, காலனி வீடுகள் என்று சொல்லப்படும் விவரங்களிலிருந்து ஒரு கிராமம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டது தெரியவருகின்றது.
கிராம நிர்வாகம்.
ஒவ்வொரு கிராமமும் தனித்தன்மை கொண்ட சமூகக், கலாசார, பொருளாதார, அரசியல் பின்னனி கொண்டது. அரசுத் துறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் என்று இருந்தாலும், இவையெல்லாம் Monolithic organization என்று சொல்லப்படுகின்ற வேறுபாடின்றி எங்கும் ஒரே சீராக இயங்கக்கூடிய வரையறைக்குட்ட்பட்ட நிறுவனங்கள். இந்த அமைப்புகளால் கிராமத்தின் பிரத்யேகத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, இந்த அமைப்புகள் திறனுடன் செயல்பட சமூக மூலதனம் (Social Capital) என்று சொல்லப்படுகின்ற தன்னார்வ சமூக அமைப்புகளோ (Civil Society organization) அல்லது பரம்பரியத் தலைவர்களோ (Leaders with ascribed status) அல்லது வலிவுடைய/ செல்வாக்கு மிக்க தலைவர்களோ (Charismatic Leaders) தேவை. இந்த அமைப்புகள்தாம் ஒருகிராமத்தை மற்றொரு கிராமத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுபவை.
பாரம்பரிய நாட்டாண்மை பொறுப்புடன், நாட்டாண்மையே ரெவின்யூ நாட்டாண்மையாக இருந்து ஊரை நிர்வகித்த நிலை மாறி, பின் நாட்டாண்மை, டெவைதாரர்கள், வாசினியார் போன்ற பாரம்பரிய அமைப்பு சிறிதுகாலம் செயல்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, தனிமனிதரை மையப்படுத்தியிருந்த பொறுப்புக்கள் குழுவிடம் வந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக கிராம நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவருகின்றது.
கிராமத்திற்கான நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, 1946 ஆம் வருடத்திலிருந்து யார் யார் கிராமச் செயலர்களாக இருந்தார்கள், கிராம நிர்வாகக் குழுவின் மூலமாக செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆரமபக் கல்விக்கு அரசு நிதியுதவி இல்லாத காலத்திலே பள்ளி உருவாகவும், ஆசிரியர்களுக்கு மாதம் 12 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை சம்பளம் கொடுத்ததையும், மேல்நிலைப் பள்ளி துவங்க முயற்சியும் வைப்புத் தொகையும் செலுத்தியதையும், வாசகசாலை கட்ட இடம் நன்கொடை வாங்கியதையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த ஒரு சமூகத்தில், யாரோ ஒரு தனவந்தர் கருணையடிப்படையில் கல்வி தந்தார் என்றில்லாமல், ஒரு சமூகமே கல்வியைத் தன் கடமையாக எடுத்துச் செயல்பட்டது தெரியவருகின்றது. It takes a whole village to raise a child என்ற பழமொழியை ஆயிரம் தடவை படித்திருக்கின்றேன். அதனுடைய உண்மையான அர்த்தம் இப் புத்தகத்தைப் படிக்கும் போதுதான் புரிந்தது. நமது கிராமப்பள்ளிகளின் வரலாற்றை பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நமது வரலாற்றாசிரியர்கள் போதுமான அக்கறையையோ மாதிரிகளையோ உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கடந்த காலத்தில் ஒவ்வொரு கிராமமும், தன்னுடைய குழந்தைகளுக்கு கல்விதர எடுத்துக்கொண்ட முயற்சிகளை நாம் ஆவணப்படுத்த தவறிவிட்டோம். வணிகத்தாலோ, வேறு விதமான பொருளீட்டல் வாய்ப்புகளற்ற வேளாண்மை சார்ந்த கோவிந்தநகரம் மாதிரியான கிராமங்களில், கல்வியில் முதலீடு செய்வதென்பது அபூர்வம். இம்மாதிரியான சமூக முயற்சிகளை சரிவர ஆவணப்படுத்தத் தவறியதால்தான் இன்று ஆரம்பக் கல்வியின் தரம் மேம்படுத்துவதென்பது சிரமமான காரியமாக இருக்கின்றது.
கிராம நிர்வாகக் குழு என்ற விதையிலிருந்து, பள்ளி நிர்வாகக் குழு, பழைய மாணவர் சங்கம், நேதாஜி வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் உருவாகி, ஒவ்வொரு அமைப்பும் ஏதாவது ஒருவகையில் முன்னேற்றப் பணிகளை அடுத்த கட்டடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.
கிராம நிர்வாகம் பற்றிய தகவல்களில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றியப் பெருந்தலைவர்களாக இருந்திருந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்டாலும், அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் கிராமச் செயல்பாடுகள் அவர்களைச் சார்ந்ததாக இருந்த மாதிரி குறிப்பிடப்படவில்லை.
பாரம்பரியத் தலைமையாலும் (Leaders with ascribed status) வலிவுடைய/ செல்வாக்கு மிக்க (Charismatic Leaders) தலைமையாலும் கிராமங்கள் பயன்பெற்றதை மறுக்கமுடியாதுதான். இருப்பினும் ஜனநாயகப் பண்புகள் கொண்ட கிராம அமைப்புகளே சிறந்தது; நிலைத்திருக்கக் கூடியது. அதுமாதிரியான அமைப்புகள் கோவிந்தநகரத்தில் இருப்பது புத்தகத்திலிருந்து தெரிய வருகின்றது. இந்த மாதிரியான ஆவணங்களைப் படிக்கும்போது, கிராமப் பின்னணியிலிருந்து வரும் என்னைப் போன்ற வாசகர்களை நமது கிராமத்தில் கிராம நிர்வாகம் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்தத் தூண்டுகின்றது
வேளாண்மை
புத்தகத்தில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, கோவிந்தநகரம் மற்றும் அந்த வட்டார விவசாயத்தைப் பற்றிய காலந்தோறும் நடைமுறையிலிருந்த கோட்பாடுகளைப் (Policy Issues & Practices) பற்றித் தெரிந்துகொள்ளமுடிகின்றது. கோவிந்தநகரமும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கண்டமனூர் ஜமீனைச் சேர்ந்தது. கண்டமனூர் எல்லைக்குட்பட்ட வருசநாட்டு மலையிலிருந்தே வைகையாறு தோன்றுகிறது. தமிழகக் கலாச்சாரத்தோடிணைந்த, பாண்டி மண்ணிற்கு பெருமை சேர்த்த வைகை இன்று ஓரிரு மாதங்கள் மட்டும் நீர்வரத்துள்ள காட்டாறாக மாறிப்போனது. பெரியாறு அணை கட்டப்பட்டு நீர்மின்சாரத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் சுருளி ஆற்றின் மூலமாக வைகையில் கலப்பதும், வைகையணை கட்டப்பட்டதும், வைகையை உயிரோட்டமுள்ள நதியாகக் காண்பித்தாலும், பெரியாறு நீர் சுருளியாற்றின் மூலமாக வைகையில் கலக்குமுன்னுள்ள மேல்பகுதிதான் பூர்வ வைகை / தாய் வைகை ஆகும். தாய் வைகை முற்றிலும் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மை. சுருக்காகமாகச் சொன்னால் தாய் வைகையின் நீர்ப்பிடி நிலங்கள்தான் கண்டமனூர் ஜாமீன்.
நல்லவரென்று சொல்லப்பட்டாலும், ஜமீனுக்குரிய சூதுவாதும், பொறுப்பும் இல்லாததால், ஜாமீன் நிர்வாகம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, ஜமீனைப் பிடித்த சிக்கல், ஜமீன் குடிகளையும் பல்லாண்டுகள் பிடித்து உலுப்பி வந்திருக்கின்றது. கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன் என்று சொல்லும்படி மக்கள் பல சிரமங்களை அனுபவித்துள்ளனர். வரிகட்ட முடியாத ஜமீன் நிர்வாகத்தை, ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு குர்த் எனும் ஆங்கிலேயரை அரசு நிர்வாகியாக்குகின்றது.
ஆங்கிலேய அரசு அவ்வட்டாரத்தை வளப்படுத்த முதலீடு செய்ய முன்வராது என்பதைப் புரிந்துகொண்ட குர்த் துரை, அப்பகுதியில் பாண்டியர் காலத்துப் புதையல்களும், பொக்கிசங்களும் இருப்பதாகக் கூறி, ஏழு கிராமங்களையும், வளமான மலை நிலங்களையும் ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு பம்பாய் சேட்களை (பட்டேல் சகோதரர்கள்) ஏலத்தில் எடுக்க வைக்கின்றார். நிலங்களை அளந்து குர்த் துரை முறைப்படுத்திக் கொடுக்க, கொஞ்ச நிலங்களை உள்ளூர் வாசிகள் வாங்குகின்றார்கள். மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளை பென்னி குயிக் பாணியில் கிழக்கே திருப்பி நீராதரங்களை வளப்படுத்த குர்த் சொன்ன யோசனைகளை சேட்டுக்கள் ஏற்காததால், மனமுடைந்து போகிறார்.
பட்டேல் சகோதரர்களிடமிருந்து பின் கோவை பி.எஸ்.ஜி சகோதரர்கள் நிலத்தை வாங்குகின்றனர். மனிதாபிமானமும், நவீனத்துவமும் கலந்த அவர்களின் நிர்வாக முறைகள் விவசாயத்திற்கு உந்துவிசை தர ஆரம்பித்தது.
குர்த் துரை யோசனைப்படி (தாய்)வைகையில் தடுப்பணைகள் கட்டி, ஆங்காங்கே குளங்களும், கண்மாய்களும் தோண்டப்பட்டிருந்தால், நிலத்தடி நீராதரம் பெருகி வட்டாரம் வளப்பட்டிருக்கலாம். வைகை அணையைக் கட்டி ஆயக்கட்டுப் பரப்பை அதிகப்படுத்திய அரசும், வைகையின் நீர்ப்பிடிப் பரப்பை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஊரையொட்டி ஓடும் வைகையாறு. ஆனால் பயிரிடப்பட்ட பயிர்களோ…சாமை, குதிரைவாலி, வரகு, கேள்வரகு, கம்பு, சோளம், மானாவரிப் பருத்தி, மிளகாய், வெங்காயம், பூண்டு, புகையிலை, சீரகம்…அரிசிச் சோறு சாப்பிட நினைத்த விவசாயிகள் சீப்பாலக்கோட்டையில் வயல் வாங்கி நெல் பயிரிட்டிருக்கின்றார்கள். வைகை மூலம் யார்யாரோ வளம் பெற, தங்கள் காலடியில் ஓடிய வைகையை எத்தனை நாளைக்கு குடிக்க, குளிக்க, குண்டிகழுவ மட்டும் ஒரு சமூகம் பயன்படுத்திக்கொண்டு சும்மா இருக்கும்.
வைகையை வசப்படுத்த வெறிகொண்டனர் போலும். ஆற்றில் துரவு கிணறுகள் அமைத்து, மோட்டார் பொருத்தி, குழாய்கள் மூலம் தங்கள் நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அவர்களின் இந்த மதிநுட்பத்தோடு பசுமைப் புரட்சி முயற்சிகளும் கலந்தடிக்க, கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன் பகுதியை சாமான்ய விவசாயிகள் தங்கள் முயற்சியால் வென்றெடுத்திருக்கின்றார்கள்.
பாண்டியர் காலத்துப் புதையலும், பொக்கிசமும் இருப்பதாகக் கூறித்தான் குர்த் துரை, பம்பாய் பட்டேல் சகோதரர்களுக்கு ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு இவ்வட்டாரத்தை வீற்றிருக்கின்றார். குர்த் துரை சொன்ன புதையல், பொக்கிஷத்தின் உண்மையான அர்த்ததைப் புரிந்துகொண்ட, இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு பிடிமண்ணிலிருந்தும் அள்ள அள்ளக் குறையாத பொக்கிசங்களை எடுத்திருக்கின்றார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான தேனி வேளாண்சந்தையை, ஒருகாலத்தில் ஏலத்திற்கு விடப்பட்ட பகுதி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களால் நிரப்பி வியக்க வைத்திருக்கின்றார்கள். கோவிந்தநகரம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. விவசாயத்திற்காக தமிழகத்திலே அதிக மின்சாரம் பயன்படுத்திய முன்னுதாரனக் கிராமமாகின்றது.
கோவிந்தநகரத்தின் வேளாண்மையை ஆவணப்படுத்திய முறையிலிருந்து, அதுவும் read between the lines என்று சொல்வார்களே அதுமாதிரி நாம் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகின்றது. வேளாண்மைக்காக அரசுசெய்த முதலீட்டைவிட ஒவ்வொரு விவசாயியும், நீர்ப்பாசன உத்திரவாதத்தைப் பெற தனித்தனியே அல்லல் பட்டிருக்கின்றார்கள். மற்ற எந்த கட்டமைப்பையும்விட மின்சாரமும், தொழில்நுட்பமுமே (மின்சார மோட்டார்) அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாயிறுந்த்திருக்கின்றது. வைகை ஆற்றின் குறுக்கே ஆரம்பத்திலே பாலம் கட்டப்பட்டிருந்தால், மணல்மேட்டுப் பகுதியிலும், வருசநாட்டுப் பகுதியிலும் அவர்களின் விவசாய விரிவாக்கம் சிரமமில்லாமல் இருந்திருக்கும். வைகை ஆற்றின் நீர்ப்பிடி பிரதேசம் சரியான முறையில் பாராமரிக்கப் பட்டிருந்தால், வைகை ஆற்றில் நீரோடும் (Runoff) காலம், அதிகரித்து, நிலத்தடி நீராதாரம் ஓரளவாவது பாதுகாக்கப் பட்டிருக்கும். (தாய்) வைகையில் தடுப்பணைகள் என்ற பெயரில் அரசு செய்த சொதப்பல்களும், முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் PT ராஜன் கால்வாய் மூலமாக இப்பகுதிக்குக் கொண்டு வரச் செய்த முயற்சிகளில் அரசின் அக்கறையின்மை – அனைத்தும் சேர்த்தே இவ்வட்டார விவசாயிகளுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தனித்துவத்தை உள்வாங்காத எந்த அரசின் கொள்கை நடைமுறைகளும், இங்கே பிரயத்தனத்தின் பேரில்தான் கொண்டுசெலுத்தமுடியும்.

பாகம் இரண்டு தொடரும்

 


Older Posts »

Theme: Silver is the New Black. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.